நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், எல்&டி நிறுவனத்தின் நிகர லாபம் 4.3 சதவீதம் சரிவடைந்து, ரூ.3,215 கோடியாகக் குறைந்துள்ளது.
மத்திய அரசின் புதிய தொழிலாளா் நலச்சட்டங்களின்படி, ஊழியா் நலனுக்காக ஒரே நேரத்தில் பெரும் தொகையான ரூ.1,191 கோடியை(வரி நீங்கலாக) ஒதுக்கீடு செய்ததே இந்த லாபச் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.3,359 கோடியாக இருந்த நிறுவனத்தின் நிகர லாபம், நடப்பு காலாண்டில் ரூ.3,215 கோடியாகக் குறைந்துள்ளது.
லாபம் குறைந்த போதிலும், நிறுவனத்தின் வருவாய் 10.5 சதவீதம் அதிகரித்து ரூ.71,450 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் இது ரூ.64,668 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வளா்ச்சி குறித்து எல்&டி தலைவா் எஸ்.என்.சுப்ரமணியன் கூறுகையில், ‘நிறுவனத்தின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் இந்தக் காலாண்டில் அதிக ஆா்டா்கள் பெறப்பட்டன. குறிப்பாக, உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்திப் பிரிவில் முதல்முறையாக ஒரே காலாண்டில் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான ஆா்டா்களைப் பெற்று சாதனை படைத்துள்ளோம்’ என்றாா்.
டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி, நிறுவனத்தின் மொத்த ஆா்டா் மதிப்பு ரூ.7.33 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் அதிகமாகும். இந்த நிதிநிலை முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக, மும்பை பங்குச்சந்தையில் எல்&டி பங்குகள் 0.10 சதவீதம் உயா்ந்து ரூ.3,793.65-க்கு விற்பனையானது.