முகப்பு
கனவுக்கன்னிகள்

அஞ்சலி தேவி: 1. கிளி மார்க் பீடி!

‘ஆந்திர வட்டாரத்தில் ஓர் அழகுப் பெண்ணைப் பற்றியே அனைவரும் பேசினார்கள். நன்றாக நடனமாடுகிறாள். அவள் நாட்டியத்தைப் பார்க்காத கண்கள் இருந்து என்ன பயன்...?’

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:11 PM
பகிர்:

‘ஆந்திர வட்டாரத்தில் ஓர் அழகுப் பெண்ணைப் பற்றியே அனைவரும் பேசினார்கள். நன்றாக நடனமாடுகிறாள். அவள் நாட்டியத்தைப் பார்க்காத கண்கள் இருந்து என்ன பயன்...?’

காக்கிநாடாவில் யுத்த நிதிக்காக அந்த ஆரணங்கு ஆடினாள். அந்த ஆட்டமும் அவள் அழகும் என்னை ஆகா...! என்று பாராட்ட வைத்தன.

அந்தப் பெண்ணைப் பற்றிய பூர்வீகத்தை அறிந்து அவளின் தந்தையிடம் போய்ப் பேசினேன்.

‘உங்களுடைய மகளை என்னுடன் நம்பி அனுப்புங்கள். அவளுடைய அழகும் ஆட்டமும் இந்தச் சிறு இடத்துக்குள் அடங்கிவிடக்கூடாது. என்னிடம் ஒரு நாடகக் குழு இருக்கிறது. அதில் தங்களுடைய குமாரி நடித்தால், அவள் விரைவில் பிரபலமாவாள். அந்தப் பொறுப்பும் உத்தரவாதமும் என்னுடையது’

‘அழைத்துச் செல்லுங்கள்’ என்று மறுபேச்சு பேசாமல், நம்பிக்கையின் இமயமாக முன் பின் அறியாத வாலிபருடன் தன் சீமந்தபுத்திரியை அனுப்பினார் நூக்கையா.

*

அதிகாலையில் ஸ்ருதி கூட்டப்பட்ட ஆர்மோனிய இசையின் பிரவாகம் அஞ்சனி குமாரியை உசுப்பியது. வீட்டைச் சுற்றிலும் காளை மாடுகள் -பசுக்கள். மா... என்று குரல் எழுப்பியவாறு தாயின் மடியை நோக்கி ஓடும் கன்றுகள்...

தொழுவத்தைத் தாண்டியும் காற்றில் வீசும் புனிதமான கோமாதாவின் கோமிய நெடி! சாணத்தின் வாசம். கம்பீரமாகக் கொக்கரிக்கும் சேவல்கள், கோழிகள்...

கை கால்களில் அடிக்கடி இடறும் ஏர்க்கலப்பை, கடப்பாரை, மண் வெட்டி, அம்மி, உரல், உலக்கை, முறம், வாசலை அடைத்துக்கொண்டு நிற்கும் கறுத்துத் தடித்த எருமைகள்...

புழக்கடைச் சுவரே தெரியாதவாறு வட்ட நிலா மாதிரி வரட்டிகளின் பெருக்கம் என்றெல்லாம் தென்படுகிற, பெத்தாபுரத்தின் வழக்கமான குடில் அல்ல அது.

விவசாயமும் நாட்டுப்புறப் பாட்டும் இரு கண்களாக ஜொலிக்கும் நூக்கையா என்கிற கலைஞரின் இசை வாழும் இல்லம்! ஆந்திரத்து கிழக்கு கோதாவரி பிரதேசம் - பெத்தாபுரம்.

ஆர்மோனியம் தவிர வயலின், மிருதங்கம், டோலக், தபலா அத்தனையிலும் அஞ்சனியின் தந்தைக்கு அலாதி ஆர்வம். அனைத்தையும் வாசிக்கக் கற்றவர். யவாத்யவிருந்தா’ இல்லாமல் ஒரு நாளும் அந்தி மயங்குவதில்லை அங்கு.

அறுவடையானதும் பெத்தாபுரத்தில் நூக்கையாவின் நாடகங்கள் மக்களை மகிழச் செய்யும்.

(நூக்கையா, நோகய்யா, என்று நேற்றைய இதழ்கள் வெவ்வேறு விதங்களில் பிரசுரித்துள்ளன). ஹரிச்சந்திரா, ஸ்ரீ கிருஷ்ணலீலா உள்ளிட்ட எல்லா தெருக்கூத்துகளும் அடிக்கடி நடைபெற்றன.

நாடக அனுபவம்

அஞ்சனி குமாரிக்கும் மழலை முதலே நாடக வசனம் மனப்பாடம். ஏழு வயதுக்குள்ளாக லோகிதாசன், பாலகோபாலன் வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்பாவே முதல் ஆசான்!

பெத்தாபுரத்திலிருந்து 12 மைல் தூரத்தில் காக்கிநாடா. அங்குள்ள ‘பர்மாஷெல் நாடக சபா’வில் அஞ்சனி சேர்ந்தாள். நடிப்புடன் நாட்டியமும் மிக இயல்பாகப் பாதங்களில் பணிந்தது.

அப்பா நூக்கையாவுக்கும் அம்மா சத்யவதிக்கும் அஞ்சனியால் அன்றாடம் ஆனந்தம்!

குடும்பத்தில் மூத்த பெண் அஞ்சனி குமாரி. அவளுக்கு அடுத்து சுப்புலட்சுமி, கிருஷ்ணகுமாரி, மகன் பக்கீர்.

சீக்கிரத்திலே நடனத்தில் அஞ்சனி குமாரி சிறகடித்துப் பறந்தாள். பத்து வயதுக்குள்ளாக தெருப்பாடகி, பிரேம விஜயம் நாடகங்கள் மூலமாகவும் அஞ்சனியின் புகழ் பரவியது.

அஞ்சனி குமாரி பிறந்தது, 1927 மே 14-ல்.

காக்கிநாடாவின் ‘யங்மென்ஸ் ஹேப்பி கிளப்’ மிகப் புகழ்பெற்ற கலாசாலை. அதில் நடிப்பு, படிப்பு, சங்கீதம் எல்லாமும் கற்றாள். வசனம் பேசும் திறமை, நாடகங்களால் அஞ்சனிக்கு வந்துவிட்டது.

அங்கு இசைப் பிரிவில் பணியாற்றியவர் ஆதி நாராயணராவ். ஆதி, அஞ்சனியின் அப்பாவுக்கு வழங்கிய உறுதிமொழி உயிர்பெற்றது. ஈடு இணையற்ற கலையரசியாக அங்கத்தினர்களை அதிசயிக்கச் செய்தாள் அஞ்சனி.

திருமணம்

அஞ்சனி பூப்பெய்தியதும், நாடகங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டாள். அறியாப் பருவத்திலேயே ஆதியுடன் அரும்பிய காதல் உணர்வு, ஆத்மாவின் ஆணிவேர் வரை ஊடுருவியது. நாள்களைக் கடத்தாமல் அஞ்சனியும் ஆதியும் கல்யாணத்தில் கை கோத்தனர்.

அவர்களது திருமண நாள், பாரதம் மறக்க முடியாத புரட்சி தினம். 1942 ஆகஸ்ட் 11. ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ காந்தியால் அறிவிக்கப்பட்ட சரித்திர நாள்!

காக்கிநாடாவைக் கடந்தும் அஞ்சனியின் நாட்டிய நிகழ்ச்சிகள் பிரபலமாயின. 1943-ல் மீண்டும் யுத்த நிதிக்காக மதராஸ் கவர்னர் சர். ஆர்தர் ஹோப் தம்பதியர் முன்பாக ஆடினார் அஞ்சனி குமாரி. அரசியின் அன்புப் பரிசாக தங்கப்பதக்கம் கிடைத்தது.

‘அஞ்சனி, உன் மனைவி ஆகட்டும் என்றுதான் காத்திருந்தேன். இனி உன்னை உரிமையோடு கேட்கிறேன் ஆதி. அஞ்சனி சினிமாவில் நடிக்க அனுமதி கொடு. என்னுடைய ‘கொல்ல பாமா’ படத்தில் மோகினியாக நடிக்கட்டும்’ என்றார் ஆதியின் குடும்ப நண்பரும் பிரபல சினிமா இயக்குநருமான சி. புல்லையா.

‘உண்மை உழைப்பு வீணாகாது’ என்பதில் ஆதிக்கு அசாத்திய திடம்.

திரைப் பிரவேசம்

சி. புல்லையாவின் விருப்பப்படி, ஆதியின் ஆசை மனைவி அஞ்சனி குமாரி, ‘அஞ்சலிதேவி’யாகப் பெயர் மாற்றம் பெற்றார்.

கொல்ல பாமாவில் அஞ்சலி தேவி நடித்தார் என்று சொல்வதைவிட, அற்புதமாக ஆடினார் என்பதே மிகப் பொருந்தும்.

‘1946-ல் தயாரிப்பாளர் டி.வி. சுந்தரம், ‘மகாத்மா உதங்கர்’ என்ற பெயரில் தமிழ்ப்படம் எடுத்தார். அதில் வருகிற ரம்பா கேரக்டருக்கு யாரைப் போடலாம் என்று யோசித்தபோது, நான் மோகினியாக நடித்த கொல்ல பாமாவை பார்த்திருக்கிறார். உடனே பிடித்துப்போய் என்னை அவரது சினிமாவில் ‘ரம்பா’வாக்கிவிட்டார்.

‘மோகினி, ரம்பா என்று தேவலோக சுந்தரிகளின் வேடங்களில் நடித்தாலும் நடித்தேன். அதுமாதிரி ரோல்களே துரத்திக்கொண்டு வந்தன.

‘அவை ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தின. அதிலும் அத்தகைய அழகிகள் வில்லிகளாகச் சித்தரிக்கப்பட்டிருந்தார்கள். எப்ப ஹீரோயின் ஆவோம்னு ஏங்க ஆரம்பிச்சிட்டேன்’ - அஞ்சலிதேவி.

மாடர்ன் தியேட்டர்ஸ், அஞ்சலியின் அவஸ்தைகளுக்குக்கு ஆறுதல் அளித்தது. 1948-ல், டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளியான ‘ஆதித்தன் கனவு’ அஞ்சலியை நாயகியாக்கிய முதல் தமிழ்ப்படம். டி.ஆர். மகாலிங்கம் ஹீரோ.

1949 ஆகஸ்டு 6-ல் ரிலிசானது, ஜூபிடரின் ‘கன்னியின் காதலி’ கலையுலக மேதை என்று அழைக்கப்பட்ட கே. ராம்நாத் இயக்கியது.

‘விநோதமான கதை. விசித்திரமான சம்பவங்கள். ராம்நாத்-சேகர் இருவரின் அலங்காரமானத் தயாரிப்பு. இவையெல்லாம் சேர்ந்த உல்லாசமான சித்திரம்!’

‘அபூர்வமான கலாசிருஷ்டிக்கு அமோகமான ஆதரவு’

‘கன்னியின் காதலி’ விளம்பரங்கள் ரசிகர்களைக் கவர்ந்தன.

ஆண் போன்ற தோற்றத்தில் இருக்கும் இளம் பெண்ணை வாலிபன் என்றெண்ணி, யுவதி ஒருத்தி நேசம் கொள்வதே கன்னியின் காதலி. இளைஞனாக மாதுரிதேவியும், அவரைக் காதலிக்கும் இளவரசியாக அஞ்சலியும் நடித்தார்கள்.

கண்ணதாசன் அறிமுகம்

மாதுரிதேவி, அஞ்சலிக்கு ஆறுதல் சொல்வதாக அமைந்த -

‘கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம்
நனவாகும் ஒரு தினமே!’

என்ற பாடலின் மூலம், திரையுலகில் கவிஞராக கண்ணதாசன் அறிமுகமானார்.

அடுத்து, ஆகஸ்டு 27-ல் வந்த ‘மாயாவதி’யில் அஞ்சலிதேவியும் டி.ஆர். மகாலிங்கமும் முத்தமிட்டுக்கொண்டார்கள். இளைஞர் சமுதாயம் கிறுகிறுத்துப்போனது.

தேவலோக அழகியாக அஞ்சலிதேவி நடித்த மற்றொரு மகத்தான வெற்றிச் சித்திரம் ‘மங்கையர்க்கரசி’. செப்டம்பர் 3ல் வெளியானது.

எழிலார்ந்த பி.யூ. சின்னப்பாவின் வசீகரத்திலும் கம்பீரத்திலும் மனத்தைப் பறிகொடுத்து, அஞ்சலி அவரைத் தன்னோடு தூக்கிச் செல்வதே திரைக்கதை. கணவனைக் காணாது கண்ணீர் விட்டுக் கடைசியில் ஒன்று சேரும் கற்புக்கரசியாக கண்ணாம்பா.

பி.யூ.சின்னப்பாவின் சூப்பர் ஹிட் கந்தர்வ கானங்களான ‘காதல் கனிரசமே’, ‘பார்த்தால் பசி தீரும் பங்கஜ வதனச் செங்கனிவாய்ச் சிரிப்பை’ இரண்டும் மங்கையர்க்கரசியின் மகத்தான ஓட்டத்துக்கு மகிமை சேர்த்தன.

ஒரு மாதத்துக்குள் அஞ்சலி நடித்த மூன்று டாக்கிகள் வெளிவந்தது பரபரப்பை ஏற்படுத்தின. அவை மூன்றுமே வெற்றிகரமாக ஓடின. வெவ்வேறு காரணங்களுக்காகத் தமிழ் சினிமா சரித்திரத்தில் இடமும் பிடித்தன.

தென்னகத்தில் அஞ்சலியின் மார்க்கெட் சூடு பிடித்த சமயம். அவரது அரிதார வாழ்க்கையையே எரித்துச் சாம்பலாக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் மங்கையர்க்கரசி ஷூட்டிங்கில் நடந்தது.

தீ விபத்து

‘தேவலோகம் பற்றி எரியும் காட்சி. நாற்புறமும் பயங்கரமாக வெப்பம் பரவியது. நான் அப்படியும் இப்படியும் அலறியவாறு ஓட, என் புடைவையிலும் நெருப்புப் பிடித்துக்கொண்டது.

சுற்றிலும் செந்தழல்களுக்கு மத்தியில் நான் சிக்கிக்கொண்டேன். என் முகமெல்லாம் அக்னியின் அதிரடித் தாக்குதல். சில விநாடிகளில் கோரமாகிப்போனது என் முகம். தீப்பட்டுப் புண்ணான முகத்தைக் குணப்படுத்த மாதக்கணக்கானது.

கண்ணாடியைக் கண்களில் படாமல் மறைத்து வைத்தார் கணவர். வசீகரமான என் முகம் காண்போருக்குக் குரூரமாகத் தெரியப்போகிறது. இனி என் ‘நாயகி வாழ்வு கோவிந்தா’ என்று நினைத்து மனமொடிந்து போனேன்.

வெங்கடாசலபதி எங்கள் குல தெய்வம். அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது!’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உடையவள் நான்.

திருப்பதி பெருமாள்... அந்த ஏழுமலையான் என்னைக் கைவிடவில்லை.

காயமெல்லாம் ஆறிய பின் என் முகம் அழகாக இருப்பதுபோல் தோன்றியது. எல்லா இடங்களிலும் தீப்புண் ஆறிவிட்டாலும், கரு விழிகளின் கீழ், இமையின் இரு புறமும் கந்திய கருமை இருந்தது.

அழகுச் சாதனங்களால் ஏற்படக்கூடிய செயற்கையான முக அழகை அக்னி தேவன் எனக்கு அளித்துவிட்டான்’ - அஞ்சலிதேவி.

*

வலைத்தளங்களில் காணப்படுகிற கருத்துச் சுதந்தரத்தை மிஞ்சி அகப்படுகின்றன அன்றைய வாசகர் கேள்விகள்.

1950 பிப்ரவரி, குண்டூசி இதழில் கும்பகோணம் சா.உ. காதர்பேக் சாயபுவின் ஆதங்கம்.

‘அஞ்சலி வர வர ரொம்ப ஆபாசமாக நடிக்கிறாரே. காரணம் காசு ஆசையா? அவருக்கு மானமே இல்லையா!’

‘முன்பெல்லாம் இதுபோன்ற ஆபாசக் காட்சிகளில் தோன்றுவதற்கு நடிகைகளை முதலாளிகள் தூண்டிவந்தார்கள்.

இப்போதோ இதுபோன்ற கட்டங்களைப் படமாக்க வற்புறுத்தும் வண்ணம் நடிகைகள் நடந்துகொள்கிறார்கள்.

மானத்தை விட்டு நடித்தால்தான் லட்சம் லட்சமாகப் பணம் சேரும் என்று நடிகைகள் நினைக்கிறார்கள்’

*

கமுதி எஸ். பாலகுருசாமி என்பவரது விநோத வினா -

‘கிளி மார்க் பீடி விளம்பரங்களில் அஞ்சலியின் புகைப்படங்கள் ஏன்?’

‘கிளிப்பிள்ளைபோல் தமிழ் பேசுவதால்’

*

அஞ்சலி குறித்த கிசுகிசுவும் புழுதிக் காற்றாக வீசியது.

திருமணமான டி.ஆர். மகாலிங்கமும் - அஞ்சலியும்...!

அது நிஜமோ என்று யூகிக்கும் வகையில், டி.ஆர். மகாலிங்கம், அஞ்சலியை ஜோடியாக ஒப்பந்தம் செய்து சொந்தப்படம் தொடங்கினார்.

பின்னர் என்ன நடந்ததோ... அஞ்சலியை வைத்து ஆரம்பித்த படைப்பை எரித்துவிட்டு, டி.ஆர். மகாலிங்கம் - எஸ். வரலட்சுமி நடிக்க புதிய சினிமா ரிலீசானது.

மர்மயோகி

நாயகனாக எம்.ஜி.ஆரும் வில்லியாக அஞ்சலியும் தோன்றிய படம் ‘மர்மயோகி’. ஜூபிடர் தயாரிப்பு. ‘ஏ’ சான்றிதழ் பெற்ற முதல் டாக்கி. 1951 பிப்ரவரி 2-ல் மக்களைச் சந்தித்தது.

கறுப்புச் சட்டை அணிந்து மக்கள் தலைவன் கரிகாலனாக,

’நான் குறி வைத்தால் தவறாது. தவறுமானால் குறி வைக்கமாட்டேன்’ என்று வீர வசனம் பேசி, அக்கிரம ஆட்சி நடத்தும் அஞ்சலிதேவி மீது எம்.ஜி.ஆர். கத்தி வீசுவார்.

எம்.ஜி.ஆர். எறிந்த கட்டாரி, இலக்கு தவறாமல் அஞ்சலியின் கழுத்துக்கு ஓர் அங்குலம் அருகே, அரசியின் அரியணையில் பதிந்து நிற்கும்! அக் காட்சி காண்போரை இன்றைக்கும் வியக்க வைக்கும்.

கே.ராம்நாத் இயக்கிய மர்மயோகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திப் பிரமாதமாக ஓடியது.

‘மறக்க முடியாத மர்மயோகி!’

‘அப்ப எனக்கு 21 வயசு. அந்த வயதில் வேர்விடும் கடைவாய்ப் பல் ஒன்று எனக்கும் முளைத்தது. ஒரு பக்கக் கன்னம் அப்படியே வீங்கிவிட்டது.

கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் மிகப்பெரிய அளவில் செட் போட்டு மர்மயோகி க்ளைமாக்ஸ் எடுத்தார்கள். முக வீக்கம் குறையட்டும் என்று எம்.ஜி.ஆர். இரண்டொரு நாள்கள் எனக்காகக் காத்திருந்தார்.

என்ன சிகிச்சை மேற்கொண்டும் வலி குறையவில்லை. மர்மயோகிக்காக எம்.ஜி.ஆர். கொடுத்திருந்த தேதிகள் தீர்ந்தன.

எனக்கும் சென்னை வாஹினி ஸ்டுடியோவில் ஷூட்டிங் இருந்தது.

அதை எதற்காகக் குறிப்பிடுகிறேன் என்றால், மர்மயோகி முடிந்த பிறகே ஜூபிடர் நிறுவனம் மதராஸுக்கு இடம் பெயர்ந்தது.

ஜூபிடர் எனது தாய் வீடு. எனக்கொரு நிழல் தந்து என்னை வளர்த்துவிட்டது. அன்னைக்கு துரோகம் செய்வதா...!

பாழாய்ப்போன பல்வலியால் மர்மயோகியின் இறுதிக்கட்ட வேலைகள் மாதக்கணக்கில் தடைப்பட்டன.

எனக்காகச் சென்னையில் செட் போட்டுக் காத்திருந்தனர். அந்த சினிமாவே என் கையை விட்டுப் போனாலும் போகட்டும். என்ன ஆனாலும் சரி, மர்மயோகி படத்தை முடித்துத் தராமல் புது ஒப்பந்தங்களில் நடிக்கக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தேன்.

வீக்கம் அடியோடு மறைந்து என் முகம் பழைய நிலைக்கு வந்ததும், மர்மயோகியில் நடிக்கத் தயாரானேன். எம்.ஜி.ஆர். மிக்கப் பெருந்தன்மையுடன் எனக்காகத் தன் கால்ஷீட்டை மாற்றிக் கொடுத்து மர்மயோகி முடிவடைய பரிபூரண ஒத்துழைப்பு வழங்கினார்.

எல்லாம் சுபமாக முடிந்தது. ஜூபிடர் முதலாளி சோமு என்னிடம்,

‘அம்மா என் கஷ்டம் உணர்ந்தவள் நீ. பொறுமையாகக் காத்திருந்து நடிச்சுக் கொடுத்து என்னைக் காப்பாத்திட்டே’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

மர்மயோகியால் கிடைத்த லாபம், சென்னையில் ஜூபிடர் பிக்சர்ஸ் நிலைகொள்ளும் அளவுக்கு நிலைமையை மாற்றியது.

மர்மயோகி மட்டும் ஓடியிருக்காவிட்டால், ஜூபிடர் சென்னைக்கு வந்திருக்காது. மிகப்பெரிய அளவில் சாதனைச் சித்திரங்களைத் தயாரித்துப் புகழ் பெற்றிருக்காது.

மர்மயோகி முடிந்த பிறகு, முதலாளி எங்களைப் பழநிக்கு அழைத்துச் சென்றார். தண்டாயுதபாணி ஸ்வாமியைத் தரிசிக்கக் கீழேயிருந்து மலைக்கு நடந்தே சென்றோம்.

அப்ப போன பழநிதான். அப்புறமா பழநிக்கு இன்று வரை போக முடியவில்லை. ஆனா அன்று மூலவருக்கு நடந்த அபிஷேகம் இப்பவும் நினைவில் நிக்குது’ - அஞ்சலிதேவி.

(தொடரும்)

முழு கட்டுரையைப் படிக்க →