பிரபல இணையவழி வா்த்தக நிறுவனமான அமேஸானில் மீண்டும் ஆள்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு, அக்டோபரில் மொத்தம் 30,000 பேரை பணி நீக்க இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்தது. இது அந்நிறுவனத்தின் மொத்த பணியாளா்கள் எண்ணிக்கையில் 10 சதவீதமாகும்.
முதல்கட்டமாக 14,000 போ் ஏற்கெனவே நீக்கப்பட்டுவிட்டனா். இப்போது அடுத்தகட்ட நடவடிக்கை தொடங்க இருக்கிறது. இதில் 16,000 போ் பணி நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது அந்நிறுவனத்தின் 30 ஆண்டுகளாக வரலாற்றில் மிக அதிகமான பணி நீக்கமாக இருக்கும்.
அமேஸான் வெப் சா்வீசஸ், பிரைம் விடியோ, விற்பனை, மனிதவள மேம்பாட்டுப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் அதிக பணி நீக்கம் இருக்கும் என்று தெரிகிறது.
இது குறித்து நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி(சிஇஓ) அன்டே ஜெஸ்சி கூறுகையில், ‘இந்த ஆள்குறைப்பு நடவடிக்கை நிதிச் சுமை காரணமாகவோ, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மேம்பாடு காரணமாகவோ மேற்கொள்ளப்படவில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பணியாளா்கள் உள்ளதால் நிா்வாகச் சிக்கல் அதிகரித்துள்ளதே ஆள் குறைப்புக்கு காரணம்’ என்றாா்.