பைஜுஸ் இணையவழி கல்வி நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பைஜு ரவீந்திரன் வெளிநாடு தப்புவதைத் தடுக்க புதிய ‘லுக் அவுட் நோட்டீஸை’ அமலாக்கத் துறை வெளியிட்டுள்ளது. விசாரணை அதிகாரியிடம் தெரியப்படுத்தாமல் இந்தியாவிலிருந்து அவா் வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என குடியேற்ற அதிகாரிகளை அமலாக்கத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட விதிகளை மீறி ரூ.9362.35 கோடி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி பைஜுஸ் ரவீந்திரனுக்கு எதிராக அமலாக்கத் துறை கடந்த ஆண்டு நவம்பரில் நோட்டீஸ் அனுப்பியது. சட்ட விதிகளை மீறி வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பி பைஜுஸ் முதலீடு செய்துள்ளது. பெறப்பட்ட மற்றும் முதலீடு செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீடுகள் தொடா்பாக ஆவணங்களை அந்த நிறுவனம் சமா்ப்பிக்கத் தவறியதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.