முகப்பு
அறிதலின் எல்லையில்

காந்தியின் காலணியும் காலனியமும்

தென்னாப்பிரிக்கா என்றாலே நம் நினைவுக்கு வரும் இந்திய வரலாற்று ஆளுமை, மகாத்மா காந்திதான். மோகன்தாஸ், மகாத்மா ஆவதற்கான விதை, தென்னாப்பிரிக்க புகைவண்டி நிலையத்தில்தான் போடப்பட்டது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

தென்னாப்பிரிக்கா என்றாலே நம் நினைவுக்கு வரும் இந்திய வரலாற்று ஆளுமை, மகாத்மா காந்திதான். மோகன்தாஸ் மகாத்மா ஆவதற்கான விதை, தென்னாப்பிரிக்க புகைவண்டி நிலையத்தில்தான் போடப்பட்டது. ஒவ்வொரு இந்தியனுக்கும், தென்னாப்பிரிக்க காந்தி நியாயமான பெருமையை அளிக்கும் மாமனிதர். மண்டேலாவின் விடுதலை இயக்கத்தின் வேர்களை காந்தியில் காண்பதைவிட ஒரு இந்தியருக்கு உகந்தது வேறென்ன இருக்க முடியும்?

ஆனால், பல அடுக்குகளாக உருவாக்கப்படும் வரலாற்றின் கதையாடலில், தென்னாப்பிரிக்க விடுதலையைப் பொறுத்தவரையில், மற்றொரு நீரோட்டம் இருக்கிறது. விநாயக தாமோதர சாவர்க்கர் எனும் ‘ஹிந்து தேசியவாதியின்’ இந்துத்துவ இயக்கத்துடன் தொடர்புடைய ஒரு நீரோட்டம் அது. தேசியம் குறித்த சாவர்க்கரிய அணுகுமுறையில் இருந்து உருவான ஒரு நீரோட்டம். நிற-இன வேற்றுமைக் கொடுமைகளுக்கு எதிரான மானுடத்தின் போராட்டத்தில் ஒரு தீர்க்கமான திசை மாற்றத்தை அளித்த ஒரு நீரோட்டம் அது.

சிறிது வரலாற்றின் பக்கங்களுக்கு உள்ளாகப் பயணிக்கலாம்.

தென்னாப்பிரிக்காவில் மகாத்மா

காந்தி - ஸ்மட்ஸ் முதல் சந்திப்பு நடந்தது ஜனவரி 30, 1908-ல். சரியாக, மகாத்மாவின் பலிதானத்துக்கு நாற்பது ஆண்டுகள் முன்னால். அப்போது 'டிரான்ஸ்வல் ஆசியர் சட்டம்' (Transval Asiatic Act ) என்கிற சட்டத்தை எதிர்த்து சத்தியாகிரகம் நடந்துகொண்டிருந்தது. வெள்ளையர் அல்லாதவர்கள் – குறிப்பாக ஆசியர்கள் (இந்தியர்கள்) - கட்டாயமாக ஒரு ஆவண அட்டையுடன்தான், அனுமதிக்கப்பட்ட பொது இடங்களுக்கு அவர்கள் செல்லமுடியும். அதிகாரிகள் கேட்டால், அதை எடுத்து அவர்கள் காட்டியே ஆக வேண்டும். இதை எதிர்த்து சத்தியாகிரகம் நடந்துகொண்டிருந்தது. காந்தி சிறையில் இருந்தார். அவரை வரவழைத்து ஸ்மட்ஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். அன்றைய மேற்கின் சிறந்த ராஜதந்திரியும் ராணுவ மேதமையும் கொண்டவரான ஸ்மட்ஸ், இளம் சத்தியாகிரகியான காந்தியிடம் ஒரு சமரசத்தை முன்வைத்தார். இந்தியர்களில் பெரும்பாலானோர், தானாகவே முன்வந்து அரசிடம் பதிவு செய்துகொண்டால், இந்தச் சட்டம் விலக்கப்பட்டுவிடும். காந்தி, சக சத்தியாகிரகிகளிடம் கலந்தாலோசித்த பிறகு ஒரு முடிவுக்கு வந்தார். ஸ்மட்ஸின் சமரசத் திட்டத்தை ஏற்கலாம் எனக் கருதினார். இதை நம்பிக்கையின்றி பார்த்த சக சத்தியாகிரகிகள் சிலரிடம், காந்தி ஒரு விஷயத்தை தெளிவாக்கினார். சத்தியாகிரகத்தின் ஆதார அம்சங்களில் ஒன்று ‘சக மனிதரிடம் உள்ளார்ந்த நம்பிக்கை வைப்பது’ [1]

சமரசத்தை காந்தி ஏற்ற பின்னர், ஸ்மட்ஸ் தன் வாக்கில் பின்வாங்கினார். கட்டாயம் வைத்திருக்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட பதிவு ஆவண அட்டைகளை காந்தி எரியூட்டினார். இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டார் காந்தி. 1909-ல் விடுதலை செய்யப்பட்டதும், அவர் லண்டன் திரும்பினார்.

காந்தி ஓய்ந்திருக்கவில்லை. மீண்டும் தென்னாப்பிரிக்கா வந்தார். சத்தியாகிரகத்தை, தொடர்ந்து வெவ்வேறு அளவுகளில் நடத்தினார். சில வெற்றிகள் சில தோல்விகள் என்று சென்ற அந்தப் போராட்டத் தொடரின் முக்கிய நோக்கம், இன அடிப்படையில் காட்டப்படும் சட்டரீதியான பாகுபாடுகளை நீக்குவது. அது இன்னும் எட்டாக்கனியாகவே இருந்தது. 1910-ல், தென்னாப்பிரிக்காவுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டது. ஸ்மட்ஸ் இப்போது பிரிட்டிஷ் காலனியின் உயரதிகாரி அல்ல. டொமினியன் அந்தஸ்து கொண்ட தென்னாப்பிரிக்காவின் உள்துறை அமைச்சர். இந்த மாறுபட்ட சூழலில், காந்தி தன் போராட்டங்களையும் பேச்சுவார்த்தைகளையும் தொடர்ந்தார்.

இந்தியர்கள், ஏற்கெனவே பஞ்ச காலங்களில் கொத்தடிமைகளாகத் தென்னாப்பிரிக்காவுக்கு வந்திருந்தார்கள். இப்போது, ஏதோ ஆங்காங்கே கொஞ்சம் வசதியுடன் இருந்தார்கள். எனவே, மேலும் இந்தியர்கள் அங்கே புலம்பெயர்வதற்கான சூழ்நிலை உருவானது. இதைக் கட்டுப்படுத்த, புலம்பெயர்வதற்கான ஒரு சட்ட மசோதா தென்னாப்பிரிக்க அரசால் உருவாக்கப்பட்டது. இதற்கு, இந்திய எதிர்ப்பு இருந்தது. இதில் ஏற்படுத்தப்பட்ட சமரசத் திட்டத்தில், கல்வித் தகுதியின் அடிப்படையில், புலம்பெயர்வதைக் கட்டுப்படுத்தும் க்ஷரத்துகளுக்குக் காந்தியடிகள் ஒப்புக்கொண்டார்.

இறுதியாக, தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட சத்தியாகிரகம் மிகவும் உணர்ச்சிபூர்வமான ஒரு பிரச்னையின் மீது நடந்தது. கிறிஸ்தவ முறையிலான திருமணங்களைத் தவிர, பிற திருமணங்களுக்குச் சட்டரீதியிலான அந்தஸ்து கிடையாது என்ற நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றுக்கு எதிராகப் மிகப்பெரிய சத்தியாகிரகம் உருவானது. இந்தத் தீர்ப்பு, கிறிஸ்தவர் அல்லாத இந்தியப் பெண்களின் திருமண உறவை முழுக்க இல்லாமல் ஆக்கியதுடன், குழந்தைகளுக்குச் சொத்துரிமையையும் இல்லாமல் ஆக்கியது. இந்திய வம்சாவளித் தொழிலாளர்கள் 50,000 பேர் கலந்துகொண்ட மிகப்பெரிய சத்தியாகிரகம் அதுவே. இதனால், இந்தியாவிலும் பிரிட்டனிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

வேறுவழி இல்லாத சூழ்நிலையில், இந்தியர்களின் குறைகள் என்னென்ன என்பதைக் கண்டறிய ஒரு கமிஷனை நியமிக்க தென்னாப்பிரிக்க அரசு முடிவு செய்தது. டிரான்ஸ்வல் சட்டத்தை விலக்கிக்கொள்வதென்பது ஒரு பெரிய மாற்றம் எனச் சொல்லும்படியானதாக இல்லை. ஆக, 1914-ல் மகாத்மா இந்தியாவுக்குத் திரும்பியபோது, சட்டரீதியாக இந்தியர்களுக்கும் இதர ஆசியர்களுக்கும் எதிராக இருந்த இன பாரபட்சங்கள் எவ்விதத்திலும் குறைந்துவிட்டன என சொல்லிவிடமுடியாது. ஜெனரல் ஸ்மட்ஸ், தன் நிலையில் எவ்விதத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை. நட்டாலில் இந்தியர்களுக்கு எதிராக இருந்த ஆள் வரிகூட அகற்றப்படவில்லை.[2]

ஸ்மட்ஸின் காலணிகள் - மகாத்மாவின் அற வெற்றி

மகாத்மாவின் அற உணர்வால், இத்தகைய லௌகீக வெற்றி - தோல்விகளுக்கு அப்பால், ஐரோப்பியர்களின் மானுட மனசாட்சியுடன் உரையாடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. எனவே, எளிமையின் இதயத்துடன் தனது கரங்களாலேயே காலணிகளைச் செய்து அவர் ஸ்மட்ஸுக்கு அளித்தார்.

1938-ல் ஜெனரல் ஸ்மட்ஸ், தென்னாப்பிரிக்காவின் முக்கியமான அரசியல் தலைவர். இன்னும் ஓராண்டில், தென்னாப்பிரிக்காவின் நான்காவது பிரதம மந்திரியாக ஆகக்கூடியவர். அதே காலகட்டத்தில், பாரத விடுதலை இயக்கத்தின் ஒப்பற்ற தலைவராக காந்தி தன்னை நிறுவிக்கொண்டிருந்தார். காந்தியின் புகழ் சரிதைகளில், அவர் ஸ்மட்ஸுக்கு அளித்த காலணிகள், அறத்தின் வெற்றி ஒன்றின் குறியீடாக மாறிவிட்டன. காந்தி குறித்து லூயிஸ் பிஷர் எழுதிய வாழ்க்கை வரலாற்றில் இப்படிக் கூறுகிறார் -  

ஒவ்வொரு கோடைக்காலத்திலும், காந்தி செய்துகொடுத்த அந்தக் காலணிகளை ஸ்மட்ஸ் அணிவார். காந்தியின் எழுபதாவது பிறந்த நாளில், அந்தக் காலணிகளை அவர் திரும்ப காந்தியிடம் அளித்தார். அப்போது அவர் காந்தியிடம் கூறினார், ‘எவ்வளவோ பெரிய மனிதர் ஒருவர் செய்த காலணிகளில் நிற்க நான் தகுதியுடையவன் அல்ல என நான் உணர்ந்தபோதிலும்... நான் பல கோடைக்காலங்களில் இந்த காலணிகளை அணிந்திருக்கிறேன்'[3]

ஆனால், ஸ்மட்ஸின் வரலாற்றை எழுதிய டபிள்யூ.கே.ஹான்காக் (W.K.Hancock), வேறுவித சித்திரத்தை அளிக்கிறார்:

ஆ, அந்தக் காலணிகள்! காந்தியின் வாழ்க்கைச் சரித ஆசிரியர்கள், ஸ்மட்ஸ் அதை காந்தியின் எழுபதாவது பிறந்த நாளில் மகாத்மாவிடம் அவற்றை திரும்பக் கொடுத்த கதையைச் சொல்ல பிரியப்படுவார்கள். அவர் காந்தியிடம் திரும்ப அனுப்பியதெல்லாம், அவற்றின் புகைப்படம் ஒன்றைத்தான். அவரிடம் அன்றும் இருக்கும் ஒரு அரிய புனிதப் பொருள் (a precious relic) என்று அவர் கருதினார்.[4]

1939-ல், காந்தியின் எழுபதாவது பிறந்த நாளுக்குக் காலணிகளை அனுப்பினாரோ அல்லது அவற்றின் புகைப்படத்தை அனுப்பினாரோ, அவர் அனுப்பியது எதுவாக இருந்தாலும், ஸ்மட்ஸின் நன்மதிப்பையும் அன்பையும் காந்தி பெற்றிருந்தார். காந்தியின் அன்பும் ஸ்ம்ட்ஸுக்கு இருந்தது. எதிரிகளின் மனத்திலும் அன்பையும் மரியாதையையும் உருவாக்கும் அஹிம்சை முறைக்கு, காந்தியின் வழிக்குக் கிடைத்த ஒரு பெரும் வெற்றியை அந்தக் காலணிகள் உணர்த்தின.

ஸ்மட்ஸின் 'பெக்கிங் சட்டம்' (Pegging Act)

ஸ்மட்ஸின் மீதான மகாத்மாவின் அற வெற்றி, காந்திஜியின் பெயரையும் சர்வதேச அளவில் உயர்த்தியது. ஆனால், தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நிலை அப்படி உயரவில்லை. புதிய புதிய சட்டங்கள், அவர்களின் பொருளாதார மேம்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக நசுக்குவதை அவர்கள் உணர்ந்தார்கள். 1919-ல், ஆசியர்களுக்கான தனியார் கம்பெனிகள் நகரா சொத்துக்கள் வைத்திருக்க அனுமதியில்லை என சட்டம் கொண்டுவரப்பட்டது. சுரங்கப் பணியாளர்கள் குறித்த சட்டம் ஒன்று (The Mines and Works Act), இந்தியர்கள் பயிற்சிபெற்ற பணியாளர்களாக நியமிக்கப்படுவதைத் தடுத்தது.

1932-ல், ஆசியர்களுக்கான நில சொத்துரிமைகள் குறித்த சட்டம் ஒன்று (Asiatic Land Tenure Act), எந்தக் கம்பெனியிலும் இந்தியர்கள் பங்குதாரர்கள் ஆவதை தடுத்தது. 1939-ல், ஸ்மட்ஸ் மகாத்மாவுக்கு இதயப்பூர்வமான தம் நன்மதிப்பைத் தெரிவித்து, சத்தியாகிரகத்தின் அற வெற்றியை இந்தியர்களை உணரச்செய்த அதேநேரத்தில், ‘ஆசியாடிக் நிலம் மற்றும் உழவுச் சட்டம்’ (Asiatic Land and Tilling Act) என்கிற ஒரு தாற்காலிகச் சட்டத்தை உருவாக்கிக்கொண்டிருந்தார். அதாவது, அவர்களுக்கென்று குறிக்கப்பட்ட இடங்களுக்கு அப்பால், இந்தியர்களின் பொருளாதாரச் செயல்பாடு இருக்கக்கூடாது. 1943-ல் இந்தச் சட்டம் இன்னும் விஸ்தீரணம் அடைந்தது. அப்போது, மகாத்மாவின் நல் நண்பரான ஸ்மட்ஸ், தென்னாப்பிரிக்காவின் பிரதம மந்திரி. இந்தத் தாற்காலிகச் சட்டத்தை, டிரான்ஸ்வால் நடால் ஆகிய பிரதேசங்களுக்கு விரிவாக்கினார் அவர். இப்போது அது 'Pegging Act' என அழைக்கப்பட்டது.[5] இதன் விளைவாக, 24,000 இந்தியர்கள் டிரான்ஸ்வாலில் 200 ஏக்கருக்குள்ளும், 7,000 வெள்ளையர்கள் 5,000 ஏக்கருக்குள்ளும் அவர்களின் பொருளாதார நடவடிக்கைகளை நிகழ்த்தலாம்.[6]

இந்தச் சட்டம் குறித்த இந்தியக் காங்கிரஸின் எதிர்வினை அடிப்படையில், மகாத்மா காந்தி – ஜெனரல் ஸ்மட்ஸ் இருவரிடையே இருந்த பரஸ்பர மரியாதையையும் நல்லெண்ணத்தையும் கணக்கில்கொண்டு அமைந்திருந்தது என்றே கருத வேண்டும். இந்த நடால் இந்தியக் காங்கிரஸை தொடங்கியவர் காந்தியடிகளேதான். தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கத்தின் முதுபெரும் போராளியான அகமது கத்ரடா, ஸ்மட்ஸின் சட்டம் குறித்தும், காங்கிரஸின் நிலைப்பாடு குறித்தும் சற்று கடுமையாகவே கூறுகிறார் -  

அவர்கள் வழக்கமாகச் செயல்படுகிறவிதத்தில், இந்தியக் காங்கிரஸ் தலைவர்கள், ஸ்மட்ஸிடம் ஒரு குழுவினை அனுப்பி தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். இந்தச் சட்டத்தை விலக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். ஸ்மட்ஸிடமிருந்து அவர்களுக்கு அந்தச் சட்டம் விலக்கப்படும் என்று ஒரு வாக்குறுதி கிடைத்தது. ஆனால் வருத்தமான விஷயம், இந்தத் தலைவர்கள் முதுகெலும்பற்றத் தன்மையுடன், இந்தியக் குடியிருப்புகளைச் சீர்படுத்த, மூன்று ஐரோப்பியர்களும் இரண்டு இந்தியர்களும் கொண்ட கவுன்ஸில் ஒன்றின் மூலம் செயல்பட வேண்டிக்கொண்டதுதான். அதாவது, பெக்கிங் சட்டம் செய்வதை இந்த கவுன்ஸில் செய்யும். இதில், இந்தியர்களும் உடந்தையாக இருப்பார்கள்.[7]

ஆனால், இப்படி ஒரு மென்போக்கை இந்தியக் காங்கிரஸ் எடுத்ததை பலவீனமென எடுத்துக்கொள்ள முடியாது. அதன் ஆதர்ச வழிகாட்டியான மகாத்மா, ஏற்கெனவே ஸ்மட்ஸை அன்றைய தேதியில், அவருக்கு இருக்கும் 'மிகவும் இதமான நண்பர்' எனக் கருதினார்.[8] எனவே, காங்கிரஸும் அவரை இந்தியர்களின் நண்பர் என்றே உணர்ந்திருந்தது. ஏதோ அரசியல் நிர்ப்பந்தங்களால் அவர் இப்படிச் செயல்படவேண்டி இருக்கிறது என்பதைப் புரிந்து அவர்களால் நடக்கமுடிந்தது.

பரித்ராணாய சாதுனாம்...

ஆனால் இந்தச் சூழலில், தென்னாப்பிரிக்க இந்தியர்களின் பொருளாதார வருங்காலம், ஏறக்குறைய மூடப்பட்டுவிட்டதாகவே தோன்றியது. அந்தத் தருணத்தில் ஒருவர் பிரசன்னமானார். அவர், காங்கிரஸில் இருந்து வெளியே தள்ளப்பட்ட ஒரு தலைவர். தொழில்ரீதியாக மருத்துவர். அன்றைய வைஸ்ராய் எக்ஸிக்யூட்டிவ் கமிட்டியில் அவர் உறுப்பினர். ஆனால் தீவிர தேசியவாதி. அவர் டாக்டர் நாராயண் பாஸ்கர் கரே. இந்து மகாசபைத் தலைவர்களில் ஒருவரும்கூட.

காங்கிரஸில் இருந்தபோது, மத்திய மாகாணத்தின் பிரதமராக இருந்தவர். தமது அமைச்சரவையில், அக்னி போஜ் எனும் பட்டியல் சமுதாயத் தலைவரை சேர்த்தமைக்காக, அன்றைய காங்கிரஸ் தலைமையால் பிரச்னைக்கு ஆளானவர். வேறு வழியின்றி காங்கிரஸில் இருந்து விலகினார்.[9] கரேக்கு எதிராகச் செய்யப்பட்டது அநியாயமான அவமரியாதை என, பல பத்தாண்டுகளுக்குப் பிறகு மகாத்மாவின் அணுக்கரான ராஜாஜியே ஒப்புக்கொண்டார். 'அகங்காரத்துக்குச் சற்றும் குறைவில்லாத அதிகார சக்தி மையமாக' நாராயண் கரேக்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டது.[10]

வைஸ்ராயின் உயரதிகாரக் குழுவில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான துறையில் கரே செயல்பட்டார். ஆனால், இங்கு வைஸ்ராய்க்கே வானளாவிய அதிகாரங்கள் உண்டு. எனவே, கரேயின் செயல்பாடு முழுக்க முழுக்க சிரமமான சூழலில்தான் இருந்தது. ஆனால், எப்படியாவது தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு எதிராகச் செய்யப்படும் அநீதியை அகற்ற வேண்டும் என்று கருதினார் கரே. இந்தச் சூழலில், அவரது காதுக்கு சட்டநுணுக்கமான ஒரு விஷயம் எட்டியது.

ஒரு நாட்டின் வம்சாவளிகளோ அல்லது அயல்நாட்டில் வேலை செய்யும் பிரஜைகளோ அங்கே அவமதிக்கப்பட்டால், அதற்குப் பதிலடி கொடுக்கும் சட்டம் ஒன்று இருக்கிறது. ஆனால், அதைப் பிரயோகப்படுத்துவதற்கு அதில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். எனவே, கரே முதலில் மிக அமைதியாக அந்தச் சட்டத்தில் அந்த மாற்றங்களைக் கொண்டுவந்தார். ஜூலை 26, 1943-ல் இந்தச் சட்டத் திருத்தம் (Indian Reciprocity Act Amendment Bill) சட்டப் புத்தகத்துக்குள் கொண்டுவரப்பட்டது.[11] ஆனால் அடுத்த பிரச்னை, இதை இந்தியர் நலனுக்காகத் தென்னாப்பிரிக்கவுக்கு எதிராகப் பிரயோகம் செய்வது. அதற்கு வைஸ்ராயைச் சம்மதிக்க வைக்க வேண்டிய அழுத்தம் கொடுப்பது. கரே, உடனடியாகவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தச் சட்டத்தைப் பிரயோகப்படுத்த கோரிக்கை எழுப்ப ஆரம்பித்தார். இரண்டாம் உலகப் போர் என்பது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு அநீதி இழைக்க, அவமானப்படுத்த ஒரு சாக்காகச் சொல்லப்படலாகாது என எச்சரித்தார். வைஸ்ராய் கவுன்ஸிலில், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பார்களே, அப்படி அவர் பேசினார்.

இப்போது, தென்னாப்பிரிக்கா இந்தியர்களை நடத்தும் விதத்துக்கு இந்தியா ஒரு சுதந்தர நாடாக இருந்தால், அது தென்னாப்பிரிக்காவின் மீது போர் அறிவிக்கப் போதுமான காரணமாக (casus belli) இருந்திருக்கும். [12]

'தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக போர் பிரகடனம் இன்றைக்கே இங்கேயே...'

ஆனால், அக்டோபர் 1943-ல், இந்தியாவின் வைஸ்ராயாக அர்சிபால்ட் பெர்ஸீவல் வேவல் (Archibald Percival Wavell, 1883-1950) பதவியேற்றார். அதற்கு முந்தைய வைஸ்ராயிடம், ஏதாவது ஒரு தாக்கத்தை கரே ஏற்படுத்தியிருந்தால், இப்போதுள்ள வைஸ்ராயோ ஜெனரல் ஸ்மட்ஸுக்கு மிகவும் வேண்டியவர். வைஸ்ராய்க்கு ஸ்மட்ஸ் 'நல்ல நண்பரும் முழுமையான நல்ல மனிதரும்'கூட. கரேயிடம் வைஸ்ராய் தெளிவாகச் சொல்லிவிட்டார். 'தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக எதையும் செய்ய விட முடியாது'. 'யாராக இருந்தாலும், ஸ்மட்ஸுக்கு எதிராக எதையும் செய்ய நான் அனுமதிக்கமாட்டேன்'[13]. கரே, நிச்சயமாக மனத்தளர்ச்சி அடைந்தார். ஆனால், தொடர்ந்து வைஸ்ராயின் உயர்மட்டக் குழுவில், கடும் வார்த்தைகளால் தென்னாப்பிரிக்காவை விமர்சித்து வந்தார்.

பொதுவாக, இந்த விஷயங்கள் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களாலும் சரி, நம் நிறுவன காந்தி-நேரு அறவழியாளர்களாலும் அடக்கி வாசிக்கப்படும் அல்லது இப்படி எதுவும் நடக்காததுபோல் கடந்து செல்லப்படும். ஆனால், அப்படிப்பட்ட பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள்கூட, கரேயின் கூர்மையான கடும் வார்த்தைகள், வேவலை வேறு வழியில்லாமல் ஸ்மட்ஸுக்கு தந்தி அனுப்பவைத்தன என்கிறார்கள். நீங்கள் ஏதாவது சரியான சமாதானம் சொல்லாவிட்டால், இங்கே டாக்டர் கரே என்கிற ஆசாமி பெரும் தொல்லைகளை உருவாக்கிவிடுவார்.[14] ஏப்ரல் 15, 1944 அன்று, தென்னாப்பிரிக்காவுக்கான இந்திய ஹைகமிஷனர் ஸ்மட்ஸூக்கு ஒரு தகவலை அனுப்பினார். எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மூன்று நாட்களுக்கு பிறகு பிரிட்டோரியா அரசு, நடால் இந்திய தேசிய காங்கிரஸுடன் சில ஆலோசனைக்குப் பிறகு ஒரு சமரச திட்டத்தை முன்வைத்தது. இந்தியக் குடியிருப்புகள் மீதான கட்டுப்பாடுகள் தொடரும். ஆனால், பெக்கிங் சட்டம் விலகிக்கொள்ளப்படும். எப்போது? நடால் சட்டசபையில் இதற்கான தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன். இந்தச் சட்டசபையில் இந்தியப் பிரதிநிதித்துவம் கிடையாது. அதுவும் வெள்ளையர்களால்தான் இருக்கும்.

ஆனால், இந்த எளிய மாற்றத்தைக்கூட ஸ்மட்ஸால் நிறைவேற்ற முடியவில்லை. வெள்ளையர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு. ஸ்மட்ஸ் ஒரு ராஜதந்திர பல்டி அடித்தார். விரைவில், தாற்காலிகமாக 'பெக்கிங் ஆக்ட்' நிரந்தரமாக்கப்படும்.[15]

தென்னாப்பிரிக்க இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கரே பொங்கி எழுந்தார். வைஸ்ராய் உயர்மட்டக் குழுவின் கூட்டத்தில் கடுமையாக விமர்சித்தார். 'இந்தியா பூரண சுதந்தரம் அடைந்த தேசமாக இருந்திருக்க வேண்டுமென விரும்புகிறேன். எனில், இங்கேயே இப்போதே தென்னாப்பிரிக்காவின் மீது போர்ப் பிரகடனம் செய்திருப்போம்'. வைஸ்ராய் குழுவில் தொழில் துறை மற்றும் விநியோகத் துறை உறுப்பினராக இருந்தவர் சர். ராமசாமி முதலியார் (1887-1976). அவர் கூறினார், 'தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகப் படை திரட்டப்பட்டால் அதில் நான் இணைவேன்'[16]

ஏற்கெனவே, போஸால் ஏற்பட்ட அதிர்ச்சியில், இந்தக் கோபம் வைஸ்ராயை நிச்சயமாக அசௌக்கியமாக்கியது. பிரிட்டிஷ் அரசுக்கு, இந்திய அதிருப்தியை கரே தந்தியாக அனுப்பினார். வேறு வழியில்லாமல், வைஸ்ராய் தமது உயிர்த் தோழர் ஸ்மட்ஸை தனிப்பட்ட முறையில் அழைத்து, எச்சரிக்கவேண்டியதாயிற்று. 'வேறு வழியே இல்லை, என்னால்கூட தடுக்க முடியாது. பிரிட்டிஷ் அரசாங்கம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிவிடும்'. இறுதியாக, கரேக்கு முதல் முக்கிய வெற்றி கிடைத்தது.

1944-ல், இன்னும் சுதந்தரம் அடையாத இந்தியா, முழுச் சுதந்தரம் அடைந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் சட்டத்தைப் பிரயோகித்தது. தென்னாப்பிரிக்காவின் தலைவர்கள் இந்தியா வந்தால், அவர்களுக்கு எந்த அரசு கௌரவமும் வசதியும் அளிக்கப்படாது. இது நிச்சயமாக, ஒரு பெரிய குறியீட்டு வெற்றி. தன்னம்பிக்கை அளிக்கும் தலைநிமிர வைக்கும் வெற்றி. ஆனால், கரேக்கு இந்தமாதிரி குறியீட்டு வெற்றிகளில் நம்பிக்கை இல்லை. இந்தியர்களுக்கு எதிரான சட்டம் வாபஸ் பெறவைக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், 1945-ல் இரண்டாம் உலகப் போர் ஒருவழியாக ஓய்ந்து அடங்கியது. 'தேசங்களின் லீக்', ஐக்கிய நாடுகள் சபையாக உதயமாகியது. இது, தென்னாப்பிரிக்க இந்தியர்களின் பிரச்னைக்கு ஒரு அட்டகாசமான தீர்வை அளிக்கும் வழியை கரேக்குக் கொடுத்தது.

'ஒரு பொறுப்பற்ற செயலும்', அதில் தமிழரின் பங்கும்

ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு மெமோரண்டம் சமர்ப்பிப்பது என கரே முடிவு செய்தார். இதை ஊடகங்களை அழைத்து, சொல்லவும் செய்தார் – குறிப்பாக, டெல்லியில் இருக்கும் பன்னாட்டு ஊடகங்களை அழைத்துச் சொன்னார். அமெரிக்கப் பத்திரிகைகளில் இப்படி ஒரு செய்தி பிரசுரமாகி, அது இடியென வைஸ்ராய் தலையில் இறங்கியது. ஒட்டுமொத்த வெளியுறவுத் துறை அதிகாரிகள், கரே மீது பரம கடுப்பாகிவிட்டார்கள். என்ன நடந்தது என கரேயின் வார்த்தைகளில் பார்க்கலாம் -

இந்திய அசோஸியேட் பிரஸ்ஸும், அமெரிக்க அசோஸியேட் பிரஸ்ஸூம் நான் கூறியதைப் பிரதானப்படுத்தி வெளியிட்டார்கள். ஒட்டுமொத்த வெளியுறவுத் துறை அதிகார வர்க்கம், என்னிடம் விரோதம் பாராட்ட ஆரம்பித்தார்கள். பொறுப்பற்றத்தனமாக நடந்துகொண்டதற்காக நான் கடிந்துகொள்ளப்பட்டேன். என்னுடம் இருந்தவர்கள், ஒரு ஐசிஎஸ் அதிகாரி இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டிருக்கமாட்டார் எனக் கூறினர்.வைஸ்ராயும் என் பொறுப்பற்றத்தனத்தைக் கண்டித்தார். ...எனக்கும் வைஸ்ராய்க்கும் இடையில் கடும் கசப்பு நிலவியது.ஐநாவில் புகார் அளிக்கப்போவதாக நான் கூறியது அவருக்குப் பிடிக்கவில்லை. முடிந்தவரை, அப்படிச் செய்வதிலிருந்து என்னைப் பின்வாங்கவைக்க அவர் முயற்சி செய்தார்.[17]

ஆனால், கரே அப்படி எளிதில் வளைந்துகொடுப்பவர் இல்லையே. இதைக் கவனித்தே ஆக வேண்டும். கவன ஈர்ப்புத் தீர்மானத்தை அவர் கொண்டுவந்தார். வைஸ்ராய்க்கு உள்ளூர ஒரு நம்பிக்கை இருந்தது. சுதந்தரம் அடையாத இந்தியா இப்படி ஒரு புகாரை ஐநாவில் அளிக்க, சட்டபூர்வமாக இடம் இருக்காது. வெறும், வாய்சொல் சவடால் அவ்வளவுதான். ஆனால், வைஸ்ராய்க்குத் தெரியாத விஷயம் என்னவென்றால், டாக்டர் கரே தன் 'ஹோம்வொர்க்கை' நன்றாகச் செய்திருந்தார். வைஸ்ராய் அலட்சியமாக, அப்படி இந்தியா ஐநாவில் புகார் அளிக்க முடியுமா என்ன என்று பார்த்துச் சொல்லுமாறு தன் வெளியுறவுத் துறை செக்கரட்டரி ஹக் வெயிட்மானிடம் கூறினார். இதெல்லாம் வேலைக்கு ஆகாத விஷயம் எனக் கருதிய வெயிட்மான், தன் அண்டர் செக்கரட்டரியிடம் அதைப் பார்த்துச் சொல்லுமாறு கூறினார். முடிவு தெரிந்தபோது, இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அண்டர் செக்கரட்டரி சொன்னார் - 'முடியும். ஐநாவின் பொது குழுவில் இந்தியா புகார் அளிக்க முடியும்'16]

விஷயங்கள் கொஞ்சம் இந்தியாவுக்குச் சாதகமாக இருப்பதுபோல் தோன்றியது. இனவாதியான வின்ஸ்டன் சர்ச்சில், தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். கரேயின் நண்பர் ஆர்க்காடு ராமசாமி முதலியார், ஐக்கிய நாடுகளின் பொருளாதார - சமூக கவுன்ஸிலின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் ஒரு விஷயத்தை இந்திய நிர்வாகத்துக்குத் தெளிவுபடுத்தினார். எப்போது 'பெக்கிங் ஆக்ட்' நிரந்தரச் சட்டம் என அறிவிக்கப்படுகிறதோ, அப்போது கரே உருவாக்கிய ஆயுதம் ஐநா சபையில் களமிறக்கப்படும். இதற்கிடையில், கரே சும்மா இருக்கவில்லை. கரேயின் முயற்சியால், ஏப்ரல் 1946-ல், பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம், தென்னாப்ரிக்காவில் இருந்து ஹைகமிஷனரை திரும்பப் பெற்றுக்கொண்டது. கரே, தன் முயற்சிகளைக் கைவிட வேண்டும் என்று தொடர்ந்து பிரிட்டிஷ் மேலதிகார வட்டங்களிலிருந்து அழுத்தம் வந்தவண்ணம் இருந்தது.

ஸ்மட்ஸ் இந்த எதிர்ப்புகளையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. ஜூன் 1946-ல் சட்டம் நிரந்தரமாக்கப்பட்டது. அதேசமயம், இந்தியாவில் கரேக்குப் புதிய நெருக்கடி உருவானது. ஒரு தாற்காலிக இந்திய அரசை, காங்கிரஸ் தலைமையில் நியமிக்க பிரிட்டிஷார் முடிவு செய்தனர். கரே பதற்றம் அடைந்தார். ஐநா சபையில் அளிக்கவிருக்கும் புகாரை நேரு அரசு நீர்க்கச் செய்யவோ அல்லது இல்லாமலே செய்துவிடவோ கூடும் என அவர் அஞ்சினார். தனது செயலாளரான ஆர்.என்.பானர்ஜியுடன் அமர்ந்து, தென்னாப்பிரிக்கா எந்த விதத்திலெல்லாம் இனவாத அடிப்படையிலான பாரபட்சங்களைக் காட்டுகிறது என்பதை இரவு பகலாக ஆராய்ச்சி செய்து, விரிவான ஒரு புகார் மனுவைத் தயார் செய்தார். தென்னாப்பிரிக்க அரசின் செயல்பாடுகள், 'நாஸி கோட்பாடுகளின் அடிப்படையில், இன மேம்பாட்டு வாதத்தைக் கொண்டிருப்பவை' என முதன்முதலாகக் கூறினார்.[18] பதினெட்டுப் பக்கங்களும், தந்தி சேவை மூலமாக நியூயார்க்கில் இருந்த ராமசாமி முதலியாருக்கு அனுப்பப்பட்டது. ஆர்க்காடு ராமசாமி முதலியார், அதை ஐநா சபையின் செகரட்டரி ஜெனரலாகப் பொறுப்பேற்றிருந்த திரு ட்ரைக்வ் லையிடம் (Trygve Lie), 22 ஜூன் 1946 அன்று சமர்ப்பித்தார். செப்டம்பர் 1946-ல், டாக்டர் கரே பதவி விலகினார். கர்மண்யேவா அதிகாரஸ்தே.

மகாத்மாவின் இறுதி வெற்றி

விரைவில், நேருவின் இடைக்கால அரசு பதவியேற்றது. அதற்குள், இந்த மனு ஐநா சென்றுவிட்டது. மகாத்மாவின் ஆசிகளுடன், ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த இந்த அரசே, ஐநாவில் கரேயின் உழைப்பின் பலனை, உலகின் முழு ஊடக வெளிச்சத்தில் அறுவடை செய்தது. நேரு உடனடியாகத் தமது உடன்பிறந்த சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டை, ஐநா சபைக்கு அனுப்பிவைத்தார். தென்னாப்பிரிக்க மக்களின் வாழ்க்கையை மாற்றும் விடுதலைக்கு அடிகோலும் ஒரு முக்கிய நிகழ்வில், இந்தியாவின் பிரதிநிதியாக விஜயலட்சுமி பண்டிட் அங்கே சென்றார்.

கரேயின் உழைப்பு, வரலாற்றில் அடிக்குறிப்பாக அல்லது அதுவும்கூட இல்லாமல் மறக்கப்பட்டது. ஆனால், விஜயலட்சுமி பண்டிட் ஐநா செல்வதற்கு முன்னர், மகாத்மா காந்தி அவரை அழைத்து ஒரு விஷயத்தைச் சொல்லியிருந்தார். ஐநாவில் ஸ்மட்ஸை சந்திக்கும்போது அதை விஜயலட்சுமி பண்டிட் கூறினார் - 'இந்த விஷயத்தில், தங்கள் கைகளைக் குலுக்கி தங்கள் ஆசீர்வாதத்தை வாங்க வேண்டும் என்று மகாத்மா என்னை பணித்தார்'[19] எவரையும் பகைவரெனக் கருதாத மகாத்மாவின் ஆன்மிக சகோதரத்துவ உணர்வு, மீண்டும் உலக அரங்கில் மிளிர்ந்தது.

டாக்டர். நாராயண் பாஸ்கர் கரே, பின்னாட்களில் நேரு அரசாங்கத்தால், காந்தி கொலையுடன் தொடர்புபடுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். கசப்பு நிறைந்த தனிமை அவரைச் சூழ்ந்தது. அப்போது ஒரே ஒரு தலைவர் மட்டுமே அவரிடம் தொடர்ந்து உரையாடினார். அவருக்கு ஆதாரவாக இருந்தார். அந்தத் தலைவர், டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்.

உலகத்தில், காந்தி போன்ற மகாத்மாக்கள் அழகைச் சேர்க்கிறார்கள். அவர்கள் மீதே வரலாற்றின் ஒளி படியும். அது நியாயமும்கூட. அதே சமயம், உண்மையாகத் தங்கள் இதய ரத்தத்தைச் சிந்தி தம் மக்களுக்காக உழைக்கும் சிலரும் இருக்கிறார்கள். அவர்களையும் மதிக்கும் சமூகங்கள், உண்மையான உழைப்பினை அறிவு சார்ந்து ஒரு பிரச்னைக்காக தம்மைத்தாமே அர்ப்பணித்துக்கொள்வதை புரிந்துகொள்கின்றன. மகாத்மா, தேசம் மதம் போன்ற குறுகிய எல்லைகள் இல்லாதவர். உலக மக்கள் அனைவருக்கும் உரியவர்.

ஆனால், ஒவ்வொரு முறை இடி அமீன்களால் இந்தியர்கள் விரட்டி அடிக்கப்படும்போதும், ஒவ்வொரு முறை இந்திய வம்சாவளியினர் இனப்படுகொலை செய்யப்படும்போதும்... நமக்குத் தேவைப்படுவது நாராயண் பாஸ்கர் கரே – அவரை நாம் மறந்துவிட்டாலும்கூட.

சான்றாதாரங்கள்

 

[1] Uma Majumdar, Gandhi’s Pilgrimage of Faith: From Darkness to Light, SUNY press, 2005, pp.144-5

[2] April Carter, Mahatma Gandhi: A Selected Bibliography, Greenwood Publishing Group, 1995, pp.12-3

[3] The Essential Gandhi, Louis Fischer (ed.). Random House, New York, 2002, p 98

[4] W. K. Hancock, Four Studies of War and Peace in this Century, Cambridge University Press, 2008, p. 83

[5] Ngwarsungu Chiwengo, Understanding Cry, the Beloved Country: A Student Casebook to Issues, Sources, and Historical Documents,Greenwood Publishing Group,2007,pp.92-3

[6] Latha Varadarajan, The Domestic Abroad: Diasporas in International Relations, Oxford University Press, 2010, p.62

[7] Ahmad M. Kathrada, Memoirs, Zebra, 2004, p.39

[8] M K (Mahatma) Gandhi, Harijan, 12-Nov-1938

[9] Dr.Bhimrao Ramji Ambedkar, What Congress and Gandhi have done to the untouchables, Thacker, 1946, p.98

[10] Rajmohan Gandhi, Rajaji : A Life, Penguin Books India, 1997, p.413

[11] Narayan Bhaskar Khare, My political memoirs; or, Autobiography, J.R. Joshi, 1959, p.157

[12] Hugh Tinker, Separate and unequal: India and the Indians in the British Commonwealth, 1920-1950, C. Hurst, 1976, p.226

 [13] Narayan Bhaskar Khare, 1959, p.157

[14] Lorna Lloyd, ‘A Family Quarrel’, The Development of the Dispute over Indians in South Africa, The Historical Journal, Vol. 34, Iss.3, Sep-1991, p.711

[15] Commonwealth Papers, Vol -21, The Athlone Press., 1974, p.22

[16] Hugh Tinker, Separate and unequal: India and the Indians in the British Commonwealth, 1920-1950, C. Hurst, 1976, p.226

[17] Narayan Bhaskar Khare, 1959, pp.171-3, p. 177

[18] Lorna Lloyd, 1991, p.720

[19]Nagantara Sahgal, Prison and Chocolate Cake, London, 1954, p.196

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.