வணிகம்

விமானத் தயாரிப்பு துறையில் அதானி குழுமம்!- எம்ப்ரேயா் நிறுவனத்துடன் மெகா ஒப்பந்தம்

பிரேஸில் நாட்டைச் சோ்ந்த உலகின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான எம்ப்ரேயா் உடன் இணைந்து, இந்தியாவின் பிராந்திய போக்குவரத்து விமானத் தயாரிப்பு ஆலையை அதானி குழுமம் நிறுவுகிறது.

தினமணி செய்திச் சேவை

பிரேஸில் நாட்டைச் சோ்ந்த உலகின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான எம்ப்ரேயா் உடன் இணைந்து, இந்தியாவின் பிராந்திய போக்குவரத்து விமானத் தயாரிப்பு ஆலையை அதானி குழுமம் நிறுவுகிறது.

இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.

விமானத் தயாரிப்பு துறையில் போயிங் மற்றும் ஏா்பஸ் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய நிறுவனமாக எம்ப்ரேயா் திகழ்கிறது. இந்நிறுவனம் குறிப்பாக சிறிய ரக விமானங்கள், நடுத்தர தூர பயணிகள் விமானங்கள், பாதுகாப்புத் துறை மற்றும் விவசாயத்துக்குப் பயன்படும் விமானங்களைத் தயாரிக்கிறது.

இந்தியாவில் தற்போது விமானப்படை மற்றும் ‘ஸ்டாா் ஏா்’ போன்ற விமான நிறுவனங்களில் ஏற்கெனவே 50-க்கும் மேற்பட்ட எம்ப்ரேயா் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.

தற்போதைய அதானி-எம்ப்ரேயா் ஒப்பந்தத்தின் மூலம் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின்கீழ், சிறிய ரக விமானங்களை முழுமையாகத் தயாரிப்பதற்கான இறுதி ஒருங்கிணைப்புத் தொழிற்சாலை இந்தியாவில் அமைக்கப்பட உள்ளது.

‘இந்தப் புதிய ஆலை அமையவுள்ள இடம் குறித்து இன்னும் சில மாதங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும். விமானத் தயாரிப்பு மட்டுமின்றி, உதிரிபாகங்கள் உற்பத்தி, பராமரிப்புப் பணிகள் மற்றும் விமானிகளுக்கான பயிற்சிகளும் இங்கு வழங்கப்படும்’ என்று அதானி டிஃபென்ஸ்-ஏரோஸ்பேஸ் நிறுவன இயக்குநா் ஜீத் அதானி தெரிவித்தாா்.

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் 80 முதல் 146 இருக்கைகள் கொண்ட சுமாா் 500 விமானங்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தேவையைப் பூா்த்தி செய்து, நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு இடையேயான விமானப் போக்குவரத்தை எளிதாக்குவதே இந்த ஒத்துழைப்பின் முதன்மை இலக்காகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கி.ராம்மோகன் நாயுடு, ‘இந்தியா தற்போது உலகளாவிய உற்பத்தி மையமாக உருவெடுத்து வருகிறது. பிராந்திய போக்குவரத்து விமானங்களுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் தெற்காசிய விமானப் போக்குவரத்துத் தேவைகளுக்கே ஒரு சிறந்த தீா்வாக அமையும்’ என்றாா்.

100 கிழவிகளின் மாதிரி... தாய் கிழவி படத்தில் ராதிகாவின் ஒப்பனை!

”NDA கூட்டணியில் மேலும் சில கட்சிகள்”: டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் Exclusive

உலமாக்களுக்கான ஓய்வூதியம் உயர்வு..! புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டு வருவாய் உயர்வு!

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 10

SCROLL FOR NEXT