12. 'இரண்டு ரிசர்வ் பாங்குகள்' எனக்கு மட்டும்!
நடிகையர் திலகத்தின் இல்லற வசந்தத்தில் இனிமையான சில ஏடுகள்: "அவரிடம் எனக்குப் பிடிக்காதது ஞாபக மறதி. 'சாவித்ரி கரெக்டா ஆறு
நடிகையர் திலகத்தின் இல்லற வசந்தத்தில் இனிமையான சில ஏடுகள்:
"அவரிடம் எனக்குப் பிடிக்காதது ஞாபக மறதி. 'சாவித்ரி கரெக்டா ஆறு மணிக்கு இங்கு இருப்பேன் ரெடியா இரு. என் தலையைப் பார்த்ததும் கண்ணாடி முன் நின்று சிங்காரித்துக் கொள்ள ஆரம்பித்து விடாதே. டைம் ஈஸ் பிரிஷியஸ்: காலம் பொன்னானது. என்பார். இப்படிச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாரே என்று நானும் தயாராகக் காத்திருப்பேன். வாசலையே பார்த்திருப்பேன். நேரம் ஓடுமே தவிர வரமாட்டார்.
அப்பாடி என்று சோர்ந்து போவேன். சாவித்ரி நான் என்ன சொல்வது? யார் யாரோ வந்துட்டாங்க. உனக்கு கொடுத்த ப்ரொகிராமை மறந்துட்டேன். சரி சரி இப்ப மணி ஏழா அட 60 நிமிஷம் லேட் கம் ஆன் கிளம்பு என்பார்.
சும்மா சொல்லக் கூடாது கோபத்தில் கூட நீ அவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா என்று தமாஷ் பண்ணி என்னைச் சிரிக்க வைத்து விடுவார். நான் கோபிப்பதா, சிரிப்பதா, அழுவதா?
சாப்பாட்டில் ரொம்பவும் லிமிட்டாக இருப்பார். அவியல் என்றால் உயிர். அதுவும் சேனைக் கிழங்கும் இருந்து விட்டால் உண்ணும் அளவை அன்று நிச்சயம் தளர்த்தி விடுவார்.
'சாவித்ரி ஏன் இதை செய்தே! பார் இப்போது நான் மூச்சு விட முடியாமல் திண்டாடுவதை' என்பார். முன்பெல்லாம் இனிப்பு அதிகம் சாப்பிடுவார். கேட்டால் 'வாழ்க்கை ஸ்வீட்டாக இருக்க வேண்டாமா' என்பார்.
இந்துஸ்தானி, கர்நாடக சங்கீதம் இரண்டும் ரொம்பவும் பிடிக்கும். வீட்டில் இருக்கும் போது ஏதாவது ராகத்தை ஆலாபனை செய்து கொண்டிருப்பார். கர்நாடக சங்கீதத்தில் அவருக்கு மோகம் அதிகம். அது அடிக்கடி வெளிப்படும்.
'ராம சிலுக ஒகடி பந்து பிரேம மாட' என்ற தியாக ராஜரின் கீர்த்தனையின் ஒரே அடியை மீண்டும் மீண்டும் பாடுவார். எனக்கு ஆத்திரம் வரும்.
'கீறல் விழுந்த கிராமஃபோன் மாதிரி மேலே நகராதா என்றால், 'உனக்குப் பிடிக்கலியா, அப்ப வேற பாட்டு' என்று 'என்ன ராம கான ராம பஜன' என அதே பாடலின் முதலடியைப் பாட ஆரம்பித்து விடுவார். 'ரிகார்ட் பிளேயர் ஒன்று தானே! விதவிதமாகப் பாடல் எப்படிவரும்' என்பார் சிரித்தவாறே. இம்மாதிரி சாமர்த்தியமாகப் பேசி எதிராளியைக் கைக்குள் போட்டுக் கொள்வதில் சமர்த்தர்.
சினிமாக்களில் வரும் காஸ்ட்யூமை மட்டும் அவர் தேர்ந்தெடுப்பார். மற்றபடி அவர் அணியும் அன்றாட ஆடைகளை நாங்கள் இருவருமே தேர்வு செய்வோம். வீட்டில் இருக்கும் போது வெள்ளை நிற பைஜாமா ஜிப்பா. வெளியே போகும் போது லைட் கலர் சூட் அணிவதை விரும்புவார். நான் அதிகம் தேர்வு செய்வது வெண்மை மற்றும் நீலவண்ண சேலைகள்.
'எனக்கென்ன கவலை பில் பற்றி? இந்தியாவுக்கு ஒன்றுதான். ஆனால் எனக்கு மட்டும் இரண்டு ரிசர்வ் பாங்குகள் என்பார்.' என்னைக் குறிப்பிட்டு.
பெஸரட் தோசை தொட்டுக் கொள்ள கோங்குரா சட்னி, சுடச் சுட பாயசம் எனக்கு விருப்பமான அயிட்டங்கள்.
கொஞ்சமா சாதத்தைத் தட்டில் போட்டு, அதைப் பிசைஞ்சு நிறைய மோர் விட்டு அதிகக் காரமான ஆவக்காய் ஊறுகாயை அதனோடு சேர்த்து மறுபடியும் கொள கொளன்னு ஆக்கி, தட்டைத் தூக்கிப் பிடிச்சு அப்படியே குழந்தைங்க மாதிரி, சப்பு கொட்டி குடிக்கறது எனக்கு ரொம்ப இஷ்டம். சாகவாசமாக வீட்டில் நான் சாப்பிடற ஸ்டைல் அது.
ஆனா அவருக்கோ காரம்னாலே ஆகாது. என்னை அடிக்கடி கேலி செய்வார்.
'உன் வீட்டுக்கு வந்தா சிகப்புப் பட்டை மிளகாயைத் தவிர என்ன கிடைக்கும்னு' கேட்பார். எனக்கு கோபம் வந்துடும். அவரோ பிராமின். அதுவும் அவங்க அம்மா ரொம்ப ஆர்த்தடாக்ஸ் வேறே.
'உங்க ஆத்துல பொடலங்காயும் பூசணிக்காயும் தவிர என்ன போடுவீங்க?ன்னு வெடுக் வெடுக்னு கேட்டுடுவேன். அதுக்கு அவர் கோபிக்கவே மாட்டார். குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார். என் கண்ணுல தண்ணி வந்துடும்.
வேகமாக கார் ஓட்டுவதும், மல்லிகை மணமும், கோடைக்கானல் ஏரியின் அழகும் அவரது ரசனையின் அடையாளங்கள்.
புத்தகங்களைக் கடவுளாக மதித்து மிகுந்த எச்சரிக்கையாகக் கையாள்வார். அவரது பெயரைக் கூட நூல்களில் எழுதி வைக்க மாட்டார். எச்சில் தொட்டுப் பக்கங்களைப் புரட்டுவதோ, மூலைகளை மடித்துக் காகிதங்களைப் பாழாக்குவதோ, அழுக்காக வைத்திருப்பதோ அவருக்குச் சுத்தமாகப் பிடிக்காது.
ஆங்கிலத்தில் ஷெர்லாக் ஹோம்ஸ், சார்லஸ் டிக்கன்ஸ், தமிழில் பாரதியார், கல்கி, புதுமைப்பித்தன் எழுத்துக்களை விரும்பி வாசிப்பார். துப்பறியும் நாவல்கள் அவரை முகம் சுளிக்க வைக்கும்.
அணில் பழம் சாப்பிடும் அழகும், பல்லி, எட்டு கால் பூச்சியைப் பிடிக்கும் லாவகமும் என்னை ஆச்சரியப்படுத்தும். தவளையைக் கண்டால் பயம் எனக்கு.
தமிழ் வருஷப் பிறப்பு, யுகாதி, தீபாவளி, பொங்கல், ஜனவரி 4 ஆம் தேதி (என் பிறந்த நாள்) இந்த ஐந்து தினங்களையும் மறக்க மாட்டார். என்னை அழைத்துச் சென்று பட்டுப்புடைவைகளை வாங்கிக் கொடுப்பார்.
எனக்குப் புடைவைப் பைத்தியம். புடைவை வியாபாரிகளை அம்மாவை போய்ப் பாருங்கள் எனச் சொல்லி அனுப்பி வைப்பார். ஓய்வில் சினிமா, பீச் , நண்பர்கள் வீடு என்று போவோம்.
ஆங்கில சினிமாக்களுக்கும் நாங்கள் நடிக்காத மற்ற மூவிகளுக்கும் போவோம். இங்கிலீஷ் ஃபிலிம்களைப் பார்க்கும் போது, 'ஆஹா! இந்த ரோல் பிரமாதம். இதே மாதிரி ஒரு வேஷம் உனக்குக் கிடைத்தால் பிரமாதமா செஞ்சிடுவே' என்பார்.
சூசன் ஹோவர்ட் நடித்த ஐ வான்ட் டூ லீவ். குடியினால் விளையும் கேடுகளை விளக்கும் பெண்களின் கதை. அப்புறம் சோபியா லாரன் நடித்த டூ விமன்.
அதே போல் நானும் சொல்வேன். நார்த் பை நார்த் வெஸ்ட், பெக்கெட் முதலியவற்றைப் பார்த்து விட்டு இம்மாதிரி வேஷங்களை உங்களுக்குக் கொடுக்கக் கூடாதா என்பேன்.
அவர் நடித்து எனக்கு மிகவும் பிடித்தவை மீண்ட சொர்க்கம், கல்யாணப் பரிசு, சுமை தாங்கி, ராமு.
நான் நடித்தவற்றில் அவருக்குப் பிடித்தது சிலரகு மிகிலேதி, மூகமனசுலு, தட்டுங்கள் திறக்கப்படும் எல்லாம் உனக்காக.'
வீட்டில் இருக்கும் போது நானும் பாடுவேன். 'நாத தனு மனிசம்' என்ற தியாகராஜர் கீர்த்தனை மிகவும் பிடிக்கும்.உதடுகள் அதையே அடிக்கடி அசை போடும்.
மங்கையர்க்கரசி படத்தில் பி.யூ. சின்னப்பா, சித்தரஞ்சனி ராகத்தில் அமைந்த அதே கீர்த்தனையை 'காதல் கனி ரசமே' என்று பாடியிருப்பார். அதையும் நான் விரும்புவேன்.
சிறிது காலம் வீணை வாசிக்கவும் கற்றுக் கொண்டேன். இப்போது வாசிப்பது நின்று விட்டது. வீணை அலங்காரப் பொருளாகி விட்டது.
பணம் என்பது அளவோடு இருப்பது நல்லது. பொதுவாக நான் கதையை மட்டும் கேட்டு விட்டு நடித்து விடுவேன். சம்பளத்தில் விவகாரமே எனக்கு வராது. தயாரிப்பாளர்களிடம் பேரம் பேசி பணம் வாங்கியது கிடையாது. கண்டித்துக் கேட்கவும் தெரியாது. அவர்களாகக் கொடுத்தால் தான் உண்டு. அதைப் பயன்படுத்திக் கொண்டு என்னை ஏமாற்றியவர்கள் ஏராளம்!
ஹபிபுல்லா சாலை இல்லம் மார்ச் 1958ல் கட்டியது. பெரியப்பாதான் பிளான் போட்டுக் கொடுத்தார். ஆனால் நான் தனிக்குடித்தனம் போவதற்குக் குடும்பத்தில் எதிர்ப்பு இருந்தது. யாரும் ஒத்துழைக்கவில்லை. நானே பிடிவாதமாக முன்னின்று கட்டினேன்.
லன்ச் டைமில் கட்டட வேலை நடக்கும் இடத்துக்கு வந்து மேற்பார்வை செய்து விட்டுப் போவேன். அலங்கார விளக்குகள் அறைகளின் அமைப்பு எல்லாம் என் விருப்பம்.
எனக்கு பூஜை செய்வதில் அளவு கடந்த பிரேமை உண்டு. கோவிலைப் போலவே ஒரு பூஜா மண்டபம் கட்டுவதற்கென்று தனியாகத் திட்டம் போட்டு நிர்மாணித்தோம். ஆர்ட் டைரக்டர் சேகர் வரைபடம் போட்டுத் தந்தார்.
வீணை வித்வான் எஸ். பாலசந்தர் வீட்டில் சரஸ்வதி தேவிக்கு மண்டபம் அமைத்திருந்தார். படி ஏறி மேலே போகும் போது நவக்கிரங்கள், சிற்ப வேலைகள் உடைய கதவுகள் எனப் பிரமாதமாகத் தோன்றியது. அந்த அம்சங்களை கூடிய வரையில் நானும் அமைத்துக் கொண்டேன்.
கோயிலைப் போலவே உள்ளே கர்ப்பக் கிரஹம் உண்டு. உள்ளே உட்கார்ந்து பூஜை செய்யும் வசதிகள் இருந்தன. தினமும் ஒரு சாஸ்திரிகள் வந்து போவார். முக்கியமான பண்டிகை நாள்களில் நானும் தீபாராதனையில் கலந்து கொள்வேன்.
நவராத்திரி என்றால் வீட்டில் விசேஷமாக இருக்கும். சத்யநாராயண விரதம், வரலட்சுமி விரதம் எல்லாவற்றையும் சிறப்பாகக் கொண்டாடுவேன்.
சினிமாக்களில் அமைதியான குடும்பப் பெண்ணாக நடித்து நல்ல பெயர் வாங்கியதற்கு, என்னுடைய இந்த தெய்வ பக்தியும் ஒரு முக்கியமான காரணம் என்றே நினைக்கிறேன்.
மேக் அப்பை கலைத்து விட்டு வீட்டுக்கு வந்த பிறகும் கூட நாம் நடித்தது சரியா, இன்னும் நன்றாக நடித்திருக்கலாமோ என்று எண்ணிக் கொள்வேன். கிடைத்த நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளத்தக்க படங்கள் அப்போது தொடர்ந்து வந்தன. வருஷத்துக்கு நாலு படமாவது எனக்கு அற்புதமான வேடத்துடன் கிடைத்தது.
அன்னையின் ஆணை, கை கொடுத்த தெய்வம், பாசமலர், தேவதாஸ், மிஸ்ஸியம்மா போன்றவையில் எனக்கு அருமையான கதாபாத்திரங்கள். அது மட்டுமல்ல. அந்தக் கதைகளே மிக நன்றாக இருந்தன. ஒரே ஒரு கேரக்டர் மட்டுமே சிறப்பாக இருந்தால் அந்த சினிமா எடுபடாது.
என் மகன் சதீஷ் பத்து மாத கைக் குழந்தை. அவனோட முழு பெயர் ஸ்ரீராம் நாராயண் சதீஷ் குமார். அவங்க அப்பா பெயர் மாதிரியே மிக நீளமா இருக்கா. ஓ! உங்களுக்கு அவன் அப்பாவோட ஃபுல் நேம் தெரியாது இல்லையா. ஜெமினி கணேஷ்கு அவங்க தாத்தா வைத்த பெயர் 'கணபதி சுப்ரமணிய சர்மா'. ஆனால் செல்லமா அப்புன்னு கூப்பிடுவாங்களாம். தவமா தவமிருந்து வரப்பிரசாதமா பிறந்ததால் அவருக்கு பிச்சைன்னு இன்னொரு பெயரும் உண்டாம்.
ஒரே பையன் தானே அவனைச் செல்லம் கொடுத்து, சாவித்ரி வளர்ப்பாளோ என்று நீங்கள் யூகித்தால் அது தவறுதான். என் மகனை நான் ஆரம்பம் முதல் கண்டிப்புடனும் கட்டுப்பாடுடனும் வளர்க்கப் போகிறேன்.
இவங்க அப்பா, அவங்க அம்மாவுக்கு ஒரே பிள்ளை. அவர் அவங்க அம்மாவிடம் இருந்ததைப் போல இவனும் என்னிடம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது என் ஆசைக்கனவு அல்ல. என் கவலை.
சிவாஜி, எஸ். வி. ரங்காராவ், கே. பாலாஜி,ஏவிஎம். ராஜன், அஞ்சலிதேவி, பத்மினி, ராகினி, எம்.என். ராஜம், ஜமுனா,மனோரமா, புஷ்பலதா, ஆகியோர் கலந்து கொள்ள மூன்று வயது வரை விஜியின் பிறந்த நாள் விழாவை விமரிசையாகக் கொண்டாடினோம்.
நல்ல மனைவி, நல்ல நடிகை, நல்ல தாய், என்கிற வரிசையில் நல்ல டைரக்டர் என்று பெயர் எடுக்கவே எனக்கு ஆசை.' சாவித்ரி.
நடிப்பதற்கு மூட் தேவை என்றெல்லாம் சிலர் பேசுகிறார்களே அதெல்லாம் சாவித்ரிக்கு முன் தூசு. தோழிகளுடன் செட்டில் சிரிக்க சிரிக்கப் பேசிக் கொண்டு இருப்பார். ஷாட் ரெடி என அழைத்ததும் மிடுக்குடன் எழுந்து சென்று நடிப்பதோ சோகப் பாத்திரம்.
ஒரு நிமிடத்தில் கேரக்டராகவே மாறி விடுவார். எப்பாடு பட்டாவது அவரது கண்ணீரைத் துடைக்க முடியாதோ என்று தோன்றுமளவுக்கு அதி அற்புதமாக நடித்துத் திரும்புவார். அழுகை தத்ருபமாக அமைந்த சமயங்களில் மயக்கமடைந்து விழுவார். அவருக்கு சுய நினைவு திரும்ப கூடுதல் நேரமானதும் உண்டு.
தனக்கு வரும் டெலிபோன்களுக்கு அவரே பதில் சொல்வார். மல்லிகைப் பூ என்றால் சாவித்ரிக்கு கொள்ளை ஆசை. ஷூட்டிங் இல்லாவிட்டால் பூக்கள் கட்டியே பொழுதைக் கழிப்பார். அவரது விரல்களின் லாவகம் பிரமிக்க வைக்கும். மிக வேக வேகமாகக் கட்டி முடிப்பார். நாக்கினால் உதடுகளைத் தடவி ஈரப்படுத்திக் கொள்வது சாவித்ரி ஸ்டைல்.
வண்ண வண்ண பூக்கள் போட்ட சிங்கப்பூர் நைலக்ஸ் சேலைகளைப் பார்த்தவுடன் வாங்கிக் குவிப்பார். நகைகளும் அப்படியே.
வீம்பும் பிடிவாதமும் சாவித்ரியிடம் தேவைக்குச் சற்று அதிகமாகவே காணப்படும். தோட்டக் கலையில் ஆர்வமும் மோகமும் நிறைய. நடிப்புக் கலையை வளர்த்ததில் மட்டும் அல்ல. காய்கறி, கனிகளை உண்டாக்குவதிலும் ஏராளமான பரிசு கோப்பைகளை வென்றவர். விதைகள் வாங்குவதற்கென்றே பெங்களூர் செல்வார். தப்பித் தவறி கூட தன்னால் பிறரை விட நன்றாக நடிக்க முடியும் என்று சாவித்ரி சொல்லியது கிடையாது. பருமனான பின் நடிக்க வாய்ப்பு இல்லை என ஏங்கியவரும் அல்ல.
சாவித்ரி முதன் முதலில் தாய்மைபேறு அடைந்த நேரம். அவரது தாயார் மைசூருக்குச் சென்று திரும்பினார். மகளுக்கு சுகப் பிரசவமாகிப் பெண் பிறந்தால், சாமூண்டீஸ்வரி அம்மனின் பெயரையே குழந்தைக்கு வைப்பதாக வேண்டிக் கொண்டார்.
நடிகையர் திலகம் சினிமாவில் பேரும் புகழும் பெற முதுகெலும்பாக நின்று காத்தது நாகிரெட்டியின் விஜயா வாஹினி நிறுவனம். நன்றி மறவாதவர் சாவித்ரி. தன் மகளின் பெயருக்கு முன்னதாக விஜயாவை சேர்த்து விஜய சாமூண்டீஸ்வரி என அழைத்தார். காலப் போக்கில் அது செல்லமாக விஜயாவாகவே நிலைத்து விட்டது.
திருப்பதி பெருமாளின் பக்தை சாவித்ரி. பாலாஜியிடம் வேண்டிக் கொண்ட படி மகன் சதீஷ் பிறந்ததும், ஏழுமலைகளில் ஏறி நடந்தே சென்று வேங்கடவனை தரிசித்துத் திரும்பினார்.