தமிழ்நாடு

உதகையில் மலர்க் கண்காட்சி மே 19-இல் தொடக்கம்

DIN

உதகையின் பிரசித்தி பெற்ற கோடைத் திருவிழாவான மலர்க் கண்காட்சி, மே 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதகையில், மே மாதக் கோடை சீசனின்போது தோட்டக்கலைத் துறை சார்பில் நடத்தப்படும் சுற்றுலா விழாக்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு, தமிழக தோட்டக் கலை, மலைப் பயிர்கள் துறை இயக்குநர் அர்ச்சனா பட்நாயக் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பி.சங்கர், காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் தீபக் ஸ்ரீவத்சவா, தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் என்.மணி, மாவட்டத்தின் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
அதன் பின்னர், தோட்டக்கலைத் துறை இயக்குநர் அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு, தோட்டக்கலைத் துறை சார்பில் மே மாதம் முழுவதும் பல்வேறு விழாக்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக, கோத்தகிரி நேரு பூங்காவில் மே 6, 7 ஆகிய தேதிகளில் காய்கறிக் கண்காட்சி நடைபெற உள்ளது.
மலர், வாசனை திரவியக் கண்காட்சிகள்: அதைத் தொடர்ந்து, மே 13, 14 ஆகிய தேதிகளில் உதகை அரசினர் ரோஜா பூங்காவில் 15-ஆவது மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளது. அதேபோல, கூடலூரில் 7-ஆவது வாசனை திரவியக் கண்காட்சி மே 12 முதல் 14-ஆம் தேதி வரை நடத்தப்படும். உதகையின் பிரசித்தி பெற்ற மலர்த் திருவிழாவான 121-ஆவது மலர்க் கண்காட்சி அரசினர் தாவரவியல் பூங்காவில் மே 19 முதல் 21 வரை 3 நாள்களுக்கு நடைபெற உள்ளது.
பழக் கண்காட்சி: கோடை சீசன் நிறைவடையும் வகையில் 59-ஆவது பழக் கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டில் நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது. இந்த முறை அதைவிட அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அடிப்படை வசதிகள், சிறப்பு ஏற்பாடுகளைச் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த விழாக்களில் பங்கேற்பதற்காக, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு முறையான அழைப்பு விடுக்கப்பட உள்ளது என்று அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT