முகப்பு
கனவுக்கன்னிகள்

சாவித்ரி- 6. கோகிலாவும் பாஞ்சாலியும்

'காத்திருந்த கண்கள்’ சாவித்ரிக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் மிகப் பெரிய நடிப்புப் புதையல். நிஜ வாழ்க்கையில் சாவித்ரியின் நவ நாகரிகத் தோற்றமும், ஜெமினியோடு போட்டி போட்டுக் கொண்டு வேகமாகக் காரில் பறக்கும்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

'காத்திருந்த கண்கள்’ சாவித்ரிக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் மிகப் பெரிய நடிப்புப் புதையல். நிஜ வாழ்க்கையில் சாவித்ரியின் நவ நாகரிகத் தோற்றமும், ஜெமினியோடு போட்டி போட்டுக் கொண்டு வேகமாகக் காரில்  பறக்கும் அட்டகாசமும், நித்திய  நட்சத்திரப்  புத்துணர்வும், ஸ்டைலான பியானோ வாசிப்பும் மேட்டுக்குடிப் பெண் லலிதாவாவை பிரதிபலித்தன.

சினிமாவில் வழக்கமாகக் கிடைக்கும் அமைதியான குடும்பப்பாங்கான, துடைப்பத்துடன் வீடு கூட்டும் 'செண்பகமாக’  இன்னொரு சாவித்ரி. இரட்டையர்  நடிப்பில் நடிகையர் திலகம் காட்டிய வர்ணஜாலங்கள் அதைத் தயாரித்த வசுமதி பிக்சர்ஸூக்கு வசூலை வாரி வழங்கியது. எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையும்,  கண்ணதாசனின் ‘காற்றடித்தால் தலை சாயும்,  ஓடம் நதியினிலே, பார் என்றது பருவம்,  வளர்ந்த கலை, கண் படுமே  போன்று தேனொழுகும் அர்த்த புஷ்டியுள்ள ஒவ்வொரு பாடலும் சாவித்ரிக்கு வெற்றிப் படிக்கட்டுகளாகி உதவின.

சாவித்ரியைத் தொடர்ந்து சரோஜா தேவி, தேவிகா, கே.ஆர். விஜயா, ஜெயலலிதா ஆகியோர் இரட்டை வேடங்களில் நடிக்கும் ட்ரென்ட் செட்டர் படமாக காத்திருந்த கண்கள் அமைந்தது. சானல்களில் சாவித்ரி வாரத்தில் நிச்சயம் இடம்பெறும் சிறந்த படம் 'காத்திருந்த கண்கள்’. 'காதலர்கள் பாகத்தில் கணேஷ் தம்பதிகளின் நடிப்பில் முன்னைக்கு இப்போது பழகப் பழகப் பால் இனிக்கிறது. உச்சக்கட்டக் காட்சிகளில் சாவித்ரியின் நடிப்பில் நல்ல செறிவு இருக்கிறது.’ என  குமுதம் பாராட்டியது.


நடிகையர் திலகத்தின் உருக்கமான நடிப்பில் பாசமலர் வந்திருக்காவிட்டால், சாவித்ரியின் மார்க்கெட்சதம் அடித்த பூரிப்போடு முற்றுப் பெற்றிருக்கும். அடுத்தப் பத்து ஆண்டுகளுக்கு நீடித்திருக்காது. என்ன இது...  இப்படிச் சொல்கிறேனே... என்று திகைக்காதீர்கள். வருடத்துக்கு டஜன் கணக்கில் நடித்து கலைப் பாதையில் சாவித்ரி களைத்துப் போனார்.1959ல்  ஏ.பி. நாகராஜனின் 'வடிவுக்கு வளைகாப்பு’ தயாரிப்பில் இருந்தது. அதில் சாவித்ரி-சிவாஜி ஜோடி. சினிமா டைட்டில் போலவே நிஜமாகவே சாவித்ரி தலைப்பிரசவத்தைச் சந்திக்க வேண்டிய தருணம் அது. அவர் நினைத்தவாறு முழு வீச்சில் நடிக்க முடியாமல் வடிவு முடங்கிப் போனது. சரோஜா தேவி புதுமலராக வாசம் வீசி மூவேந்தர்களின் மனத்தைக் களவாடிய பொழுது. சினிமா வணிக உலகம். சிவாஜி, ஏ.பி. நாகராஜனிடம் 'வடிவுக்கு வளைகாப்பில் சாவித்ரியை நீக்கி விட்டு சரோவை நடிக்க வைக்கலாம்’ என்றார். ஆனால் ஏ.பி. என். சம்மதிக்கவில்லை. அவரது இயக்கத்தில் சாவித்ரிக்கு அது முதல் படம். 'சாவித்ரி பிள்ளை பெற்று வரும் வரையில் காத்திருக்கிறேன்’ என சிவாஜியின் யோசனையை ஏற்க மறுத்து விட்டார். 1962  ஜூலையில் மூன்று ஆண்டுகள் கடந்து வடிவுக்கு வளைகாப்பு வெளியானது.

குழந்தை பெற்ற நாயகிகளை தமிழர்கள் கனவுக்கன்னியாக எண்ணிக் கொண்டாட மாட்டார்கள். அது ரசிக தர்மமும் அல்ல. கல்யாணப் பரிசு, முதலாளி போன்ற விழா கொண்டாடி விருது பெற்ற படங்களின் மூலம் தென்னகத்துக்கு த்ரி ரோசஸ் ஆக  சரோஜாதேவி, தேவிகா, விஜயகுமாரி ஆகியோர்  அகப்பட்டார்கள். அதிலும் சரோ...!  தனித்து முழு மெஜாரிட்டியோடு கோலிவுட்டில் ஆட்சி அமைத்தவர். ஸ்ரீதர், பீம்சிங், இருவரும் இம்மூவருக்கும் தொடர்ந்து கொடுத்த ஏற்றம் சாவித்ரிக்கு சரிவை ஏற்படுத்தியது.

ஸ்ரீதரின் இயக்கத்தில் ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான், ஏ. பீம்சிங்கின்  பட்டதாரி, எஸ். பாலசந்தரின் பெண் பாவம் பொல்லாதது, ஏ.சுப்பாராவின் நடமாடும் தெய்வம்  உள்ளிட்ட சினிமாக்கள் சிவாஜி- சாவித்ரி நடித்து  ஆரம்ப நிலையிலேயே நின்று விட்டன. ஒரு வேளை ஒழுங்காக அவை வெளி வந்திருந்தால் நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் இன்னமும் புதிய உயரங்களுக்கு நிச்சயம் சென்றிருப்பார்கள். ஸ்ரீதரும் சாவித்ரியும் இணைந்து பணியாற்ற இருந்த மற்ற படங்கள் கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், கொடிமலர் ஆகியன. அவை ஒவ்வொன்றிலும் சாவித்ரிக்குப் பிடித்தமான வேடங்கள் அமைந்தன. குறிப்பாக கொடிமலரின் ஊமை நாயகியை சாவித்ரி பெரிதும் விரும்பினார். ஆனால் அந்த அதிர்ஷ்டம் விஜயகுமாரிக்கு அமைந்தது. 'பாவ மன்னிப்பில் சாவித்ரி நடிப்பு பாராட்டுகிறாற் போல் இல்லை. மின்ன வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு ஒளியூட்டியிருப்பது தேவிகாவுக்குத்தான்.’ என்று பட்டவர்த்தனமாகத் தன் விமர்சனத்தில் போட்டு உடைத்தது குமுதம்.



பந்த பாசம், பரிசு, கர்ணன்  ஆகிய படங்களிலும் சாவித்ரியின் ஆற்றலுக்கேற்ற வேலை கிடையாது. பாத காணிக்கையில் விஜயகுமாரி மேல் அனுதாபம் கூடியது. 'கற்பகம்’ சினிமாவில் டைட்டில் தொடங்கி, கதா பாத்திரம், விளம்பரம், எல்லாவற்றிலும் சாவித்ரி இரண்டாம் பட்சமாகத் தோன்றினார்.  தோழமைக்காகவும் நன்றிக்கடனுக்காகவும் சாவித்ரி விட்டுக் கொடுக்க வேண்டி வந்தது.

1962க்குப் பின்னர் பீம்சிங், சாவித்ரிக்கு  வாய்ப்பு தரவில்லை. மிக விரைவாகப்  பொற்காலம் படைத்தவர்கள்  சீக்கிரத்தில் பிரிந்து விட்டார்கள். 'பதிபக்தி’யில் தொடங்கி  பா’ வரிசையில்  வெற்றி அலைகளாகத் தவழ்ந்து  ’பந்த பாசத்தோடு’ ஓய்ந்து போனது சிநேக சாஹரம். அதற்காக சாவித்ரிக்கு பீம்சிங் மீது வருத்தம் கிடையாது. மாறாக எப்போதும் போல் பீம்சிங் மீது அன்பைப் பொழிந்தது சாவித்ரியின் குழந்தை உள்ளம்!

'எதற்கும் பீம்சிங் அலட்டிக் கொள்ள மாட்டார். நேரில் பார்க்கும் போது இவரா அந்தப் புகழ் பெற்ற டைரக்டர் என்பது போல அவ்வளவு எளிமையான தோற்றம். ஆர்ட்டிஸ்டுகளுக்கு அருகில் வந்து மெதுவான குரலில் யோசனைகள் சொல்வார். தனது அட்வைஸ் பிறர் காதுகளில் விழுந்தால் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் வருத்தப்படுவார்களே என்று நினைப்பார். அப்படியொரு மென்மையான உள்ளம் பீம்சிங்குக்கு. 'பதிபக்தி’ சினிமாவில் 'சின்னஞ்சிறு கண் மலர்’ பாடல் காட்சி.

பின்னணியில் பாட்டு, அதற்கேற்றவாறு என் உதட்டசைவு, முகத்தில் தாய்ப்பாசம், கையில் குழந்தையோடு நடக்கும் பாவனை எல்லாம் ஒருசேர நன்றாக அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக,  குழந்தையைக் கைகளில் எடுத்துக் கொண்டு பீம்சிங்கே அதைப்போலப்  பாடி நடந்து காண்பித்தார்.

இருவாட்சி போல் மெலிந்திருந்த சாவித்ரியின் அழகிய இளமை தேகம், மழலையின் சிரிப்பில் பூசணிப் பூ போல் வளமாக உருமாறத் தொடங்கியது. சாவித்ரிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது ரத்தத் திலகம். அவருக்குப் போட்டியாக அதில் இன்னொரு நாயகி நிச்சயமாக இல்லை. படம்  முழுக்க முழுக்க சாவித்ரியின் தனி ஆவர்த்தனம்!

'இப்படியொரு நண்பன் செய்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதிலே குற்றம் என்னுடையதாக இருந்தால் இந்திய மக்கள் என்ன மன்னிக்க வேண்டும்’

அகில இந்திய வானொலியில் பிரதமர் நேரு ஆற்றிய யுத்த உரையை கேட்ட தேசம் குலுங்கியது. தோழனாக நடித்து 1962ல்  துரோகியாக மாறிய சீனா, பண்டித நேருவைப் பதைபதைக்கச் செய்தது. பாரதத்தின் முதுகில் குத்திய சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து, ‘புத்தன் பிறந்த திசையிலே போர்! புனித காந்தி மண்ணிலே போர்!’ என  கோலிவுட்டில்  பரணி பாடினார் கண்ணதாசன். சட்டென்று சுடச்சுட  சினிமா எடுத்து தேச பக்தியை மக்களிடம் ஏற்படுத்தியது கவிஞரின் விரல்.

கண்ணதாசனின் ரத்தத் திலகம் தமிழ்த் திரையின் குறிப்பிடத்தக்க முக்கியமான வெற்றிச் சித்திரம். அன்னையின் ஆணைக்குப் பிறகு சிவாஜியும் சாவித்ரியும் ஜோடி சேர்ந்து, உணர்ச்சிகரமாக போட்டி போட்டு நடித்தப் புரட்சிப் படம்.

சரத் சந்திரரின் கதைகளில் நடித்து முன்னுக்கு வந்த சாவித்ரி, ஷேக்ஸ்பியரின் டெஸ்டிமோனாவாகவும் ரத்தத்திலகத்தில் ஒத்தல்லோ ஒரங்க நாடகத்தில் நடிப்பில்  முத்திரை  பதித்தார். ‘வெகு நாள் கழித்துச் சந்திக்கிறோம். சாவித்ரியின் சீறலையும் சிவாஜியின் கர்ஜனையையும். இருவரும் நெருக்கமாகப் பழகிச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தலைப்பு வெகு பொருத்தம்!’ என்றது குமுதம் வார இதழ்.

காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அந்தஸ்தைப் பெற்று சென்னை திரும்பிய தினம். அன்றைய இரவில் ஏவி.எம். ஸ்டுடியோவில் ரத்தத் திலகம் பார்த்து கண்ணதாசனைப் பாராட்டினார். ‘படம் நீளமாக இருக்கிறதே... ஏன் இதை இரண்டு சினிமாவாகப் பண்ண முடியாதா’ என்று கேட்டாராம் பெருந்தலைவர்.

1963  செப்டெம்பரில் திரைகளில் ஒலிக்க ஆரம்பித்து, ஒவ்வொரு  ஃபேர்வெல்லிலும் ஐம்பத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் - 'பசுமை நிறைந்த நினைவுகளே...!’ பள்ளி, கல்லூரிகளில் இன்னொரு தேசிய கீதமாகவே மாறி விட்டது. சிவாஜி - சாவித்ரி மீண்டும்  ஜோடி சேர்ந்ததன் வெற்றிகரமான அடையாளம் கவிஞரின் ரத்தத் திலகம்!

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் சாவித்ரி நடித்தவை கற்பகம், கை கொடுத்த தெய்வம், ஆயிரம் ரூபாய் ஆகிய படங்கள். குடும்பச் சித்திரங்களில் கே.எஸ்.ஜி. கொடி கட்டிப் பறந்தது போல் வேறு யாரும் வெற்றி அடையவில்லை. மேற்கூறிய மூன்றுமே மாறுபட்ட கேரக்டர்களை சாவித்ரிக்கு வழங்கின. அவரது நடிப்பாற்றலை எவரெஸ்ட் சிகரத்துக்குக் கொண்டு சென்றவை. ஆயிரம் ரூபாயில் மெட்ராஸ் பாஷை பேசியவாறு வீதிகளில், மருதகாசியின் பாடல் வரிகளை

'ஆனாக்க அந்த மடம்  ஆவா காட்டி சந்த மடம்
அதுவும் கூட இல்லாங்காட்டி பிளாட்டுபாரம் சொந்த இடம்’ 

என்று ஆடிப்பாடும் குப்பத்துப் பெண் வள்ளியாக, சாவித்ரி நடித்த விதம் அபாரம். குடிசை வாசலில் பல் விளக்கிக் கொண்டே, 'ஆப்பம் வாங்கி வச்சிக்கிறேன்... துண்ணுட்டுப் போ...’ என்று ஜெமினி கணேசனிடம் அநாயாசமாக அவர் சொல்லும் லாகவம், எத்தனை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் வைத்து நடிப்பைக் கற்றுத் தந்தாலும் யாருக்கும் வராது. காற்றில் பறந்து வந்து கைகளில் சிக்கிக் கொள்ளும், ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு அவர் படும் அவஸ்தைகள் ஒவ்வொன்றும் நவரச நடிப்பில் முனைவர் பட்டத்துக்குத் தகுதி உள்ளவை.

‘ஆடிப் பாடிச் சுமையில்லாமல் சுதந்தரமாக இருக்கும் ஒரு பெண்ணின் இயல்பை, காற்று அளித்த பரிசான ஆயிரம் ரூபாய் நோட்டு எவ்வளவு மாற்றி விடுகிறது என்பதை சாவித்ரி அருமையாகச் சித்தரித்திருக்கிறார். ஆயிரம் ரூபாய் ரசிக்கும்படியாக இருக்கிறது. காரணம் கே.எஸ்.ஜி., கே.எஸ்.ஜி.யாகவும் சாவித்ரி, சாவித்ரியாகவும் இருப்பதுதான்.’  என்று ’குமுதம்’  மெச்சியது. எனக்குத் தெரிந்து மெட்ராஸ் பாஷை பேசி நடித்த முதல் கதாநாயகியாக சாவித்ரியை மட்டுமே நினைக்க முடிகிறது. அதற்கு  முன் 'அபலைஅஞ்சுகம்’ படத்தில் மனோரமா சென்னைத் தமிழில் அற்புதம் செய்திருப்பார்.

சாவித்ரியோடு பணியாற்றிய அனுபவங்களைப் பற்றி கே.எஸ். ஜி.: ‘நடிப்பில் ஒரு சகாப்தத்தை உருவாக்கிய நடிகைகளில் முக்கியமானவர் சாவித்ரி, தனக்கென்று - யாரும் அண்ட முடியாத பெரும் புகழ் பெற்றவர். இந்தக் காட்சியில் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்ற இலக்கணம் கற்றவர். இப்படி எத்தனையோ சிறப்புகளை ஏற்கும் தகுதி பெற்றவர் நடிகையர் திலகம். ஒவ்வொரு காட்சியிலும் அவர் நடிக்கும் போது, எனது கதாபாத்திரமே உருவெடுத்து உலவுவது போன்ற பிரமை எனக்கு ஏற்படும். ‘கை கொடுத்த தெய்வம்’ கதையை சாவித்ரியிடம் நான் சொன்னதும், கள்ளங்கபடமற்ற குழந்தை உள்ளம் படைத்த 'கோகிலா’ பாத்திரம் அவருக்கு மிகமிகப் பிடித்து விட்டது. சாவித்ரி படப்பிடிப்புக்கு வந்த முதல் நாள் என்னிடம் வந்து, 'கே.எஸ்.ஜி. சார்...  குழந்தைத் தனமான இந்த கேரக்டரை நான் எப்படி  நடிக்க வேண்டும் என்று ஒரு கோடிட்டுக் காட்டுங்கள். நான் அதை டெவலப் செய்து கொண்டு நடிக்கிறேன்’ என்றார்.

'குழந்தைத்தனமான வேடத்தை நீ சிறப்புற செய்து விடுவாய் என்ற முழு நம்பிக்கை இருப்பதால் தான் அதற்கு உன்னைத் தேர்ந்தெடுத்தேன். ஆனாலும் நீ கேட்டதற்காக ஒன்றை மட்டும் சொல்கிறேன். குழந்தைகளை நன்றாக கவனித்துப் பார். மழலைகள் அழுதாலும் சரி, சிரித்தாலும் சரி அதன் கண்கள் எப்போதும் திறந்தே இருக்கும்.எனவே நீ அழுதாலும், சிரித்தாலும், ஆத்திரப்பட்டாலும், அமைதியாக இருந்தாலும் கண்களைத் திறந்தவாறே வைத்திருந்தால் கோகிலா கேரக்டர்  முழு வெற்றி பெற்று விடும் என்று கூறினேன்.

சாவித்ரி நான் சொன்ன விளக்கத்தை மனத்தில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் கண்களை அகலத் திறந்தபடியே நடித்தார். கை கொடுத்த தெய்வத்தில் அவர் நடிப்பு அப்பப்பா... அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஒரு கதாசிரியனின்  பாத்திரப்படைப்பு, கலைஞர்களின் நடிப்பாற்றலைக்  கொண்டு கணக்கிடப்படும் போது நாற்பது முதல் அறுபது சதவிகிதம் தான் தேறும் என்பார்கள். ஆனால் கை கொடுத்த தெய்வத்தில் சாவித்ரி நூற்றி ஐம்பது சதவிகிதம் உயர்த்தி விட்டார். அவருக்கு ஈடு அவரே தான்.’

'கோகிலா’ உருவான கதை சாவித்ரியின் தாம்பூலம் தரித்த உதடுகளிலிருந்து : 'கை கொடுத்த தெய்வத்தில்’ என்னுடைய பாத்திரம் ஓர் அபூர்வமான கேரக்டர். வயது வந்த ஒரு பெண் வெகுளியாக வித்தியாசமில்லாமல் பழகுகிறாள். ஆனால் அந்த அப்பாவிப் பெண்ணின் பண்பை உலகம் புரிந்து கொள்ள மறுக்கிறது. இந்தப் பாத்திர அமைப்புக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் கிடைத்தன.  ஆனால் அதன் வடிவம் முதலிலேயே ஏற்படவில்லை. புதுமையான வேடம். எனவே நிறையவே யோசித்து எந்தவிதமாக நடித்தால் மக்கள் மனத்தில் இந்த குணச் சித்திரம் நன்றாகப் படியும் என்று திட்டமிட்டு நடிக்க வேண்டி இருந்தது. அப்படியும் கை வராமலே இருந்தது. இரண்டு நாள்கள் நடித்த பின்பு நான் அதில் ரொம்பப் பிடிப்புடன் ஈடுபட்டு விட்டேன். பிரமாதமாக  அமைந்து விட்டது. அந்த கேரக்டர் நானே உருவாக்கியது. கோகிலாவின் உயிர்ப்புக்குக் காரணம் அதை நான் முழுமையாக நம்பி, அந்த கேரக்டரில் வாழ்ந்தது தான். நான் நடித்த படங்களில் ஏற்ற குணச்சித்திரங்களில் மிகச் சிறந்த ஒன்றாக கோகிலாவை கருதுகிறேன். கே.எஸ்.ஜி.யின் வசனம் உணர்ச்சி மிகுந்தது.நெஞ்சிலிருந்து பீறிட்டுக் கொண்டு வரும். அதைச் சொல்லும் போதே படபடவென்று பொழிந்து தள்ளி விடுவார். ஒவ்வொரு ஒத்திகையிலும் வெவ்வேறு யோசனைகள் சொல்லுவார். தாளம் பிசகாமல் பாடக் கற்றுக் கொள்வதைப் போல் உன்னிப்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒரே குழப்பம் ஆகிவிடும்.  கே.எஸ்.ஜி. நடித்துக் காட்டும் பாணியே தனியாக இருக்கும். அவருடைய திறமை, பலவீனம் இரண்டுமே இப்படி நடிப்பவர்களைத் தன் வயப்படுத்திவிடுவது தான்.  கை கொடுத்த தெய்வம் படத்தில் கோகிலாவாக வாழ்ந்த என் நடிப்பைப் பாராட்டி எனக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் வந்தன.’

'1964 ஆம் வருடத்துப் புதுமுகம் சாவித்ரி. கை கொடுத்த தெய்வத்துக்குப் பிறகு  அவரை யாரேனும் பழைய சாவித்ரி என்று சொன்னால் அதை விடப் பச்சையான பொய் இருக்க முடியாது. சாவித்ரிக்கு இந்தப் படம்  ஒரு புதுப் பாதையைத் திறந்துவிட்டு இருக்கிறது’   என்று குமுதம் சாவித்ரியைக் கொண்டாடியது.

லண்டனில் ஆங்கில நாகரிகத்தில் வளர்ந்த ராதிகாவை, 'கிழக்கே போகும் ரயிலில்’ பட்டிக்காட்டுக்கு அழைத்துச் சென்று பாஞ்சாலியாக உருமாற்றியவர் பாரதிராஜா. அதற்காக அவர் கையாண்ட பால பாடம் என்ன தெரியுமா? கை கொடுத்த தெய்வம் படத்தை ராதிகாவுக்குத் திரையிட்டுக் காட்டினார். கோகிலாவாக கூடு விட்டு கூடு பாய்ந்த  சாவித்ரியின் நடிப்பாற்றல், ராதிகாவின் அரிதார அரங்கேற்றத்தில், 'பாஞ்சாலி அவதாரம்’ எடுக்க  அடித்தளம் அமைத்தது.

முழு கட்டுரையைப் படிக்க →