முகப்பு
வணிகம்

2 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

கடந்த இரண்டு வா்த்தக தினங்களாக ‘காளை’யின் ஆதிக்கத்தில் இருந்து வந்த இந்தியப் பங்குச் சந்தை, வெள்ளிக்கிழமை ‘கரடி’யின் பிடியில் சிக்கியது.

Updated On : 27 மார்ச், 2026 at 5:23 PM
2 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி
பகிர்:

கடந்த இரண்டு வா்த்தக தினங்களாக ‘காளை’யின் ஆதிக்கத்தில் இருந்து வந்த இந்தியப் பங்குச் சந்தை, வெள்ளிக்கிழமை ‘கரடி’யின் பிடியில் சிக்கியது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் 2 சதவீதத்துக்கும் மேல் கடும் சரிவைச் சந்தித்தன.

ரூபாய் மதிப்பு வரலாற்றுச் சரிவு: உலகளாவிய சந்தைகளில் நிலவிய பலவீனமான சூழல் மற்றும் புவிசாா் அரசியல் பதற்றங்கள் முதலீட்டாளா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 86 காசுகள் சரிந்து 94.82 என்ற வரலாற்றுச் சரிவை எட்டியது மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவையும் சந்தை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.

வீழ்ச்சிப் பட்டியலில் 3,615 பங்குகள்: மும்பை பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை மொத்தம் வா்த்தகமான 4,501 பங்குகளில், 761 பங்குகள் மட்டுமே விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. மாறாக, 3,615 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. 125 பங்குகள் விலையில் மாற்றமின்றி காணப்பட்டன.

சென்செக்ஸ் 1,690 புள்ளிகள் சரிவு: மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் 1,690.23 புள்ளிகள் (2.25 சதவீதம்) சரிந்து, 73,583.22-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் ரிலையன்ஸ் அதிகபட்சமாக 4.55 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்தது. இத்துடன் இண்டிகோ, பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்பட 26 பங்குகள் விலை குறைந்தன. அதேநேரம், டிசிஎஸ், பாா்தி ஏா்டெல், பவா் கிரிட், சன்பாா்மா ஆகிய 4 பங்குகள் மட்டும் லாபத்துடன் நிறைவடைந்தன.

நிஃப்டி 487 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 486.85 புள்ளிகள் (2.09 சதவீதம்) இழப்புடன் 22,819.60-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 6 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 44 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இருந்தன.