அன்புடை நெஞ்சம்: அத்தியாயம் - நான்கு
அவளைப் பார்க்கதான் வருகிறான். அவளுக்கும் அவனை அப்படித் தினமும் சந்திப்பது மகிழ்ச்சிதான்.
அவன் இரவில் வருகிறான். அவளைப் பார்க்கதான் வருகிறான். அவளுக்கும் அவனை அப்படித் தினமும் சந்திப்பது மகிழ்ச்சிதான்.
ஆனால், இப்படி பயந்து காதலிப்பது எத்தனை நாளைக்கு? ஊர் நாலுவிதமாகப் பேசுமுன் திருமணம் செய்துகொள்ள வேண்டுமல்லவா? அவன் எப்போது அவளைப் பெண் கேட்க வருவான்?
இதை நேரடியாகக் கேட்க அவளால் இயலவில்லை. அவனைப் பார்த்தால் அந்தக் கணமே எல்லாவற்றையும் மறந்து அணைத்துக்கொள்ளதான் தோன்றுகிறது.
இதனால், காதலனுக்கு அவனுடைய பொறுப்பை நினைவுபடுத்தித் திருமணப் பேச்சை எடுக்க வேண்டிய பணி தோழிக்கு. அவள் மெதுவாக அந்தப் பேச்சைத் தொடங்க எண்ணுகிறாள்.
அந்தக் காதலன் வளமான ஊரைச் சேர்ந்தவன். அங்கே ஆண் யானையும், பெண் யானையும் சேர்ந்து வாழைத் தோட்டங்களில் மேயும். பிறகு, அது திகட்டிவிட்டது என்று பலா மரத்தை நோக்கிக் கிளம்பும். அதைப் பார்த்து மக்களெல்லாம் பயந்து அலறுவார்கள். அப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்தவன், இவளைச் சந்திக்க ஒவ்வோர் இரவிலும் வருகிறான். ஆனால், பகல் நேரத்தில் வந்து பெண் கேட்கவில்லை.
ஒருநாள், அவன் தன் காதலியைச் சந்தித்துவிட்டுப் புறப்படும் நேரமாகப் பார்த்து, ‘என்ன, கிளம்பியாச்சா?’ என்கிறாள் தோழி.
‘ஆமாம்!’
‘மறுபடி எப்ப வருவீங்க?’ என்று கேட்டுவிட்டு, அவன் பதில் சொல்வதற்குள், ‘நீங்க வர்றவரைக்கும் இவளுக்கு உங்க ஞாபகமா எதையாவது தரலாமே!’
‘எதையாவதுன்னா?’
‘கழுத்துல மாலை போட்டிருக்கீங்களே, அதைக் கொடுத்துட்டுப் போங்க!’
‘இந்த மாலையா, அது எதுக்கு?’
‘நீங்க இல்லாதபோது உங்களை நினைச்சு இவ கவலையில இருப்பா, அப்போ இந்த மாலை இருந்தா, அதைத் தழுவிகிட்டுக் கொஞ்சநேரம் மனசு மாறுவா, அதனாலதான்!’
தோழி கேட்பது சாதாரண மாலை அல்ல. திருமணப் பேச்சைதான் அப்படிக் குறிப்பிடுகிறாள். இந்த விஷயம் காதலனுக்குப் புரியுமா?
நற்றிணையில் முறுவெங்கண்ணனார் எழுதிய அழகான பாடல் இது -
சிறுகண் யானைப் பெரும்கை ஈரினம்
குளவித் தண்கயம் குழையத் தீண்டிச்
சோலை வாழை முணைஇ அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலறச்
செங்கால் பலவின் தீம்பழ மிசையும்
மாமலை நாட! தாமம் நல்கு என
வேண்டுதும், வாழிய! எந்தை வேங்கை
வீயுக விரிந்த முன்றில்
கல்கெழு பாக்கத்து அல்கினை செலினே.
திரைப்படமொன்றில் ஒரு காதலி தன்னைப் பிரிந்து செல்லும் காதலனிடம் இதேபோல் கேட்கிறாள். அவன் திரும்பி வரும்வரை தன்னுடைய ஞாபகமாக அவளுக்கு ஒரு நாணயத்தைத் தந்து செல்கிறான்.
அதன்பிறகு, அவள் பார்க்கும் வட்ட வடிவப் பொருள்கள் எல்லாமே நாணயம்போல் அவளுக்குத் தெரிகின்றன. இதனை யுகபாரதி எழுதுகிறார் -
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்,
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன்,
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்,
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்,
செவ்வந்திப் பூவின் நடுவில் பார்த்தேன்,
தேசியக் கொடியில் சக்கரம் பார்த்தேன்,
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன்...
ஒற்றை நாணயம்!
அவள் மனம் உணர்ந்த அந்தக் காதலன் சொல்கிறான் -
‘காலம்முழுவதும் காத்திருப்பேன், நீ
காணும் இடத்தினில் பூத்திருப்பேன்,
ஒற்றை ரூபாய்ப் பக்கம் இரண்டும்
எந்தன் அன்பு சேர்ந்திருக்கும்,
நெஞ்சில் வைத்துக் காத்திரு!’
மேற்கண்ட நற்றிணைப் பாடலில் யானை பலாப்பழம் சாப்பிடுகிற காட்சியை ஏன் தோழி காதலனிடம் சொல்ல வேண்டும்? அவர்கள் நாட்டை வர்ணிக்க வேறு விஷயமா இல்லை?
யானை ஜோடியாகப் பலாப் பழம் தின்ன வருகிறது. அதைப் பார்த்து ஊர் மக்கள் பயந்து ஓடுகிறார்கள்.
இங்கே ஊர் மக்கள் என்பது, காதலன், காதலியைப் பற்றிப் பலவிதமாகப் பேசுகிறவர்களைக் குறிக்கிறது. அவர்கள் முன்னால் கை கோத்துக்கொண்டு நீங்கள் ஜோடியாக நடக்க வேண்டும், இப்போது கேலி பேசுகிறவர்கள் அப்போது முகத்தை எங்கே வைத்துக்கொள்வார்கள்? அதை நான் பார்க்க வேண்டும் என்று தோழி சொல்லாமல் சொல்கிறாள்.
குறுந்தொகையில் கபிலர் எழுதிய ஒரு பாடலில், பலாப்பழம் வேறுவிதமான கருத்தைச் சொல்லப் பயன்படுகிறது. அங்கேயும் காதலன் காதலியை இரவில் சந்தித்துவிட்டுக் கிளம்புகிறான். தோழி அவனிடம் பேசுகிறாள்.
‘உங்க ஊர்ல பலா மரம் உண்டா?’
‘நிறைய உண்டே. அதுக்கென்ன?’
‘பலா மரத்தோட காம்பு எப்படி இருக்கும்ன்னு பார்த்திருக்கீங்களா?’
‘ஓ, நல்லா தடிமனா இருக்கும்!’
‘ஒருவேளை, ஒரு சின்னக் காம்புல பெரிய பலாப்பழம் பழுத்துட்டா என்ன ஆகும்?’
‘அந்தப் பழத்தோட எடையைத் தாங்கமுடியாம அந்தக் காம்பு உடைஞ்சுபோகும்.’
‘அதுக்கப்புறம்?’
‘பலாப்பழம் கீழே விழுந்து சிதறிப்போகும்!’
‘உங்க காதலியும் அப்படிதான்!’ என்கிறாள் தோழி, ‘அவளோட உயிர் ரொம்பச் சின்னது, அதுக்குள்ள இருக்கிற காதல் ரொம்பப் பெரிசு.’
அவள் அவ்வளவுதான் சொல்கிறாள். அதன் உட்பொருள், ‘என் தோழி இன்னும் எவ்ளோ நாள் இந்தக் காதல் கனத்தைத் தாங்கிட்டிருப்பா? சீக்கிரமா கல்யாணப் பேச்சைத் தொடங்குங்க!’
வேரல்வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே? சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்குஇவள்
உயிர் தவச்சிறிது, காமமோ பெரிதே!
இன்னொரு காதலன், அவன் ஊரிலும் பலா மரங்கள் அதிகம். அவற்றில் பலாப் பழங்கள் மரம்முழுக்க ஒன்றோடொன்று சேர்த்துத் தொடுத்ததுபோல் தொங்கிக்கொண்டிருக்குமாம்.
அந்தக் காதலனின் காதலி, தன் தோழியிடம் சொல்கிறாள், ‘எனக்கு ஓர் எதிரி வந்திருக்கான்.’
‘யார் அது?’
‘என்னுடைய காதல்தான் எனக்கு எதிரி’ என்கிறாள் காதலி.
‘காதலை ஏன் எதிரின்னு சொல்றே?’
‘என் காதலன் வரும்போது, இந்த எதிரி வந்து என்னைச் சூழ்ந்துக்கறான். சரி, அவன் கிளம்பிப் போனப்புறம் இவனும் கிளம்பவேண்டியதுதானே? இங்கேயே என் பக்கத்துல உட்கார்ந்துகிட்டுத் தொல்லை பண்றான்!’ என்கிறாள் காதலி, ‘அவனோடு சேர்ந்தாலும் காதல், அவனைப் பிரிந்தாலும் காதல்’ என்பதால், அதைப் ‘பகை’ என்று குறிப்பிடுகிறாள்.
உறையூர்ச் சிறுகந்தன் எழுதிய குறுந்தொகைப் பாடல் இது -
வேரும் முதலும் கோடும் ஒராங்குத்
தொடுத்தபோலத் தூங்குபு தொடரிக்
கீழ்தாழ்வன்ன வீழ்கோட் பலவின்
ஆர்கலி வெற்பன் வருந்தொறும் வரூஉம்
அகலினும் அகலாதாகி
இகலும் தோழி நம் காமத்துப் பகையே!
கிட்டத்தட்ட இதேமாதிரி பிரச்னை கொண்ட ஒரு காதலியைத் திருவள்ளுவர் காட்டுகிறார்.
அவளுடைய காதலன் அவளைப் பார்க்க வந்திருக்கிறான். இருவரும் மகிழ்ச்சியாகப் பேசுகிறார்கள்.
பிறகு, அவன் கிளம்புகிறான். அப்படி அவன் திரும்பி நடந்த மறுகணம், இவள் உடலில் பசலை படர்ந்துவிடுகிறது. அவனை எப்போது மீண்டும் காண்பது என்று ஏங்கத் தொடங்கிவிடுகிறாள்:
உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என்
மேனி பசப்பு ஊர்வது!
இதையே ஒரு நாட்டுப்புறக் காதலியும் சொல்கிறாள்.
எலும்பிருக்க, தசைகுறைய
என்ன குத்தம் செய்தேனய்யா?
பாரதியார் இதேபோன்ற ஒரு காதலியைப் பாடுகிறார். அவள் கண்ணனைக் காதலனாகக் கருதி, அவனைத் தேடிக் காட்டில் அலைகிறாள். அதனால் இளைத்துவிடுகிறாள்:
திக்குத் தெரியாத காட்டில், உனைத்
தேடித்தேடி இளைத்தேனே!
அந்தக் காட்டில் நல்ல மரங்கள் இருக்கின்றன, விதவிதமான சுவையில் கனிகள் இருக்கின்றன, எங்கு பார்த்தாலும் மலைகள், நதிகள், மணக்கும் பூக்கள், ஒருபக்கம் கடல், இன்னொருபக்கம் நீர்ச்சுனை, முள் புதர்கள், அவற்றின் நடுவே மான்கள், புலிகள், பறவைகள், சிங்கம், யானை... இவற்றையெல்லாம் பார்த்தபடி அவள் நடக்கிறாள், கண்ணனைத் தேடுகிறாள் -
மிக்க நலமுடைய மரங்கள், பல
விந்தைச் சுவையுடைய கனிகள், எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள், அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள்!
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள், எங்கும்
நீளக் கிடக்கு மலைக் கடல்கள், மதி
வஞ்சித்திடும் அகழிச் சுனைகள், முட்கள்
மண்டித் துயர் கொடுக்கும் புதர்கள்!
ஆசை பெற விழிக்கும் மான்கள், உள்ளம்
அஞ்சக் குரல் பழகும் புலிகள், நல்ல
நேசக் கவிதை சொல்லும் பறவை, அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு!
தன்னிச்சை கொண்டலையும் சிங்கம், அதன்
சத்தத்தினில் கலங்கும் யானை, அதன்
முன்னின்று ஓடும் இளமான்கள், இவை
முட்டாது அயல்பதுங்கும் தவளை!
நடந்து நடந்து அவளுடைய கால்கள் துவள்கின்றன, மயங்கி விழப்போகிறாள்.
கால், கை சோர்ந்து விழலானேன், இரு
கண்ணும் துயில் படரலானேன், ஒரு
வேல் கைக்கொண்டு கொலை வேடன், உள்ளம்
வெட்கம் கொண்டொழிய விழித்தான்!
சட்டென்று அவள் முன்னே ஒரு வேடன் தோன்றுகிறான். அவள்மேல் காதல்வயப்பட்டு மயக்கத்தில் பிதற்றுகிறான், ‘உன்மேல் எனக்கு ஆசை வந்துவிட்டது’ என்கிறான், ‘உன்னைக் கட்டித் தழுவ விரும்புகிறேன்’ என்கிறான், ‘பெண்ணே, உனக்கு நான் சாப்பாடு கொண்டுவருகிறேன், இனிமையான தேன், கள் எல்லாம் இருக்கிறது, சாப்பிட்டுக் குடித்து இன்பமாக இருப்போம்!’
‘பெண்ணே, உனது அழகைக் கண்டு, மனம்
பித்தம் கொள்ளுது’ என்று நகைத்தான், ‘அடி
கண்ணே, எனது இருகண் மணியே, உனைக்
கட்டித் தழுவ மனம் கொண்டேன்!’
‘சோர்ந்தே படுத்திருக்கலாமோ? நல்ல
துண்டக் கறி சமைத்துத் தின்போம், சுவை
தேர்ந்தே கனிகள் கொண்டுவருவேன், நல்ல
தேன்,கள் உண்டு இனிது களிப்போம்!’
அவன் பேச்சைக் கேட்டு அவள் நடுங்குகிறாள். தன்னுடைய காதலன் கண்ணன் இருக்கும்போது, இன்னொருவனை மனத்தாலும் அவள் எண்ண விரும்பவில்லை. ‘உன் காலில் விழுகிறேன், என்னை விட்டுவிடு, நான் ஏற்கெனவே திருமணமான பெண்’ என்கிறாள் -
என்றே கொடியவிழி வேடன், உயிர்
இற்றுப்போக விழித்து உரைத்தான், தனி
நின்றே இருகரமும் குவித்து அந்த
நீசன் முன்னர் இவை சொல்வேன்:
‘அண்ணா, உனது அடியில் வீழ்வேன், எனை
அஞ்சக் கொடுமை சொல்லவேண்டா! பிறன்
கண்ணாலம் செய்துவிட்ட பெண்ணை, உன்தன்
கண்ணால் பார்த்திடவும் தகுமோ?’
அவள் சொல்வதை அவன் கவனிக்கவில்லை. ‘எனக்கு அதெல்லாம் தெரியாது, நீதான் எனக்கு வேண்டும்’ என்கிறான் -
‘ஏடீ, சாத்திரங்கள் வேண்டேன், நினது
இன்பம் வேண்டுமடி கனியே, நின்தன்
மோடி கிறுக்குதடி தலையை, நல்ல
மொந்தைப் பழைய கள்ளைப்போல!’
இதைக் கேட்டு அவள் ‘கண்ணா’ என்று அலறுகிறாள், மயங்கி விழுகிறாள் -
காதால் இந்த உரை கேட்டேன், ‘அட
கண்ணா’ என்று அலறி வீழ்ந்தேன், மிகப்
போது ஆகவில்லை இதற்குள்ளே என்தன்
போதம் தெளிய நினைக் கண்டேன்!
அவள் மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்கிறாள், எதிரே கண்ணன் இருக்கிறான்.
அந்த வேடன் எங்கே? கண்ணனைக் கண்டு ஓடிவிட்டானா? ‘என்னைக் காப்பாற்றிய தெய்வமே, உனக்கு நன்றி’ என்கிறாள் அவள் -
‘கண்ணா! வேடன் எங்கு போனான்? உனைக்
கண்டே அலறி விழுந்தானோ? மணி
வண்ணா! எனது அபயக் குரலில், எனை
வாழ்விக்க வந்த அருள் வாழி!
உண்மையில், அந்த வேடன் யாரோவா? அல்லது, கண்ணனே அவள் திக்குத் தெரியாமல் திணறியபோது அப்படி வேடம் போட்டு வந்தானா? அது நம் கற்பனைக்கு!
இந்தக் கதையை எங்கோ கேட்டதுபோல் உள்ளதல்லவா?
முருகன் - வள்ளி கதைதான். வேடன் வடிவில் வந்து மானாகிய வள்ளியை வசப்படுத்திக்கொண்டவன் கந்தன்.
சங்கரதாஸ் சுவாமிகள் அந்தக் கதையை மேடை நாடகமாக எழுதியபோது, ஒட்டுமொத்தத் தமிழகமும் அதைக் கேட்டு, பாடி ரசித்தது. பின்னர் பல திரைப்படங்களிலும் பல்வேறு வடிவங்களில் இந்தப் பாடல் புகழ் பெற்றது -
காயாத கானகத்தே, நின்றுலாவும் நற்காரிகையே!
மேயாத மான்,
புள்ளி மேவாத மான்!
மேவும் கானகம் அடைந்து
நறு சந்தனமும் புனுகும்
கமழும் களபங்கள் அணிந்து
சுகந்தம் மிகுந்து...
மேயாத மான்!
மானைப் பெண்ணுக்கு ஒப்பிடுவார்கள். குறிப்பாக, அவளுடைய கண்களுக்கு.
‘மான் விழி, அவ
தேன் மொழி, நல்ல
மகிழம்பூவு அதரம்,
பூ நிறம், அவ
பொன்நிறம், அவ
சிரிக்க நெனப்பு சிதறும்’
என்று வர்ணிப்பார் கங்கை அமரன். அவள் சிரித்தால் சில்லறை சிதறும் என்று எல்லாப் பாடல்களிலும் கேட்டிருப்போம். அவள் சிரித்தால், பார்ப்பவர்களின் நினைப்பு சிதறும் என்றது கங்கை அமரனின் கற்பனை.
இன்னொரு காதலன் தன் காதலியை ‘மான் விழியே’ என்று அழைத்துக் கடிதம் எழுதத் தொடங்குகிறான்:
‘அன்புள்ள மான் விழியே,
ஆசையில் ஓர் கடிதம், நான்
எழுதுவது என்ன என்றால், உயிர்க்
காதலில் ஓர் கவிதை!’
இதற்கு அவளுடைய பதில்:
‘அன்புள்ள மன்னவனே,
ஆசையில் ஓர் கடிதம், அதைக்
கைகளில் எழுதவில்லை, இரு
கண்களில் எழுதிவந்தேன்!’
மான் விழி அழகு மட்டுமா? கவிதையும் எழுதும். காதலனின் கேள்விகளுக்கு அவள் சொல்லும் பதில்களைப் பாருங்கள்:
‘நலம் நலம்தானா முல்லை மலரே?
சுகம் சுகம்தானா முத்துச் சுடரே?’
‘நலம் நலம்தானே நீயிருந்தால்,
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்!’
அவன் இருந்தால் அவள் நலம், அவனுடைய நினைவுகள் இருந்தால் அவள் சுகம். வேறென்ன வேண்டும்?
காதலனின் அடுத்த கேள்வி -
‘இளைய கன்னியின் இடை மெலிந்ததோ?
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ?’
‘இடை மெலிந்தது இயற்கையல்லவா,
நடை தளர்ந்தது நாணமல்லவா!’
‘பெண்கள் என்றால் குண்டாகவா இருப்பார்கள்? விறுவிறுவென்று தெருவில் ஓடுவார்களா? கொடிபோல் மெலிந்துதான் இருப்பார்கள், நாணத்தால் தளர்ந்துதான் நடப்பார்கள்’ என்று அவள் அன்றைய நிலைமையைப் பதிலாகச் சொல்ல, அவன் வேண்டுமென்றே, ‘ஆனால் நீ வாடியிருக்கிறாயே’ என்று கேட்கிறான்.
‘வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ?
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ!’
அதற்கு அவள் முத்தாய்ப்பாகப் பதில் சொல்கிறாள், ‘நான் வாடியிருப்பது உண்மைதான், ஆனால், என்னை வாடவைத்தவன் நீயல்லவா?’ என்கிறாள், ‘இந்தக் கொடி வாடாமல் என்றும் பசுமையாக இருக்கவேண்டுமென்றால், நாம் ஒன்றுகூடவேண்டும், பிரியாமல் வாழவேண்டும்!’ என்று அழுத்தமாக அவனுக்கு உணர்த்திவிடுகிறாள்:
‘வண்ணப் பூங்கொடி பெண்மையல்லவா,
வாடவைத்ததும் உண்மையல்லவா!’
இந்தப் பாடலை எழுதியவர் வாலி. இன்னொரு பாடலில் அவரே இப்படி எழுதுவார் -
எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்,
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்!
இது கடிதத்துக்கு மட்டுமா? காதலுக்கும் பொருந்தும்!
(தொடரும்)