அன்புடை நெஞ்சம்: அத்தியாயம்-19
ஒரு காதலன். தன்னுடைய காதலியைப் பிரிந்து வெளியூர் செல்கிறான்.அவனுக்கு அவளைப் பிரிந்து செல்ல மனமே இல்லை. ஆனால், செல்ல வேண்டிய கட்டாயம்.
ஒரு காதலன். தன்னுடைய காதலியைப் பிரிந்து வெளியூர் செல்கிறான்.
அவனுக்கு அவளைப் பிரிந்து செல்ல மனமே இல்லை. ஆனால், செல்ல வேண்டிய கட்டாயம்.
ஆகவே, தன்மீது வீசுகிற வாடைக் காற்றிடம் அவன் பேசுகிறான், ‘நான் திரும்பி வரும்வரை என்னுடைய காதலியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்’ என்கிறான்.
‘உன் காதலி எங்கே இருக்கிறாள்? அது தெரிந்தால்தானே நான் அவளைப் பாதுகாக்க இயலும்?’ என்று கேட்கிறது காற்று.
அவன் அவளுடைய ஊரை அடையாளம் சொல்கிறான், ‘அதோ, பாம்புத்தோல் தொங்கறமாதிரி ஓர் அருவி தெரியுதா? அதுக்குப் பக்கத்துலதான் அவளோட ஊர் இருக்கு’ என்கிறான். ‘அங்கே வீடுகளுக்கு முன்னாலே நெல்லிக்காய் சிதறிக்கிடக்கும். அதை மான் கூட்டங்கள் மகிழ்ச்சியாச் சாப்பிடும்.’
‘அந்த ஊர்லதான் என் காதலி இருக்கா, அவளைப் பார்த்துக்கோ, நான் சீக்கிரமாத் திரும்பிவந்துடறேன்!’
குறுந்தொகையில் மாயெண்டன் எழுதிய பாடல் இது:
‘ஓம்புமதி, வாழியோ வாடை, பாம்பின்
தூங்குதோல் கடுக்கும் தூவெள்அருவிக்
கல்உயர் நண்ணியதுவே நெல்லி
மரைஇனம் ஆரும் முன்றில்
புல்வேய் குரம்பை நல்லோள் ஊரே!’
அதே நேரம், அவனுடைய காதலியின் மனவோட்டம் எப்படி இருக்கிறது?
அவள் தன்னுடைய தோழியிடம் பேசிக்கொண்டிருக்கிறாள், ‘என்னைப் பிரிஞ்சு அவன் வெளியூர் போயிட்டானாமே, அவன் மனம் என்ன கல்லா?’
தோழி அவளைச் சமாதானப்படுத்த முயல்கிறாள், ‘அவனுக்கும் உன்னை நினைச்சுக் கஷ்டமாதான் இருக்கும். அவன் போன பாதைவேற ரொம்பச் சிரமமானதுன்னு எல்லாரும் சொல்றாங்க!’
‘எனக்குத் தெரியும்’ என்கிறாள் காதலி.
‘எப்படித் தெரியும்?’
‘அவன் கிளம்பிப்போனதும், என் நெஞ்சு அவனுக்குப் பின்னாடியே போச்சு’ என்கிறாள் அவள், ‘சின்ன இலை கொண்ட நெல்லிமரம் அந்தப் பாதையில இருந்தது, வழியெல்லாம் பாறைங்க கொதிச்சது!’
‘ஆனா, அவன் அதைப்பத்திக் கொஞ்சம்கூட கவலைப்படலை, தொடர்ந்து போய்கிட்டே இருந்தான்’ என்று பெருமூச்சு விடுகிறாள் காதலி, ‘கிளம்பினபோது நான் அழுததையும் அவன் கவனிக்கலை, அவன் பின்னாடி என் நெஞ்சு வந்ததையும் கவனிக்கலை!’ என்று பிரிவுத் துயரத்தை வெளிப்படுத்துகிறாள்.
ஐங்குறுநூறில் ஓதலாந்தையார் எழுதிய பாடல் இது:
‘அம்ம, வாழி, தோழி, சிறிஇலை
நெல்லி நீடிய கல்காய் கடத்திடைப்
பேதை நெஞ்சம் பின்செலச் சென்றோர்
கல்லினும் வலியர் மன்ற,
பல்இதழ் உண்கண் அழப் பிரிந்தோரே!
அவன் பிரிவதும் அவள் வாடுவதும் அவன் வருந்துவதும் எதற்காக? திருமணத்துக்காகதானே!
காதலன் வெளியூர் சென்று பொருள் சம்பாதித்துக்கொண்டு வந்தால்தான் சமூகத்தில் மதிப்பு, திருமணப்பேச்சை எடுத்தால் பெண் வீட்டாரும் மக்களும் அதனை ஒப்புக்கொள்வார்கள். அதற்காக இந்தப் பிரிவை அவர்கள் தாங்கிக்கொள்ளவேண்டியதுதான்.
சில நாள் கழித்து, அதே காதலன், காதலிக்குத் திருமணம் நடக்கிறது, மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துகிறார்கள்.
அப்போது, அவளைப் பார்ப்பதற்காகத் தோழி அங்கே செல்கிறாள். இருவரும் பழைய கதைகளைப் பேசி மகிழ்கிறார்கள்.
பேச்சின் நடுவே, ‘ஆனால் உனக்கு ரொம்பப் பொறுமைதான்!’ என்கிறாள் தோழி.
‘ஏன் அப்படிச் சொல்றே?’
‘உனக்கு நினைவிருக்கா? உங்க காதல் வீட்டுக்குத் தெரிஞ்சதும், அவங்க நீ வெளியே வரக்கூடாதுன்னு தடை போட்டுட்டாங்க. அடுத்து என்ன நடக்குமோன்னு நாம நடுங்கினோம்.’
‘ஆமா, அதுக்கென்ன?’
‘அப்போ, நான் பயந்த அளவுகூட நீ பயப்படலையே!’ என்கிறாள் தோழி. ‘உன் காதலன் வருவானா, மாட்டானான்னு நான் தவிக்கறேன், நீ என்னடான்னா எப்பவும்போல காபி சாப்பிட்டுகிட்டு, டிவி பார்த்துகிட்டு ஜாலியா இருக்கே.’
‘ஏதோ, உன் நல்ல நேரம், அவன் சட்டுன்னு உன்னைப் பெண் கேட்டுவந்தான், கல்யாணம் நடந்துடுச்சு. நீ இப்ப நல்லா இருக்கே. ஒருவேளை அவன் வரலைன்னா? அப்போ அந்தப் பதற்றமே உனக்கு இல்லையா?’
‘ம்ஹூம், இல்லை!’ என்று சிரிக்கிறாள் காதலி. ‘எனக்கு என் காதலன்மேல நம்பிக்கை இருந்தது, அதுதவிர, ஒரு துப்பும் கிடைச்சது!’
‘அதென்ன துப்பு?’
‘நீயும் நானும்தான் என் காதலனைச் சந்திக்க வாய்ப்பில்லை, நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணு சந்திச்சிருக்கா, அவன் என்னைப் பெண் கேட்டு வரப்போறான்னு தெரிஞ்சுகிட்டு, அதை வந்து என்கிட்ட சொல்லிட்டா’ என்று சிரிக்கிறாள் காதலி, ‘அவன் வர்றான்னு தெரிஞ்சப்புறம் எனக்கென்ன கவலை? அதான் ஜாலியா இருந்தேன்!’
இதைச் சொல்லிவிட்டு, அவள் தன்னுடைய காதலனை நினைத்துக்கொள்கிறாள், இனிமையான மாம்பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, நெல்லிக்காயைத் தின்றுவிட்டு, பக்கத்தில் இருக்கும் மூங்கிலில் தூங்குகிற வௌவால்கள் நிறைந்த மலைநாட்டின் தலைவன் அவன்.
அப்படிப்பட்டவன், அவளைப் பெண் கேட்டு வருகிறான் என்கிற செய்தியைத் தனக்குச் சொன்ன அந்தப் பெண்ணையும் அவள் நன்றியுடன் நினைக்கிறாள். அவள் அமுதம் உண்ணட்டும் என்று வாழ்த்துகிறாள்.
குறுந்தொகைப் பாடல் இது. எழுதியவர் பெயர் தெரியவில்லை.
இதில் பயன்பட்டுள்ள வௌவால் உவமை அழகானது. அதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று ஊகித்து மகிழலாம்.
மாம்பழம் சுவையானது, ஆனால் நெல்லிக்காய் புளிப்பானது. அதுபோல, இத்தனை நாள் ரகசியமாகக் காதல் செய்து மகிழ்ந்த காதலனுக்கு, இப்போது பெண் கேட்டு வருவதும் எதிர்ப்பைச் சந்திப்பதும் சிரமம்தான். ஆனால், அவற்றைச் சந்தித்தபிறகு, திருமணம் நடைபெற்றது, மனைவியோடு இன்பமாக வாழ்கிறான் அவன்!
‘அமிழ்தம் உண்க நம் அயல் இலாட்டி,
பால் கலப்புஅன்ன தேக்கொக்கு அருந்துபு
நீல மென்சிறை வள்உகிர்ப் பறவை
நெல்லிஅம்புளி மாந்தி, அயல்அது
முள்இல் அம்பணை மூங்கில் தூங்கும்
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலைகெழு நாடனை வரும் என்றோளே!’
சில நாளில், அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அதனை அன்பாக வளர்க்கிறார்கள்.
இந்த நேரத்தில், அவன் வேலை காரணமாக வெளியூர் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதை அவன் அவளிடம் மெதுவாகச் சொல்கிறான்.
அவளுக்கு அதிர்ச்சி. அவனைப் பிரிய அவள் விரும்பவில்லை. அதை நேரடியாகச் சொல்லக்கூட அவளால் இயலவில்லை. தவிக்கிறாள்.
காதலியைப் புரிந்துகொண்ட அந்தக் காதலன், எதார்த்தத்தை அவளுக்கு விளக்க முயற்சி செய்கிறான், ‘உன்னைக் கூட்டிகிட்டுப்போகணும்ன்னு எனக்கு ஆசைதான். ஆனா, அது ரொம்பக் கஷ்டம்’ என்கிறான், ‘நான் போற பாதை சாதாரணமானதில்லை, ரொம்ப சிரமமானது’ என்று வர்ணிக்கிறான்.
‘அங்கே ஓமை மரமெல்லாம் காய்ஞ்சுகிடக்கும், பழைய காடு அது, நெல்லிமரத்திலேர்ந்து காயெல்லாம் பளிங்குமாதிரி கீழே விழுந்து கிடக்கும். அதைப் பார்க்கறதுக்கு, சின்னப் பசங்க விளையாடறதுக்காக வட்டுகளை எடுத்துவெச்சமாதிரி இருக்கும். ஆனா, அதை விளையாட அங்கே யாரும் கிடையாது, ஆளே இல்லாம சூரியன் கொதிச்சுகிட்டிருக்கும்.’
‘அந்த வழியில யாராவது நடந்துபோனாக்கூட, அவங்க காலைக் கூரான கல் குத்திக்கிழிக்கும். அவ்ளோ சிரமமான காட்டு வழியில நீ எப்படி வருவே?’
அவன் இவ்வளவு தூரம் விவரித்தபோதும், அவள் முகத்தில் திருப்தி இல்லை. ’என்னைவிட்டுப் பிரியமாட்டேன்னு சொல்லிதானே கல்யாணம் செஞ்சுகிட்டே? இப்போ பிரிஞ்சுபோறது என்ன நியாயம்?’ என்பதுபோல் அவளுடைய முகக்குறிப்பு இருக்கிறது. கண்களில் நீர் வழியப்போகிறது, அதை மறைப்பதற்காக, தன்னிடமிருக்கும் குழந்தையை அணைக்கிறாள்.
அந்தக் குழந்தையின் தலையில், ஒரு செங்கழுநீர் மாலை இருக்கிறது. அவளுடைய பெருமூச்சு, அந்த மாலையின்மீது படுகிறது. மறுகணம், அந்த மாலை வாடிப்போய்விடுகிறது.
இதைப் பார்த்த காதலனுக்கு அவளுடைய அன்பின் ஆழம் புரிகிறது. இந்தப் பெண்ணைப் பிரிந்துசெல்வது நியாயமில்லை என்று தீர்மானித்துக்கொள்கிறான். அதையே தன்னுடைய நெஞ்சுக்கும் சொல்கிறான்!
பாலைபாடிய பெருங்கடுங்கோ எழுதிய அகநானூற்றுப் பாடல் இது:
‘அளிநிலை பொறாஅது அமரிய முகத்தள்,
விளிநிலை கேளாள், தமியள், மென்மெல
நலமிகு சேவடி நிலம்வடுக்கொளாஅக்
குறுக வந்து தன் கூர்எயிறு தோன்ற
வறிதுஅகத்து எழுந்த வாய்அல் முறுவலள்
கண்ணியது உணரா அளவை ஒள்நுதல்
வினைதலைப்படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த ஓமை முதையல்அம் காட்டுப்
பளிங்கத்துஅன்ன பல்காய் நெல்லி
மோடு இரும்பாறை ஈட்டு வட்டுஏய்ப்ப
உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன்
மாய்த்தபோல மழுகுநுனை தோற்றிப்
பாத்திஅன்ன குடுமிக் கூர்ங்கல்
விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை அதர
பரல்முரம்புஆகிய பயம்இல் கானம்
இறப்ப எண்ணுதிர்ஆயின் அறத்தா(று)
அன்றுஎன மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்னஆக எண்ணுநள்போல
முன்னம் காட்டி முகத்தின் உரையா
ஓவச் செய்தியின் ஒன்றுநினைந்துஏற்றிப்
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ(டு)
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூநீர் பயந்த துணைஅமை பிணையல்
மோயினள், உயிர்த்தகாலை மாமலர்
மணிஉரு இழந்த அணிஅழி தோற்றம்
கண்டே கடிந்தனம் செலவே, ஒண்தொடி
உழையம்ஆகவும் இனைவோள்
பிழையலள்மாதோ பிரிதும் நாம்எனினே.’
இன்னொரு காதல் ஜோடி. அவர்களுடைய காதல் ஊருக்குத் தெரிந்துவிட்டது. ஆகவே, பலர் பலவிதமாகப் பேசத் தொடங்குகிறார்கள்.
ஆனால், அந்தப் பெண்ணின் தாய், இதைப்பற்றி எதுவும் பேசவில்லை. அவளுக்கும் அவளுடைய காதலனுக்கும் திருமணம் செய்துவைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அடுத்து என்ன செய்வது? தோழி யோசிக்கிறாள். ஒரு தீர்மானத்துக்கு வருகிறாள். ‘நீயும் உன் காதலனும் கிளம்பிப்போயிடுங்க, எங்கேயாவது கல்யாணம் செஞ்சுகிட்டு சந்தோஷமா இருங்க!’
காதலி திகைக்கிறாள், ‘அம்மா…’ என்று இழுக்கிறாள்.
‘அம்மாதானே? அவங்க வீட்ல தனியா இருக்கட்டும்’ என்று கோபமாகச் சொல்கிறாள் தோழி, ‘இவ்ளோ தூரம் ஊர்ல எல்லாரும் பேசறாங்க, சட்டுன்னு உங்களுக்குக் கல்யாணம் செஞ்சுவைக்கணும்ன்னு அந்த அம்மாவுக்குத் தோணிச்சா?’
‘அதனால, நீ அவனோட கிளம்பு, நீங்க ரெண்டு பேரும் வானத்தைத் தொடறமாதிரி வளர்ந்த மலையைத் தாண்டிப் பாலை நிலத்துல போற காட்சியை நான் பார்க்கறேன்’ என்று கற்பனை செய்கிறாள் அவள், ‘வழியில உங்களுக்குப் பசிக்குது, நெல்லிக்காயைப் பறிச்சுத் திங்கறீங்க, அதுக்கப்புறம், தாகம் எடுக்குது.’
‘பாலை நிலத்துல ஏது தண்ணி? யானையோட காலடி பட்டுப் பள்ளமாகி, அதுல கரும்புப் பாத்திபோல கொஞ்சம் தண்ணி தேங்கியிருக்கு, அதை எடுத்துக் குடிக்கறீங்க.’
நெல்லிக்காய் தின்றபிறகு தண்ணீர் குடித்தால் இனிக்கும். அதுபோல, அவர்களுடைய வாழ்க்கையும் இனிப்பாக இருக்கும் என்று தோழி சொல்லாமல் சொல்கிறாள்.
இதுவும் பாலைபாடிய பெருங்கடுங்கோ எழுதிய பாடல்தான். குறுந்தொகையில் வருகிறது:
‘ஊர் அலர்எழ, சேரி கல்என,
ஆனாது அலைக்கும் அறன்இல் அன்னை,
தானேஇருக்க தன்மனையானே,
நெல்லி தின்ற முள்எயிறு தயங்க,
உணல்ஆய்ந்திசின்ஆல், அவரொடு சேய்நாட்டு
விண்தொட நிவந்த விலங்குமலை கவாஅன்
கரும்புநடு பாத்திஅன்ன
பெரும்களிற்று அடிவழி நிலைஇய நீரே.’
கிட்டத்தட்ட இதேபோன்ற சூழலில் இன்னொரு பாடல். இங்கே காதலி தன்னுடைய காதலன் பெண் கேட்டு வரவேண்டும் என்று காத்திருக்கிறாள். அப்போது அவள் தோழியிடம் பேசுகிறாள், ‘நான் ஒரு கனவு கண்டேன்!’
‘என்ன கனவு?’
‘அவன் ஊர்ல புன்னைமரம் பூத்திருக்கு, அதோட மகரந்தமெல்லாம் கீழே சிந்துது, அங்கே இருக்கிற சிப்பிகள் முதுகுலயெல்லாம் மகரந்தம் விழுந்திருக்கு!’
‘அங்கே வாழற பரதவர்களெல்லாம் ரொம்ப மகிழ்ச்சியா இருக்காங்க, பக்கத்துல ஒரு சோலை… இதையெல்லாம் நினைச்சு நினைச்சு நான் தூங்கிட்டேன்.’
‘அப்போ, கனவுல அவன் வந்தான். அவனை நான் தழுவினேன்’ என்று மகிழ்கிறாள் காதலி. பிறகு, ‘ஆனா, மறுபடி எழுந்துபார்க்கும்போது, அவனைக் காணோம்’ என்று வருந்துகிறாள். ‘இங்கே மரத்துல தொங்கிகிட்டு, எங்கேயோ ஒரு காட்டுல இருக்கிற நெல்லிக்காய்க்கு ஆசைப்படற வௌவால்மாதிரி ஆகிட்டேன் நான்!’
நக்கண்ணையார் எழுதிய நற்றிணைப் பாடல் இது:
‘உள்ளூர் மாஅத்த முள்எயிற்று வாவல்
ஓங்கல் அம்சினைத் தூங்குதுயில் பொழுதின்ன்
வெல்போர்ச் சோழர் அழிசிஅம் பெரும்காட்டு
நெல்லிஅம் புளிச்சுவைக் கனவியாஅங்கு
அதுகழிந்தன்றே தோழி, அவர்நாட்டுப்
பனிஅரும்பு உடைந்த பெரும்தாள் புன்னை
துறைமேய் இப்பி ஈர்ம்புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்
பெரும்தண் கானலும் நினைந்தஅப் பகலே.’
பாலை நிலம். சிலர் அதில் நடந்துசென்றுகொண்டிருக்கிறார்கள்.
வழியில் ஒரு கடம்பமரம். அதனடியில் இரண்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள்: ஆணும் பெண்ணும். அவர்கள் நெல்லிக்காயைத் தின்றுகொண்டிருக்கிறார்கள்.
இதைப் பார்த்தவுடன் அந்த வழிப்போக்கர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள், ‘இந்தக் கடினமான பாலை நிலத்துல வந்திருக்காங்களே, இந்த ஆணும் பெண்ணும் யாரா இருக்கும்?’
‘காதலர்களாதான் இருக்கும்’ என்கிறார் அடுத்தவர். ‘அவங்க முகத்தைப் பார்த்தா தெரியலையா? மகன்றில் பறவைமாதிரி ஒருத்தரை ஒருத்தர் பிரியாம நெருக்கமா இருக்காங்க, ரெண்டு பேரும் ஊரை விட்டு வந்திருக்காங்க, இந்தப் பாலை நிலத்தைக் கடந்துபோய்த் திருமணம் செஞ்சுக்குவாங்க.’
இந்தக் காட்சி ஐங்குறுநூறில் வருகிறது. எழுதியவர் ஓதலாந்தையார்:
‘பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து
செங்கான் மராஅத்த விரிநிழல்இருந்தோர்
யார்கொல், அளியர்தாமே, வார்சிறைக்
குறும்கால் மகன்றில்அன்ன
உடன்புணர் கொள்ளைக் காதலோரே!’
இப்படி இருவருமாகச் சென்றால் பிரச்னையில்லை. ஒருவர்மட்டும் சென்றால்?
ஒரு காதலன் தன் காதலியைப் பிரிந்து வெளியூர் செல்லவிருக்கிறான். அவன் காதலி அதை எண்ணி வருந்துகிறாள். இதை உணர்ந்த தோழி அவனிடம் பேசுகிறாள், ‘சுவையான நெல்லிக்காய் விளையற பாலை நிலத்தைத் தாண்டி எங்கேயோ வெளியூருக்குப் போறீங்களாமே, அங்கே எல்லாம் கிடைக்குமா?’
‘ஓ, கிடைக்குமே!’
‘உன் காதலி உன்னைப் பிரிஞ்சு இங்கே தனியா வாடுவாளே, அதைச் சரி செய்யற மருந்து அந்த ஊர்ல கிடைக்குமா?’
இந்தப் பாடல் அகநானூறில் வருகிறது. எழுதியவர் காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்:
‘பொறிவரிப் புறவின் செங்கால் சேவல்
சிறுபுன் பெடையொடு சேண்புலம் போகி
அரிமணல்இயவில் பரல்தேர்ந்து உண்டு
வரிமரல் வாடிய வான்நீங்கு நனந்தலைக்
குறும்பொறை மருங்கில் கோள்சுரம் நீந்தி
நெடும்சேண் வந்த நீர்நசை வம்பலர்
செல்உயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லிப்
பல்காய் அம்சினை அகவும் அத்தம்
சென்று நீர் அவணிர்ஆகி நின்றுதரும்
நிலை அரும் பொருள்பிணி நினைந்தனிர்எனினே
வல்வதாக நும்செய்வினை, இவட்கே
களிமலி கள்ளில் நல்தேர் அவியன்
ஆடுஇயல் இளமழை சூடித் தோன்றும்
பழம்தூங்கு விடர்அகத்து எழுந்த காம்பின்
கண்இடை புரையும் நெடுமென் பணைத்தோள்
திருந்துகோல் ஆய்தொடி ஞெகிழின்
மருந்தும்உண்டோ பிரிந்துஉறை நாட்டே?’
(தொடரும்)