இந்தியாவுக்கு வந்ததும் காந்தியடிகள் ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். 1932 பிப் 15 அன்று சிறையில் இருந்து காந்திஜி ஹெர்டாகுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தன்னால் ஹெர்டாக் கேட்ட ஆதாரங்களை உடனடியாகக் கொடுக்க முடியவில்லை. பேராசிரியர் கே.டி. ஷாவிடம் இது தொடர்பான பொறுப்பை ஒப்படைத்திருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கே.டி.ஷாவின் நீண்ட விரிவான கடிதம் ஹெர்டாக்குக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தில் மாக்ஸ் முல்லர், லுட்லோ, ஜி.எல்.ப்ரெண்டர்கெஸ்ட், புகழ் பெற்ற தாமஸ் மன்ரோ, டபிள்யூ ஆடம், ஜி.டபிள்யூ லெய்(ட்)னர் ஆகியோரின் கூற்றுகளை விரிவாக மேற்கோள் காட்டி அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். பம்பாய் பிரஸிடென்ஸி குறித்த தரவுகளுக்கு ஜி.எல். ப்ரெண்டர்கெஸ்ட்டை ஷா மேற்கோள் காட்டியிருந்தார். ப்ரெண்டர்கெஸ்ட் பம்பாய் பிரஸிடென்ஸியின் கவுன்சில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.
ஏப்ரல் 1821-ல் அவர் சொன்னது: நான் சொல்லத் தேவையே இல்லை. இந்த போர்டில் இருக்கும் உறுப்பினர்களுக்கு நன்கு தெரிந்த உண்மைதான். இந்தப் பிராந்தியத்தில் உள்ள கிராமங்களில் அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அங்கு ஒரு பள்ளியாவது இல்லாமல் இல்லை. பெரிய கிராமங்களில் ஒன்றுக்கு மேலான பள்ளிகள் இருக்கின்றன. டவுன்களிலும் பெரிய நகரங்களில் ஒவ்வொரு டிவிஷனிலும் ஏராளமான பள்ளிகள் இருக்கின்றன. அங்கு உள்ளூர் சிறுவர்களுக்கு எழுதப் படிக்கவும் கணிதமும் கற்றுத் தரப்படுகின்றன. இந்தக் கல்விஅமைப்பு பொருளாதாரரீதியாக மிகவும் சிக்கனமானதாக இருக்கிறது. ஒரு கைப்பிடி தானியம் அல்லது மாதத்துக்கு ஒரு ரூபாய் ஆசிரியருக்கு சம்பளமாக பெற்றோரின் வசதிக்கு ஏற்பத் தரப்படுகிறது. அதே நேரம் இந்தக் கல்வி மிகவும் எளிமையானதாகவும் திறன் மிகுந்ததாகவும் இருக்கிறது. அனைத்து விவசாயிகளும் சிறிய தொழிலாளிகளும் தமக்கான கணக்கு வழக்குகளைத் துல்லியமாக பார்த்துக்கொள்ள முடிகிறது. நமது தேசத்தில் கடைநிலையில் இருப்பவர்களிடம் இப்படியான அறிவுத் திறமையைப் பார்க்கவே முடியாது. பெரு வணிகர்களும் வங்கியாளர்களும் தமது கணக்குப் புத்தகங்களை பிரிட்டிஷ் வர்த்தகர்களைப் போலவே மிகவும் லாவகமாகவும் துல்லியமாகவும் நிர்வகிக்கிறார்கள்.
ஹர்டாக் எதை உண்மையான ஆதாரமாக ஏற்றுக்கொள்வார் என்பது ஷாவுக்குத் தெரிந்திருந்தது. எனவே, அவர் தன் கடிதத்தை அதைக் குறிப்பிட்டபடியே ஆரம்பிக்கிறார்: ‘நாம் குறிப்பிடும் காலகட்டத்தில் உலகின் எந்தப் பகுதியிலுமே தெளிவான, துல்லியமான, புள்ளிவிவரங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை. இதுபோன்ற விவாதங்களில் ஏற்றுக்கொள்ளத்தக்க ஆதாரங்கள் எதுவும் அந்தக் காலகட்டத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இதுபோன்ற சூழ்நிலையில் சாதாரணமான மனிதரைவிட மேலாகவும் அறிவியல்பூர்வமாகவும் சிந்தித்து செயல்படும் திறமை கொண்ட நபர்களின் வார்த்தைகளையே இதற்கான ஆதாரமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்’. ஷா கடைசியாக இப்படிச் சொல்லி முடிக்கிறார் : லெய்(ட்)னர் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வு இந்த விஷயத்தில் மிகவும் நம்பத்தகுந்தது. அவரைப்போல் தெளிவான மனப்பதிவுகளை உருவாக்கிக் கொள்ள முடிந்த இடத்தில் இருந்த மற்றவர்கள் சொல்லியிருக்கும் தகவல்களும் நம்பத்தகுந்தவையே. மேலும் அப்படியானவர்கள் சொல்லும் தகவல்கள் கூட உண்மை நிலையைக் குறைத்து மதிப்பிட்டதாகத்தான் கருத முடியுமே தவிர மிகைப்படுத்தியதாக ஒருபோதும் கொள்ள முடியாது.
ஆனால் ஹெர்டாகைப் பொறுத்தவரையில் ஷாவின் நீண்ட பதில் முற்றிலும் பயனற்றதே. அது அவரை மேலும் தூண்டிவிடவே செய்தது. காந்தியிடம் நான் கேட்ட கேள்வியின் முக்கிய அம்சத்தை உங்கள் கடிதம் தொடவே இல்லை. கடந்த 100 ஆண்டுகளில் பெங்காலின் கல்வி தொடர்பான உங்கள் கருத்துகளை நான் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதுதொடர்பாக நிறைய தகவல்கள் விடுபட்டிருக்கிறது என்று சொன்னார்.
தனி நபர்களை ஒப்பிட்டுப் பேசுவதும் அவர்களை இயக்கும் அவர்களுடைய நோக்கங்கள் என்ன என்பதை விமரிசிப்பதும் சரியல்லதான். எனினும் சர் பிலிப் ஹெர்டாக் இப்படிச் சொல்வதைப் பார்க்கும்போது வின்சன்ட் ஸ்மித்தின் கருத்துகளைப் படித்த டபிள்யூ ஹெச். மோர்லாந்து என்னவிதமாக உணர்ந்தாரோ சர் பிலிப் ஹெர்டாகும் அப்படியே செயல்பட்டிருக்கிறார் என்று நிச்சயம் சொல்ல முடியும். ஸ்மித் தன்னுடைய ‘அக்பர் தி கிரேட் மொகல்’ என்ற புத்தகத்தில் அக்பர், ஜஹாங்கீரின் காலத்து தொழிலாளர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் கிடைக்கும் சம்பளத்தைவிட அதிக பணம் பஞ்சம் வெள்ளம் போன்றவை இல்லாத இயல்பான காலகட்டத்தில் கிடைத்தது என்று சொல்லியிருந்தார். அந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது மோர்லாந்து, ‘திருவாளர் வின்சென்டின் இந்திய வரலாறு குறித்த மேதமை மிகவும் அதிகம். எந்தக் கேள்விகளும் எழுப்பப்படவில்லையென்றால் அவருடைய கூற்றுகள் எல்லாமே பள்ளிக்கூடப் பாடங்களில் வரலாறாக இடம்பெற்றுவிடும். அப்படியான தவறு நடந்துவிடுவதற்கு முன்பாக, அந்தக் கூற்றுதொடர்பாக நாம் கூடுதல் ஆய்வு செய்தாகவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். அதன் பிறகு, ஸ்மித்தின் கருத்து பள்ளிப் பாட புத்தகத்தில் இடம்பெறாமல் தடுக்க மோர்லாந்து தானே அந்த ஆய்வை மேற்கொள்ள முன்வந்தார்.
நோக்கம் எதுவாக இருந்தாலும் சர் பிலிப் ஹெர்டாக் காந்தியின் இந்தக் கூற்றைத் தவறென்று நிரூபிக்க முயன்றார். ஜோசப் பைன் கருத்துரைகள் 1935-36க்காக யுனிவர்சிட்டி ஆஃப் லண்டன் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷனில் ‘சம் ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியன் எஜுகேஷன் : பாஸ்ட் அண்ட் பிரசண்ட்’ ( கடந்த கால மற்றும் நிகழ்கால இந்திய கல்வியின் சில அம்சங்கள்) என்ற தலைப்பில் 3 கட்டுரைகள் எழுதினார். அந்தக் கருத்துரையுடன் மூன்று மெமோரண்டாக்களையும் வெளியிட்டார்: 1. கடந்த நூறு ஆண்டுகளில் இந்தியப் பள்ளிகள் மற்றும் கல்வி தொடர்பான புள்ளிவிவரங்கள் மீதான குறிப்பு.2. வங்காளம் மற்றும் பிகாரில் 1835-38 காலகட்டத்தில் பிராந்தியக்கல்வி தொடர்பான ஆடம்மின் அறிக்கை மற்றும் லட்சம் பள்ளிகள் என்ற புனைவு பற்றிய குறிப்பு. 3. பஞ்சாபில் 1849-82 காலகட்டத்தில் கல்வி தொடர்பான டாக்டர் ஜி.டபிள்யூ லெய்(ட்)னரின் அறிக்கை.
1939 வாக்கில் இந்தக் கட்டுரைகள் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தலைப்பில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை பிரஸினால் வெளியிடப்பட்டன. மெமோராண்டம் 1-ல் ஏ.டி.கேம்பல் அனுப்பிய பெல்லாரி மாவட்டம் தொடர்பான தகவல்களை அடிப்படையாக வைத்து தாமஸ் மன்ரோவின் கணக்கீட்டை ஹெர்டாக் கேள்விக்குட்படுத்தினார். ‘பள்ளியில் படித்த ஆண்களின் எண்ணிக்கை கால் பாகம் அல்ல மூன்றில் ஒரு பங்கு’ என்று மன்ரோ குறிப்பிட்டிருப்பதைக் கேள்விக்குட்படுத்தினார். மன்ரோவின் கூற்று மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம். கேம்பெல் அளவுக்கு கலெக்டர்கள் கல்வி விஷயத்தில் அதிக அக்கறையெடுத்துச் செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.
மன்ரோ, எல்ஃபின்ஸ்டன், பெனெடிக் ஆகியோர் அந்த மூன்று பிரஸிடென்ஸியில் நடவடிக்கை எடுக்கும்வரையில் பிரிட்டிஷ் அரசாங்கம் தொடக்கக் கல்வியைப் புறக்கணித்துவிட்டிருந்தது. ஆனால், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஒன்றை அழிக்க எந்த முயற்சியும் எடுத்திருக்கவில்லை என்று அவர் அந்த மெமோரண்டத்தை முடிக்கிறார். அடிக்குறிப்பில் அவர் மேலும் கூறுகையில், கிரேட் பிரிட்டனில்கூட 1833 வாக்கில் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் 30,000 பவுண்ட்கள்தான் கல்விக்கு ஒதுக்கியிருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார். பல்வேறு இந்திய பிரமுகர்களைப் புகழ்ந்து பேசியுமிருக்கிறார். இந்தியா ‘மிகவும் புராதனம் மற்றும் அதி நவீனம்’ ஆகிய இரண்டின் கலவை என்றும் புகழ்ந்து கூறியிருக்கிறார்.
இந்திய பாரம்பரிய தொடக்கக் கல்வி அமைப்பை பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டு அழித்தது; அந்தப் பள்ளிகள் மூலம் கிடைத்திருக்கக்கூடிய அறிவையும் அழித்தது என்று இந்தியாவில் அடிக்கடிச் சொல்லப்படும் குற்றச்சாட்டைக் சுட்டிக்காட்டியபடி முன்னுரையில் அவர் சொல்கிறார் : ‘ராயல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இண்டர்நேஷனல் அஃபயர்ஸில் திரு காந்தி பேசியபோது, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தனது வலுவான ஆதரவைத் தெரிவித்தார். முடிந்தால் அதை மறுத்துப் பார்க்கும்படியும் தெரிவித்தார். எனவேதான் அந்தத் தகவல்களை விரிவாக மறு பரிசீலனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது’.
சர் ஃபிலிப் ஹெர்டாக் மிகுந்த கல்விப் புலமையும் அனுபவமும் கொண்டவர்தான். எனினும் கற்பனை வளமும் வரலாறு குறித்த புரிதலும் அவருக்கு மிகவும் குறைவே. 1939க்கு முந்தைய பிரிட்டனின் கோட்பாடுகளுக்கு உண்மையாக நடந்துகொள்ளும் விருப்பம் கொண்டிருந்தார். அவருடைய யூதப் பின்னணி இப்படியான ஒரு பார்வை உருவாகக் காரணமாக இருந்திருக்கலாம். எது காரணமாக இருந்தாலும் சரி, காந்தியடிகளும் வேறு பலரும் கூறியதுபோல் இந்தியாவில் மேலான கல்வி வசதிகள் 18-19-ம் நூற்றாண்டுகளில் இருந்ததாகச் சொல்வதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவை அவருக்கு நம்பத்தகுந்தவையாக இல்லை. 125 வருடங்களுக்கு முன்பாக வில்லியம் வில்பர்போர்ஸுக்கும் அப்படித்தான் இருந்தது. கிறிஸ்தவத்தின் அருள் இல்லாமல் ஹிந்துக்கள் நாகரிகமடைந்தவர்களாக இருக்கமுடியும் என்பதை அவராலும் நம்பவோ ஏற்கவோ முடிந்திருக்கவில்லை. வில்பர் போர்ஸின் காலகட்டத்தில் பெரும்பாலான பிரிட்டிஷ் அதிகாரிகள், அறிஞர்களுக்கும் இதே மனநிலைதான் இருந்தது. எனவே, ஹெர்டாக், எட்வர்ட் தாம்சன் அவருக்கு முன்னால் டபிள்யூ ஆடமுக்கும் சில மதராஸ் பிரஸிடென்ஸி கலெக்டர்களுக்கும் இந்திய கல்விஅமைப்பு குறிப்பிடும்படியான அளவுக்கு அதில் ஒன்றுமில்லை. பண்படுத்தப்படாத அதில் இருப்பதாகச் சொல்லப்படுபவை எல்லாமே அவர்களால் மிகையாகச் சொல்லப்படுபவையே என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
காந்தியடிகளின் கூற்று நீங்கலாக வேறு இரண்டு விஷயங்கள் பிலிப் ஹெர்டாக் மீது எதிர்மறையான உணர்வைத் தோற்றுவித்திருந்தன. முதலாவது முன்பே நாம் சொன்ன ஜி.டபிள்யூ லெய்(ட்)னரின் அறிக்கை. இரண்டாவது அவரை மிகவும் வேதனையுறச் செய்தது, ‘உடனடி எதிர்காலம் பற்றி என்ன சொல்லவிருக்கிறோம்?’ இந்த அடிப்படையில்ஒரு ஆர்வம் மிகுந்த க்வாக்கர் மத பிரசாரகர் புதிய ஆட்சியின்போது (அதாவது பிரிட்டிஷ் காலகட்டத்துக்குப் பிறகு) கல்வித்துறையில் ஒரு எதிர் சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அது மேற்கத்தியமயமானதாக இருக்காது. கிழக்கத்தியமயமானதாகவே இருக்கும். அப்போது இந்தியா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அதைவிடவும் பழமையான காலகட்டத்துக்குத் திரும்பிச் செல்லும். அப்போது எந்தக் கலாசாரத்திடமிருந்தும் எதையும் பெற்றுக்கொள்ளாமல் உலகுக்குக் குறிப்பாக ஆசியாவுக்கு தன்னுடைய வளமான சிந்தனைகளைத் தந்த காலகட்டம் அது’. மத பிரசாரகர் ஒருவரின் இப்படியான நல்லெண்ண யூகம் பிலிப் ஹெர்டாக்கை மலைக்க வைத்தது. மேற்கத்திய உலகின் பாதையில் இந்தியாவைத் தள்ளிக்கொண்டு செல்வதன் மூலமே தார்மிகரீதியிலும் அறிவார்ந்த ரீதியிலும் இந்தியாவை முன்னேற்ற முடியும் என்று ஹெர்டாகுக்கு முந்தைய ஐரோப்பியர்கள் நம்பியதுபோலவே அவரும் நம்பியிருந்தார். அவருடைய நம்பிக்கை மீது இந்தக் கருத்து பெரும் இடியாக விழுந்தது.
இந்த விவாதத்தைத் தொடங்கியது காந்தி என்பதால் ஹெர்டாக் தனது பதிலின் ஒரு நகலை காந்திக்கும் அனுப்பினார். ‘நீங்கள் கூறிய கூற்றை நிரூபிக்கும் வகையில் எந்தவொரு ஆதாரமும் கிடைத்திருக்கவில்லை என்பதை நீங்கள் கூர்ந்து கவனித்தால் தெரிந்துகொள்ள முடியும். எனவே, நீங்கள் உங்களுடைய கூற்றைப் பின் வாங்கிக் கொள்வதே சரி’ என்று அதில் தெரிவித்திருந்தார்.
சில மாதங்கள் கழித்து காந்திஜி பதில் எழுதினார். அது ஓர் அருமையான பதிலின் அனைத்து அம்சங்களையும் கொண்டதாக இருந்தது. பிரிட்டிஷாருக்கு முந்தைய இந்தியாவில் கல்வி எப்படி இருந்தது என்பது தொடர்பான என் தேடலை நான் இன்னும் விட்டுவிடவில்லை. நான் பல்வேறு கல்வியாளர்களுடன் இது தொடர்பான உரையாடலில் இருக்கிறேன். எனக்கு பதில் எழுதியவர்கள் அனைவருமே நான் சொன்னது சரி என்றே சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஏற்றுக்கொள்ளும்படியான ஆதாரங்களை அவர்களால் தர முடிந்திருக்கவில்லை. என்னுடைய முன் முடிவு அல்லது பாரபட்சமான கூற்று சரி என்றே எனக்கு இப்போதும் தோன்றுகிறது. நான் அதை மறுத்து ஹரிஜனில் எதையும் எழுத வேண்டியதில்லை. என் மனத்தில் இருக்கும் கூற்றை நீங்கள் கேள்விக்குட்படுத்தி வீழ்த்திவிட்டதாக நினைக்கவேண்டாம்.
காந்திஜியைப் பொறுத்தவரையில் அந்த உரையாடல் அதோடு முடிந்துவிட்டது. ஆனால், 1939 செப் 10 அன்று ஹெர்டாக் காந்திக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். ஐரோப்பாவில் நடக்கும் சண்டைதொடர்பான காந்தியின் கருத்து வெளியான பிறகு அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
‘டைம்ஸ்’ பத்திரிகையில் வைஸ்ராயுடனான உங்கள் உரையாடலைப் பார்த்தேன். சமீபத்திய போர் தொடர்பாக நீங்கள் சொன்னதைக் கேட்டு உலகின் பல்வேறு மூலைகளில் இருக்கும் என் சக தேசத்தவர்கள் உங்களுக்கு நன்றி தெரிவிப்பதுபோலவே நானும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
ஹெர்டாக்கின் புத்தகம் வெளியானதைத் தொடர்ந்து இந்திய கல்வி பற்றி உடனடியாக நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டன. ஆடம்மின் அறிக்கையின் முழு வடிவம் கல்கத்தா பல்கலைக்கழகத்தால் மீண்டும் விரிவாக வெளியிடப்பட்டது.1932-ல் கே.டி. ஷா பிலிப் ஹெர்டாகுக்கு எழுதிய கடிதத்தில் என்ன விஷயங்களைச் சொல்லியிருந்தாரோ அதையே இந்த முழு அறிக்கையும் நியாயப்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.