பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்-1
இந்தக் கேள்விக்கு நம் ஒவ்வொருவருடைய பதிலும் வெவ்வேறுவிதமாக இருக்கும். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வெவ்வேறு சூழ்நிலைகளில் ஒருவரே வெவ்வேறு பதிலைச் சொல்லக்கூடும்.
இனியது எது?
இந்தக் கேள்விக்கு நம் ஒவ்வொருவருடைய பதிலும் வெவ்வேறுவிதமாக இருக்கும். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வெவ்வேறு சூழ்நிலைகளில் ஒருவரே வெவ்வேறு பதிலைச் சொல்லக்கூடும்.
‘பசிகொண்ட நேரம்
தாளிக்கும் ஓசை
சந்தோஷ சங்கீதம்’
என்று வைரமுத்து ஒரு பாடலில் எழுதுவார். பசிக்கும்போது தாளிக்கும் ஓசை இனிமையாகத் தோன்றும். அவனே சாப்பிட்டுவிட்டு அமர்ந்திருக்கும்போது ‘இனியது எது?’ என்று கேட்டால், ‘அப்படியே படுத்துத் தூங்கணும்’ என்று பதில் வரலாம்.
இப்படி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளில் இனியவை மாறுபட்டாலும், உலகப் பொதுவான இனியவைகள் நிறைய உண்டு. அவற்றை இலக்கியங்கள் தொடர்ந்து சொல்லிவருகின்றன.
புத்திமதி சொல்வது யாருக்கும் பிடிப்பதில்லை. சொல்பவர்மீது கோபம்தான் வரும். அதற்காகச் சொல்லாமல் இருந்துவிடலாகாது என்று புலவர்கள் நினைத்திருக்கிறார்கள். அதனால்தான் தமிழில் இத்தனை அறநூல்கள், அறிவுரைகள்.
இந்த இலக்கணங்கள் அவ்வப்போது மாறும் என்கிறார்கள். உதாரணமாக, ‘நீதி நெறி விளக்கம்’ என்ற நூலின் குமரகுருபரர் இப்படி எழுதுகிறார்:
‘தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல், தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்ந்தற்றால், தன்னை
வியவாமை அன்றோ வியப்புஆவது! இன்பம்
நயவாமை அன்றோ நலம்.’
ஒருவன் தன்னை வியந்துகொள்கிறான் என்றால், தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறான் என்றால், நெருப்பின் மீது தண்ணீர் ஊற்றுவது போல என்கிறது இந்தப் பாடல்.
நெருப்பில் தண்ணீர் ஊற்றினால் என்ன ஆகும்? அணைந்து போகும், அவனுக்கு ஏற்கெனவே இயல்பாக உள்ள புகழ்கூட மதிக்கப்படாது.
ஆனால் அவனோ, தொடர்ந்து தன்னைப் புகழ்ந்துகொண்டே இருக்கிறான், அதன்மூலம் தன் புகழ் வளரும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அதாவது, நெருப்பை வளர்ப்பதற்காக அதன்மீது நீர் ஊற்றுகிறான், எப்படிப்பட்ட முட்டாள்தனம்!
ஒருவன் தன்னைத்தானே பார்த்து வியந்துகொள்ளாமல் இருப்பதுதான் நல்லது என்று குமரகுருபரர் சொல்கிறார். இது இன்றைக்குச் சரிப்படுமா?
அலுவலகத்தில் ஒரு பணியைச் செய்கிறோம், அதைப்பற்றி நாமே பாராட்டிச் சொல்லக்கூடாது என்று சும்மா இருந்துவிட்டால், அது யாருக்குமே தெரியாது, அந்தப் பணிக்கான பலன் நமக்கு வராது, சொல்லப்போனால், அதை வேறு யாராவது எடுத்துக் கொண்டுவிடுவார்கள், ‘அவன் எப்படியும் பேசப்போறதில்லை, இந்த வேலையை நான்தான் செஞ்சேன்னு மேனேஜர்கிட்ட சொல்லி ப்ரமோஷனை வாங்கிடுவோம்.’
இப்படி ஒருவர் நினைப்பது தவறு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கு வழிவகுத்தது, தன்னைப்பற்றிப் பேசாமல் இருப்பவர்தானே? அவர் வாயைத் திறந்து ‘இதை நான்தான் செய்தேன்’ என்று சொல்லியிருந்தால் இன்னொருவன் அதைத் திருட நினைப்பானா?
அப்படியானால், குமரகுருபரர் சொன்னது இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாதா? ஒவ்வொருவரும் செல்ஃப்-ப்ரமோஷன் எனப்படும் தற்புகழ்ச்சியைப் பேசினால்தான் வளர இயலுமா? அல்லது, யாராவது நம் வேலையைக் கவனித்துப் புகழ்வார்கள் என்று சும்மா இருக்க வேண்டுமா? ஊரே தன்னைப் புகழ்ந்துகொண்டிருக்கும்போது நாம் எப்படிச் சும்மா இருப்பது? ‘ஊரோடு ஒத்து வாழ்’ என்றும் ஒரு வாசகம் உண்டே.
சிக்கலான கேள்விதான். இதற்குப் பதில் நன்னூலில் இருக்கிறது.
நன்னூல் இலக்கண நூலாயிற்றே, அங்கே சந்திப்பிழை, எழுத்துப் பிழையெல்லாம் தானே பேசுவார்கள்?
அதுதான் இல்லை. வாழ்வியல் இலக்கணங்கள் பலவும் பவனந்தி முனிவர் எழுதிய நன்னூலில் உண்டு. உதாரணமாக:
‘மன்உடை மன்றத்து ஓலைத்தூக்கினும்
தன்னுடை ஆற்றல்உணரார் இடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறும்பொழுதினும்
தன்னை மறுதலைப் பழித்தகாலையும்
தன்னைப் புகழ்தலும்தகும் புலவோற்கே.’
நான்கு சந்தர்ப்பங்களில் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளலாம் என்கிறது நன்னூல். அந்தச் சந்தர்ப்பங்கள்:
முதலில், அரசனது சபைக்குச் சீட்டுக்கவி எழுதும்போது.
சீட்டுக்கவி என்பது கிட்டத்தட்ட இன்றைய Resumeக்கு இணையானது. ஒருவர் அரசனிடம் தன் திறமையைச் சொல்லி, இப்போதைய தேவையைச் சொல்லி உதவி கேட்கிறார்.
இந்நிலையில், அவர் தன்னைப் புகழ்ந்து கொள்வதில் தவறில்லை. வெறுமனே உதவி கேட்டால் யார் செய்வார்கள்? ‘நான் பெரிய கவிஞன், எனக்கு உதவுங்கள்’ என்று சொல்லத்தான் வேண்டும்.
அடுத்து, தன்னுடைய ஆற்றலை உணராதவர்கள் மத்தியில்.
ஒருவருக்கு உடம்பு சரியில்லை, அருகே உள்ளவர்கள் அவருக்கு உதவி செய்ய ஓடுகிறார்கள்.
அப்போது, அந்தக் கூட்டத்தில் ஒரு மருத்துவர் இருந்தால், ‘நான் ஒரு சீனியர் டாக்டர், இதுமாதிரி பிரச்னைகளைச் சமாளிக்க எனக்குத் தெரியும், வழிவிடுங்க’ என்று அவர் சொல்லவேண்டும். அப்போதுதான் கூட்டம் விலகும், அவரால் நோய்வாய்ப்பட்டவருக்கு உதவி செய்து காப்பாற்ற இயலும். அந்த நேரத்தில் அவர் தன்னை அனுபவம் மிகுந்த மருத்துவர் என்று சொல்லிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.
அதேபோல், ஒருவர் பேச எழும்போது, மற்றவர்கள் அவருடைய பெருமையை உணராமல் அவமானப்படுத்தினால், அப்போதும் அவர் தன்னைப்பற்றிப் புகழ்ந்து பேசிக்கொள்ளலாம், அவர்களுக்குத் தன்னுடைய மேதைமையை விளக்கலாம்.
இது பற்றி ஒரு வேடிக்கையான குட்டிக்கதை சொல்வார்கள். ரேஷன் கடையில் பெரிய கூட்டம் நின்றுகொண்டிருக்கிறது. தாமதமாக வந்த ஒருவர் வரிசையைத் தாண்டி முன்னே செல்கிறார், க்யூவில் இருந்த எல்லாருக்கும் கடுப்பு, ‘நாங்கள் எல்லாம் நிக்கறோம், நீ மட்டும் என்ன விசேஷமா?’ என்று அவரைப் பிடித்து இழுத்துப் பின்னே போடுகிறார்கள், அவர் மறுபடி முன்னே செல்கிறார், இவர்கள் மறுபடி அவரை இழுத்துப் பின்னால் நிறுத்துகிறார்கள். கடுப்பான அவர் மௌனமாக அங்கேயே நின்றுகொள்கிறார்.
பிறகு நெடு நேரமாகியும் ரேஷன் கடை திறக்கப்படவில்லை. ஒருவர் புலம்புகிறார், ‘இந்தக் கடைக்காரர் எப்ப வருவாரோ!’
‘ஏற்கெனவே வந்தாச்சு’ என்கிறார் அந்த மனிதர்.
‘எங்கே?’
‘நான்தான் அது, கடையைத் திறக்க வந்தவனைப் பிடிச்சுக் க்யூவுல நிறுத்தினீங்கல்ல? அனுபவிங்க!’
இந்தச் சூழ்நிலையில் அவர் ‘நான்தான் இந்தக் கடையைத் திறக்கவேண்டிய ஆள்’ என்று தன் பெருமையைச் சொல்லிக் கொள்வது அவசியம். அதேபோல் நாமும் நம்முடைய திறமையை உணராதவர்கள் மத்தியில் நம்மைப்பற்றிப் புகழ்ந்து பேசலாம், ‘என்னை யாருன்னு நினைச்சீங்க?’ என்று பின்னணி இசையோடு டயலாக் விடலாம்!
மூன்றாவது சூழ்நிலை, சபையில் வாதம் செய்யும்போது.
மேற்கத்திய இசைபற்றி ஒரு விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. அதில் பேச எழும் ஒருவர், ‘நான் முப்பது வருடங்களாக மேற்கத்திய இசையைப் படிக்கிறேன், அதில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்’ என்று சொல்லிவிட்டுத் தன் வாதத்தைத் தொடங்கினால், அதற்குக் கூடுதல் மதிப்பு இருக்கும். அந்தச் சூழ்நிலையில் தற்புகழ்ச்சி தவறில்லை.
அதேசமயம், ‘நான் பெரிய ஆள், அதனால் என் வாதம் சரி’ என்று சொல்வதும் சரியில்லை. இங்கே தற்புகழ்ச்சி என்பது உங்கள்மீது ஒரு மரியாதையைத் தரும், அதன்பிறகு நீங்கள் உளறிக்கொட்டினால் அந்த மரியாதையை நீங்களே இழந்துவிடுவீர்கள்.
நான்காவது சூழ்நிலை, எதிரி தன்னை அவமானப்படுத்தும்போது.
இரண்டு பேர் மோதிக்கொள்கிற சூழ்நிலையில், ஒருவன் இன்னொருவனை அவமானப்படுத்திப் பேசினால், அந்தப் போட்டி சமமற்றதாகிவிடுகிறது. ஆகவே, அவமானப்படுத்தப் பட்டவன் தன்னைப் புகழ்ந்து பேசுவதற்கு அனுமதி உண்டு.
இதைத் திருப்பிப் போடுகிற கதைகளும் உண்டு.
ஒரு புலவர். அவருடைய ஊரின் பெயர் கடைமடை.
அவர் ஒருமுறை மடம் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அவரைப் பார்த்ததும் அந்த மடத்தின் தலைவர், ‘வாரும் கடைமடையரே’ என்றாராம்.
‘கடைமடையர்’ என்றால், கடைமடை என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பது ஒரு பொருள். கடைசியாக உள்ள (அதாவது ரொம்ப மந்தமான) மடையர் என்பதும் ஒரு பொருள்.
இப்படி அவர் தன்னை அவமானப்படுத்தியதும், கடைமடைப் புலவர் யோசித்தார், சட்டென்று, ‘வந்தேன் மடத்தலைவரே’ என்றாராம். மடத்தின் தலைவர் என்று ஒரு பொருள், மடத்தனமான தலைவர் என்று இன்னொரு பொருள்.
இதுபோல், தன்னை அவமானப்படுத்துவோருக்குப் பதிலடி தருவதற்காக, அவர்களை அவமானப் படுத்தவேண்டும் என்று அவசியமில்லை, தன்னைப்பற்றிப் புகழ்ந்து கொள்ளலாம், அதற்கு நன்னூல் அனுமதி தருகிறது.
இப்படி நான்கு சந்தர்ப்பங்களில் ஒருவர் தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளலாம். தண்டியலங்காரம் என்ற நூலில் அதற்கு ஒரு பெயர்கூட தந்திருக்கிறார்கள், ‘தன் மேம்பாட்டு உரை’:
‘தான் தன் புகழ்வது தன்மேம்பாட்டு உரை’
ஆக, குமரகுருபரர் சொன்னதும் உண்மை, அதில் “Conditions Apply” சேர்த்து நன்னூல் சொல்வதும் உண்மை. இரண்டையும் புரிந்துகொண்டு சரியான நேரத்தில் சரியானதைப் பயன் படுத்திக்கொள்வது நம் சமர்த்து.
இப்போது, மறுபடி முதல் கேள்விக்கு வருவோம். இனியது எது?
‘இனியவை நாற்பது’ என்ற பெயரில் ஒரு நூலே எழுதியிருக்கிறார் பூதஞ்சேந்தனார். அதிலிருந்து ஒரு பாடல்:
‘நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே,
மன்றக் கொடும்பாடு உரையாத மாண்புஇனிதே,
யான்றுஅறிவார் யார்என்று அடைக்கலம் வௌவாத
நன்றியின் நன்குஇனியது இல்.’
முதலில், நன்றியை மறக்காமல் வாழவேண்டும் என்கிறார் பூதஞ்சேந்தனார். திருவள்ளுவர் சொன்ன அதே விஷயம்தான்:
‘நன்றி மறப்பது நன்றுஅன்று, நன்றுஅல்லது
அன்றே மறப்பது நன்று.’
இங்கே ‘நன்றி’ என்பது, ஒருவர் செய்த உதவிதான். அதை மறக்கக்கூடாது, ஒருவேளை அவர்கள் உதவாவிட்டால், அவர் உதவவில்லையே என்பதை மனத்தில் வைத்துக்கொண்டே வாழக்கூடாது, அதை அன்றே மறந்துவிடவேண்டும்.
உதவி என்பது அப்பேர்ப்பட்ட விஷயம். அதே அதிகாரத்தில் வள்ளுவர் சொல்கிறார்:
‘செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.’
நாமாகக் கேட்காமல் ஒருவர் முன்வந்து நமக்கு உதவுகிறார் என்றால், அந்த உதவிக்கு இந்த உலகமும் வானமும் கூட ஈடாகாது. அதை என்றைக்கும் மறக்கக்கூடாது. நம் வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் அந்த உதவியைப்பற்றிய எண்ணமும் நன்றியுணர்வும் கலந்திருக்க வேண்டும் என்கின்றன இந்தப் பாடல்கள்.
இதன் அடையாளத்தை நாம் பல விஷயங்களில் பார்க்கலாம். சிலர் தங்களுடைய சொந்த ஊரைப் பெயரின் முன்னே வைத்திருப்பார்கள், தன்னை வளர்த்த ஊர் என்கிற நன்றிக்காக. சிலர் தங்கள் வீட்டுக்குக் குருநாதரின் பெயரை வைப்பார்கள், ‘சமைத்துப்பார்’ என்ற புத்தகம் எழுதி அதன்மூலம் பெரிய வெற்றியடைந்த மீனாட்சி அம்மாள் அந்தப் பணத்தில் வாங்கிய வீட்டுக்குச் ‘சமைத்துப் பார் இல்லம்’ என்று பெயர் சூட்டப்பட்டது, ‘வெண்ணிற ஆடை மூர்த்தி’ போன்றோர் தங்கள் பெயரோடு முதல் படத்தின் பெயரைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிக் கிடைத்த உதவியை எண்ணி நன்றியுணர்வுடன் இருப்பது இனியது.
அடுத்து, வழக்கில் ஒருதலைப்பட்சமாகப் பேசாமலிருப்பது இனியது என்கிறது இந்தப் பாடல். அதாவது, ஒருவர் நமக்குப் பிடித்தவர் என்பதற்காக அவருக்குச் சார்பாகப் பொய் பேசாமல், நடந்த உண்மையைச் சொல்லவேண்டும்.
இது ஒரு பெரிய விஷயமா என்று நாம் நினைக்கலாம், பொய்யான சாட்சி காரணமாகத் தண்டிக்கப்பட்ட ஒருவரை நாம் சந்திக்கும்வரையில்.
ஒருவிதத்தில் இந்த உலகமே உண்மையை நம்பிதான் இயங்கிக்கொண்டிருக்கிறது. எல்லாரும் உண்மை பேசுகிறார்கள், நாமும் உண்மையைப் பேசினால் நமக்கு எந்தக் கேடும் வராது என்று நம்பி வாழ்கிறவர்கள்தான் இங்கே பெரும்பான்மை.
அவர்களை ஒருவன் பொய்யால் வீழ்த்துகிறான் என்றால் அது எப்பேர்ப்பட்ட பிழை! ஒருபக்கம் அதனால் அவர் அனுபவிக்கும் அவஸ்தைகள், இன்னொருபக்கம், உண்மையை நம்பியவருக்கு அவன் செய்கிற நம்பிக்கைத் துரோகம் அல்லவா?
அதனால்தான், வழக்கில் பொய்சாட்சி சொல்வதை மிகப் பெரிய தவறாக நூல்கள் வலியுறுத்துகின்றன. அதைச் செய்யவேகூடாது என்கின்றன.
சிலப்பதிகாரத்தில் ஒரு பூதம் வருகிறது. அது பொய்சாட்சி சொல்பவர்களைச் சவுக்கால் அடித்துத் தண்டிக்குமாம்:
‘பொய்க்கரியாளர்…என்
கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் என
காத நான்கும் கடும்குரல் எழுப்பிப்
பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்…’
பொய்சாட்சி சொல்வது கிடக்கட்டும், நமக்கு வேண்டியவர் என்பதற்காக வழக்கில் ஒருபக்கமாகப் பேசுவதுகூட தவறுதான். ‘ஓரஞ்சொல்லேல்’ என்று ஆத்திச்சூடி சொல்லும்.
சாதாரண மக்களுக்கே இப்படியென்றால், நீதிபதிகள் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும்!
வெற்றிவேற்கை என்ற நூலில் அதிவீரராமபாண்டியன் எழுதுகிறார்:
‘இருவர்தம் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர் தாம்
மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர்
முறையுற தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வதுஓர் வாள்ஆகும்மே!’
இருதரப்பினர் சொல்வதையும் ஏழுமுறை கேட்கவேண்டும், அதைப்பற்றி நன்கு யோசித்து, அந்த இருவரும் ஏற்றுக்கொள்ளும்படி ஒரு தீர்ப்பைச் சொல்லவேண்டும்.
அப்படியில்லாமல், ஒருதலைப்பட்சமாக ஒரு தீர்ப்பைச் சொல்லிவிட்டால், நியாயம் தங்கள் பக்கம் இருந்தும் வழக்கில் தோற்றவர்கள் மனம் உருகி அழுவார்கள், அந்தக் கண்ணீர், தவறான தீர்ப்பைச் சொன்ன அந்த நீதிபதியின் தலைமுறையையே அழிக்கும் வாளாக மாறும், மூன்று தேவர்களும் ஒன்றாக வந்தால்கூட, பொய்யான தீர்ப்புச் சொன்னவரைக் காக்க இயலாது!’
நிறைவாக, நான்காவது இனியது, தன்னிடம் வந்த அடைக்கலப்பொருளைக் கவர்ந்துகொள்ளாமல் இருத்தல். அதுவும் பொதுவான அடைக்கலப்பொருள் அல்ல, ரகசியமாக, யாருக்கும் தெரியாமல் கொடுக்கப்பட்ட பொருள்.
அதாவது, அந்தப் பொருளை எடுத்தால் யாருக்கும் தெரியாது. அது ஒரு குற்றம் என்று யாரும் அறியப்போவதில்லை. ஆனாலும், அதை எடுக்கக்கூடாது என்று ஒரு கொக்கி.
குற்றமே செய்யாதவனும் மற்றவர்களுக்குத் தெரியாமல் குற்றம் செய்கிறவனும் உலகத்தின் பார்வையில் ஒரேமாதிரிதான் தோன்றுவான். ஆனால் இருவருக்கும் வித்தியாசம் உள்ளதல்லவா?
அதுபோல, அடைக்கலப்பொருளைத் திருடிக்கொள்வதற்கான சூழ்நிலை அமைந்தால்கூட, அதனை எடுக்கக்கூடாது. அதைவிட இனிய ஒரு விஷயம் உலகில் கிடையாது.
திருவள்ளுவரும் இதையே சொல்கிறார், ‘அடுத்தவன் பொருள் உனக்கு எதற்கு? அப்படி நீ ஆசைப்பட்டு அங்கே கை வைத்தாய் என்றால், உன்னிடம் இயற்கையாக உள்ள பொருளும் கரைந்துபோகும்’ என்று விளக்குகிறார், ‘ஆகவே, உன் செல்வத்தைக் காத்துக்கொள்ளும் வழி, அடுத்தவன் செல்வத்துக்கு ஆசைப்படாமலிருப்பதுதான்!’
‘அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.’
பிறருடைய பொருளுக்கு ஆசைப்படாமலிருக்கவேண்டும் என்று எண்ணுகிறவர்களிடம்தான் திருமகள் தங்கியிருப்பாள் என்றும் சொல்கிறார் வள்ளுவர்:
‘அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந்து ஆங்கே திரு.’
(தொடரும்)