செல்லுலாய்ட் சிறகுகள்

விதியை மாற்றும் விநாடி (Little Accidents)

பால்யத்தில் ஒரு நாள் பஸ் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தோம். அதுவொன்றும் சிக்கலான விளையாட்டு இல்லை. சரடு ஒன்றை எடுத்து இரு நுனிகளையும் ஒரு

வா. மணிகண்டன்

பா
ல்யத்தில் ஒரு நாள் பஸ் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தோம். அதுவொன்றும் சிக்கலான விளையாட்டு இல்லை. சரடு ஒன்றை எடுத்து இரு நுனிகளையும் ஒரு முடிச்சால் இணைத்து அதற்குள் நான்கைந்து பேர் வரிசையாக நின்று கொள்ள வேண்டும். முன்னாடி நின்று கொண்டிருப்பவன் ஓட்டுநர். பின்னாடி நிற்பவன் நடத்துநர். பேருந்து வீதி வீதியாக வரும். ஓட்டுநர் வாயால் ஒலியெழுப்பியபடியே ஓட்டுவான். நடத்துநர் ஆங்காங்கே பயணிகளை ஏற்றியும் இறக்கியும் சிகரெட் அட்டைகளை பயணச்சீட்டாகக் கொடுப்பான். அவ்வளவுதான் விளையாட்டு. அப்படியான ஒரு நாளில் நடத்துநரான எனக்கும் ஓட்டுநரான சரவணனுக்கும் ஏதோ பிரச்னை வந்துவிட்டது. மனஸ்தாபம். குறுக்கு புத்தி வேலை செய்யத் தொடங்கியது. அவன் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென்று நின்றுவிட்டேன். சரடு அறுந்துவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அறுந்துவிட்டது. அவன் கீழே விழவும் மற்றவர்கள் அவன் மீது விழுந்து அமுக்கினார்கள். வெற்றிப் புன்னைகையுடன் நின்று கொண்டிருந்தேன். அந்தச் சந்தோஷம் சில வினாடிகளுக்கு மட்டும்தான். சரவணன் எழுந்திருக்கவேயில்லை. என்னையுமறியாமல் உடல் பதறத் தொடங்கியது. மற்றவர்கள் அவனை எழுப்ப முயன்ற போது கவ்விய பயத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்- அவனுடைய நெற்றி உடைந்து ரத்தம் பெருக்கெடுத்திருந்தது. அந்த அதிர்ச்சியில் அவன் பேச்சு மூச்சில்லாமல் கிடந்தான். மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். என்னால்தான் நடந்தது என்று யாரும் சொல்லவில்லை. உண்மையில் யாருக்குமே காரணம் தெரியாது. ஆனால் அவனது காயத்துக்கு முழுப்பொறுப்பும் நான் தான் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.

நாம் செய்யும் பெரும்பாலான செயல்களில் அதன் விளைவுகளை எதிர்பார்ப்பது இல்லை. நாம் ஒன்று நினைக்க இன்னொன்று நடந்துவிடுகிறது. சரவணன் விவகாரத்திலும் அதுதான் நடந்தது. கயிறு அவன் வயிற்றை இறுக்கும். அது அவனுக்கு வலியுண்டாக்கும் என்றுதான் எதிர்பார்த்தேன். ரஸாபாஸம் ஆகிவிட்டது. சண்டை வரும் போதும் சரி அல்லது வேறு பிரச்சினைகளின் போதும் சரி- நம்முடைய சிறு எதிர்ப்பைத்தான் காட்டுகிறோம். ஆனால் அந்தச் சிறு எதிர்ப்புதான் பல சமயங்களில் மிகப்பெரிய சிக்கல்களைக் கொண்டு வந்துவிட்டு விடுகிறது. அவை எந்தக் காலத்திலும் நிவர்த்தி செய்யவே முடியாத சிக்கல்களாகக் கூட அமைந்துவிடும் போதுதான் காலத்தைத் திரும்பிப்பார்க்கவே மனம் கூசுகிறது.

அப்படியான சிக்கலில் ஒரு பையன் சிக்கிக் கொள்கிறான். பதின்ம வயதில் இருக்கும் பொடியன் அவன். அவனைச் சுற்றி நகரும் கதைதான் Little Accidents படம். அமெரிக்காவின் ஒரு சிறிய நகரம் அது. அந்த ஊரில் ஒரு நிலக்கரிச் சுரங்கம் இருக்கிறது. அந்த ஊரில் நிறைய பேருக்கு அந்தச் சுரங்கம்தான் வாழ்வாதாரம். நிலக்கரிச் சுரங்கத்தில்தான் நம் பொடியனின் அப்பாவும் வேலை செய்கிறார். சுரங்கத்தில் ஒரு விபத்து நிகழ்கிறது. பத்து பணியாளர்கள் இறந்துவிடுகிறார்கள். அதில் பொடியனின் அப்பாவும் ஒருவர். அம்மாவின் தலையில் பாரம் இறங்குகிறது. பொடியனையும் அவனுடைய தம்பியையும் பாதுகாக்கும் பொறுப்பு அது. பொடியன் விவரமானவன்தான் ஆனால் தம்பி சற்று மனவளர்ச்சி குன்றிய குழந்தை. இரண்டு மகன்களையும் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்கிறாள்.

அதே ஊரில் இன்னொரு குடும்பமும் இருக்கிறது. அந்த சுரங்கத்தில் அதிகாரியாகப் பணியாற்றுபவரின் குடும்பம் அது. அவர்களுக்கும் ஒரு மகன் இருக்கிறான். அவனை ஜே.டி என்கிறார்கள். நம் பொடியனின் வயதையொத்தவன். அவர்களது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் கண்ணாடியை யாரோ உடைத்துவிட்டுப் போகிறார்கள். தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்கள் யாராவது விபத்து நடப்பதற்கு இந்த அதிகாரிதான் காரணம் என்று கண்ணாடியை உடைத்திருக்கக் கூடும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். நாமும் அப்படித்தான் நினைக்கிறோம். அதிகாரியின் மகனுக்கு நிறைய நண்பர்கள் உண்டு. ஆனால் அவர்கள் பொடியனை தங்கள் குழாமோடுச் சேர்த்துக் கொள்வதில்லை. பொடியன் வீட்டிலிருந்து பியர் பாட்டில்களையெல்லாம் எடுத்துச் சென்றுக் கொடுக்கிறான். அப்படியாவது தம்மைச் சேர்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறான். ஆனாலும் ரிஸல்ட் பூஜ்ஜியம்தான்.

கதையில் இரண்டு குடும்பங்கள் ஆகிவிட்டதல்லவா? இவர்கள் இரண்டு குடும்பம் தவிர இன்னொரு முக்கியமான பாத்திரமும் உண்டு. விபத்தில் தப்பித்த அமோஸ். அவன் மட்டும்தான் விபத்தில் தப்பித்த ஒரேயொருவன். அவனோடு இருந்த அத்தனை பேரும் இறந்து போய்விடுகிறார்கள். விபத்தைப் பற்றி அதிகாரிகளும் மற்றவர்களும் விசாரிக்கும் போது வாயைத் திறப்பதேயில்லை. தான் எதையாவது உளறி வைத்தால் அது தன்னோடு இறந்து போனவர்களை அவமானப்படுத்திவிடுவது போலாகிவிடும் என்றோ அல்லது ஒருவேளை சுரங்கத்தை மூடிவிட்டால் மற்றவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றோ பயப்படுகிறான். அமோஸுக்கு குடும்பம் எதுவும் இல்லை. வயதான தந்தை மட்டும் இருக்கிறார். மற்றபடி திருமணமாகாத தனிக்கட்டை.

இவர்களை வைத்து ஒரு முக்கோணத்தை வரைகிறார் இயக்குநர். இந்த முக்கோணத்தை வைத்துக் கொண்டு படத்தை அட்டகாசமாக்கியிருக்கிறார் சாரா. அவர்தான் இயக்குநர் - அவருக்கு இது முதல் படம்.

படத்தின் தொடக்கத்தில் சுரங்க விபத்து குறித்தான குறிப்புகள் வரும்போது அதுதான் படத்தின் முக்கியமான திருப்பமாக இருக்கும் என்று யோசிக்கச் செய்கிறார்கள். ஆனால் படத்தின் முக்கியத் திருப்பம் என்பது சுரங்க விபத்து இல்லை. படத்தில் இடம்பெற்றிருக்கும் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் ஏதாவதொருவிதத்தில் மனரீதியிலான அழுத்தத்தை உருவாக்குகிறது என்கிற வகையில் அந்த முக்கியமான நிகழ்வு. அவ்வளவுதான்.

அப்படியென்றால் எது முக்கியமான திருப்பம்? பியர் பாட்டிலைக் கொண்டு வந்து நண்பர்களுக்கு பொடியன் கொடுக்கிறான் அல்லவா? அந்த தினம்தான். அப்பொழுது பொடியனின் தம்பியும் வீட்டிலிருந்து கிளம்பி கூடவே வருகிறான். இவனிடம் பியரை வாங்கிக் குடிக்கும் சக நண்பர்கள் ஒரு பெண்ணைத் தேடிச் செல்வதாகச் சொல்லிவிட்டு பொடியனை மட்டும் கழட்டி விட்டுச் செல்கிறார்கள். பொடியன் பயங்கரக் கடுப்பில் இருக்கிறான். எல்லோரும் சென்றுவிட்ட பிறகு சில கணங்களில் அந்த அதிகாரியின் மகன் மட்டும் திரும்ப அதே இடத்துக்குத்தான் வருகிறான். அவன் என்னவோ பியர் பாட்டிலைத் தேடித்தான் வருகிறான். ஆனால் பொடியனுக்கும் அவனுக்கும் வாய்த் தகராறு முற்றிவிடுகிறது. ‘உங்கள் அப்பாவினால்தான் சுரங்க விபத்து நடந்தது’ என்றும் அதை மறுத்தும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இந்த இடத்தில்தான் அந்த எதிர்பாராத விபத்து நிகழ்கிறது. பொடியன் ஒரு கல்லை எடுத்து வீச அதிகாரியின் மகன் பேச்சு மூச்சில்லாமல் விழுந்துவிடுகிறான். சரவணன் மாதிரி இல்லாமல் உயிரையும் விட்டுவிடுகிறான். பொடியன் சமயோசிதமாகச் செயல்படுகிறான். மரங்கள் அடர்ந்த அந்தக் காட்டுப்பகுதிக்குள் பிணத்தை மறைத்துவிட்டு தம்பியை அழைத்துச் செல்கிறான். தம்பியின் வாயை அடைக்க வேண்டுமல்லவா? சாக்லேட் வாங்கித் தருவதாகக் கெஞ்சியும், மிரட்டியும் சமாளிக்கிறான்.

அதே சமயம் அந்த அதிகாரியின் குடும்பத்தினர் போலீஸாரின் உதவியுடன் மகனைக் காணவில்லை என்றுதான் தேடத் தொடங்குகிறார்கள். ஆனால் அவனைப் பற்றிய எந்தத் தடயமும் இல்லாதது அவர்களுக்கு கடும் மன அழுத்தத்தை உருவாக்குகிறது. இதில் இன்னொரு பிரச்னையும் அந்த அதிகாரிக்கு வந்து சேர்கிறது. நடந்த சுரங்க விபத்தில் தொழிற்சாலை அவனை பகடைக் காயாக்குகிறது. அவனுக்கு அலுவலகத்திலும் பிரச்னை; மனைவியின் துக்கமும் பிரச்னை; தன் மகன் இல்லாததும் வேதனை. நொந்து போகிறான். இவன் அலுவலகத்தின் பிரச்னைகளோடு போராடத் தொடங்கும் போது அவனுடைய மனைவி தன்னுடைய துக்கங்களுக்கு வடிகால் இல்லாமல் தவித்துப் போகிறாள். சுரங்க விபத்தில் உயிர் தப்பித்த அமோஸ் அவளை பைபிள் வகுப்புக்கு அழைக்கிறான். அவன் இன்னமும் மருத்துவ சிகிச்சையில்தான் இருக்கிறான். கை, கால்கள் சரியாக இயங்குவதில்லை. அவனும் ஆறுதல் தேடும் மனநிலையில்தான் பைபிள் வகுப்புகளுக்குச் செல்கிறான். ஆக, இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அமோஸூக்கும் அதிகாரியின் மனைவிக்குமிடையே காதல் அரும்புகிறது. அது காமத்தோடு மலர்கிறது. அதை வெறும் காமம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. சக மனித மனத்திடம் இன்னொரு மனித மனம் தேடும் ஆறுதல்.

இது ஒரு தனியான ட்ராக்கில் சென்று கொண்டிருக்கும் போது தான் செய்த கொலையை மனதுக்குள் புதைத்துக் கொண்ட பொடியன் அதிகாரியின் வீட்டில் பகுதி நேர வேலைகளைச் செய்கிறான். அவனாக விருப்பப்பட்டுத்தான் அந்த வீட்டுக்கு வருகிறான். தோட்டத்தை சீராக்குவதுதான் அவனுடைய முக்கியமான வேலை. அடிக்கடி வந்து போகிறவன் அந்தக் குடும்பத்தின் அன்பையும் வலியையும் புரிந்து கொள்ளத் தொடங்குகிறான். அவனுடைய குற்றவுணர்ச்சி அழுத்துகிறது. அவனுடைய தம்பிக்கும் அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் தங்களது பிரச்னையை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பாத்திரங்களைச் செதுக்கியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த உலகில் யாருக்குத்தான் பிரச்னையில்லை? ஆனால் ஆளாளுக்கு வெவ்வேறு பிரச்னைகள். ஆனால் இந்தப் பாத்திரங்களுக்கு ஒரு சம்பவம்தான் பிரச்னை. அது உருவாக்கும் அழுத்தங்கள்தான் சிக்கல். இந்தப் பிரச்னைக்கான வடிகால் எதுவும் இருக்கிறதா என்று தேடலில் படம் முடிகிறது.

மிகச் சாதாரணமாகத்தான் படத்தை பார்க்கத் துவங்கினேன். ஆனால் இது சாதாரணமாக பார்க்கக் கூடிய படமில்லை. ஒரு மிகப்பெரிய அழுத்தம்- படத்தின் அத்தனை பாத்திரங்களின் மீதும் அந்த அழுத்தம்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த அழுத்தம்தான் அத்தனை பேருடைய வாழ்க்கைப் போக்கையும் நிர்ணயிக்கிறது. அதை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், சூழல்களுடன் எப்படி தோற்றுப் போகிறார்கள் என்பதையெல்லாம் தத்ரூபமாக்கியிருக்கிறார்கள். இவ்வளவு வலிமையான கருவை எடுத்துக் கொண்டு அதைக் கதையாகவும் திரைக்கதையாகவும் நடிப்பாகவும் மாற்றுவது சாதாரணக் காரியமாகத் தெரியவில்லை. ஆனால் அதை இந்தப் படத்தில் சாதித்திருக்கிறார்கள். I love it!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

2 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழில் இருக்கும் ஒற்றுமை தெலுங்கில் இல்லை: தமன்

விநாயகன் - மம்மூட்டி மோதல்: ரூ.75 கோடியை தாண்டிய களம்காவல்!

முருகனுக்கு வெந்நீர் அபிஷேகம்!

SCROLL FOR NEXT