முகப்பு
அன்புடை நெஞ்சம்

அன்புடை நெஞ்சம்: அத்தியாயம்- பத்து

ஒரு பெரிய மலை. அதன் மேலே யானைகள் திரிந்துகொண்டிருக்கின்றன. அவற்றுக்குத் தலைவனாக ஒரு யானை.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

ரு பெரிய மலை. அதன் மேலே யானைகள் திரிந்துகொண்டிருக்கின்றன. அவற்றுக்குத் தலைவனாக ஒரு யானை.

அந்தத் தலைவன் யானை தன்னுடைய தொண்டர்களுக்குச் சாப்பாடு கொடுக்கிறது. மலையில் கிடைக்கும் மூங்கில்கள், தழைகளை ஒடித்துத் தருகிறது. அவர்கள் சாப்பிடுவதை மகிழ்ச்சியோடு பார்க்கிறது.

அதேநேரம், மேலே மின்னல் வெட்டுகிறது. மேகங்கள் கனமழை பொழியத் தொடங்குகின்றன. குளிர் அதிகரிக்கிறது. இருளும் வருகிறது.

அந்த நேரத்தில், ஓர் இளைஞன் மட்டும் அத்தனை மழை, குளிர், இருட்டிலும் நடந்துகொண்டிருக்கிறான். ஏன்?

‘என் காதலியைப் பார்க்கணும்’ என்கிறான் அந்த இளைஞன்.

‘என்ன அவசரம்? இந்த மழையில போகணுமா? நாளைக்குப் பார்த்துக்கலாமே!’

‘ம்ஹூம், இன்னிக்கே பார்க்கணும், தினமும் பார்க்கணும்’ என்கிறான் அவன்.

‘அப்படி என்னய்யா காதலி மேல ஆசை உனக்கு?’

‘நீ என் காதலியைப் பார்த்திருக்கியா? பார்த்தா இப்படிச் சொல்லமாட்டே. அவ பெரிய அழகி. அவ போட்டுக்கிட்டிருக்கிற நகை ஒவ்வொண்ணும் அப்படியொரு அழகு. அவளோட மென்மையான உடம்பும், வளைஞ்சு, திரண்ட தோளும்... அதையெல்லாம் பார்க்காட்டி எனக்குத் தூக்கமே வராது!’

‘சரி, அவ எங்கே இருக்கா?’

‘அதோ, அந்தக் கிராமத்துலதான்!’

‘என்ன விளையாடறியா? நீ இந்தக் காட்டைத் தாண்டிதான் அந்தக் கிராமத்துக்குப் போகணும்!’

‘ஆமா, அதுக்கென்ன?’

‘தம்பி, உனக்குக் காட்டைப் பத்தித் தெரியாதுன்னு நினைக்கறேன். பகல் நேரத்துலயே அங்கே கொடிய மிருகங்கள் திரியும். இப்போ இருட்டு வேற, யாராவது வந்தா மேலே பாயலாம்ன்னு புலி காத்திருக்கும்.’

‘உண்மைதான்!’

‘இதெல்லாம் தெரிஞ்சுமா அந்தக் காட்டுவழியா இந்த நேரத்துல போறே?’

‘ஆமா, அவளைச் சந்திக்க இது ஒண்ணுதானே வழி!’ என்கிறான் அவன். ‘உங்ககிட்ட பேச எனக்கு நேரமில்லை. நான் கிளம்பறேன்’ என்று மழையில் நடக்கிறான்.

அங்கே அவனுடைய காதலியும் தவிப்பில்தான் இருக்கிறாள். ஒன்றல்ல, இரண்டு தவிப்புகள்.

முதலில், காதல் தவிப்பு. இன்னொன்று, காதலன் இப்படி ஆபத்தான வழியில் இரவு நேரத்தில் வருகிறானே என்கிற பயம், அவனுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாதே என்கிற எண்ணம்.

ஏன் இத்தனை சிரமப்பட வேண்டும்? அவனை வராதே என்று சொல்லிவிடலாமே!

‘அது சாத்தியமில்லை’ என்கிறாள் அவள். ‘அவனோட குளிர்ச்சியான, சந்தனம் மணக்கிற நெஞ்சைத் தினமும் கட்டிப்பிடிச்சாதான் எனக்கு நிம்மதி. இல்லைன்னா, உடம்பு மெலிஞ்சுபோய் வளையலெல்லாம் கழன்று விழுந்துடும்!’

‘சரி, குறைஞ்சபட்சம் ராத்திரி நேரத்துல இல்லாம, பகல் நேரத்துலயாவது சந்திக்கலாமே!’

‘நல்ல யோசனைதான். ஆனா, நாங்க பகல் நேரத்துல சந்திக்கப்போய், ஒருவேளை அம்மாவுக்கு எங்க காதல் விஷயம் தெரிஞ்சுடுச்சுன்னா?’ என்று கவலைப்படுகிறாள் அவள். ‘ஒருவேளை, இந்த ஊர்ப் பொண்ணுங்க எங்களை ஒண்ணாப் பார்த்துட்டாங்கன்னா, ரொம்பக் கேவலமாப் பேசுவாங்களே!’

தோழி யோசிக்கிறாள், ‘இப்படி இவன் கஷ்டப்பட்டு ராத்திரி நேரத்துல ஆபத்தைக் கடந்து வர்றதைவிட, இவங்க பகல்ல சந்திக்கறதே நல்லது’ என்று தீர்மானிக்கிறாள். காதலனிடம் சென்று பேசுகிறாள். ‘தோன்றிப்பூ, வேங்கைப்பூ மணக்கிற குளிர்ச்சியான, பெரிய மலை நாட்டைச் சேர்ந்த தலைவா, இனிமே இவளைப் பார்க்க ராத்திரி நேரத்துல வராதே, பகல் நேரத்துல வா’ என்கிறாள். ‘அதனால உங்க காதல் ஊருக்குத் தெரிஞ்சாலும் பரவாயில்லை, நாலு பேர் நாலுவிதமாப் பேசினாலும் பரவாயில்லை. நீங்க மகிழ்ச்சியா இருந்தாப் போதும்!’

கபிலர் எழுதிய அகநானூற்றுப் பாடல் இது. அந்த மலை வர்ணனையும், மழை வர்ணனையும், அதில் நடந்து வருகிறவனுடைய தைரியமும், அவளைக் காணாமல் தூங்கமாட்டேன் என்கிற பிடிவாதமும், அவனைத் தழுவினால்தான் நான் வாழ்வேன் என்கிற இவளுடைய நேசமும், இவர்கள் இருவர் மீது தோழிக்கு இருக்கும் அக்கறையும், பகல் நேரச் சந்திப்பில் வரும் இடையூறுகளும் பல விஷயங்களைத் தெரிவிக்கின்றன -

‘கிளைபாராட்டும் கடுநடை வயக்களிறு

முளைதருபு ஊட்டி வேண்டு குளகு அருத்த,

வாள்நிற உருவின் ஒளிறுபு மின்னிப்

பரூஉ உறைப் பஃறுளி சிதறி, வான் நவின்று

பெருவரை நளிர்சிமை அதிர வட்டித்துப்

புயல் ஏறு உரைஇயல் இருள் நடுநாள்

விறல்இழைப் பொலிந்த காண்புஇல் சாயல்

தடைஇத் திரண்ட நின்தோள் சேர்புஅல்லதைப்

படாஅ ஆகும் எம்கண் என நீயும்

இருள்மயங்கு யாமத்து இயவுகெட விலங்கி

வரிவயங்கு இரும்புலி வழங்குநர்ப் பார்க்கும்

பெருமலை விடர்அகம் வரல் அரிது என்னாய்,

வர எளிதாக எண்ணுதி, அதனால்

நுண்ணிதில் கூட்டிய படுமாண் ஆரம்

தண்ணிது கமழும் நின்மார்பு ஒருநாள்

அடைய முயங்கேம்ஆயின் யாமும்

விறல்இழை நெகிழச் சாஅய்தும் அதுவே

அன்னை அறியினும் அறிக, அலர்வாய்

அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க,

வண்டுஇறை கொண்ட எரிமருள் தோன்றியொடு

ஒண்பூ வேங்கை கமழும்

தண்பெரும் சாரல் பகல்வந்தீமே...’


இன்னொரு காதலி, அவளுடைய காதலனும் அவளைப் பார்க்க இரவு நேரத்தில் வருகிறான். ஆனால், அவளைக் காணவில்லை. தோழிதான் வந்து நிற்கிறாள்.

‘என் காதலி எங்கே?’ என்கிறான் அவன்.

‘இரவு நேரத்தில அவளைப் பார்க்கறது சிரமம்’ என்று விளக்குகிறாள் தோழி, ‘பகல் நேரத்துல வா, மனசுபோல நீங்க பேசலாம், கட்டிப்பிடிச்சுக் கொண்டாடலாம்!’

‘அது சரி, ஆனா ஏன் இரவு நேரத்துல வரக்கூடாது?’

‘என் தோழியோட அம்மா, அவளைக் கட்டிப்பிடிச்சுகிட்டுப் படுத்திருக்காங்க!’

‘அவ தூங்கிட்டாளா?’

‘எப்படித் தூங்குவா? உன் நினைப்பாதான் இருக்கா. ஆனா, அம்மா கட்டிகிட்டுப் படுத்திருக்கும்போது எப்படி எழுந்து வர்றது!’

‘இப்ப நான் என்ன செய்யறது?’

‘நாளைக்கு அந்த மலையருவிக்குப் பக்கத்துல வந்துடு. நானும் என் தோழியும் அங்கே வர்றோம். அதுக்கப்புறம் நீங்க ரெண்டு பேரும் ஆனந்தமாக் குளிச்சு விளையாடலாம். அதுதான் நீங்க சந்திக்கச் சரியான நேரம்!’

இந்தக் குறுந்தொகைப் பாடலை எழுதியவர், உறையூர் முதுகூற்றன் -

‘ஆர்கலி வெற்பன் மார்பு புணையாகக் 

கோடுஉயர் நெடுவரைக் கவாஅற் பகலே

பாடு இன்அருவி ஆடுதல் இனிதே,

நிரைஇதழ் பொருந்தாக் கண்ணோடு இரவில்

பஞ்சி வெண்திரிச் செஞ்சுடர் நல்இல்

பின்னுவீழ் சிறுபுறம் தழீஇ

அன்னை முயங்கத் துயில் இன்னாதே...’

காதலன் இரவில் வந்தால் காதலிக்கு இந்தவிதமான பிரச்னை, வராவிட்டால், வேறுவிதமான பிரச்னை.

திருக்குறளில் வரும் ஒரு காதலி இரவைப் புதுமையாக வர்ணிக்கிறாள், ‘கொடியவர்களின் கொடுமையைவிடக் கொடியது இந்த இரவு’ என்கிறாள்.

ஏன்?

காதலன் அருகே இல்லை. ஆகவே, இரவு நீண்டுகொண்டே செல்கிறது. அதனைத் தாங்க அவளால் இயலவில்லை.


‘கொடியார் கொடுமையின்தாம் கொடிய இந்நாள்

நெடிய கழியும் இரா!’

இன்னொரு காதலி, ‘மாலை நேரமே கஷ்டம்’ என்கிறாள்.

‘அப்படியானால், இரவு பரவாயில்லையா?’

‘அது இன்னும் கஷ்டம்!’

‘எப்படி?’

‘வெய்யில் தணிஞ்சு மாலை நேரம் வரும்போது, அது ஒரு பெரிய கடல் மாதிரியும், நான் அதுல விழுந்துட்ட மாதிரியும் உணர்வேன், கஷ்டப்பட்டு உயிரைக் கையில பிடிச்சுகிட்டு நீந்திவருவேன்.’

‘ஆனா, அப்படி வந்து என்ன பிரயோஜனம்? அடுத்து இரவுங்கற வெள்ளம் வந்துடுதே, அது கடலைவிடப் பெரிசா இருக்கே!’

குறுந்தொகையில் வரும் பாடல் இது. எழுதியவர் பெயர் தெரியவில்லை. ஆகவே, ‘கங்குல் வெள்ளத்தார்’ என்று பாடலிலிருந்து ஒரு சொல்லை எடுத்து அவருக்குப் பெயராக்கிவிட்டார்கள்.

‘எல்லை கழிய, முல்லை மலர,

கதிர் சினம் தணிந்த கையறு மாலை,

உயிர் வரம்பாக நீந்தினம், ஆயின்

எவன்கொல் வாழி? தோழி!

கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!’

திருக்குறளில் ‘பொழுதுகண்டிரங்கல்’ என்று ஓர் அதிகாரமே இருக்கிறது. அனைத்தும் காதலனைப் பிரிந்த காதலி மாலை நேரத்தை எண்ணிப் பாடும் பாடல்கள்.

ஒருத்தி, ‘நீ மாலையா? இல்லை! காதலர்களுடைய உயிரைக் குடிக்கும் வேல்’ என்கிறாள்-

‘மாலையோ, அல்லை! மணந்தார் உயிர் உண்ணும்
வேலை நீ, வாழி, பொழுது!’

இன்னொருத்தி, அதே மாலையை வாளென்று வர்ணிக்கிறாள். போர்க்களத்தில் பகைவர்கள் வீசும் வாளைப்போல, இந்த மாலை நேரம் அவளைத் துன்புறுத்துகிறது -
‘காதலர் இல்வழி மாலை, கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.’

அடுத்தவள் கொஞ்சம் வித்தியாசமாக, அந்த மாலையின் மீது இரக்கப்படுகிறாள். ‘என்னை மாதிரியே நீயும் கவலையில இருக்கிறாப்போல தெரியுதே, என்னாச்சு?’ என்று விசாரிக்கிறாள். ‘உன்னோட காதலனும் உன்னைப் பிரிஞ்சுபோயிருக்கானா? நீயும் அவன் வர்ற நாளை எண்ணிக் காத்திருக்கியா?’

‘புன்கண்ணை! வாழி, மருள்மாலை, எம்கேள்போல்
வன்கண்ணதோ நின் துணை?’


‘மாலை மட்டுமில்லை, இந்த ஊரே துன்பத்துலதான் இருக்கு’ என்கிறாள் இன்னொரு காதலி. அவளுடைய துயரம் ஊருக்கே இருப்பதுபோல் அவளுக்குத் தோன்றுகிறது -

‘பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.’

இன்னொரு காதலி, ‘இந்த மாலைப்பொழுதுக்குத் தைரியம் ரொம்ப ஜாஸ்தி’ என்கிறாள். ‘என் காதலன் பக்கத்துல இருந்தபோது, பயந்து பயந்து ஓடும். இப்ப அவன் இல்லைன்னதும் என் பக்கத்துல வந்து என்னைத் துன்புறுத்துது!’

‘பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை, துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்!’

‘அவன் என்னோட இருக்கும்போது, மாலை நேரம் ரொம்ப இனிமையா இருந்தது’ என்கிறாள் ஒருத்தி. ‘அதே மாலைக்கு இப்படி ஒரு கொடுமையான முகம் இருக்கும்ன்னு இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்!’

‘மாலை நோய்செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்ததிலேன்!’

காதலனைப் பிரிந்திருக்கும்போது, மாலைதான் துன்பம் தருகிறது. காலை?

‘அதுவும் துன்பம்தான். ஆனால் மாலை நேரத்தோட ஒப்பிட்டா, காலை எவ்வளவோ பரவாயில்லை’ என்கிறாள் ஒரு காதலி. ‘இந்தக் காலை நேரத்துக்கு நான் என்ன நன்மை செஞ்சேனோ தெரியலை, அது என்னைத் தொந்தரவு செய்யறதே இல்லை. ஆனா, இந்த மாலை நேரத்துக்கு என் மேல என்ன கோவமோ, தினமும் போட்டு வருத்துது!’

‘காலைக்குச் செய்தநன்று என்கொல், எவன்கொல்யான்

மாலைக்குச் செய்த பகை!’

ஒரு பெண், ‘மாலை மேல எந்தத் தவறும் இல்லை’ என்கிறாள். ‘எல்லாம் இந்தக் காதலால வந்த குழப்பம்!’

‘முதல்ல காலை வருது. அப்போ என் மனசுல காதல் அரும்புது. அப்புறம், பகல் முழுக்க அது வளருது. மாலை நேரத்தில மலருது. அவ்ளோதான்!’

ஆனால், காதலனோடு இருக்கும்போது, காதல் இனிமையாக மலரும். பிரிந்திருக்கையில், அதே காதல் நோயாக மலரும்.

‘காலை அரும்பிப் பகலெலாம் போதாகி
மாலை மலரும் இந்நோய்!’

மாலை நேரம் வருவதை அறிவிப்பதுபோல, ஆயன் புல்லாங்குழல் இசைக்கிறான். ‘இது இசை இல்லை, என்னைக் கொல்லுற ஆயுதம்’ என்று ஒரு காதலி சொல்கிறாள். ‘இந்த இசையைக் கேட்கும்போதெல்லாம் அவனை நினைக்கத் தோணுதே!’

‘அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.’

‘அவன் என்னைப் பிரிஞ்சு போனபோது, என் உயிர் அதைத் தாங்காதுன்னு நினைச்சேன். ஆனா எப்படியோ அதைத் தாங்கிக்கிட்டேன்’ என்கிறாள் இன்னொரு காதலி. ‘அன்னிக்கு அந்தப் பிரிவையே தாங்கின என்னால, இன்னிக்கு இந்த மாலைப்பொழுது தர்ற துன்பத்தைத் தாங்கிக்க முடியலையே!’

‘பொருள்மாலையாளரை உள்ளி மருள்மாலை
மாயும் என் மாயா உயிர்.’

மாலைப்பொழுதை எண்ணி இத்தனை துயரமா? மகிழ்ச்சியாக எதுவும் இல்லையா?

அதற்கும் ஒரு திருக்குறள் இருக்கிறது. ஆனால் அங்கே பேசுவது காதலி அல்ல, காதலன்.

அவன் ஒரு போர் வீரன், அரசனுக்காக இன்னொரு நாட்டின் மீது படையெடுத்துச் சென்றுள்ளான்.

அப்போது, அவனுக்குக் காதலியின் நினைவு வருகிறது, ‘என் அரசன் நடத்தும் போர் விரைவில் வெற்றிகரமாக நிறைவடையட்டும்’ என்று நினைத்துக்கொள்கிறான். ‘அதன்பிறகு, நான் வீட்டுக்குச் செல்வேன், மாலை நேரத்தில் என் காதலியோடு இன்ப விருந்தை அனுபவிப்பேன்!’

‘வினைகலந்து வென்றீக வேந்தன், மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து!’

தஞ்சை ராமையாதாஸ் எழுதிய திரைப்படப் பாடலொன்றில், காதலர்கள் மாலைப் பொழுதை விரட்டுகிறார்கள். இரவுதான் ஆனந்தம் என்கிறார்கள் -

‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ, போ!

இனிக்கும் இன்ப இரவே, நீ வா, வா!

இன்னலைத் தீர்க்க வா!’

அப்படி என்ன விசேஷம் இரவில்?

‘பாலூட்டும் நிலவு தேனூட்டுமே,

பாடும் தென்றல் தாலாட்டுமே,

புன்னை மலர்கள் அன்பினாலே,

போடும் போர்வை தன்னாலே!’

இதெல்லாம் ஒரு பெரிய இன்பமா? சீக்கிரம் விஷயத்துக்கு வாங்க கவிஞரே:

‘கனியிதழ் காதல் பசி தீர்க்குமே,

காண்போம் பேரின்பமே,

வானிலும் ஏது வாழ்வு இதுபோலே?

வசந்தமே இனி எந்நாளும்!’

இந்தக் காதலர்கள் மாலையை விரட்டுகிறார்கள், கண்ணதாசனின் திரைப்பாடலொன்றில் வரும் காதலர்களோ, ‘மாலை மட்டும் போதும், அதுதான் இன்பம்’ என்கிறார்கள் -

‘இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?
இதயத்தில் விழுந்தது திருமண மாலை!
காலை என்பது துன்பம், இனிமேல்
மாலை ஒன்றுதான் இன்பம்!’


மாலையில் சந்திக்கும் காரணத்தால், காலையைத் துன்பம் என்று சொன்னாலும், காதலர்களுக்குக் காலையில் ஒரு ரகசிய மகிழ்ச்சியும் இருக்கிறது. இரவில் அவர்கள் நடத்திய ஆனந்த விளையாட்டுகளால், கன்னத்தில், கையில், முதுகில், கழுத்தில், உதட்டில் காயங்கள் ஏற்பட, காலை வந்ததும் அது வெளிச்சமாகிவிடுகிறது. அதைப் பார்த்து இருவரும் இன்பச் சிலிர்ப்பில் சிரித்துக்கொள்கிறார்கள் -

‘காலை நேரத்தில் காயங்கள் பார்த்துக்
களிப்பதென்பது கவிதையின் விளக்கம்!’


(தொடரும்)

முழு கட்டுரையைப் படிக்க →