இறையுதிர் காலமும் இந்துத்துவமும்
மத வைராக்கியம் கொண்ட ஏக இறை வழிபாட்டை ஜராதுஷ்டிர மதம் முன்வைத்தபோதே, வேத – உபநிடத மதத் தொடர்ச்சியிலிருந்து அம்மதம் வேறாகி இருக்க வேண்டும். இம்மதம் மையம் கொண்ட பாரசீகத்தில், இந்த ஏக தெய்வ வழிபாடு, ஒரு வலிமையான மைய அரசு உருவாக்கத்துக்குத் துணை சென்றது. இறை பன்மை அழிக்கப்பட்டது. இந்து என்கிற பெயர், முதன்முதலாக வரலாற்றில் பொறிக்கப்படுவது இந்தச் சூழலில்தான்.
இந்துத்துவம் என்கிற பதத்தை உருவாக்கியவர், விநாயக தாமோதர சாவர்க்கர் (1883-1966). விடுதலைப் போராட்ட வீரர். 1923-ல், ரத்னகிரியில் கைதியாக இருந்தபோது, வீர சாவர்க்கர் எழுதிய நூல் ‘இந்துத்துவம்’ (அல்லது இந்துத்துவத்தின் சாராம்சங்கள், The essentials of Hindutva). இதில் அவர் இந்து மதம் என்பது ‘இந்துத்துவத்தின் ஒரு உபகணம் அல்லது பகுதிதான்; இந்துத்துவத்திலிருந்து பெறப்பட்டதுதான்’ என்கிறார். அதாவது, இந்துத்துவம் என்கிற முழுமையிலிருந்து பெறப்பட்ட ஒரு பகுதி மட்டுமே இந்து மதம் என நாம் அறியும் விஷயம்.[1]
இன்றைக்கு நாம் வேறு மாதிரியாக நினைக்கப் பழக்கப்பட்டிருக்கிறோம். இந்து மதமும் அதன் கலை தத்துவ மரபும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வந்தவை என்றும் இந்துத்துவம் என்பது அண்மைக் காலத்தில் உருவான ஒரு சமூக-அரசியல் சித்தாந்தம் என்றும் கருதுகிற பார்வைதான் பரவலாக இருக்கிறது. ஆகவே, ஆன்மிக இந்து என்பவன் வேறு; பண்பாட்டு இந்து என்பவன் வேறு; அரசியல் இந்து என்பவன் வேறு என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறோம். இந்தச் சூழ்நிலையில், சாவர்க்கரின் இந்தப் பார்வை அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், சாவர்க்கரின் இந்தப் பார்வை ஆழமானது; அறிவியல்பூர்வமானது; வரலாற்று நியாயங்கள் உள்ள ஒன்று.
இந்துத்துவம் என்கிற வார்த்தை வேண்டுமானால் அண்மையில் உருவாக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம். ஆனால், எதைக் குறித்து நிற்கிறதோ அந்த இந்துத்தன்மை என்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு அடிப்படையான தொடர்ச்சியைக் குறிக்கிறது. ‘இந்து’ என்கிற பெயர் எப்போது உருவானதோ, அப்போதிருந்தே இந்துத்துவம் என்கிற பெயரில் குறிப்பிடப்படும் பண்பும் அதன் முழுமை சாத்தியத்தில் உருவாகிவிட்டது. மயில் முட்டையில் அதன் தோகையின் அனைத்து வர்ணங்களும் அடங்கியிருப்பது போன்ற ஒரு தோற்றமாக இந்துத்துவம் உருவாகிவிட்டது. அந்தத் தருணம், மானுடப் பரிணாமத்தில் ஒரு முக்கியத் தருணம். இந்து என்கிற பெயர் ஆழமான ஆன்மிக, பண்பாட்டுப் பரிமாணங்களும், நிச்சயமாக நிலப்பரப்புடன் தொடர்புடைய ஒரு பெயராகவும் விளங்குகிறது. இந்தப் பெயரை எப்படி ஒரு மதம் எனக் குறுக்கிவிட முடியாதோ, அதேபோல இதை ஒரு நிலப்பரப்பில் வாழ்கிறவர்களைக் குறிக்கும் ஒரு சொல் என்றும் குறுக்கிவிட முடியாது. 1923-ல், சாவர்க்கரால் கண்டடையப்பட்ட இந்தத் தன்மையை சரியாகப் புரிந்துகொள்ள, ஏறக்குறைய நாம் இந்தோ-ஈரானிய நிலப்பரப்பில், இன்றைக்கு ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இரு அறைகளால் ஆன மனது உதிர்ந்த ஒரு விடியற்காலை
1976-ல், அமெரிக்க உளவியலாளர் ஜூலியன் ஜெய்னஸ் (Julian Jaynes 1920-1997) ‘இரு பிளவு மனத்தின் உடைவில் பிரக்ஞையின் உதயம்’ (‘The Origin of Consciousness in the Breakdown of the Bicameral Mind’ 1976) என்கிற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார். அன்றிலிருந்து இன்று வரை, இந்த நூல் முக்கியமான கண்டடைவாகப் பேசப்படுகிறது; கடுமையாக விமர்சிக்கவும் படுகிறது. அடிப்படையில், எல்லா மேற்கத்திய நூல்களைப் போலவும் இதுவும் ஒரு ஐரோப்பிய மையப் பார்வையைத்தான் வைக்கிறது என்றாலும், இது முன்வைக்கும் கருதுகோள் முக்கியமான ஒன்று. ஆராயப்பட வேண்டிய ஒன்று.
ஜெய்னஸ் கூறுவது என்ன? மானுடப் பண்பாடு மெல்ல மெல்லப் பரிணமித்து, வேட்டுவ சமூகங்கள், கற்காலப் பண்பாடுகள், கிராமங்கள் என்று நகரப் பண்பாடுகள் வரையாக உருவாகி வந்தபோது, அதன் சமூக வளர்ச்சியும் சிக்கல்களும் அகப் பிரச்னைகளும் அதிகரித்தபடியே இருந்தன. அதனால் ஏற்படும் சமூக உளவியல் அழுத்தங்களும் அபரிமிதமானவையாக மாறி வந்தன. நகரப் பண்பாடுகளை மானுடம் அடையும் காலகட்டம் வரை, மனிதர்களின் மூளையின் செயல்பாடு இரு பிளவு தன்மையுடன் இருந்தது. உள்ளுணர்வு கொண்ட ஒரு பகுதியும், அந்த உள்ளுணர்விலிருந்து ஏற்படும் எண்ணங்களைச் செயல்படுத்த, பகுத்தறிவுடன் இயங்கும் ஒரு பிரிவுமாக நம் மூளைகள் இயங்கின.
ஜூலியன் ஜெய்னஸ்
பொதுவாக, நாம் ஏதாவது ஒரு செயலைச் செய்யும்போது அல்லது ஒரு பிரச்னையை அணுகும்போது, நமக்குள் ஒரு உரையாடல் உருவாவதை உணர்ந்திருப்போம். இந்த உரையாடலில் இருந்து பிரச்னைகளுக்கான தீர்வும், அதனைச் செயலாற்றும் வழிமுறையும் கிடைக்கும். அதே நேரம், இந்த உரையாடல் நமக்குள்ளேயேதான் நடைபெறுகிறது என்பதும் நமக்குத் தெரியும். இது நமக்கு இன்று தெரியும். இது இன்னொரு குரல் அல்ல என்பது நமக்குத் தெரியும். ஆனால், நகரப் பண்பாடுகள் உருவாவதற்கு முன்னால் வாழ்ந்த மனிதனுக்கு அது தெரியாது. அவன் இதை ஒரு தனிப்பட்ட தெய்வம் பேசுவதாகவே கருதினான். சில மனிதர்களிடம் இந்தத் தன்மை மிக அதீதமாக இருந்தது (இருக்கிறது). அவர்கள் தெய்வாவேசிகள்; அவர்கள் மானுடச் சமுதாயக் குழுக்களின் பூசகர்கள். இவர்கள் மூலமாக வெளிபட்ட கவிதைகள், இறை கவிதைகள். இவர்கள் மூலமாக வெளிப்பட்ட சமுதாய மதிப்பீடுகள், தெய்வ கட்டளைகள். அதனை பின்பற்றியபோது, அது சமுதாயத்தை உறுதியாக்கியது. திறமையுடன் செயல்பட வைத்தது. இப்படி மனித மனத்தினுள் பேசிய தெய்வங்கள் வழிபடப்பட்டன. அவை செய்யும் பணிக்காக, பலிகள் மூலம் அவை மகிமை செய்யப்பட்டன. இந்தக் காலகட்ட மனத்தை ‘இரு அறைகளால் ஆன மனம்’ (‘bicameral mind’) என்கிறார் ஜெய்னஸ். வலப்பக்க மூளையிலிருந்து வரும் உள்ளுணர்வுத் தூண்டுதல்கள், மாய ஒலிகளாக அசரீரிகளாகக் கருதப்பட்டன. ஆம். மானுட வரலாற்றின் ஒரு பரிணாமக் கட்டத்தில், ‘தெய்வங்கள்’ பேசின.
ஆனால் பெரு நகரங்களை மையம்கொண்ட பண்பாடுகள் உருவானபோது, சமுதாயச் சிக்கல்களின் தன்மைகள் மாறின. சமூக-உளவியல் அழுத்தங்கள் அதிகரித்தன. எழுத்துருக்களை மானுடம் வந்தடைந்தது. இவையெல்லாம் வலப்பக்க மூளையின் உள்ளுணர்வுகளைத் தம்முள் எழும் உள்ளுணர்வுகளாகவே மானுடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரவைத்தன. அதாவது, தெய்வங்கள் பேசுவதை நிறுத்தின. மௌனமாயின. மூளையின் இரு பிளவுகளின் தெய்வங்கள் மீதே, தம் அன்றாட வாழ்க்கையையும் சமூக அரசியல் வாழ்க்கையும் மையமாக்கியிருந்த பண்பாடுகளில் ஆதாரமான ஒரு நெருக்கடி, மையம் கொண்டது.
ஜெய்னஸ் இந்தப் பண்பாட்டைக் குறித்துப் பேசும்போது, இந்தியாவின் பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியை ஒரே வரியில் தொட்டுவிட்டு, யூத விவிலியத்தில் விவரிக்கப்படும் இந்த மாற்றத்தை விரிவாகப் பேசுகிறார் -
இரு அறைகளால் ஆன தன்மை கொண்ட மனத்திலிருந்து உருவான வேதங்களிலிருந்து, விரைவாகவே இந்தியா அதிஅகத்தன்மை கொண்ட உபநிடதங்களுக்கு விரைந்து சென்றுவிட்டது. ஆனால், வேதங்களும் உபநிடதங்களும் அவற்றின் காலகட்டத்தை உண்மையாகச் சொல்பவை எனக் கருதமுடியாது. ….பழைய ஏற்பாட்டில், வரலாற்றுரீதியாக எத்தனையோ பிரச்னைகள் இருந்தாலும், இந்த மாற்றம் ஏற்பட்ட காலகட்டம் எப்படி இருந்தது என்பதற்கான ஆகச்சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. இரு அறைகளால் ஆன மனத்திலிருந்து மானுடம் எப்படி விடைபெற்றது என்பதற்கான வரலாறு அது. தெய்வங்கள் மெல்ல மெல்ல மறைந்தழிந்த காலகட்டம் அது. அதனால் ஏற்பட்ட மானுட சோகமும் வன்முறையும் நிறைந்த காலகட்டம் அது. குரல்கள் இழந்த அந்தத் தெய்வங்களை, அவற்றின் இறைவாக்கினரில் வீணாகத் தேடி, பின்னர் அவற்றுக்கு இணையான ஒன்றை மானுடம் கண்டடைந்த காலகட்டம்.[2]
இந்த மாற்றமான கொந்தளிப்பான காலகட்டமே, ஆபிரகாமிய மதங்களின் ஏக இறை தெய்வக் கோட்பாட்டை மானுடம் வந்தடைந்த தருணம்.
இரு அறைகளால் ஆன மனது செயல்படுகிற சில குழுக்கள் இல்லாமல் இல்லை. அவர்கள், யூத பண்பாட்டில் இருந்தார்களா அல்லது அங்கிருந்த பிற பண்பாடுகளுடன் இணைந்து தாங்கள் கேட்கும் தெய்வக் குரல்களைப் புரிந்துகொள்ள முயற்சித்தார்களா என்பதைச் சொல்வதற்கில்லை. …ஆனால், இவர்களுக்கு என்னாயிற்று? அவ்வப்போது இத்தகையவர்களை விலங்குகளை வேட்டையாடுவதுபோல வேட்டையாடினார்கள். அப்படி ஒரு படுகொலை கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டில் நடந்ததை யூத விவிலியம் ஆவணப்படுத்துகிறது. இப்படி ஒரு படுகொலை நடந்த காலகட்டத்தில், ஒரு தேவனின் இறைவாக்கினர் காப்பாற்றப்பட்டதையும், பின்னர் மற்றொரு தேவனின் இறைவாக்கினர் காப்பாற்றப்பட்டதையும் விவிலியம் பதிவு செய்கிறது.
யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது,
ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து,
அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து,
அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து,
அவர்களைப் பராமரித்து வந்தான் (I ராஜாக்கள் 18:4)
ஆனால், கர்த்தரின் தீர்க்கதரிசியான எலியா பால், தெய்வத்தின் தீர்க்கதரிசிகளைக் கொன்றான். (எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப் போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான் (I ராஜாக்கள் 18:40).[3]
சில படு மட்டையடி பொதுப்படுத்துதல்களையும் சில தவறான எளிமைப்படுத்துதல்களையும் நாம் இந்த நூலில் விட்டுவிடலாம். அதன் பிறகும் இந்த நூல் சொல்லும் விஷயம் முக்கியமானதாகவே இருக்கிறது. தெய்வங்கள் என்றால் என்ன? நம் அக உள்ளுணர்வினையே ஆதி மனிதன் தெய்வக்குரல்களாக உணர்ந்தான். அவை நம் மூளை நரம்பியல் சார்ந்த ஒரு நிகழ்வெனக் கருதலாம். இந்த அகச் செயல்பாடு நம் பண்பாடு, சமூகம், சமூக உளவியல் ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சியில் முக்கியமான வினைஊக்கியாக உள்ளது. இந்தப் பார்வை, மானுடப் பண்பாடு எவ்வழியில் பரிணாம வளர்ச்சி அடைகிறது என்பதை அறிந்துகொள்ள ஒரு முழுமையான சட்டகத்தை (holistic framework) அளிக்கிறது.
பொதுவாக, மார்க்சியப் பார்வையில் மதம் என்பது ஒரு மேல் கட்டுமானம். அதாவது, உற்பத்தி உறவுகளின் மேல் அமைக்கப்பட்ட ஒரு சமுதாய அதிகாரக் கட்டுப்பாட்டு அமைப்பு. பொதுவாக, மேற்கத்திய மானுடவியல் பார்வையும் அப்படியே கருதியது.
ஆனால், மதம் என்பது ஒரு ஆதாரமான அடிப்படை மானுட உளவியல் செயல்பாடாக உள்ளது என்பதற்கான ஆதாரங்கள், உளவியலில் மட்டுமல்ல அகழ்வாராய்ச்சியிலும் கிடைத்திருக்கின்றன. அண்மைக்காலம் வரையில், மானுடவியலாளர்களின் பார்வையில் அமைப்பு ரீதியிலான மதம், ஒரு விவசாயச் சமுதாயத்தில்தான் உருவாக முடியும். அதற்கு முந்தைய நிலை எனக் கருதப்படும் வேட்டையாடி உணவு சேகரிக்கும் (hunter-gatherers) சமூகத்தில் ஏற்பட இயலாது. ஆனால், துருக்கியில் (Göbekli Tepe, Turkey) கி.மு. 9600 காலகட்டத்தைச் சார்ந்த தொல்லெச்சங்கள் கண்டடையப்பட்டுள்ளன. இவை, இதுநாள்வரை கருதப்பட்ட பார்வையிலிருந்து முழுமையாக மாறுபட்ட தலைகீழான ஒரு நிலையைக் காட்டுகின்றன. விவசாயம் உருவாவதற்கு முன்னரே அமைப்புரீதியாகச் செயல்படும் மத அமைப்புகளேகூட உதயமாகிவிட்டன என்பதை அவை காட்டுகின்றன.[4]
உளவியலாளர் மாட் ரோஸானோ (Matt J. Rossano) என்பவர், சமயச் செயல்பாட்டை இன்னும் ஆழமான தொல்காலத்தில், மானுடத்தின் அடிப்படை ஆதார வேர்களுக்கே கொண்டுசெல்கிறார். சமயத்தன்மை கொண்ட சடங்கு ரீதியிலான பாடல்கள் ஆடல்கள் மூலம், மாற்று பிரக்ஞை நிலைக்குக் கொண்டுசெல்லும் செயல்பாடுகள், இன்றைக்கு 5,00,000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல் மானுடக் குழுக்களிலேயே இருந்தன என்கிறார் அவர்.[5]
ஆக, மதச் செயல்பாடு மானுடத்துக்கு ஆதாரமானது; மானுடப் பரிணாமத்தை உள்ளிருந்து செயல்படுத்துவது. குழுவாகவும் தனிமனிதனாகவும் சமயச் செயல்பாட்டுக்கு ஒரு பரிணாம முக்கியத்துவம் இருக்கிறது. ஜெய்னஸ், 1976-ல் கூறியவை, இன்றைய ஆராய்ச்சியின் ஒளியில் முக்கியத்துவம் பெறுகின்றன.
இரு அறைகளால் ஆன மனதும் இந்திய ஒருமையும்
இருந்தாலும்கூட, ஜெய்னஸ் முழுக்க முழுக்க ஆபிரகாமிய மைய நோக்குடன் இந்தப் பரிணாமத்தை அணுகியிருக்கிறார். இந்தியப் பண்பாட்டு பரிணாம வளர்ச்சி, இந்த இரு அறைகளால் ஆன மனம் உடைவதால் எழுந்த அகச் சமூக நெருக்கடியைத் தாண்ட, மற்றொரு சாத்தியத்தை முன்வைத்துள்ளது. இந்தியப் பண்பாட்டுச் சூழலில், இந்த இரு அறைகளால் ஆன மனது உடைந்துவிடவில்லை. மாறாக, மற்றொரு பேருணர்வு நிலையில் ஒருமைப்படுத்தப்பட்டுள்ளது. ஜெய்னஸின் பார்வையில், ஹரப்பா பண்பாட்டு இலச்சினைகளில் உள்ள வடிவங்களையும், வேத இலக்கியத்தையும் நாம் பார்க்கும்போது, இந்த ஒருமையை நோக்கிய பயணம் விளங்கும்.
ஹரப்பா இலச்சினைகளில் காணப்படும் கொம்புள்ள விலங்குகள் மற்றும் தெய்வங்களை, நிச்சயமாக நாம் இரு அறைகளால் ஆன மனத்தின் செயல்பாட்டிலிருந்து உருவாகுபவை எனக் கூறலாம். ஆனால், கொம்புகளுடன் யோகநிலையில் அமர்ந்திருக்கும் தெய்வ வடிவம், இந்தத் தன்மைக்கு அப்பாலான நிலையிலிருந்து உருவாவது. இந்த யோகநிலை, தெய்வத்தைக் காட்டும்போது விலங்குகள் சிறியதாகக் காட்டப்படுகின்றன. இந்த யோகநிலை தெய்வத்தின் மிகப் பிரபலமான வடிவ இலச்சினையில், ‘மூன்று முகங்கள் கொண்ட தெய்வம் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருக்கிறது. அதன் ஆண் குறி விரைப்புடன் நிற்கிறது’. ஹரப்பா பண்பாட்டு அகழ்வாராய்ச்சியாளர் ஜோனதன் மார்க் கெனோயர், இந்த இலச்சினை ‘யோக நிலையில் விரைப்படைந்த ஆண்குறியுடன் அமர்ந்திருக்கும் தெய்வம் தாந்திரிகத் (கோட்பாடுகளை) தன்மைகளை வெளிக்காட்டுகிறது. யோக, தாந்திரிக முறைகளைப் பயன்படுத்தி, இயற்கையைச் சமனப்படுத்தும் நிலையைப் பிரதிநிதிப்படுத்துகிறது.’[6] பிற்கால இந்துப் பண்பாட்டில், யோகம் தந்திரம் இரண்டுமே அக ஞானத்துக்கான மரபுகளாக வளர்த்தெடுக்கப்பட்டன.
இதையே வேத நூல்களுக்கும் கூறலாம். இந்திய மரபில், பின்னாட்களில் கூறப்படும் பல மரபார்ந்த அக உருவகங்கள், வேதங்களில் காணப்படுகின்றன. மிகச்சிறந்த உதாரணம்: இரு பறவைகள். தீர்க்கதமஸ் கண்டடைந்த மந்திரமாகக் கருதப்படும் ரிக் வேத பாடல் (1.164.20), இரு பறவைகளைக் குறித்துப் பேசுகிறது. ஒரே மரத்தில் நட்பின் இழைகளால் பிணைக்கப்பட்ட இரு பறவைகள்: ஒன்று, பழத்தை உண்ணுகிறது. மற்றொன்றோ, அதைப் பார்த்தபடியே உள்ளது. இந்த உருவகம், மீண்டும் முண்டக உபநிடதத்திலும் (3:1:1), ஸ்வேதாச்வதர உபநிடதத்திலும் (4:6) பயன்படுத்தப்படுகிறது. இரு அறைகளால் ஆன தன்மை கொண்டு, நம் அகச் செயல்பாடு இயங்குவது குறித்த மிகத் தெளிவான ஒரு பழங்குறியீடாகவே நாம் இந்த இரு பறவை உருவகத்தைக் காணலாம். இங்கு ஒரு தொடர்ச்சி இருக்கிறது. தெய்வங்கள் நம்முள் உறைபவை என்கிற கோட்பாட்டினை அதர்வண வேதம் (2.8.37) பேசுகிறது.[7]
இரு அறைகளால் ஆன மனது உடையும் நிகழ்வு என்பது சமூக அழுத்தங்களால் ஏற்படுவது. இந்தியச் சூழலில் அந்த அழுத்தம், நகரங்களின் சமூகச் சூழல்களும் இயற்கைப் பேரிடர்களும் இணைந்ததால் ஏற்பட்டிருக்கக்கூடும். சரஸ்வதி நதியின் மரணம் சமூகக் கொந்தளிப்பை விரைவாக்கியிருக்கக்கூடும். தத்துவ அறிஞரான ராதாகிருஷ்ணன், ரிக் வேத காலத்திலிருந்து, அதற்குப் பிற்பட்ட யஜுர் - சாம வேதங்கள் மற்றும் ப்ராமணங்களின் காலத்துக்குச் செல்லும்போது, ‘ஒரு மாறுபட்ட தன்மை’ ஏற்படுவதை அவதானிக்கிறார்.
(ரிக் வேத காலத்தில் இருக்கும்) புதுமையும் எளிமையும் போகப் போக வறண்ட செயற்கைத்தன்மையாக மாறுகிறது. சமய உணர்ச்சி பின்னால் தள்ளப்பட்டு, அதன் வடிவங்களுக்கு முக்கியத்துவம் ஏற்படுகிறது. …ரிக் வேத பாடல்களே மீண்டும் எடுக்கப்பட்டு, சடங்குகளின் தேவைக்கு ஏற்ப மீள் வரிசை செய்யப்படுகின்றன
ராதாகிருஷ்ணன், ‘இயந்திரத்தனமான புரோகிதத்துவம்’ (‘mechanical sacerdotalism’), ரிக் வேதத்திலிருந்து சாம - யஜுர் வேதங்களுக்கு செல்கையில் ஏற்படுவதாகக் கூறுகிறார். இந்த வார்த்தையை, இந்தியவியலாளரான மௌரீஸ் ப்ளூம்ஃபீல்ட் (Maurice Bloomfield) என்பவரிடமிருந்து பெறுகிறார். இந்த இயந்திரத்தனமான புரோகிதத்தன்மை என்றெல்லாம் சொல்லப்படும் விஷயம், உண்மையில் இரு அறைகளாகச் செயல்படும் மனத்திலிருந்து அதனை முழுமையாக்கும் ஒரு மாற்றநிகழ்வின் தொடர்ச்சியாக இருந்திருக்கலாம். வார்த்தைகளாக இருந்த ரிக் வேத மந்திரங்கள், இப்போது மேடையில் நிகழ்த்தப்படும் ஒன்றாக மாறுவதைக் காண்கிறோம் என்கிறார் ப்ளூம்ஃபீல்ட். அது இயந்திரத்தனமாக இருக்கிறது என்றாலும், அதற்கு உள்ளார்ந்த ஆற்றல் ஒன்றும் உள்ளது. மனிதனுக்கும் இறை ஆற்றல்களுக்கும் இடையிலான ஒரு பாதையாக அது உள்ளது.[8] ப்ளூம்ஃபீல்ட் சொல்வதை நாம் இப்படிக் கருதலாம்: மனிதன், தன்னுள் எழும் குரல்களை இழந்தபோது, அதனை ஈடுசெய்ய சடங்குகளைப் பயன்படுத்தியிருக்கலாம்.
வைதீகத் தெய்வங்கள் சலனமிழந்தபோது ஏற்பட்ட வெற்றிடத்தில், சடங்குகள் ஏற்பட்டன எனக் கருதலாம். அந்தச் சடங்கை, பிரபஞ்ச ஒழுங்கு ஒன்றுடன் இணைத்தது இந்திய மனம். மாறாக, பாபிலோனிய சூழலில், இறை இழந்த ஒருவனுக்குக் கடுமையான தலைவலி ஒரு ஆடையைப்போல சூழ்ந்துகொள்வதாக க்யூனிஃபார்ம் எழுத்துகள் ஆவணப்படுத்துகின்றன.[9] இந்தியாவில் ஏற்பட்ட இந்த வைதீக - புரோகித இணைப்புக்கு நூற்றாண்டுகளுக்கு பிறகும்கூட, இறையுதிர்வை ஈடுசெய்யும் தன்மை வேத சடங்குகளுக்கு இருந்தது என்பதை நாம் பரிபாடலில் காண்கிறோம்.[10] இது, இந்தியப் பண்பாட்டில் ஒரு தொடர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஜெய்னஸ், இந்தியப் பண்பாட்டில் இந்த மாற்றத்தையும் தொடர்ச்சியையும் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், ஜெய்னஸை குறித்து எதுவுமே தெரியாத ஒரு இந்தியச் சிந்தனையாளர், இந்த அக – சமய - சமூகப் பரிணாம வளர்ச்சியை அவராகவே கண்டடைந்தார். அது, ஜெய்னஸின் பார்வையைக் காட்டிலும் முழுமை கொண்டதாக இருந்தது. இந்து சிந்தனையாளர் ராம் ஸ்வரூப் (1920-1998), இந்த மாற்ற - தொடர்ச்சியை இப்படி வர்ணிக்கிறார் -
…வேத காலத்தில், தெய்வங்கள் உடனிருக்கும் ஒரு பிரசன்னமாக உணரப்பட்டன. வழிபடுவோர், ஒரு அன்யோன்யமான உறவை உணர்ந்தனர். ஒருவரைச் சுற்றியிருக்கும் அனைத்தும் இறைத்தன்மையுடன் மிளிர்ந்தன. நெருப்பு என்பது வெறும் பௌதீக நெருப்பு அல்ல. உணவு சமைக்கவும், குளிர்கால இரவுகளுக்கு வெப்பமூட்டுவதற்கும் மட்டுமான நெருப்பு அல்ல. அது, தெய்வங்களுக்கும் வழிபடுவோருக்கும் இடையில் தூது செல்லும் ஒன்று. …பூமி என்பது மண்ணும் கல்லும் சேறுமான ஒன்றல்ல. அவள் ஒரு அக யதார்த்தம். அன்னை. ….ஆனால், இந்த அணுகுமுறை, மானுடம் தன் குழந்தைத்தன்மையை இழக்காத காலத்திலேயே சாத்தியமாயிற்று. வேதகாலம் அத்தகைய ஒரு காலகட்டம். …கடவுளர் இன்னும் இயங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் மௌனமாகிவிடவில்லை. …பின்னர் ஏதோ அறுந்துபோனது. அந்தக் காலகட்டம் இறந்த காலமானது. …வேத தெய்வங்கள் இயக்கமிழக்கலாயினர். அதிசயமான விஷயம் என்னவென்றால், அவர்கள் மையமிழந்தது உபநிடத ரிஷிகளினால். அந்த ரிஷிகளின் பிரம்மவாதமும் ஆத்மவாதமும் இதை நிகழ்த்தின.[11]
ராம் ஸ்வரூப்
ஜெய்னஸுக்கும் ராம் ஸ்வரூப்புக்கும் இருக்கும் இணைத்தன்மையை நாம் இங்கு காணலாம். ஆனால், ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. ஜெய்னஸுக்கு தெய்வங்கள் ஒலி சார்ந்த ஒருவித மாயத் தோற்றங்கள். அது என்னவெனத் தெரியாத மானுடத்துக்குத் தெய்வங்களாகத் தோன்றிய வலப்பக்க மூளை இயக்க மாயைகள். ஆனால் ராம் ஸ்வரூப்புக்கு, அவை வெறும் மாயத் தோற்றங்கள் அல்ல. வலப்பக்க மூளையிலிருந்து எழும் இந்த அக இயக்கங்கள், மானுட இருப்பினைச் செழுமைப்படுத்தும் ஆரோக்கியமாக்கும் ஆற்றல் கொண்டவை. அவை சக படைப்பாளிகள். ராம் ஸ்வரூப், இந்தப் பார்வையை இந்தியத் தத்துவப் பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சிக்கு மேலும் நீட்டுவிக்கிறார்.
…ஆனால் உண்மையில் (வேத தெய்வங்கள்) முக்கியத்துவம் இழக்கவில்லை. வேதங்களில் வெளிப்பட்ட அக உலகை மற்றொரு வடிவில் ஒருமைப்படுத்தி வெளிக்கொணர்வதே நிகழ்ந்தது. …மானுட அகம், அதன் தொல் குழந்தைத்தன்மையைத் தக்கவைத்திருந்தவரை, வைதீக அணுகுமுறை, உயிருள்ள ஜீவ சத்தியமாகப் பிரபஞ்சத்தை உணரும் தன்மை, சாத்தியமாக இருந்தது. ஆனால், மானுட அகம் விரைவில் மற்றொரு பரிமாணம் தன்னில் விழிக்கக் கண்டது. உள்ளுணர்வு செயல்பாட்டை, சிந்தனைச் செயல்பாடு பின்னுக்குத் தள்ளியது. அப்போது, வைதீக அணுகுமுறை தன் மையத்தன்மையை இழக்க வேண்டியதாயிற்று. …உபநிடதத்தின் ஆத்மவாதம், ஒரு திரைக்குப் பின்னே தம்மை மறைத்துக்கொண்ட தெய்வங்களுடனான அன்யோன்யத்தை மீட்டெடுக்கும் ஒரு இயக்கம். …பின்னர் யோகம் வந்தது, கடுமையான சூழலில் இருந்து அகத்தின் ஆழங்களுக்குள் சென்று மறைந்துவிட்ட தெய்வங்களை அங்கு சென்று காணும் இயக்கமாக யோகம் இருந்தது. மகாபாரதத்தில், இந்த விசைகளிடையே நாம் பெரும் சமத்தன்மையைக் காண்கிறோம். இங்கு வேதத்தில் இருப்பது போலவே, தெய்வங்களிடம் அன்யோன்யம் இருக்கிறது. தெய்வங்கள் அகத்துக்குள் செல்லாமலேயே, மிக உயர்ந்த ஆத்மவாதத்தையும் இது முன்வைக்கிறது. தெய்வங்கள் முக்கியத்துவம் இழந்துவிடாமல் பிரம்மவாதம் முன்வைக்கப்படுகிறது. ...ஆனால், காலப்போக்கில் மகாபாரதத்தின் இந்த அணுகுமுறையும் வழக்கொழிந்தது. பிரம்மவாதத்தின் இடத்தில் மாயாவாதமும், ஆத்மவாதத்தின் இடத்தில் அனாத்மவாதமும் உருவானது. …இப்புதிய உருவாக்கங்கள், அறிவு சார்ந்த பகுத்தாய்வின் வலிமையாகவும், உள்ளுணர்வும் புத்துருவாக்கத்தில் பலவீனமாகவும் இருந்தன. …வைதீகத் தெய்வங்கள் என்னதான் தம் பீடங்களை இழந்திருந்தாலும், பௌத்தத்தில் அவை பெரும் நற்சக்திகளாக இயங்கின. வேறு சமயப் பண்பாடுகளில் நிகழ்ந்ததுபோல, அவை அகங்கார தெய்வங்களாகவோ, இச்சை வடிவமான தெய்வங்களாகவோ மாறிடவில்லை.[12]
ஆக, வலப்பக்க மூளையும் இடப்பக்க மூளையும் உருவாக்கிய பிளவு, ஒரு இறையியல் சட்டகம் மூலம் முழுமையாகக் கட்டுடைவதற்குப் பதிலாக, இந்தியாவில் ஒரு நெகிழ்ச்சியான ஒத்திசைவை வந்தடைந்தது. வேத தெய்வங்கள், இந்து மத மையத் தெய்வங்களாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தன.
பாரசீக அணுகுமுறை
ஆனால், மற்றொரு மாற்றமும் இதே அகநிகழ்வுடன் இணைந்து ஏற்பட்டது. இரு அறைகளுடனான மனச் செயல்பாட்டின் முந்தைய வடிவங்களுடன் இருந்து, முழுமையாகவும் வன்முறையுடனும் அறுத்துக்கொண்டு ஒரு புதிய பார்வை மூலம் இந்தப் பிரச்னை எதிர்கொள்ளப்பட்டது. பழமையான பாரசீக மத இலக்கியம் ஒரு தகவலை அளிக்கிறது. ‘ஹப்த ஹிந்தவ்’ எனும் பிரதேசத்தை, சான்றோருக்காக இறைவன் (அஹூரா மஸ்தா) உருவாக்கிய 16 நன்னிலங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. பின்னர் அங்கிருந்து கடும் வெப்பத்தின் காரணமாக, பாரசீகர்கள் இன்றைய ஈரானுக்கு புலம் பெயர்ந்தார்களாம்.[13] இதைச் சொல்வது வென்திதாத் (Vendidad) எனும் ஜராதுஷ்டிர இலக்கியம். இதன் பொருளே, தேவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டது என்பது. ஜராதுஷ்டிர - பண்டைய பாரசீக மொழியில், தேவர்களே அரக்கர்கள்.
இந்து என்பதை பாரசீக மொழி முதன்முதலாகப் பயன்படுத்தும் சூழல் முக்கியமானது. அஹுரா மஸ்தாவை வழிபடுவோருக்குச் சாதகமற்ற சூழல் ஏற்பட்டுவிட்ட ஒரு நிலப்பரப்பைக் குறிப்பிடும் சொல்லாக அது முதன்முதலாக வருகிறது. அஹுரா மஸ்தா என்பது, இரு அறைகளுடன் செயல்படும் மனது உடைந்த பிறகு எழுந்த ஏக இறைவன். இரு அறைகளுடன் செயல்படும் மன இயக்கங்கள், ஒட்டுமொத்தமாக இருட்சக்தியாகப் பாரசீக மதத்தால் சித்தரிக்கபட்டது. அஹிர்மான் என்கிற தெய்வம் அது. பின்னாட்களில், சைத்தான் என்று வழங்கப்படும் பாத்திரத்தின் முதல் வடிவம். ஆக, இந்தியா எப்படி ஒரு ஒருமை மூலமாக இச்சிக்கலை எதிர்கொண்டதோ, அதேபோல ஏக இறைவன் மூலம் பாரசீகப் பண்பாடு இதை எதிர்கொண்டது. பழைய தெய்வங்களுடன் ஒரு தொடர்ச்சியை இச்சித்தவர்கள், இருட்தெய்வமான அஹிர்மானின் ஆட்கள். இந்த அக எழுச்சியை உருவாக்கும் ஒரு முக்கியச் சடங்கு சோமபானச் சடங்கு. பாரசீக மரபில், அது ஹோவ்மா சடங்கு என அழைக்கப்பட்டது. (ஸ எப்போதுமே பாரசீக மொழியில் ஹ என மாறும்) ஏக இறை வழிபாட்டை முன்னெடுத்த ஜராதுஷ்டிரர், இச்சடங்கைக் கண்டிக்கிறார். தமது கதாக்களில், இப்பானத்தை ‘அருவெறுப்பூட்டும் போதை’ என்கிறார் அவர்.[14]
மத வைராக்கியம் கொண்ட ஏக இறை வழிபாட்டை ஜராதுஷ்டிர மதம் முன்வைத்தபோதே, வேத – உபநிடத மதத் தொடர்ச்சியிலிருந்து அம்மதம் வேறாகி இருக்க வேண்டும். இம்மதம் மையம் கொண்ட பாரசீகத்தில், இந்த ஏக தெய்வ வழிபாடு, ஒரு வலிமையான மைய அரசு உருவாக்கத்துக்குத் துணை சென்றது. இறை பன்மை அழிக்கப்பட்டது. இந்து என்கிற பெயர், முதன்முதலாக வரலாற்றில் பொறிக்கப்படுவது இந்தச் சூழலில்தான்.
புகழ்பெற்ற பெகிஷ்துன் கல்வெட்டு, தரயவயுஷ் (கிரேக்கப்படுத்தப்பட்ட பெயர் ஒன்றாம் தரியஸ்) அரசனால் பொறிக்கப்பட்டது. இவன் காலம், கி.மு. 522 - 486. இதில் இவன் சொல்லும் விஷயம், அழிக்கப்பட்ட தேவர்களின் கோவில்களை மீண்டும் கட்டியதைக் குறித்து.[15] இவனுக்குப் பல நூற்றாண்டுகள் பின்னர், கான்ஸ்டன்டைன் அரசன் இதேபோல பாகனீயர்களுக்கும் கிறிஸ்தவத்துக்கும் ஒரு சமரச முயற்சியை மேற்கொள்வான். ஆனால், தரயவயுஷும் சரி கான்ஸ்டன்டைனும் சரி, ஏக தெய்வ வழிபாட்டுச் சமயங்களைச் சார்ந்தவர்களே. எனவே, ஒன்றாம் தரியஸ் தேவர்களை வழிபடுகிறவர்கள் சகித்துக்கொள்ளப்படுவார்களே அன்றி, அவர்களின் வழிபாடு ஜராதுஷ்டிர வழிபாட்டைவிடக் கீழானது என்பதில் தெளிவாகவே இருந்தான். இந்த மன்னனின் ஹமதன் கல்வெட்டில் (Hamadan inscription), இந்துக்கள் ஒரு மக்கட் குழுவாக குறிப்பிடப்படுகிறார்கள். சிந்து நதிக்கு அப்புறத்தில் வசிப்போர். தரியஸின் மகன் க்ஷயர்ஷன் (காலகட்டம் கி.மு. 486 - 465). இவன், தன் கல்வெட்டில் வெளிப்படையாகவே தேவர்கள் வழிபட்ட கோவில்களை உடைத்து அழித்ததாகக் கூறுகிறான். ஏறக்குறைய, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள், தாம் கோவில்களை உடைப்பதைக் கொண்டாடும் அதே மொழிநடையை, க்ஷயர்ஷனின் கல்வெட்டுக்களில் நாம் காண்கிறோம். வரலாற்றாசிரியை உபீந்தர் சிங், இக்கோவில் அழிப்புகள், காந்தார பிரதேசத்து நிகழ்வுகளாக இருக்கலாம் எனக் கருதுகிறார்.[16] இது குறித்த கல்வெட்டு மிகவும் முக்கியமான ஒன்று -
நான் அரசனானபோது, மாகாணங்களில் குழப்பங்கள் ஏற்பட்டன. அஹுரா மஸ்தா தேவன் எனக்கு உதவி செய்தார். அவர் அருளால், நான் அந்த மாகாணத்தை ஒடுக்கி வென்றேன். அவ்வாறு வென்ற பிரதேசங்கள் ஒன்றில், தேவர்கள் வழிபட்ட ஆலயம் இருந்தது. அஹுரா மஸ்தாவின் அருளால், நான் அந்தக் கோவிலை அழித்தேன். 'தேவர்களை வழிபடக்கூடாது’ என அறிவித்தேன். தேவர்கள் வழிபட்ட இடத்தில் அஹுராமஸ்தாவை வழிபட்டேன்[17].
பொறாமையுள்ள தேவன், புனிதப் பெண்மை, இந்துத்துவ உதயம்
ஆக, இந்துக்கள் பன்மையை ஒத்திசைவிக்கும் ஒருமையைக் கண்டடைந்ததுபோல, ஈரானியர் பன்மையை அழிக்கும் ஏக தேவனை கண்டடைந்தார்கள். இதில், மற்றொரு வேறுபாடும் இருந்தது. இந்துக்கள் கண்டடைந்த ஒருமையின் வித்துக்கள், வேதத்தில் உள்ள பல தெய்வச் சித்தரிப்புகளில் உள்ளன. பிரம்மம் நிர்குணமானது என்றாலும், அதன் பிளவற்ற தன்மையும், அனைத்தையும் கவிந்த தொடர்ச்சியும், வேத தெய்வங்களில் அதிதி எனும் பெண் தெய்வத்தில் காணப்படுகிறது.[18] இந்தியா கண்டடைந்த ஒருமையின் வேத முன்வடிவம், ஒரு பெண் தெய்வமே. அவள் விண் என்று பேசப்படுகிறாள். அனைத்து தெய்வங்களும் ஐந்நில மக்களும் அவளில் உறைகின்றனர். பிறந்த அனைத்தும், பிறக்கும் அனைத்தும் அவளில் இருந்தே வருகின்றன. (ரிக் வேதம் 1.89.10). பிரகதாரண்ய உபநிடதத்தில், அவள் அவளது பெயரிலேயே தோன்றுகிறாள்.[19]
ஜராதுஷ்டிர அஹுரா மஸ்தா, ஆபிரகாம் மூலமாகப் பின்னாட்களில் மேற்கே சென்றார். அங்கே வழிபடப்பட்ட பல தெய்வங்களில் யஹீவா தேவனானார்.
ஈரானிய ஆபிரகாமிய தீர்வு, ஏக தேவனாகிய விண்ணுறை ஆண் தெய்வம் ஒன்றில் இருந்தது. இந்தியத் தீர்வோ, பெண் தெய்வத்தின் அகண்ட பெண்மையிலிருந்து வெளிப்படும் ஒருமையில் இருந்தது.
ஈரானிய ஏக தெய்வ வழிபாட்டிலிருந்து இந்துப் பண்பாடு விலகியதுபோலவே, ஆபிரகாமிய பண்பாட்டிலும் எதிர்ப்புக் குரல்கள் தோன்றாமல் இல்லை. பண்டைய கிறிஸ்தவ வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் எலைன் பேகல்ஸ் (Elaine Pagels), அத்தகைய மூன்று எதிர்ப்புக் குரல்களை, நாக் ஹமாதி தோல்சுருள் திரட்டுகளிலிருந்து அளிக்கிறார். சிருஷ்டிகர்த்தரான சாமேல் தேவன், தன்னை சிருஷ்டிகர்த்தராகப் பெருமையுடன் அறிவிக்கிறான். ‘நானே தேவன். என்னையன்றி தேவர் எவரும் இல்லை’. அப்போது ஒரு பெண் குரல், அவனுக்கு முன்பே ஞானமடைந்த மானுடம் இருப்பதாக அறிவிக்கிறது. (‘On the Origin of the World’). கர்த்தர், தன்னைத் தவிர வேறு தெய்வம் இல்லை எனக் கூறியபோது, பெண் குரல் அதைக் கண்டித்து, அவரை குருட்டு இறைவன் எனக் கூறியதாக மற்றொரு தோல்சுருள் நூல் கூறுகிறது (Hypostasis of the Archons). யோவானின் ரகசிய நூல் (Secret Book of John) எனும் நூலில், ஏக இறை கோட்பாட்டின் முக்கிய வாசகமே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ‘நான் பொறாமையுள்ள தேவன்; என்னையன்றி வேறு தெய்வம் இல்லை’ எனக் கர்த்தர் கூறுகிறார். இதைக் கேள்விக்குள்ளாக்கிப் பொறாமைப்படுவதில் இருந்தே, வேறு தேவன்களும் இருக்கிறார்கள் என தெரிகிறதல்லவா? ஒரே ஒரு தெய்வம்தான் உண்டெனில், எங்கிருந்து பொறாமை வரும் என அது கேள்வி எழுப்புகிறது.[20] ஆனால், இவையெல்லாம் சிறு குழுக்களாக விளிம்பு நிலையில் முடங்கிவிட்டன. கபாலா போன்ற யூத மறைஞான மரபுகளிலேயே எஞ்சி நிற்கின்றன. இந்தியாவிலோ, இந்த மரபுகள் முழுமையாக வளர்த்தெடுக்கப்பட்டன.
இந்த ஒருமை உணர்வு, தொடர்ந்து பேசப்பட்டு வந்திருக்கிறது. டாக்டர் அம்பேத்கர், இந்தியாவே கிரேக்கத்துக்கு முன்னர் ஜனநாயகத்தைக் கண்டடைந்தது என்றும், அதற்கான ஆன்மிக அடிப்படையாகப் பிரம்மத்துவமே விளங்கியது என்றும் கூறுகிறார். நரம்பியலாளர் ராமச்சந்திரனும், உபநிடதங்கள் கூறும் பிரபஞ்சமளாவிய ஒருமை நிலையை, பிறர் உணர்வுகளை உணரும் முகுர நியூரான்களின் செயல்பாட்டுடன் இணைக்கிறார்.[21]
ஆக, இந்துப் பண்பாட்டை ஆபிரகாமியப் பண்பாட்டிலிருந்து மாறுபடுத்துவது, ஆதி காலம் முதலே ஒருமைக்கும் ஒற்றைத்தன்மைக்குமான அடிப்படையான வேறுபாடுதான். இதுவே இந்துத்துவம்.
மீண்டும் சாவர்க்கர்
இந்த ஒருமை உணர்தலை, மானுடத்தின் அடிப்படை உரிமையாகவும் உணரப்பட வேண்டிய உச்சகட்ட சாத்தியமாகவும் இந்தியப் பண்பாடு முன்வைத்தது. மூலாதாரத்தில் சுருண்டிருக்கும் குண்டலினியை, இதனை மானுடம் அனைத்துக்குமான பொது உரிமையாக அது பிரகடனப்படுத்தியது. எனவே, இந்தச் சர்ப்ப இயக்கத்தையே இந்துத்துவத்தின் குறியீடாக, சாவர்க்கர் தம் இந்துத்துவ கொடியில் பொறித்தார். அதை அவர் இப்படி விளக்குகிறார் -
இந்துக்கள், இந்த அறிவியலை முழுமையாக்கி மானுட வாழ்க்கைக்கான மிகப்பெரிய ஆசிர்வாதமாக அளித்தனர். இந்த அறிவியல்புலமே யோகம். மானுடத்தின் அக ஆற்றல்களின் அதி உச்ச சாத்தியத்தை வெளிக்கொண்டு வருவதே அது. எனவே, இந்து தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொடியில், யோகத்தின் தெளிவான குறியீடு ஒன்று இருப்பது அவசியம். அந்தக் குறியீடுதான் குண்டலினி. ...மிகச்சிறந்த ஆனந்தத்தை அடைவது என்பதே மானுடத்தின் குறிக்கோள். அவன் இந்துவாக இருக்கலாம் அல்லது இந்து அல்லாமல் இருக்கலாம். அவன் இறை நம்பிக்கையாளனாகவோ, இறை நம்பிக்கை அற்றவனாகவோ இருக்கலாம். அவன் வனவாசியாகவோ இருக்கலாம். அல்லது நகரவாசியாகவோ இருக்கலாம். ...எனவே, மானுடத்தின் உச்சகட்ட மேம்பாட்டையும், அழிவற்ற ஆனந்தத்தை அது அடைவதையும் அதி உயர் அறிதல் நிலையை அது எட்டுவதையும் குறிக்கும் மூலாதார சக்தியாக விளங்கும் குண்டலினியே, இந்து தேசத்தின் குறிக்கோளாக, இவ்வுலகம் சார்ந்த வளத்தையும் குறிப்பதாக அமைகிறது. குண்டலினி, மானுடம் அனைத்துக்குமான ஒன்றாக உள்ளது...[22]
இப்படி, மானுடம் முழுவதையும் தழுவும் பார்வையை, மேற்கத்திய ‘ரொமான்டிக்’ தன்மையுடன் முன்வைக்காமல், முழுக்க முழுக்க வேர் சார்ந்தும், அறிவியல் தன்மையுடனும் முன்வைத்த சாவர்க்கர், இறுதியாகச் சொல்கிறார் -
உலக அரங்கில் தன் குரல் மதிக்கப்படும் நிலைக்கு இந்து வரும்போது, உலகமே இந்து கூறுவதைக் கவனிக்கும் நிலைக்கு இந்து வரும்போது – அக்குரல், கீதை கூறியதிலிருந்தும் புத்தர் கூறியதிலிருந்தும் வேறுபட்ட ஒரு குரலாக இருக்கப்போவதில்லை. ஏனெனில், ஒரு இந்து, அவனது அதி உச்ச இந்துத் தன்மையில் இந்துவாகவே நீடிக்கமாட்டான். அவன் ஒரு கபீரைப்போல, முழு உலகும் என் காசி என கூறுவான். அல்லது துக்காராம் கூறுவதுபோல சொல்வான் – ‘என் தேசமா சகோதரர்களே? பிரபஞ்சம் எங்கே முடிவடைகிறதோ அங்கே உள்ளன என் தேசத்தின் எல்லைக்கோடுகள்’.
இந்து என்பவன், அவனது இந்துத் தன்மையின் உச்சத்தில் மத - பண்பாட்டு எல்லைகள் தேவையற்ற மானுடத்தில் கலக்கிறான். ஆக, சப்த நதிகள் கொண்ட சப்த சிந்து இந்துவானதும், ஏழு சக்கரங்கள் கொண்ட குண்டலினி கொடி இந்துத்துவத்தின் கொடியானதும் ஒரு தொடர் நிகழ்ச்சி. ஒரு உயிர்த்துவம் கொண்ட பரிமாணம். இங்கு, ஆன்மிக இந்து அரசியல் இந்து என்பது போன்ற செயற்கைப் பாகுபாடுகள் இல்லை. வேத ரிஷியும், குரு கோவிந்த சிம்ஹனும், வீர சாவர்க்கரும், சுடலைமாட சுவாமி பூசகரும் உயர்த்திப் பிடிக்கும் பதாகை, இந்துத்துவத்தின் பதாகை. ஒட்டுமொத்த மானுட மீட்பின் பதாகை. பன்மை அழிக்கப்படும் ஒற்றைத்தன்மைக்கு எதிராக, பன்மையைப் பேணும் ஒருமையின் பதாகை.
மேற்கோள் விவரம்
1 Vinayak Damodar (‘Veer’) Savarkar, Hindutva (also ‘Essentials of Hindutva’), Nagpur, 1923, p.3
2 Julian Jaynes, The Origin of Consciousness in the Breakdown of the Bicameral Mind, Mariner Books, 1976:2000,p.313
3 Julian Jaynes, 1976:2000,p.311
4 Charles C.Mann, The Birth of Religion, National Geographic, June 2011
5 Matt J.Rossano, Supernatural Selection How Religion Evolved, Oxford University Press, 2010,p.197
6 Jonathan Mark Kenoyer, 'Master of Animals and Animal Masters in the Iconography of the Indus Tradition', in 'The Master of Animals in Old World Iconography', Budapest 2010, (Ed.Derek B.Counts and Bettina Arnold), pp.49-50
7 Sahebrao Genu Nigal, Axiological Approach to the Vedas, Northern Book Centre, 1986, pp.94-98
8 Maurice Bloomfield, The Religion of the Veda, The Ancient Religion of India,Putnam's Sons, 1908,pp.31-2
9 Julian Jaynes, 1976:2000,p.225
10 பரிபாடல் 2:60-62 பார்க்க. பேரா.மு.சண்முகம் பிள்ளை, சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,1996, பக்.6
11 Ram Swarup, Meditations Yogas, Gods, Religions, Voice of India, 2000, pp.143-4
12 Ram Swarup, 2000, p.144-9
13 P.L.Bhargava, “The Comparative Antiquity of Mitra and Varuja,” Ludwick Sternback Felicitation Volume, (ed. J. P. Sinha.) Akhila Bharatiya Sanskrit Parishad,1979, pp. 59–61.
14 Hervey De Witt Griswold,The Religion of the Ṛigveda,Motilal Banarsidass Publishe, 1971, p.209
15 Muhammad A.Dandamaev & Vladimir G.Lukonin, The Culture and Social Institutions of Ancient Iran, Cambridge University Press, 2004, p.352
16 Upinder Singh, A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12 Century,Pearson Education India, 2008, p.274
17 Muhammad A.Dandamaev & Vladimir G.Lukonin, 2004,p.353
18 Sahebrao Genu Nigal, 1986, p.89
19 N. Ross Reat, The Origins of Indian Psychology, Jain Publishing Company, 1990, p.11
20 Elaine Pagels, The Gnostic Gospels, Vintage books, 1979:89, p.29
21 Vilayanur Ramachandran, Mirror neurosn and the brain in the vat, (1.9.2006) URL: http://edge.org/conversation/mirror-neurons-and-the-brain-in-the-vat accessed on 30-03-2014
22 Vinayak Damodar (‘Veer’) Savarkar, Abhinava Hindu Dhwaja (Hindu National Flag), in V.D.Savarkar (Ed.Verinder Grover),Deep and Deep Publications, 1993, p.187