அறிதலின் எல்லையில்: கேனயத்துவா
தண்ணீரின் பார்முலாவைக் கண்டுபிடித்தவர்கள் யார்? வேறு யார் நம் வேத கால ரிஷிகள்தான். அண்மையில் இப்படி ஒரு விஷயம் இணையத்தில் பிரபலமானது. இப்படி பிரபலமாகச் சுற்றி வந்த விஷயம் இதுதான் -
ண்ணீரின் பார்முலா ‘H2O’. இதைக் கண்டுபிடித்தவர்கள் யார்? வேறு யார் நம் வேத கால ரிஷிகள்தான். அண்மையில் இப்படி ஒரு விஷயம் இணையத்தில் பிரபலமானது. இப்படி பிரபலமாகச் சுற்றி வந்த விஷயம் இதுதான் -
‘தண்ணீருக்கு ‘H2O’ என்று சூத்திரம் சொல்கிறார்கள். அதாவது ஹைட்ரஜன் இரண்டு மடங்கும், ஆக்ஸிஜன் ஒரு மடங்கும் கொண்ட கூட்டுப்பொருள் அது. இதை இன்றைய விஞ்ஞானம் வைத்தது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதர்வண வேதத்தில்தான் முதன்முதலாக இந்தச் சூத்திரம் கையாளப்பட்டது. அதில், பிராணம் ஏகம் அன்யத்வே என்ற ஸ்லோகம் இருக்கிறது. பிராணம் என்றால் பிராண வாயு. அதாவது, ஆக்சிஜன் ஏகம் என்றால் ஒன்று. அன்ய என்றால் இன்னொன்று. த்வே என்றால் இரண்டு. அதாவது, தண்ணீரில் பிராண வாயு ஒரு பங்கும், இன்னொரு வாயு (ஹைட்ரஜன்) இரண்டு பங்கும் இருக்கிறது என்று பொருள். பாருங்க! நம்ம வேதங்களில் இருக்கிற கருத்தைத்தான், வெளிநாட்டார் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்’.
இதில் இருக்கும் பிரச்னை என்ன? இன்றைக்கு நமக்கு H2O என்பது எளிமையான ஒரு பார்முலாவாக இருக்கலாம். ஆனால், அதை வந்தடைந்த வழியில் சில முக்கியமான அடிப்படைகள் இருக்கின்றன. அந்த அடிப்படைகள் இல்லாமல் இந்த பார்முலா வர முடியாது. இந்த பார்முலாவை வந்தடைந்த ஒரு அறிவுலகத்தில், இந்த அடிப்படைகள் குறித்து கட்டாயமாக ஏதாவது குறிப்புகள் இருக்கும்.
ஒன்று ஹைட்ரஜன் வாயு தனியாக கண்டறியப்பட்டிருக்க வேண்டும். காவண்டிஷ் (Cavendish) என்கிற வேதியியலாளர், 17-ம் நூற்றாண்டில் ஹைட்ரஜன் வாயுவைக் கண்டுபிடித்தார். ஆனால், அவர் அதை ஹைட்ரஜன் என அழைக்கவில்லை. அந்தக் காலத்தில் நெருப்பு என்பது ஒரு தனித்தன்மையாக எரியும் தன்மை கொண்ட எல்லாவற்றிலும் இருப்பதாக நம்பிக்கை இருந்தது. தவறான நம்பிக்கை. இந்த எரியும் தன்மையை வெப்பத்தை தன் இயற்கையாகக் கொண்ட பொருளுக்குப் பெயர் ப்லோஜிஸ்டான் (Phlogiston). இது போன்றதொரு கோட்பாடு நமக்கும் இருந்தது. விறகுக்குள் ‘தீ’ இருக்கிறது… மரத்தை கடையும்போது இந்த நெருப்பை வெளிக்கொண்டு வருகிறோம் என்பதுபோல.
உலோகங்களுடன் அமிலங்களை வேதியியல் சேர்க்கையில் ஈடுபடுத்தி அதில் வெளியான வாயுவை சேகரித்தார் காவண்டிஷ். இந்த வாயுதான் ப்லோஜிஸ்டான் என அவர் நம்பினார். இதே காலகட்டத்தில், ஜோசப் ப்ரீஸ்ட்லி என்கிற மற்றொரு வேதியியலாளர், ப்லோஜிஸ்டான் நீக்கப்பட்ட வாயு (depholigsticated air) ஒன்றை தான் கண்டுபிடித்ததாக அறிவித்தார். இது இருக்கும்போது எரியும் பொருட்கள் நன்றாகவே எரிந்தன.
லவாய்ஸியர் என்கிற வேதியியலாளர்தான் ப்லோஜிஸ்டான் என காவண்டிஷ் கூறியதற்கு ஹைட்ரஜன் என்றும், ப்ரீஸ்ட்லி கண்டுபிடித்த வாயுவுக்கு ஆக்ஸிஜன் என்றும் பெயர் வைத்தார். பின்னர் ப்ரீஸ்ட்லி மற்றொரு விஷயத்தையும் கண்டுபிடித்தார். மின்சாரப் பொறி பறக்க ஆக்ஸிஜனையும் ஹைட்ரஜனையும் இணைய வைத்தால், சின்ன சின்னதான நீர்த்துளிகள் அரும்புகின்றன. 1783-ன் கோடைகாலத்தில் ப்ரீஸ்ட்லி இந்தக் கண்டுபிடிப்பை ஜேம்ஸ் வாட்டுக்கு சொன்னார். அரிஸ்டாட்டில் காலம் முதல் நீர் என்பது ஒரு அடிப்படை தனிமம் என்கிற கோட்பாடு ஆட்டம் கண்டது. ஜேம்ஸ் வாட், முதன்முதலாக நீர் என்பது ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் இணைந்ததொரு சேர்மம் (compound) எனக் குறிப்பிட்டார்.
19-ம் நூற்றாண்டில் ஜான் டால்டன், அணுக் கோட்பாட்டை வேதியியலுக்கான அடிப்படையாக முன்வைத்தார். இன்றைக்கு அவரது முடிவுகள் பல தவறாக இருந்தாலும், வேதியியல் வினைகளை அணுக ஒரு துல்லியமான பாதையை அவர் வகுத்துக் கொடுத்தார். சேர்மங்கள் ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கே உரிய தனித்தன்மை கொண்ட கட்டமைப்பு உண்டு என அவர் கூறினார். தண்ணீர் என்பது ஒரு ஆக்ஸிஜனும் ஒரு ஹைட்ரஜனும் கொண்டது என அவர் கூறினார். ஆக, நீரின் முதல் பார்முலா HO என்பதாக இருந்தது.
ஆனால் பரிசோதனைகளில் ஒரு சிக்கல். இரண்டு லிட்டர் ஹைட்ரஜனும் ஒரு லிட்டர் ஆக்ஸிஜனும் சேரும்போதுதான் நீர் உருவானது. ஒட்டுமொத்தமாக மூன்று லிட்டர் வாயுக்கள். ஆனால் கிடைப்பதென்னவோ நீர் (ஆவியாக) ஒரு லிட்டர்தான்.
டால்டனுக்கு இன்னமும் அணு குறித்த குழப்பம் குழப்பம் இருந்தது.
1811-ல், இத்தாலியின் அவோகாட்ரோ என்ற ஒரு இயற்பியல் - கணிதவியல் பேராசிரியர் இருந்தார். வக்கீலாக இருந்து இயற்பியலாளர் ஆன அவர், ஒரு ஆய்வுத்தாளை வெளியிட்டார். ரொம்ப சின்ன தலைப்பு - ‘On the Determination of Proportion in which Bodies Combine According to the Number and Respective Disposition of the Molecules by Which Their Integral Particles are Made’. இன்றைக்கு அவோகாட்ரோ எண், அவோகாட்ரோ கருதுகோள் (Avogadro’ hypothesis) என்றெல்லாம் அழைக்கப்படும் சமாசாரம் இங்கிருந்துதான் வருகிறது.
ஒரே வெப்பமும் அழுத்தமும் கொண்ட சம கன அளவு கொண்ட வாயுக்களில், சமமான எண்ணிக்கையில் மூலக்கூறுகள் (molecules) இருக்கும் என்பது அவோகாட்ரோவின் கருதுகோள். அது என்ன எண்ணிக்கை? அவோகாட்ரோவுக்கு அதை சரியாகக் கணித்துச் சொல்ல வழியில்லை. பின்னாட்களில் அது சரியாகக் கணிக்கப்பட்டது. அதற்கு அறிவியலாளர்கள் ‘அவோகாட்ரோ எண்’ என்று பெயர் சூட்டினார்கள்.
இதில் மிக முக்கியமான விஷயம், மூலக்கூறு என்பதற்கும் அணு என்பதற்குமான வேறுபாட்டை அவோகாட்ரோ தெளிவாக்கினார். இதனால் பல குழப்பங்கள் நீங்கின. வாயுக்களின் எடைகள் வெவ்வேறாக இருந்தாலும், ஒரே கன அளவு கொண்ட வாயுக்களில் சமமான வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் ஒரே எண்ணிக்கை கொண்ட மூலக்கூறுகளை உடையவையாக இருக்கும்.
அப்போது, இரண்டு லிட்டர் ஹைட்ரஜனில் இரண்டு - ஹைட்ரஜன் அணுக்களை கொண்ட மூலக்கூறுகளும், ஒரு லிட்டர் ஆக்ஸிஜனில் உள்ள இரண்டு ஆக்ஸிஜன் அணுக்கள் கொண்ட மூலக்கூறுகளும் இணையும்போது ஒரு ஆக்ஸிஜனும் இரண்டு ஹைட்ரஜனும் கொண்ட மூலக்கூறுகளால் ஆன ஒரு லிட்டர் நீராவி கிடைக்கும். இதற்கு ஒரு லிட்டர் ஹைட்ரஜனில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையும், ஒரு லிட்டர் ஆக்ஸிஜனில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டும். அப்போது நீரின் மூலக்கூறு பார்முலா H2O.
டால்டனின் அணுக் கோட்பாட்டின் வேர், கிரேக்க தத்துவத்தில் இருந்து வந்தது. டெமோக்கிரிட்டஸ் (Democritus) கூறிய அணுக்கள். ஆனால் டால்டன், வேதியியல் வினைகளை ஆராய்ந்தறிய அதைப் பயன்படுத்தினார். அணுக்களின் இயக்கவியல் தன்மையை ஊகித்து, அதிலிருந்து மூலக்கூறுகள் உருவாகும் என ஒரு பரிசோதனைக் குழாயைக்கூட தொடாமல் சரியாக முன்னகர்ந்தவர் அவோகாட்ரோ. ப்லோஜிஸ்டான் என்கிற தவறான பார்வையிலிருந்து ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் கண்டுபிடிக்கப்பட்டன.
இப்படி தொடர்ந்து தவறுகளில் இருந்து சரிக்கு முன் நகரும் ஒரு நகர்தலில் இருந்தே, இன்றைக்கு ரொம்ப எளிதாக நாம் சொல்லக்கூடிய H2O, நூற்றாண்டுகள் பயணத்தில் மானுடம் வந்தடைந்தது.
டெமோக்கிரிட்டஸின் அணுக் கோட்பாட்டைக் காட்டிலும் இன்னும் அதிக விரிவும் ஆழமும் கொண்டது, கணாதரின் அணுக் கோட்பாடு. வைசேஷிகத்தில் இருக்கும் சமபாயம் அணு என்பதிலிருந்து மூலக்கூறு என்கிற கட்டத்துக்கு நம் பார்வையை நகர்த்த மிகவும் உபயோகமாகவே இருந்திருக்கும். ஆனால், அப்படி மூலக்கூறு எனும் இடத்துக்கு நாம் நகர்ந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
ஆனால் சர்வ நிச்சயமாக ஒன்றை சொல்ல முடியும். அதர்வ வேத காலத்தில் ’பிராண’ என்பது ஆக்ஸிஜனை குறித்த ஒரு வார்த்தையல்ல. வாயுக்கள் உடல் சார்ந்த இயக்கங்களின் அடிப்படையிலேயே பகுக்கப்பட்டிருந்தனவே அன்றி அவற்றின் தனிம அல்லது சேர்ம அடிப்படையில் அல்ல. பின்னாட்களில் ஆக்ஸிஜனை இந்திய மொழிப்படுத்தவே பிராண வாயு என அதற்கு பெயர் கொடுக்கப்பட்டது. எனவே வேத கால பிராணம் என்பது ஆக்ஸிஜன் அல்ல.
ஆக, வேத கால பிராணம் என்பது ஆக்ஸிஜன் என்கிறபட்சத்தில், அணுவிலிருந்து மூலக்கூறு என்பதை வந்தடைந்து, அவோகாட்ரோ தேற்றம் போன்றதொன்று நம் பண்பாட்டில் இருப்பதைக் காட்டும் பொறுப்பு, இப்படிப் பேசுகிறவர்களுக்கு வருகிறது. ஆனால், அந்தத் திசையில் பயணிக்கும் அடிப்படை தகுதியைக்கூட – அதிகாரபூர்வ பல்கலைக்கழக சான்றிதழ்கள் அல்ல அறிவுசார்ந்த தேடலே அந்த தகுதி - இப்படி உளறுகிறவர்கள் வந்தடையவில்லை. அறிவியலை ஒரு அறிவிக்கப்பட்ட இறை அருள் வாக்காகப் பார்க்காமல், ஒரு அறிவியக்கமாகப் பார்க்கும்போது மட்டுமே நம் ஞான மரபு, ஒரு செழுமையான புலத்தை அறிவு மலர அளிக்கமுடியும்.
இதே அதர்வண வேதத்தில்தான், பூமியை மதித்து துதிக்கும் பூமி சூக்தம் உள்ளது. சூழலியலுக்கு ஆதாரமான ஒரு முன்னோடி ஆன்மிக பிரகடனம் அது. வைசேஷிக தரிசனமும் அதர்வண வேதத்தின் பூ சூக்தமும் நமக்கு அந்நியப்படும்போது, நம் மரபு சார்ந்து நமக்கு ஏற்படும் தாழ்மை உணர்ச்சி நம் பண்பாட்டு அறிவின்மையிலிருந்து வருகிறது. மத்தியில் நேருவியமும் தமிழ்நாட்டில் திராவிடமும் நம் தலைமுறைக்குக் கொடுத்த பெரும் பரிசு, இந்தப் பண்பாட்டு அறிவின்மை. ஆனால், அதிலிருந்து வெளிவருவது எவ்வாறு? அது எதுவானாலும் நிச்சயமாக மானுட பண்பாட்டின் அற்புத அறிவியக்க முன்னகர்வுகளை, அசட்டுத்தனமாக நம்மிடம் ஏற்கெனவே இருந்ததாக பழமை பேசும் இந்த ‘கேனயத்துவா’, அதற்கான வழியல்ல.