பாசமலரின் தாக்கம் தமிழ் சமுதாயத்தில் வேரோடி நின்றது. ராஜசேகரன் போன்ற அண்ணனுக்காக தங்கைகளும், ராதா மாதிரியான சகோதரிக்காக அண்ணன்களும் கோடிக்கணக்கில் ஏங்கினர். பாசமலரின் புகழும், வெற்றியும், வசூலும், ஓட்டமும் தமிழ்த் திரையில் சீனப் பெருஞ்சுவராக நிலை பெற்று விட்டது.
‘தேன் நிலவு’அவுட்டோர் முடிந்து, ஜெமினியும் சாவித்ரியும் சென்னை திரும்பினர்.
மறுநாள் காலை. தி.நகர். ஹபிபுல்லா சாலை. சாவித்ரியின் பங்களா வாசலில் விஐபிகளின் கார்கள் அணி வகுத்தன. அனைத்து ஜில்லாக்களிலிருந்தும் விநியோகஸ்தர்கள், பட முதலாளிகள், குடும்ப நண்பர்கள், ரசிகர்கள் என்று உற்சாக உற்சவம்!
சாவித்ரி மாத்திரம் மவுனமாக வாழ்த்துகள், பூங்கொத்துகள், பாராட்டுகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார். அவருக்குள் ஒரு போராட்டம். அதற்குக் காரணம் மூட்டை மூட்டையாகக் குவிந்திருந்த ரசிகர் கடிதங்கள். அவை ஒவ்வொன்றிலும் ஆனந்தக் கண்ணீரின் தடங்கள். தனது அபிமானிகளால் நடிகையர் திலகம் அடைந்த நெகிழ்ச்சிக்கும் அதிர்ச்சிக்கும் அளவே கிடையாது.
சாவித்ரியின் விசிறிகள் புதிய முடிவுக்கு வந்திருந்தனர். அதை மனம் திறந்த மடல்களின் மூலம் தெரியப்படுத்தினர். அதில் காணப்பட்ட முக்கிய விவரம் கோலிவுட்டின் வணிகத்துக்கே வேட்டு வைத்தது. அதை சாவித்ரி மிக சாமர்த்தியமாகக் கையாண்டார். அந்நிகழ்வை சகலருக்கும் விவரமாகத் தெரிவித்து விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார். சாவித்ரியின் இருதயத்திலிருந்து அன்று நடந்தவை இன்று உங்களுக்காக-
‘நானும் அவரும் தனிக்குடித்தனம் சென்ற நேரம். ஜெமினியிடம், நீங்கள் சம்மதித்தால் நான் பிற நடிகர்களுடன் நடிப்பேன். இல்லையானால் உங்களுடன் மட்டுமே நடிக்கிறேன்’ என்றேன். அதற்கு கணேஷ், ‘உன்னுடைய நடிப்புக்கும், கலையார்வத்துக்கும் நான் ஒரு போதும் தடையாக நிற்க மாட்டேன். நீ பல நடிகர்களுடன் நடித்து, உன் பெயரையும் புகழையும் உயர்த்திக் கொள்ள வேண்டும். மாறுபட்டப் பல திறமை கொண்ட எண்ணற்றக் கலைஞர்களுடன் நடிக்கும்போதுதான் உன்னுடைய நடிப்புத்திறனும் வளரும். வெவ்வேறு வேடங்களில் உன்னுடைய சாமர்த்தியம் வெளிப்பட வாய்ப்பும் அதிகரிக்கும். அதனால் நீ தாராளமாக மற்ற ஹீரோக்களுடன் நடிக்கலாம்’ என்று பெருந்தன்மையுடன் வாழ்த்தி நல்ல வழியை அமைத்துக் கொடுத்தார்.
ஆனால் பாசமலர் ரிலீசுக்குப் பின்பு தமிழக மக்கள் எனக்கு இட்ட அன்புக் கட்டளை, ஆசை உத்தரவு -
‘நான் அவருடன் மட்டுமே ஜோடியாக நடிக்க வேண்டுமாம். இனி சிவாஜியுடன் சேர்ந்து நடிக்கக் கூடாதாம்...’
எனக்கு ரசிகர்கள் விதித்த வேண்டுகோளை எங்களின் நலம் விரும்பிகளிடம் காட்டினேன். அதை முழுதாக வாசித்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
‘சிவாஜியின் சிறந்த நடிப்புக்கு ஈடு கட்டும் முறையில் உணர்ச்சியுடன் நடிக்கக் கூடிய நடிகை நீங்கள் ஒருவரே என்பது எங்கள் திடமான முடிவு. நீங்கள் சிவாஜியுடன் தொடர்ந்து நடிக்கத்தான் வேண்டும். இந்தச் சிறந்த வாய்ப்பை உங்களின் விசிறிகள் உணராமல் எழுதி இருக்கலாம். அதனால் நடிப்பின் சிகரத்தை எட்டும் அருமையானப் படங்களைப் பார்த்து ரசிக்கும் பாக்யத்தை அவர்கள் இழக்கத் தயாராக இருக்கலாம். ஆனால் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்’ என்றார்கள்.
‘சமீபத்தில் ஒரு பாராட்டு விழாவில் நான், அவர், சிவாஜி அண்ணா மூவரும் கலந்து கொண்டோம். எனக்கு வரவேற்பாளர் பொறுப்பு. மைக்கின் முன்னால் நின்று கொண்டு, ‘விருது பெற்றவர்களைப் பாராட்டி, இப்போது அண்ணா சிவாஜி கணேசன் பேசுவார்கள்...’ என்றேன். எனது உறவு முறையை கவனித்த ஜனங்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அடுத்து பேச இருந்தவர் என்னுடைய அவர்!
அர்த்தமில்லாத குரலில், மென்று விழுங்கியவாறு தொண்டையைச் சரிப்படுத்தி, அடுத்த படியாக அவர்... அவர்... என்று இழுத்துக் கொண்டே போகையில் என் நிலைமையைப் புரிந்து கொண்ட கூட்டத்தினர் கொல்லென்று சிரித்தனர். அவரை எப்படி அழைப்பது என்று தவித்துக் கொண்டிருந்ததால், அவர்களது அட்டகாசத்தை ரசிக்க இயலவில்லை.
அவரும் புன்னகைத்தபடியே மைக்கைப் பற்றினார். அவரைப் பேச விடாமல் ரசிகர்களின் அமர்க்களம் தொடர்ந்தது. இப்படியொரு இன்ப சங்கடத்தில் சிக்கி விட்டோமே... என்னை கேலி செய்கிறார்களே... என்று எனக்கு வெட்கமாகி விட்டது.
அடுத்த நாள் பத்திரிகைகளில் என் தடுமாற்றமே தலைப்புச் செய்தி. ’அண்ணாவும் அவரும்’ என்று புது டைட்டிலில் நகைச்சுவையுடன் எழுதினர்.
அண்ணன் சிவாஜி கணேசன் எனக் குறிப்பிட்ட சாவித்ரி, ஜெமினி கணேசனையும் பெயர் சோல்லியே அழைத்திருக்கலாமே... என்று தர்க்க சாஸ்திரமே செய்து விட்டனர். அதைப் படித்தவுடன் எனக்கு என்னவோ போல் இருந்தது.
கணேசன் என்று வெறுமனே கூறினால் எந்த கணேசன் என்று கேள்விக்குறியைப் போடுவார்கள். ஏனென்றால் அவர்கள் இருவருக்கும் பெருமை சேர்ப்பது சிவாஜி, ஜெமினி என்கிறப் பட்டங்கள். நாம் பட்டப் பெயர்களுக்குக் கொடுக்கும் மதிப்பை உண்மைப் பெயர்களுக்குத் தருவதில்லை.
நான் என் கணவருக்கு மனைவி மட்டுமல்ல. நல்லதொரு ரசிகையும் கூட. ஆகவே நானும் ரசிகர்களைப் போலவே, ‘ஜெமினி’ என்றப் பட்டப்பெயருக்கு ஒரு மரியாதை கொடுத்தேன், என்று எண்ணிக் கொள்ளட்டுமே.
சபைகளில் ‘சிவாஜியை அண்ணா என்று அழைக்கிறீர்களே...’ அப்படியானால் அவருக்குக் காதலியாக ஏன் நடிக்கிறீர்கள்? அண்ணன்-தங்கை இருவரும் காதலர்களாக நடித்தால் ஒப்புக் கொள்ள முடியுமா என்று என்னைக் கேட்கிறார்கள். ரசிகர்களின் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதா? இல்லவே இல்லை.
‘வாழ்க்கை வேறு. நடிப்பு வேறு- என்பது புரியாததால் வந்த வினை அது.’
பல ஆண்டுகளுக்கு முன்னர், வி. சாந்தாராமின் பிரபாத் டாக்கீஸ் தயாரித்த ‘சீதா கல்யாணம்’ படத்தில் ஒரு குடும்பமே நடித்தது. உடன் பிறந்த அண்ணனும் தங்கையும் ராமனாகவும் சீதாவாகவும் நடித்திருக்கிறார்களே...! (வீணை எஸ். பாலச்சந்தரின் சகோதர சகோதரிகள்)
அண்ணா சிவாஜியுடன் நான் இணைந்து நடித்த படங்களில் பல வெற்றி பெற்றிருக்கின்றன. வணங்காமுடியில் நானும் அண்ணன் சிவாஜியும் சந்திக்கும் முதல் கட்டம்,
காத்தவராயனில் ‘நித்திரை இல்லையடி சகியே என்று நான் முடிக்க, ‘எனதாசை வனிதா மணி’ என்று அண்ணன் பாடிக் கொண்டு வருவது...
அன்னையின் ஆணையில் அண்ணாவின் மார்பை நான் நகங்களால் பிராண்ட, அவர் கைத்துண்டால் என் முகத்தில் அடிப்பது போன்ற காட்சிகளைப் புகழ்ந்து எழுதாத பத்திரிகைகளே கிடையாதே!
அத்தகையச் சிறப்புகள் என்னை வந்து சேர சிவாஜி அண்ணன் மாத்திரமே காரணம். நான் சிவாஜி அண்ணனோடு நடிக்கும் போது யார் ஸ்டுடியோவில் முதலில் இருப்பது என்று எங்களுக்குள் பலத்த போட்டி இருக்கும். நடிப்பை ஒரு கலையாகவே கற்றுக் கொண்டவர் சிவாஜி. அவருடன் நடிக்க ஆரம்பித்தால் நமக்கும் நடிப்பில் வேகம் வந்துவிடும். பந்தயம் போட்டுக் கொண்டு நடிக்கத் தோன்றும்.
‘நடிக்கலாம். ஆனால் அது நடிப்பு என்பதை மறந்து, உணர்ச்சி வசப்பட்டு நடிக்கக் கூடாது.’ என்று அண்ணன் அடிக்கடி சொல்லுவார்.
‘அன்னையின் ஆணை’ படத்தில் அவர், அப்படியொரு சீனில் என்னை மேல் துண்டினால் அடித்து விடுவது போல நடிக்க வேண்டும். நான் ஓவராக நடித்து விட்டேன். அக்காட்சியை மீண்டும் எடுக்க வேண்டி வந்தது.
‘பார்த்தாயா... ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுவிட்டாய். நான் உன்னை ரெண்டாவது தடவையாக அடிக்க வேண்டி வந்துவிட்டது.’ என்று என்னைப் பரிகாசம் செய்தார் சிவாஜி.
‘ஒரு படிப்பினையை அதை விட வேறு யாராலும் கற்றுக் கொடுத்து இருக்க முடியாது.’ இதையெல்லாம் நான் ஏன் கூறுகிறேன் என்றால், நடிகர் நடிகைகளின் நிஜ வாழ்வு உறவு முறைகளைப் பார்த்து சினிமாக்களில் வேடங்களில் அமைவது கிடையாது.
‘ஒரு நடிகைக்கு வேண்டியது தொழிலில் ஏற்படும் புகழ்தானே...? அதை இழந்து விடு என்று கூறலாமா...?’
‘மனம் போல் மாங்கல்யம், ‘மிஸ்ஸியம்மா, ‘பிரேம பாசம், ‘பெண்ணின் பெருமை’, ‘யார் பையன்?’, ‘களத்தூர் கண்ணம்மா’, போன்ற படங்களில் நான் அவருடன் நடித்து இருக்கிறேன். அவைகளின் வெற்றி நாடறியும்!
நானும் அவரும் கணவன் மனைவி என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.
‘அவரும் அண்ணாவும் எனது இரண்டு கண்கள்.’
என் மகள் விஜய சாமூண்டீஸ்வரி அவரை அப்பா என்று அன்புடன் அழைப்பது போல, என் அண்ணாவையும் மாமா என்று பிரியத்துடன் கூப்பிடுகிறாள்.
என்னுடைய படங்களை தியேட்டருக்குச் சென்று பார்ப்பது வழக்கம். மக்கள் எப்படி ரசிக்கிறார்கள். எந்தெந்தக் காட்சிகளை எவ்வாறு பாராட்டுகிறார்கள்...! எவ்விதம் என் நடிப்பு அவர்களைக் கவர்ந்திருக்கிறது, எங்கு என்னென்ன தப்புப் பண்ணியிருக்கிறோம்... என்பதையெல்லாம் கூர்ந்து கவனிப்பேன். ஓர் ஆர்ட்டிஸ்டின் வெற்றிக்கு உற்று நோக்குதல் மிக முக்கியம். ஆனால் ரிலீஸ் அன்று போக மாட்டேன். கூட்டம் என்றால் எனக்குப் போகவே பிடிக்காது.
பாசமலருக்குப் பின் நானும் சிவாஜியும் காதலர்களாக நடித்த எல்லாம் உனக்காக வெளியானது. ஆனால் உடனடியாக வெற்றி பெறவில்லை. அப்புறம் தனியாக நன்றாக ஓடியது.’
எட்டே ஆண்டுகளில் விரைவாக சாவித்ரி சதம் அடித்தார். 1962 தைத் திருநாளில் ‘கொஞ்சும் சலங்கை’ அவரது 100 வது படமாக வெளிவந்தது. எம்.வி. ராமனின் இயக்கத்தில் மிக நீண்ட காலம் பைனான்ஸ் பிரச்சனையால் முடங்கிக் கிடந்தது. பின்னர் தேவி பிலிம்ஸார்( சென்னை தேவி திரை அரங்க உரிமையாளர்கள்) கொஞ்சும் சலங்கையை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.
பொதுவாக வருடக் கணக்கில் பெட்டிக்குள் இருக்கும் படங்கள் ரிலிசில் தோல்வியைத் தழுவும். கொஞ்சும் சலங்கை அதை உடைத்து மகத்தான வெற்றி பெற்றது. பெர்லின் பட விழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதுவரையில் சாவித்ரிக்குப் பின்னணி பாடியவர்கள் எம்.எஸ். ராஜேஸ்வரி, ஜிக்கி, பி. லீலா, பி.சுசிலா ஆகியோர். ஆனால் ‘சிங்கார வேலனே தேவா’ முதன் முதலாக எஸ். ஜானகியின் குரலில் ஒலித்தது. அவரை உலகப் புகழுக்கு உள்ளாக்கியது.
இன்னொரு சுவாரஸ்யம்! சிலுக்கு சாவித்ரி பைத்தியம். சாவித்ரியைப் போல் நடிகையர் திலகமாக வேண்டும் என்கிற வெறியில் வெள்ளித்திரையில் முகம் காட்டியவர். கலை உலகம் அவரது அழகை மட்டுமே ஆராதித்தது. சிலுக்கு அவிழ்த்து எறிந்த ஆடைகளில் தமிழ் சினிமா தனது மானத்தை மறைத்துக் கொண்டது. சிலுக்கின் சிறப்புத் தேன் கிண்ணம் விவிதபாரதியில் இடம் பெற்றது. அதில் அவர் தனக்குப் பிடித்த முதல் பாடலாக ஒலிபரப்பியது ‘சிங்கார வேலனே தேவா’. காரணம் அவர் எஸ். ஜானகி ரசிகையும் கூட.
‘சிங்கார வேலா பாட்டை நானும் காருக்குறிச்சி அருணாச்சலமும் தனித்தனியே பாடினோம் என்றால், ஆச்சரியமாக இருக்கும். முதலில் நாதஸ்வரத்தில் வாசிக்கச் சொல்லி ரெக்கார்டு செய்து விட்டார்கள். பிறகு வெறொரு நாள் நான், அவர் வாசித்ததைக் கேட்டுக் கொண்டே அந்தச் சுருதிக்கும், நயத்துக்கும் குழைவுக்கும் ஏற்ப அப்படியேப் பாடினேன்.
நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் லட்சக் கணக்கான ரசிகர்கள், நாங்கள் சேர்ந்து பாடியதைக் கேட்டு மகிழ்ந்தார்கள். ஆனால் நாங்கள் இருவரும் நேரில் பார்த்துக்கொண்டதே இல்லை. படம் ரிலீசாகி ஒன்றரை வருஷத்துக்குப் பிறகு ஒரு நாள் பம்பாய் ஷண்முகானந்தா சபாவில் முதல் முறையாகவும் கடைசியாகவும் சந்தித்துக்கொண்டோம்.’ - எஸ். ஜானகி. ( ஆன ந்த விகடன் 10.5.1964)
மற்ற நடிகைகள் வசனம் பேசுவதும், பாடலுக்கு வாய் அசைப்பதும் கொஞ்சம் மிகையாக இருக்கும். ஆனால் சாவித்ரி மாதிரி இயல்பாக, அவர் பாடுவது போலவே இதழ் மீட்டுபவர்கள் இன்று வரையில் யாரும் கிடையாது. அதிலும் ‘சிங்கார வேலனே தேவா’ மாதிரியான பக்தியும் காதலும் வெளிப்படும் அபூர்வமானதொரு இசைக் கலவையில் சாவித்ரியின் பங்களிப்பு சிரஞ்சீவி சரித்திரம்!
தமிழ்க் காற்று வீசும் வீதியெங்கும் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் கலப்படமற்ற கர்நாடக இசைச்சாரல் ‘சிங்கார வேலனே தேவா’வில் பொழிந்தது. பாடலுக்கு முன்னால் வரும் காதல் வசனத்தைக் கேட்க கேட்க இன்றும் சுகம் பெருகும்.
‘சாந்தா! உட்கார்!
ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்?
உன் இசை என்ற இன்ப வெள்ளத்தில்
நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை
ஏமாற்றாதே சாந்தா!’
‘என் இசை உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்...’
‘தேனோடு கலந்த தெள்ளமுது!
கோல நிலவோடு கலந்த குளிர் தென்றல்!
இந்தச் சிங்கார வேலன் சந்நிதியிலே,
நமது சங்கீத அருவிகள் ஒன்று கலக்கட்டும்.
பாடு! பாடு சாந்தா! பாடு!’
சிங்கார வேலனாக ஜெமினி கணேசனும், வள்ளியாக சாவித்ரியும் கனவுக் காட்சியில் தோன்றினார்கள். ஆனால் திரைக்கு வந்த போது ஏனோ அதை வெட்டி விட்டார்கள்.
வீர தீரம் நிறைந்த எம்.ஜி.ஆர். படமோ என போஸ்டர்கள் எதிர்பார்ப்பை உண்டாக்கின. முழு நீள ஆக்ஷன் மற்றும் கவர்ச்சி ஹீரோவாக ஆர்.எஸ்.மனோகருடன் மோதினார் காதல் மன்னன். நாதஸ்வர வித்வானாகவும் கைத்தட்டல்களைப் பெற்றார்.
டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தயாராகி வெளிவரும் தகுதி பெற்ற பிரம்மாண்ட வண்ணச் சித்திரம் கொஞ்சும் சலங்கை. 1960க்கு முன்பே 40 லட்சம் செலவில் உருவானது. தமிழ் நாட்டுக் கலாசாரம், சங்கீதம், நடனம், நாகஸ்வர இசை ஆகியனவற்றை முத்து மணிகளாகக் கொண்ட ராஜா ராணிக் கதை. தீப்பற்றி எரியும் அரக்கு மாளிகையில் நடக்கும் கத்திச் சண்டைகள் இன்றைக்கும் ரசிகர்களை மெய் மறக்கச் செய்யும். நடிகையர் திலகத்துக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்த்தது கொஞ்சும் சலங்கை.
கொடைக்கானல் நீர் வீழ்ச்சிகளிலும், ஆற்றிலும், செங்குத்தான மலை உச்சிகளிலும் அபாயகரமான இடங்களிலெல்லாம் ஜெமினி-சாவித்ரி ரிஸ்க் எடுத்து தைரியமாக நடித்தார்கள். சாவித்ரி நிஜ வாழ்க்கையிலும் மிகத் துணிச்சலானவர். டூப் ஏதும் தேவைப்படாமல் உயிரைப் பணயம் வைத்து நீர்ச் சுழல்களில் நீந்தினார். நூறு அடி மலை உச்சியிலிருந்து, பெரிய பாறாங்கல் சாவித்ரி மீது விழ இருந்தது. மயிரிழையில் பிழைத்தார் சாவித்ரி.
சிவாஜி - சாவித்ரி ஜோடியாக நடிக்காவிட்டாலும் மறக்க முடியாத 100 நாள் படமாக அமைந்தது படித்தால் மட்டும் போதுமா. 1962 தமிழ்ப் புத்தாண்டு வெளியீடு. ‘கோடையில் சாவித்ரியின் நடிப்பு குளுமை’ எனப் பத்திரிகைகள் பாராட்டி எழுதின.
சாவித்ரிக்கு ஏற்ற விதத்தில் அவர் நடிப்பதற்காக ஜெயகாந்தன் திரைக்கதை அமைத்துத் தந்திருக்கிறார்.
சிவாஜி, எம்.ஜி.ஆருக்கு இணையாக நடிகையர் திலகமும், அவர் நடிக்கும் படங்களின் கதைகளை தேர்வு செய்யும் மாபெரும் நட்சத்திர அந்தஸ்தில் இருந்தவர். அவ்வாறு அரியணை ஏறிய முதல் துருவ நட்சத்திரம் சாவித்ரி!
அந்நிகழ்வு ஜெயகாந்தனின் இரவல் சொற்களில்:
‘இன்றைக்கு நீங்கள் இன்னொரு வங்காளப் படத்தைப் பார்க்க வேண்டும். ஜெமினி கணேசன், சாவித்ரி ஆகியோர் பார்க்க வருகிறார்கள். நீங்களும் அவசியம் வந்து பார்க்க வேண்டும் என்று என்னை அழைத்தார்கள்.
படத்திற்கான கதையைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அக்காலத்தில் நடிகை சாவித்ரிக்குப் பெரிய பொறுப்பு இருந்தது போலும். சாவித்ரி அன்று மாலை அந்தப் படத்தை ஒரு மினி தியேட்டரில் பார்க்க வந்தார். ஜெமினியும் வந்து இருந்தார்.
இந்த வங்காளப்படத்தில் கதாநாயகிக்கு இரட்டை வேடம். ஒரு நடிகைக்கு அப்படிப்பட்ட கதைகள் அதிகம் பிடிக்கும் என்கிற விஷயத்தை நானும் அறிந்து கொண்டேன். ஒரு பிரபல நடிகையும் நடிகரும் பார்த்து ஒரு கதையை சிலாகித்து விட்டால் அனேகமாய் தயாரிப்பாளர்களின் எண்ணமும் அவர்களோடே இயைந்து போகும் என்பதும் எனக்குப் புரிந்தது.
எழும்பூரில் என் வீட்டுக்கு எதிரில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த உடுப்பி ஹோமில் ஓர் அறையை எடுத்துக் கொண்டு நான் வங்காளிப் படத்தைத் தழுவி எழுதித் தந்தது காத்திருந்த கண்கள் என்ற பெயரில் தயாராயிற்று. அதை ரிலிசுக்கு முன் தயாரிப்பாளர்கள் என்னையும் அழைத்துத் திரையிட்டுக் காட்டினார்கள்.’
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.