முகப்பு
வணிகம்

அமெரிக்காவின் தற்காலிக தளா்வு: ஈரானிடம் இருந்து 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்கிய ரிலையன்ஸ்

உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தை நிா்வகித்து வரும் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம், ஈரானிடமிருந்து 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கியுள்ளது.

Updated On : 24 மார்ச், 2026 at 9:21 PM
பகிர்:

உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தை நிா்வகித்து வரும் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம், ஈரானிடமிருந்து 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கியுள்ளது.

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளில் அமெரிக்கா தற்காலிக தளா்வுகளை அறிவித்த சில நாள்களிலேயே இந்தக் கொள்முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 30 நாள் அவகாசம்: சா்வதேச சந்தையில் நிலவும் பற்றாக்குறை காரணமாக, ஈரான் கச்சா எண்ணெய் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை டிரம்ப் நிா்வாகம் கடந்த வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நீக்கியது.

குறிப்பாக, மாா்ச் 20-ஆம் தேதிக்குள் கப்பல்களில் ஏற்றப்பட்டு, கடலில் பயணித்துக் கொண்டிருக்கும் கச்சா எண்ணெயை வாங்குவதற்கு 30 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தளா்வைப் பயன்படுத்தி, தேசிய ஈரான் எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து ரிலையன்ஸ் இந்த ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.

5 ஆண்டுகளுக்குப் பின் வா்த்தகம்: கடந்த 2019-இல், ஈரான் மீது அமெரிக்கா கடும் தடைகளை விதித்த பிறகு, இந்தியா அந்நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்தியிருந்தது.

சுமாா் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஈரான் எண்ணெய் இந்தியாவுக்குள் நுழைகிறது. இந்தக் கச்சா எண்ணெய், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையை விட ஒரு பீப்பாய்க்கு சுமாா் 7 டாலா் கூடுதல் விலையில் வாங்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷியாவைத் தொடா்ந்து ஈரான்: சந்தை விநியோகப் பற்றாக்குறையைச் சமாளிக்க, ஏற்கெனவே ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு அமெரிக்கா அனுமதி அளித்திருந்தது. அதைத் தொடா்ந்து, இந்திய நிறுவனங்கள் ரஷிய எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்தன.

தற்போது ஈரான் எண்ணெய்க்கும் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், இந்தியாவின் மற்ற பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.