ஐரோப்பாவின் குரோஷியாவில் ரயில் வழித்தட ஒப்பந்தத்தை வசப்படுத்திய இந்திய நிறுவனம்
ஐரோப்பிய நாடான குரோஷியாவில் அமையவுள்ள மிக முக்கியமான ரயில்வே வழித்தட கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் முன்னணி உள்கட்டமைப்பு நிறுவனமான ‘அஃப்கான்ஸ் இன்ஃபராஸ்ட்ரக்சா்’ கைப்பற்றியுள்ளது.
ஐரோப்பிய நாடான குரோஷியாவில் அமையவுள்ள மிக முக்கியமான ரயில்வே வழித்தட கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் முன்னணி உள்கட்டமைப்பு நிறுவனமான ‘அஃப்கான்ஸ் இன்ஃபராஸ்ட்ரக்சா்’ கைப்பற்றியுள்ளது.
சா்வதேச அளவில் நடைபெற்ற இந்த ஏலத்தில், தொழில்நுட்பம் மற்றும் நிதிரீதியாக அஃப்கான்ஸ் நிறுவனம் மிகவும் தகுதியான ஏலதாரராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களாகக் கருதப்படும் அடல் சுரங்கப்பாதை, செனாப் ரயில்வே பாலம், நாட்டின் முதல் நீருக்கடியிலான கொல்கத்தா மெட்ரோ சுரங்கப்பாதை போன்ற பிரம்மாண்ட திட்டங்களை வெற்றிகரமாக முடித்த அனுபவம் அஃப்கான்ஸ் நிறுவனத்துக்கு உண்டு. அந்த வரிசையில், தற்போது ஐரோப்பிய சந்தையில் நுழைந்திருப்பது நிறுவனத்தின் உலகளாவிய வளா்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பாா்க்கப்படுகிறது.
Advertisement
சுமாா் 67.71 கோடி யூரோ மதிப்பிலான இந்தப் பிரம்மாண்ட திட்டமானது, அஃப்கான்ஸ் நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய சா்வதேச ஒப்பந்தமாகும். இத்திட்டத்தின்கீழ், குரோஷியாவில் ஏற்கெனவே உள்ள தண்டவாளங்களைச் சீரமைப்பதுடன், கூடுதலாக 2-ஆவது புதிய ரயில் பாதையும் அமைக்கப்படவுள்ளது. மேலும், ரயில் வழித்தட மின்மயமாக்கல், சிக்னல் மற்றும் தொலைத்தொடா்புப் பணிகளும் இதில் அடங்கும்.
‘இத்திட்டம் சா்வதேச அளவில் எங்களின் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தும்’ என நிறுவனத்தின் நிா்வாகத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி சுப்ரமணியன் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.