தீவுத்திடலில் சுற்றுலாத்துறை தொழில் பொருள்காட்சிக்கான அரங்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். 
தமிழ்நாடு

சுற்றுலா பொருள்காட்சி பொங்கலுக்குள் தொடங்கப்படுமா?

சென்னையில் சுற்றுலா பொருள்காட்சி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், வரும் தைப் பொங்கலுக்கு முன்பாக தொடங்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

எஸ். பாண்டியன்

சென்னையில் சுற்றுலா பொருள்காட்சி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், வரும் தைப் பொங்கலுக்கு முன்பாக தொடங்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் தொழில் பொருள்காட்சி மிகவும் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு பொழுது போக்கு சிறப்பு அம்சங்களும் இடம்பெறும். மேலும் மத்திய, மாநில அரசின் ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலத்திட்ட உதவிகள் குறித்தும் சாதனைகள் குறித்த அரங்குகள் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இடம் பெறும்.
நாள்தோறும் கலைநிகழ்ச்சி: இப்பொருள்காட்சி வளாக கலையரங்கத்தில் நாள்தோறும் மாலையில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். அதேபோல், குழந்தைகளைக் கவரும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பொழுதுபோக்கு அரங்குகள், சறுக்கு விளையாட்டுகள், யானை, கப்பல், தேர் உள்பட பல்வேறு வகையான ராட்டினங்கள், ரப்பர் படகு சவாரி, விடியோ கேம், அனிமேஷன் 3டி அரங்குகளும் இடம்பெறும். இந்தாண்டு முதல் பெரிய அளவிலான சர்க்கஸ் காட்சிகளுடன், சாகச நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளது.
தாமதம்: பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய 43-ஆவது சுற்றுலா பொருள்காட்சி டிச.23-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 70 நாள்களுக்கு நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வர்தா புயல் தாக்குதல் காரணமாக அரங்குகள் அமைக்க முடியாமல் மைதானம் சேதம் அடைந்தது. இதனால் பொருள்காட்சி நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பொங்கலுக்கு முன்பாக பொருள்காட்சி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கடந்தாண்டும் மழை,வெள்ளம் காரணமாக பொருள்காட்சி தாமதமாகவே தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
வியாபாரிகள் கவலை: இப்பொருள்காட்சி கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தைப்பொங்கல், சிவராத்திரி ஆகிய விழாக்களை கருத்தில் கொண்டே டிசம்பர் மாத இறுதி வாரத்தில் தொடங்கப்படும். அப்போது, நாள்தோறும் பொதுமக்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும் என்பதால் உள்ளே உணவு, பலகார கடைகள் நடத்துவோர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். அதனால் இங்கு கடைகள் நடத்துவதற்கு வியாபாரிகள் இடையே பலத்த போட்டியே இருக்கும். இந்தாண்டில் ஒவ்வொரு கடைக்கும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரையில் கடைகளின் தன்மைக்கு ஏற்ப ஒப்பந்தம் பெற்றுள்ளதாகவும், தாமதமாக தொடங்குவதால் வியாபாரமின்றி நஷ்டமடையும் நிலை இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
அரங்குகள் அமைக்கும் பணி: இது குறித்து சுற்றுலாத்துறை பொருள்காட்சி பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இதுபோன்ற பிரமாண்ட தொழில் பொருள்காட்சி நடத்தப்படுகிறது.
அதனால், பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பது வாடிக்கையாகும். தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம், வர்தா புயல் போன்ற காரணங்களால் அறிவித்த நாளில் நடத்த முடியாமல் போனது.
தற்போது, பொருள்காட்சிக்கான அரங்குகள் அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும் பொங்கலுக்கு முன்பாக பொருள்காட்சி தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT