அன்புடை நெஞ்சம்: அத்தியாயம்-13
ஒரு காதலன், ஏதோ வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ளான்.
ஒரு காதலன், ஏதோ வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ளான்.
அவனுடைய காதலி அவனைப் பிரிந்து வாடுகிறாள். அவன் வரும் வழியைப் பார்த்துக் காத்திருக்கிறாள்.
பகல் பொழுது எப்படியோ செல்கிறது. இரவு வருகிறது. வானில் நிலவு எழுகிறது.
பொதுவாக நிலவைக் குளிர்ச்சி என்பார்கள். ஆனால், இந்த நிலவு அவளைச் சுடுகிறது. அவனை நினைவுபடுத்தி வேதனை தருகிறது.
அவள் நிலவைப் பார்த்து இப்படிப் பாடுகிறாள்:
‘அத்திக்காய்க் காய் காய்,
ஆலம்காய் வெண்ணிலவே,
இத்திக்காய்க் காய்ந்துஉனக்கு
என்ன பயன்?
பற்றுஇல் அவரைக்காய்,
கோவைக்காய்!’
இந்தப் பாடலைப் படிப்பதற்குச் சூப்பர் மார்க்கெட்டின் வெஜிடபிள் செக்ஷன் பட்டியல்போல் இருந்தாலும், இவையெல்லாம் காய்கள் இல்லை. ’அத்திக்காய்’ என்றால், ‘அந்தத் திக்காய்’, அதாவது, அந்தத் திசையிலே. ‘ஆலம் காய்’ என்றால், ஆலம்போல், விஷத்தைப்போல் காய்தல், சுடுதல், ‘இத்திக்காய்’ என்றால், ‘இந்தத் திக்காய்’, அதாவது இந்தத் திசையிலே. ‘அவரைக்காய்’ என்றால், ‘அவரைக் காய்’, அதாவது, என் காதலனைச் சுடு, ‘கோவைக்காய்’ என்றால், ’கோ’வை, அதாவது தலைவனைச் சுடு.
ஆக, இந்தப் பாடலின் பலன், ‘விஷம்போலச் சுடுகிற நிலவே, நீ என் பக்கத்தில் சுட்டு என்ன பயன்? அந்தப் பக்கமாகச் சென்று என் காதலனைச் சுடு, அவனைச் சீக்கிரம் ஊருக்கு வரச்சொல்!’
அழகான இந்தத் தனிப்பாடல் கண்ணதாசனின் உள்ளம் கவர்ந்தது. அவர் ஒரு திரைப்படத்தில் இதனை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார்:
இத்திக்காய்க் காயாதே, நீ
என்னைப்போல் பெண்ணல்லவோ!’
நிலவே, நீயும் என்னைப்போல ஒரு பெண்தானே? என்னைச் சுடாதே, விஷம்போன்ற உன் கதிர்களை வேறு எங்கேயாவது அனுப்பு.
‘கன்னிக்காய், ஆசைக்காய்,
காதல் கொண்ட பாவக்காய்,
அங்கே காய், அவரைக்காய்,
மங்கை எந்தன் கோவைக்காய்!’
இங்கே ‘கன்னிக்காய்’ என்பது ‘கன்னிக்காக, ‘ஆசைக்காய்’ என்பது ஆசைக்காக, ‘பாவக்காய்’ என்பது, பாவத்துக்காக!
இந்தக் கன்னிமீது ஆசை வைத்துக் காதல் கொண்ட பாவத்துக்காக, அதோ என் தலைவன் அவனைச் சுடு!
’இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்,
நீயும் காய், நிதமும் காய்,
நேரில் நிற்கும் இவளைக் காய்!
உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ,
என்னை நீ காயாதே,
என்னுயிரும் நீயல்லவோ!’
காதலரைப் பிரிந்திருக்கிறவர்களுக்கு இரவும் நிலவும் சுடும். ஆனால் சேர்ந்திருக்கிறவர்கள் மனம் இரவை நினைத்து ஏங்கும். ஆகவே, ‘நீயும் காய், நிதமும் காய்!’ என்று நிலவை அருகே அழைக்கின்றன இந்த வரிகள்!
‘சொன்னதெல்லாம் விளங்காயோ,
தூது வழங்காய் வெண்ணிலா!’
நிலவே, நான் சொன்னதெல்லாம் புரிந்ததா? எனக்காகக் காதல் செய்தி சொல்வாயா?
‘உள்ளமெல்லாம் மிளகாயோ,
ஒவ்வொரு பேச்சுரைக்காயோ!’
இது ஒரு ரசமான வார்த்தை விளையாட்டு. ‘உள்ளமெல்லாம் மிளகாயோ’ என்றால், மிளகாய்போல் காரமாக ஊடல் கொண்டிருக்கிறாயே என்று ஒரு பொருள். ‘உள்ளமெல்லாம் இளகாயோ’ என்று பிரித்தால், எனக்காக உள்ளம் கனிவாயா என்று பொருள்.
அதேபோல், ‘ஒவ்வொரு பேச்சுரைக்காயோ’ என்பதை ‘ஒவ்வொரு பேச்சு உரைக்காயோ’ என்று பிரிக்கவேண்டும். என்னோடு பேசமாட்டாயா?
இப்படிக் காதல், ஊடல், கூடல் என்று அனைத்துக்கும் காய்களைப் பயன்படுத்தி ஒரு பாடலை அமைத்துவிட்டார் கண்ணதாசன். அதற்கு அடிப்படையாக அமைந்தது, ஒரு பழைய தனிப்பாடல்தான்!
இந்தப் பாடலில் காதலியை வருத்தியது நிலவு என்றால், இன்னொரு பாடலில் காற்று அவளை வாட்டுகிறது. ‘என்மீது ஏன் வீசுகிறாய்? அவர்மீது வீசு!’ என்கிறாள்.
அவளுடைய காதலன் அவளைப் பிரிந்து எங்கோ சென்றுள்ளான். ‘இதை நீ பொறுத்துக்கொள்ளவேண்டும், அவன் விரைவில் வந்துவிடுவான்’ என்று தோழி ஆறுதல் சொல்ல, அவளுக்குக் காதலி பதில் சொல்கிறாள்.
’அங்க பாரு, அவரையோட அழகான மலரெல்லாம் உதிருது, ஈங்கை, பகன்றைன்னு பலவிதமான மலர்கள் பூக்குது, மழை வருது, அதோட, இரக்கமில்லாத வாடைக்காத்தும் வருது, என்னைத் துன்புறுத்துது!’
‘நீ எனக்குப் புத்தி சொல்றதை விட்டுட்டு, அந்த வாடைக்காத்துகிட்ட பேசு, என் காதலனோட முகவரியைக் கொடுத்து, அவன்கிட்ட போய் அங்கே அடிக்கச்சொல்லு. நீ வர்றதாச் சொன்ன நாள் வந்தாச்சு, ஆனா நீ இன்னும் வரலையே, ஏன்னு நியாயம் கேட்கச்சொல்லு. உன்னைப் பிரிஞ்சு உலகத்தையே வெறுத்து அங்கே ஒருத்தி தனியாக் காத்திருக்கான்னு சொல்லச்சொல்லு, நான் அனுபவிக்கிற வலியை வர்ணிக்கச்சொல்லு, அவன் எப்ப வருவான்னு தீர்மானமாக் கேட்டுகிட்டு வரச்சொல்லு!’
‘இப்படிச் செய்யறதுக்கு ஆயிரம் வேலை இருக்கும்போது, கண்ணுல நீர் வழிய அழுதுகிட்டிருக்கிற என்மேலயே வீசித் துன்பம் தர்றது ஏன்னு அந்த வாடைக்காத்தைக் கேளு. நான் அதுக்கு என்ன கொடுமை செஞ்சேன்? ஏன் என்னையே சுத்திச்சுத்தி வருது?’
அகநானூறில் கொடியூர்கிழார் மகனார் நெய்தல்தத்தனார் எழுதிய பாடல் இது:
அவரை ஆய்மலர் உதிர, துவரின்
வாங்குதுளைத் துகிரின் ஈங்கை பூப்ப,
இறங்குபோது அவிழ்ந்த ஈர்ம்புதல் பகன்றை
கறங்கு நுண்துவலையின் ஊர்உழை அணியப்
பெயல்நீர் புதுவரல் தவிர, சினைநேர்பு
பீள்விரிந்து இறைஞ்சிய பிறங்குகதிர்க் கழனி
நெல்ஒலி பாசுஅவல் துழைஇக் கல்எனக்
கடிதுவந்து இறுத்த கண்ணில் வாடை
‘நெடிதுவந்தனை’என நில்லாது ஏகிப்
பலபுலந்து உறையும் துணைஇல் வாழ்க்கை
நம் வலத்தன்மை கூறி அவர்நிலை
அறியும்ஆயின் நன்றுமன் தில்ல
பனிவார் கண்ணேம்ஆகி இனிஅது
நவம்மே எவ்வம் ஆகின்று,
அனைத்தால் தோழி நம் தொல்வினைப் பயனே!’
கிட்டத்தட்ட இதேபோன்ற சூழ்நிலையில் இன்னொரு காதலி. ஆனால், அவளுக்கு வாடைக்காற்றைக் கோபிக்கக்கூடத் தெம்பு இல்லை. ‘நீபாட்டுக்கு அந்தப் பக்கமா அடி, நான் இந்தப் பக்கமா வருந்திகிட்டுக் கிடக்கறேன்’ என்கிறாள் விரக்தியுடன்.
வானில் இருண்ட மேகம் இடியாக முழங்குகிறது. ‘துள்ளுபெயல்’ என்கிறாள் காதலி. அதாவது, மழைத்துளிகள் பூமியில் துள்ளிக்குதித்துப் பெய்கின்றனவாம்!
மழை பெய்ததும், பூக்கள் மலர்கின்றன. அவற்றிலிருந்து நீர் சொட்டுகிறது. அதைப் பார்க்கும்போது, ‘காதலனைப் பிரிஞ்ச காதலிங்க கண்ணுலேர்ந்து நீர் வழியறமாதிரி இருக்கு’ என்கிறாள் இவள்.
முதல் வரியில் மழை துள்ளிக்குதிக்கிறது என்றவள், அதனால் பூ அழுகிறது என்கிறாள். ‘அவன்பாட்டுக்குக் கிளம்பிப் போய்ட்டான், இங்கே வருந்தறது நான்தானே?’ என்றுகூட இதற்குப் பொருள் எடுத்துக்கொள்ளலாம்.
வயலில் ஆங்காங்கே அவரையின் அழகிய பூக்கள். நீளமான நெற்கதிர்கள் நன்கு முற்றி, வளைந்து, கண்ணுக்கு அழகாகத் தெரிகின்றன. வண்டுகள் கிளைகளைச் சேர்ந்துநிற்கின்றன.
இப்படிப்பட்ட இந்த முன்பனிக்காலத்து இரவிலே, நான் தனியாக இருக்கிறேன். அவனை எண்ணித் தவிக்கிறேன்.
ஆனால் அவனோ, கோபம்கொண்ட அரசனின் பாசறையில் இருக்கிறான். போர் செய்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என் நோய் புரியாதா? இதைச் சரி செய்ய விரைவாக வரமாட்டானா? இந்தச் சிந்தனையோடு, என்னைத் துன்புறுத்தும் வாடைக்காற்றோடு நான் தனிமையில் இருக்கிறேன். அவன் பிரிவைத் தாங்கஇயலாமல் இருக்கிறேன்!
இந்த அகநானூற்றுப் பாடலை எழுதியவர், கழார்க்கீரன் எயிற்றனார்:
மங்குல் மாமழை விண்அதிர்பு முழங்கித்
துள்ளுபெயல் கழிந்தபின்றைப் புகைஉறப்
புள்ளி நுண்துவலை பூஅகம் நிறையக்
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
நீர்வார் கண்ணின் கருவிளை மலரத்
துய்தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை
நெய்தோய்த்தன்ன நீர்நனை அம்தளிர்
இருவகிர் ஈருளின் ஈரிய துயல்வர
அவரைப் பைம்பூப் பயில அகல்வயல்
கதிர்வார் காய்நெல் கட்குஇனிது இறைஞ்சச்
சிதர்சினை தூங்கும் அற்சிர அரைநாள்
காய்சின வேந்தன் பாசறை நீடி
நம்நோய் அறியா அறன்இலாளர்
இந்நிலை களைய வருகுவர்கொல்என
ஆனாது எறிதரும் வாடையொடு
நோனேன் தோழி, என் தனிமையானே!
இன்னொரு காதலன். இவனும் தன் காதலியைப் பிரிந்து வெளியூர் செல்கிறான். அவள் அவனைப் பிரிய விரும்பவில்லை, வருந்துகிறாள்.
ஆகவே, அவன் அவளை அணைத்துச் சமாதானப்படுத்துகிறான், முதுகைத் தடவிக்கொடுத்து, கூந்தலைத் தொட்டு ‘நான் சீக்கிரமா வந்துடுவேன்’ என்று சொல்கிறான். அவளும் நம்பி அவனை அனுப்பிவைக்கிறாள். அவனுக்காகக் காத்திருக்கிறாள்.
ஆனால், சொன்ன நாளில் அவன் வரவில்லை. அவள் மிகவும் வருந்துகிறாள்.
இதைப்பார்த்த தோழி அவளிடம் பேசுகிறாள், ‘நீ ஏன் கவலைப்படறே? அவன் வர்றதாச் சொன்னா கண்டிப்பா வந்துடுவான்’ என்கிறாள், ‘அவனுக்கு உன்மேல எவ்ளோ அன்பு இருக்குன்னு உனக்குத் தெரியும்தானே? அப்புறமென்ன?’
‘அன்பு இருந்ததுதான், ஆனா இப்போ இருக்கான்னு தெரியலையே’ என்கிறாள் காதலி, ‘உண்மையாவே அவனுக்கு என்மேல அன்பு இருந்தா, இந்நேரம் என்னைப் பார்க்க வந்திருக்கணுமே!’
‘அங்கே பாரு’ என்று தினை வயலைக் காட்டுகிறாள் அவள், ‘தினை விளைஞ்சு அறுவடையும் முடிஞ்சாச்சு. அப்படி அறுத்த அடிப்பகுதி மறுபடியும் முளைவிடப்போகுது. அங்கே அவரைக்கொடி அருமையாப் படர்ந்திருக்கு. இதுதானே அவன் சொன்ன முன்பனிக்காலம்? அவன் ஏன் இன்னும் வரலை? இந்தச் சிரமத்தை நான் எப்படித் தாங்குவேன்னு அவன் யோசிக்கமாட்டானா? நிஜமாவே அவனுக்கு என்மேல அன்பு இருக்கா?’
குறுந்தொகையில் கடுவன்மள்ளன் எழுதிய பாடல் இது:
வார்உறு வணர்கதுப்பு உளரிப் புறம்சேர்பு
‘அழாஅல்’ என்று நம் அழுதகண் துடைப்பார்
யார்ஆகுவர்கொல் தோழி, சாரல்
பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால்
கொழும்கொடி அவரை பூக்கும்
அரும்பனி அச்சிரம் வாராதோரே!’
இங்கே தினைவயலைக் காட்டுவது வெறும் இயற்கை வர்ணனை அல்ல. அதனுள் ஒரு மறைமுகமான கருத்தும் இருக்கிறது என்கிறார்கள் உரையாசிரியர்கள்.
தினையை ஒருமுறை பயிரிட்டால், அறுவடை செய்து உண்ணலாம். பிறகு, அங்கே இன்னொருமுறையும் அது முளைக்கும், அங்கே அவரைக்கொடி படரும், இவை எல்லாம் அந்த நிலத்தில் பாடுபடும் குறவர்கள் அனுபவிப்பார்கள்.
அதுபோல, காதலன் ஏற்கெனவே காதலியைக் கண்டு மகிழ்ந்தவன். இப்போது, திரும்பிவந்து மறுபடியும் அவளோடு வாழப்போகிறான், தினையின் மறுகால்போல.
அதேநேரம், அங்கே படரும் அவரைக்கொடி, அவன் தன்னுடைய செயலைப் பூர்த்தி செய்துவிட்டு வந்தான் என்பதற்கு உவமை. அதாவது, பணியும் நிறைந்தது, பாவையும் கிடைத்தாள். இந்த முழு இன்பத்தையும் அனுபவிக்க அவன் எப்போது வருவான்?
இதேபோல், தினைவயலில் அவரைக்கொடி படர்ந்த ஒரு மலை. அதன் தலைவனைச் சந்தித்துப் பேசுகிறாள் ஒரு தோழி, ‘உன் வயல்ல விளைஞ்ச பசுமையான தினைக்கதிர்களைக் கவரிமா பறிச்சு உண்ணுது, அப்படிப்பட்ட வளமான நாட்டோட தலைவன் நீ. உன் காதலி, நல்லா ஒளிவிடற ஆபரணங்களைத் தேர்ந்தெடுத்து அணிஞ்சிருக்கா, உங்க ரெண்டு பேருக்கும் நடுவில காதல் வளர்றதுக்கு உதவி செஞ்சது யார்ன்னு ஞாபகம் இருக்கா? நான் செஞ்ச உதவியை மறந்துடாதே.’
தோழி இப்படிச் சொல்வதன் நோக்கம், ‘என் உதவியை மறக்காதே, அவளைத் திருமணம் செய்துகொள், அதுதான் எனக்கு மகிழ்ச்சி தரும்’ என்று சொல்லாமல் சொல்வதுதான்!
மூவாதியர் எழுதிய ’ஐந்திணை எழுபது’ என்ற நூலில் உள்ள பாடல் இது:
‘அவரை பொருந்திய பைங்குரல் ஏனல்
கவரி மடமா கதூஉம் படர்சாரல்
கானக நாட! மறவல் வயங்குஇழைக்கு
யான்இடை நின்ற புனை.
இன்னொரு காதலி. இவளும் காதலனைப் பிரிந்திருக்கிறாள். ஆனால், ஒரே ஆறுதல், அவனுடைய மலை தெரிகிறது. அதைப் பார்த்து, அவனை நினைத்துக்கொண்டு மனத்தைத் தேற்றிக்கொள்கிறாள். தன் தோழியிடம் அதைச் சொல்கிறாள்.
‘குளிர்ந்த புதர்ல பசுமையா அவரைக்கொடி படர்ந்திருக்கு, அதோட பூவெல்லாம் கிளிமூக்கைப்போல இருக்கு, பக்கத்துலயே காட்டுப்பூனையோட பல்மாதிரி முல்லைமலர், இந்த அழகான காட்சியை ரசிக்கவிடாம, வாடைக்காத்து வீசுது. ஏதோ, அவனோட மலை கண்ணுக்குத் தெரியறதால, அதைப் பார்த்துகிட்டு என் மனசைத் தேத்திக்கறேன்.’
இப்படிச் சொன்ன மறுகணம், அவள் முகத்தில் வருத்தம்.
‘என்னாச்சு?’ என்று விசாரிக்கிறாள் தோழி, ‘இப்பதானே அவனோட மலையைப் பார்த்து மனசைத் தேத்திக்கறதாச் சொன்னே?’
‘ஆமா, ஆனா மலை பகல் நேரத்துலதானே தெரியும்?’ என்கிறாள் காதலி, ‘ராத்திரியானதும், கடல்ல கப்பல் மூழ்கறமாதிரி, அந்த மலை இருட்டுல மறைஞ்சுடுது, அப்போ அவனும் இல்லை, மலையும் இல்லை, எப்படித் தாங்குவேன்?’
கொல்லனழிசி எழுதிய குறுந்தொகைப் பாடல் இது:
‘பனிப்புதல் இவர்ந்த பைங்கொடி அவரைக்
கிளிவாய்ஒப்பின் ஒளிவிடு பன்மலர்
வெருக்குப் பல்உருவின் முல்லையொடு கஞல
வாடை வந்ததன்தலையும் நோய்பொரக்
கண்டிசின் வாழி தோழி, தெண்திரைக்
கடல்ஆழ் கலத்தின் தோன்றி
மாலை மறையும் அவர் மணிநெடும்குன்றே.’
இன்னொரு காதலி, ‘அவன் மலை என் கண்ணிலிருந்து விலகுவதே இல்லை’ என்கிறாள்.
அவனுடைய மலை, ‘அவரைப்பூபோல’ இருக்கிறதாம். அங்கே உச்சியில் மேகங்கள் மொய்க்கின்றனவாம். அந்தக் காட்சியைப் பார்க்கும்போதெல்லாம், அவளுக்கு அவன் ஞாபகம் வருகிறதாம்.
கபிலரின் ஐங்குறுநூறு பாடல் இது:
‘அன்னாய், வாழி! வேண்டு அன்னை நீமற்று
யான்அவர் மறத்தல் வேண்டுதிஆயின்
கொண்டல் அவரைப் பூவின்அன்ன
வெண்தலை மாமழை சூடித்
தோன்றல்ஆனாது அவர் மணிநெடும்குன்றே.’
(தொடரும்)