அன்புடை நெஞ்சம்: அத்தியாயம்- ஒன்பது
இரவு நேரம். எல்லாரும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்.அவன் அவளைச் சந்திக்க வருகிறான். வழக்கமான இடத்தில் அவளைக்
இ
ரவு நேரம். எல்லாரும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
அவன் அவளைச் சந்திக்க வருகிறான். வழக்கமான இடத்தில் அவளைக் காணவில்லை.
‘என்ன ஆயிற்று? தெரியாமல் வேறு இடத்தில் நிற்கிறாளோ?’ குழப்பத்தில் அவன் தவிக்கிறான். சிறிது நேரம் காத்திருக்கலாம் எனத் தீர்மானிக்கிறான்.
ஆனால், அவள் வரவில்லை. தூரத்தில் தெரியும் அவள் வீட்டுக் கதவைப் பார்க்கிறான் அவன். ‘கதவைத் தட்டலாமா?’
அவளே வந்து கதவைத் திறந்தால் சந்தோஷம். கதவு தட்டப்படும் சத்தத்தைக் கேட்டு வேறு யாராவது எழுந்துவிட்டால்? ராத்திரி நேரத்தில் யாரோ இப்படிக் கதவைத் தட்டினால் சும்மா இருப்பார்களா? ரகசியக் காதலை நாமே ஊருக்கு வெளிச்சமிட்டுக் காட்டினாற்போலாகிவிடுமே.
திரும்பிச்சென்றுவிடலாமா?
அதுவும் அவனால் இயலவில்லை. அவளை தினமும் சந்தித்து மகிழ்வது பழக்கமாகிவிட்டது. ஒருநாள் அவளைக் காணவில்லை என்றாலும் தவிப்புதான்.
ஆகவே அவன் அந்தக் கதவை நெருங்கினான். கதவைத் தட்டாமல் தள்ளித் திறக்க முயன்றான்.
அந்தச் சத்தம், உள்ளே இருந்த அவனுடைய காதலிக்குக் கேட்டது. அவன்தான் என்று புரிந்துவிட்டது.
வழக்கமாக இந்த நேரத்தில் அவள் அவனைச் சந்திக்க வெளியே வந்திருப்பாள். ஆனால் இன்றைக்கு, அவளுடைய தாய் அவளோடு படுத்துவிட்டாள். ஆகவே, எழ இயலவில்லை. அவனைக் காண இயலவில்லை.
வெளியே அவன் படும் வேதனை உள்ளே அவளுக்குப் புரிந்தது. தன் நிலைமையைச் சொல்ல இயலவில்லை. புரண்டு படுத்தாள்.
இதைக் கண்ட அவளுடைய தாய், ‘என்னடி, தூக்கம் வரலையா?’ என்றபடி அவளை இறுகத் தழுவிக்கொண்டாள்.
மீண்டும், கதவை யாரோ தள்ளும் சத்தம் கேட்டது. யானைபோல் வலிமையுடைய காதலன்தான் கதவைத் திறக்கும் வழி தெரியாமல் திணறிக்கொண்டிருந்தான்.
அந்தச் சத்தம் கேட்ட காதலி, வலையில் அகப்பட்ட மயிலைப்போல் தவித்தாள். வலையோ அவளை மேலும் மேலும் இறுக்கித் துன்புறுத்தியது.
மறுநாள், அவளுடைய தோழி அந்தக் காதலனைச் சந்தித்தாள். அவன் மிகவும் ஏமாற்றத்தில் இருந்தான், ‘என்னாச்சு? அவ ஏன் வரலை? ஏதாவது பிரச்னையா?’ என்றான்.
தோழி நடந்ததை விவரித்துச் சொன்னாள். ‘இனிமேலும் நீங்க இப்படி ரகசியமாச் சந்திக்கறது சிரமம். ரகசியக் காதலைப் பகிரங்கமாக்கித் திருமணம் செய்துகொள்ளுங்கள்’ என்று அறிவுறுத்தினாள்.
இந்த அழகான காதல் காட்சி குறுந்தொகையில் வருகிறது. பாடலை எழுதியவர் பெயர் கண்ணனார்.
பல்லோர் துஞ்சு நள்என் யாமத்து
உரவுக் களிறுபோல் வந்து இரவுக் கதவம் முயறல்
கேளேம் அல்லேம், கேட்டனம், பெரும!
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட்டாங்கு யாம்
உயங்குதொறும் முயங்கும் அறன்இல் யாயே.
பெண்ணை மயிலுக்கு ஒப்பிடுவது அன்றுமுதல் இன்றுவரை தொடரும் மரபு. அதே குறுந்தொகையில் இறையனார் பாடிய இந்தப் பிரபலமான பாடலை எல்லாரும் வாசித்திருப்பார்கள்:
கொங்குதேர் வாழ்க்கை, அம்சிறைத் தும்பி!
காமம் செப்பாது கண்டது மொழிமோ!
பயிலியது கெழீஇய நட்பின், மயில்இயல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே!
காதலனும் காதலியும் சந்திக்கிறார்கள். அவள் நாணி நிற்கிறாள். இவன் அவளைப் பாராட்டிப் பேசத் தொடங்குகிறான். அவளோ வாய் திறக்க மறுக்கிறாள்.
அப்போது, அந்தக் காதலியின் தலையில் உள்ள பூவில் மொய்க்கும் ஒரு வண்டைப் பார்க்கிறான் அவன். அந்த வண்டிடம் பேசத் தொடங்குகிறான்:
‘வண்டே, உன்னுடைய வாழ்க்கையே பூவுக்குப் பூ தாவுவதுதான். பலவிதமான பூக்களை நீ பார்த்திருப்பாய், அவற்றில் தேன் உண்டிருப்பாய்.
நான் கேட்கும் கேள்விக்குப் பொய் சொல்லாமல் பதில் சொல். நான் மனம் மகிழவேண்டும் என்பதற்காக எதையாவது பேசாதே, உண்மையைச் சொல்.
என் காதலி, மயில் போன்ற இந்தப் பெண், நெருங்கிய பற்களை உடைய அரிவை, என்னோடு அன்பாகப் பழகுகிறவள், இவளுடைய கூந்தலைவிட மணம் வீசும் இன்னொரு பூவை நீ இதுவரை பார்த்திருக்கிறாயா?’
காதலியை மயில் என்று சொல்வது சரி. அந்த மயிலுக்குத் தோகை உண்டா?
அறிவியல்ரீதியில் பார்த்தால் ஆண் மயிலுக்குதான் தோகை உண்டு என்கிறார்கள். அதனால், ஆணுக்கும் மயில் உவமையாகச் சொல்லப்படுவதுண்டு. ஊத்துக்காடு வேங்கடகவி ஒரு பாடலில், ‘அசைந்து ஆடுகிற மயிலைக் கண்டால் கண்ணனைப்போலிருக்கிறது’ என்கிறார்.
’அசைந்தாடும் மயிலொன்று காணும், நம்
அழகன் வந்தான் என்று
சொல்வதுபோல் தோணும்!’
அதெப்படி மயிலைப் பார்த்தால் கண்ணனைப்போலிருக்கும்?
கண்ணன் மயிலிறகைச் சூடியிருக்கிறானே! மயிலொன்று தோகை விரித்து ஆடும்போது, அதன் இறகுகள் அசைய, அது கண்ணனைப்போல் தோன்றுகிறது:
‘ஒருபதம் வைத்து, மறுபதம் தூக்கி நின்றாட,
மயிலின் இறகாட, மகரக் குழையாட...’
இது சரி. ஆனால் வாலி ஒரு திரைப்பாடலில் இப்படி எழுதியிருக்கிறாரே:
‘மாதவிப் பொன்மயிலாள்
தோகை விரித்தாள்.’
மாதவி பெண்ணல்லவா? அவளுக்கு ஏது தோகை?
ஒரு பெண்ணை நிலா என்று வர்ணித்தால், உடனே அதில் கறைகள் உள்ளன, குண்டும்குழியுமாக உள்ளது என்று அர்த்தம் இல்லை. வட்டமுகம், ஒளி நிறைந்த முகம் என்பதுபோன்ற அம்சங்களைமட்டுமே இந்த உவமை தெரிவிக்கிறது.
ஆக, ஒரு உவமையின் எல்லா அம்சங்களும் பொருத்திச் சொல்லப்படும் பொருளுடன் ஒத்துப்போகவேண்டும் என்று அவசியம் இல்லை. மாதவிக்கு உவமையாகப் பெண் மயிலைதான் சொல்லவேண்டும் என்று கட்டாயம் இல்லை, ஆண் மயிலையும் உவமையாக்கலாம். அப்போது அதற்குத் தோகை இருக்கும், அது அழகான பெண்ணுக்கு உவமை ஆகிறது.
பெண்ணுக்கு மயில் உவமை என்றால், அவளுடைய கூந்தலுக்கு மயில்தோகை உவமையாகும்.
முத்துலிங்கத்தின் பாடலொன்றில் கதாநாயகன் காதலியைப் பார்த்து இப்படிப் பாடுகிறான்:
‘தோகைபோலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்!’
கூந்தலுக்கு மயில் தோகைபோலவே மேகமும் ஒரு பிரபலமான வர்ணனை. இதனை ஒரு திரைப்பாடலில் புலமைப்பித்தன் இவ்வாறு எழுதியிருப்பார்:
‘குழலைப்பார்த்து
முகிலென மயில்கள் ஆடும்!’
இந்த உவமையை அறிந்த காதலன் அதையும் சேர்த்து இப்படிப் பாடுகிறான்:
‘உந்தன் கூந்தல் கார்மேகம் என்றே
நான் சொல்வேன் கண்ணே!’
பதிலுக்கு அவள் குறும்பாகக் கேட்கிறாள், ‘கார்மேகமும் கருப்பு, என் கூந்தலும் கருப்பு, அது சரி, ஆனால், என்னுடைய கூந்தலில் உள்ள வாசனை அந்த மேகத்தில் உண்டா?’
‘பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம்தனில் ஏது?
நீ சொல்வாய் கண்ணா!’
சட்டென்று அவன் உவமையை மாற்றுகிறான்:
‘அழகைச் சுமந்துவரும் அழகரசி,
ஆனந்தப் பூமுகம்,
அந்தியில் வந்திடும்
சுந்தர நிலவோ!’
இந்த உவமையையும் அவள் ஏற்கவில்லை. ‘நிலவு தேய்ந்து வளர்கிறது, நான் அப்படியா?’ என்று கேட்கிறாள்:
‘நாளும் நிலவது தேயுது, மறையுது,
நங்கை முகமென யார் அதைச் சொன்னது?’
புலமைப்பித்தன் இதற்கும் பிரமாதமான ஒரு பதில் வைத்திருந்தார்:
‘முகத்தைப் பார்த்து, அடிக்கடி
நிலவு தேயும்!’
இப்படிச் சமாளிக்க அந்தக் காதலனுக்குத் தெரியவில்லை. திகைத்துப்போய் நிற்கிறான். ‘நல்லாத்தான் பேசுறே, உனக்குப் பதில் சொல்ல இயலாதபடி மன்மதன் அம்புகள் என்னைக் கட்டிவைத்திருக்கின்றன’ என்கிறான்:
‘மங்கை உன் பதில் மனதினைக் கவருது,
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது!’
இப்போது, அவள் புன்னகையோடு அவன் சொன்ன முதல் உவமையை ஏற்றுக்கொள்கிறாள், ‘நான் மயில்தான்’ என்று பாடுகிறாள், ‘இந்த மயில் மன்மதனின் அம்புகளைத் தடுக்க உதவும்!’
‘காமன் கணைகளைத் தடுத்திடவே,
காதல் மயில் துணையென வருகிறது!’
அவன் சிலிர்த்துப்போகிறான், ‘நீ பேசினா எனக்குள்ள மோகம்ங்கற தீ அடிக்குது’ என்கிறான். ‘அதனால் என்ன? அந்தத் தீயை அணைக்க ஒரு ஜீவ நதி, பக்கத்திலயே இருக்கேனே!’ என்று அவன் இதழில் கதையெழுதத் தொடங்குகிறாள் அவள்:
‘மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது!’
‘மோகம் நெருப்பாக,
அதைத் தீர்க்குமொரு ஜீவநதி
அருகினில் இருக்குது!’
மயில் தோகையைப் பெண்ணின் கூந்தலுக்கு ஒப்பிடும் இன்னோர் அழகான பாடல் ஐங்குறுநூறில் இருக்கிறது. எழுதியவர் ஓரம்போகியார்.
இந்தக் காதலன் ஆற்றங்கரையில் இருக்கிறான். தன் காதலியைப் பார்க்கிறான்.
அவள் கரையில் உள்ள மருதமரத்தில் ஏறுகிறாள், அங்கிருந்து நீருக்குள் பாய்ந்து விளையாடுகிறாள்.
இந்தக் காட்சியைப் பார்த்த காதலன், ‘இவள் வானத்திலிருந்து இறங்கும் மயிலா?’ என்கிறான், ‘அந்த மயிலின் தோகைதான் இவளுடைய கூந்தலா?’
விசும்புஇழி தோகைச் சீர்போன்றிசினே
பசும்பொன் அவிர்இழை பைய நிழற்றக்
கரைசேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண்நறும் கதுப்பே!
மயிலின் அழகுமட்டுமா? மற்ற அம்சங்களும் பெண்ணுக்கு உவமையாகும்.
ஒரு காட்டில் மயில் முட்டையிடுகிறது. அந்த முட்டை ஒரு பாறையின்மீது இருக்கிறது.
அப்போது அங்கே ஒரு குரங்கு வருகிறது. மயிலின் முட்டையைப் பந்துபோல் உருட்டி விளையாடுகிறது.
குரங்குக்கு விளையாடும் மகிழ்ச்சி. ஆனால் மயிலுக்கு, தன்னுடைய முட்டை இப்படி உருட்டப்படுகிறதே என்கிற கவலை.
‘நானும் அந்த மயில்போலதான்’ என்று ஒரு காதலி சொல்லாமல் சொல்கிறாள். குறுந்தொகையில் கபிலர் எழுதிய ஒரு பாடலில்.
இங்கே காதலி தன்னை மயிலுக்கு ஒப்பிட்டுக்கொள்வது அழகால் அல்ல. காதலன் அவளைப் பிரிந்து செல்ல நினைக்கிறான். அதை எண்ணி அவள் வருந்துகிறாள், குரங்கு உருட்டி விளையாடும் முட்டையைப் பார்த்து மயில் வருந்துவதுபோல.
‘அந்தக் குரங்குக்கு மயிலின் உள்ளம் தெரியவில்லை, அதுபோல, உனக்கு என் உள்ளம் புரியவில்லை, என்னைப் பிரிந்து செல்கிறேன் என்று சொல்லி அழவைக்கிறாயே!’ என்று எண்ணுகிறாள் அவள்.
இதைப் பார்த்த அவளுடைய தோழி, அவளைத் தேற்ற முயற்சி செய்கிறாள், ‘கவலைப்படாதே, உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கறதுக்குப் பொருள் சேர்க்கறதுக்காகதான் அவன் வெளியூர் போயிருக்கான், பணம் சம்பாதிச்சுகிட்டுச் சீக்கிரமாத் திரும்பி வந்துடுவான்’ என்கிறாள்.
அவள் என்னதான் சொன்னாலும், காதலியின் மனம் மாறவில்லை. ‘அவன் பிரிவைப் பொறுத்துக்கொண்டு இருக்கும் வலிமை எனக்கு இல்லை’ என்கிறாள்.
கான மஞ்ஞை அறைஈன் முட்டை
வெயில்ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி, தோழி! உண்கண்
நீரோடு ஒராங்குத் தணப்ப
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே!
‘அவனைக் காதலித்தது எனக்குத் துன்பம்தான் தருகிறது’ என்பது இந்தக் காதலியின் கருத்து. காரணம், அவனுடன் பழகுகிறவர்கள் இந்தப் பிரிவுக்குத் தயாராக இருக்கவேண்டும். கண்ணில் நீர் வடியாமல் மனத்துக்குள் அவனை எண்ணி வருந்தாமல் அவன் வருவான் என்று பொறுத்துக்கொண்டிருக்கவேண்டும். அதெல்லாம் இயலாவிட்டால், இப்படித் தவிக்கவேண்டியதுதான்.
இன்னொரு காதலி, இவளும் மயிலைதான் பார்க்கிறாள். ஆனால், அதன் அழகை அவள் ரசிக்கவில்லை.
மயில் அழகிய பறவைதானே? அதன்மேல் என்ன கோபம்?
மழை வந்தால் மயில் மகிழ்ச்சியாக நடனம் ஆடும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். மழை வருவதற்குமுன் வானத்தில் இடி இடிக்க, அதைக் கேட்டவுடன் மயில் எதிர்பார்ப்போடு அகவும், அந்தக் குரல் ‘சீக்கிரம் மழை பெய்யட்டும்’ என்று கூறுவதுபோல் இருக்கும். இதுதான் அந்தக் காதலிக்குப் பிடிக்கவில்லை.
அவளுடைய காதலன், மழைக்காலத்தில் திரும்ப வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான். ஆனால், இன்னும் வரவில்லை.
இப்போது, வானத்தில் மின்னலும் இடியும் எழுகிறது. அதைப் பார்த்து இவள் தவிக்கிறாள், ‘மழை வந்துவிடுமோ? என் காதலன் எங்கே?’
அந்த நேரம் பார்த்து, மயில் வானத்தைப் பார்த்து, ‘மழையே, பெய்’ என்பதுபோல் அகவுகிறது.
காதலி ‘வராதே’ என்று சொல்லும் மழையை இந்த மயில் ‘வா’ என்று அழைத்தால் என்ன அர்த்தம்? அதனால்தான் அவளுக்குக் கோபம். இதுவும் குறுந்தொகைப் பாடல்தான், கோவதத்தன் எழுதியது:
என்எனப்படும்கொல் தோழி! மின்னுபு
வான்ஏர்பு இரங்கும் ஒன்றோ? அதன்எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்
ஏதில கலந்த இரண்டற்கு என்
பேதை நெஞ்சம் பெருமலக்குறுமே!
இன்னொரு குறுந்தொகைப் பாடலிலும் இதேபோன்ற காட்சி. காதலன் வெளியூர் சென்றிருக்கிறான். மழைக்காலத்தில் திரும்ப வருவதாகச் சொல்லிச் சென்றுள்ளான்.
இப்போது, மழைக்காலம் வந்துவிட்டது. அவன் வரவில்லை. காதலி வருந்துகிறாள். தோழிக்கு அவளைச் சமாதானப்படுத்துவதற்காக, ‘மழைக்காலம் இன்னும் வரலை’ என்கிறாள்.
‘அப்போ இங்கே பெய்யறது என்னவாம்?’
‘அது போன மழைக்காலத்துல பெய்யாம மீதி இருந்த தண்ணி, அதைதான் வானம் இப்போ கொட்டுது!’
‘அப்போ இந்த மயிலெல்லாம் ஆடுதே!’
‘மேகம் இடிக்கிற சத்தத்தைக் கேட்டு ஆடுது. அவ்ளோதான்!’
‘பிடவ மலரெல்லாம் பூத்திருக்கே.’
‘அதுவும் இந்தப் பொய் மழையைப் பார்த்து ஏமாந்துடுச்சு’ என்கிறாள் தோழி. ‘இந்த மயில், மலரெல்லாம் முட்டாளுங்க, மழைக்காலம் இன்னும் வரலை, என்னை நம்பு!’
இந்தப் பாடலை எழுதியவர் இடைக்காடன்:
மடவ, வாழி! மஞ்ஞை மாயினம்
காலமாரி பெய்துஎன அதன்எதிர்
ஆலலும் ஆலின, பிடவும் பூத்தன,
கார்அன்று இகுளை, தீர்க நின் படரே,
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர்
புதுநீர் கொளீஇய உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்குகுரல் கேட்டே.
ஒரு காதலி, வீதியில் நடந்து வருகிறாள். அவள் காதலன் வானத்தைப் பார்க்கிறான், ‘மழை வருமோ?’
‘ஏன் அப்படிச் சொல்றே?’
‘இதோ, மயில் ஆடுதே!’ என்று அவளைக் காண்பித்துச் சொல்கிறான் அவன், ‘மழை வந்தால்தானே மயில் ஆடும்?’
வைரமுத்துவின் கற்பனை இது:
‘தோகை இளமயில் ஆடி வருகுது,
வானில் மழை வருமோ!’
நிஜமழைமட்டுமல்ல, இசைமழைக்கும் மயில் வரும் என்று வைரமுத்துவே இன்னொரு பாடலில் எழுதுகிறார்:
‘இசையென்னும் மழை வரும்,
இனி எந்தன் மயில் வரும்!’
அழகுக்கு மயில் உவமை என்றால், அதற்கு எதிரான உவமை காக்கை. அதுவும் அழகுதான், ஆனால் ஒப்பிடுவதற்காக எதையாவது தாழ்த்திச்சொல்வது வழக்கமாகிவிட்டது.
காதல் வந்ததும், அந்தக் காக்கைகூட மயிலாகிவிடும் என்கிறார் கபிலன்:
‘வானவில் உரசியே பறந்ததும்
இந்தக் காக்கையும் மயிலென மாறியதே!’
(தொடரும்)