முகப்பு
லீ குவான் யூ

14. வெற்றிமீது வெற்றி வந்து இவனைச் சேரும்!

சிங்கப்பூர் துறைமுகம். சீக்கிரம் வீட்டுக்குப் போய்க் குடும்பத்தைப் பார்க்க லீ, சூ இருவரும் துடித்தார்கள் ஆனால், குடியேற்ற அதிகாரி (Immigration Officer)

Updated On : 11 ஜூலை, 2015 at 3:27 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:28 AM

சிங்கப்பூர் துறைமுகம். சீக்கிரம் வீட்டுக்குப் போய்க் குடும்பத்தைப் பார்க்க லீ, சூ இருவரும் துடித்தார்கள் ஆனால், குடியேற்ற அதிகாரி (Immigration Officer)  அவர்களை க்யூவின் கடைசிக்குப் போகச் சொன்னார்கள். மெள்ள மெள்ள க்யூ நகர்ந்தது. அவர்கள் முறை வந்தது. அதிகாரி இருவர் பாஸ்போர்ட்களையும் பலமுறை புரட்டினார். சொன்னார், ‘மிஸ்டர் லீ, உங்களைப் பற்றி அடிக்கடி கேள்விப்படுவோம் என்று நினைக்கிறேன்.’

அந்த அதிகாரி சொன்னது வெறும் மிரட்டல். ஆனால், அவை எத்தனை தீர்க்கதரிசனமான வார்த்தைகளாகிவிட்டன?

சிங்கப்பூரில் லீ, சூ இருவர் ஒட்டுமொத்தக் குடும்பங்களும் வந்திருந்தார்கள். பிரியும்போது லீ, சூ இருவர் கண்களிலும் பொங்கியது கண்ணீர். மூன்று வருடங்கள் சேர்ந்து பழகிய தோழனும், தோழியும் பிரிவதால் என்று பிறர் நினைப்பு. ஏன் எனும் ரகசியம் அந்தக் கணவன் மனைவி மட்டுமே அறிந்த அந்தரங்கம்.  

கேம்பிரிட்ஜில் முதல் வகுப்பில் தேறி, சிங்கப்பூரின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்டிய லீ, சூ இருவரையும் பற்றி ஊடகங்களில் பத்தி பத்தியாக விவரங்கள். அவர்கள் போட்டோக்கள். பிரபலங்களாகிவிட்டார்கள். வேலைகள் லீயைத் தேடி வந்தன. லேகாக் அண்ட் ஓங் (Laycock & Ong) என்னும் வெற்றிகரமான வழக்கறிஞர் நிறுவனம். அதன் கூட்டாளி லேகாக் போன் செய்தார். போனான். நேரடியாக அவர் கீழ் பணியாற்றும் வாய்ப்பு. கரும்பு தின்னக் கூலியாக 500 டாலர்கள் மாதச் சம்பளம். அன்றைய நாளில் பெரிய தொகை. சம்மதித்தான். சேர்ந்தான்.

லீக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. முதல் மகிழ்ச்சி, அவன் லண்டன் போவதற்காக நகைகள் அத்தனையையும் விற்ற அம்மா, தங்கள் தேவைகளைச் சுருக்கிக்கொண்டு தியாகங்கள் செய்த அப்பா, தம்பிகள், தங்கை இவர்கள் எல்லோருக்கும்  வசதியான வாழ்க்கை தரலாம். இரண்டாம் மகிழ்ச்சி, சூ வீட்டுக்குப்போய் தைரியமாகப் பெண் கேட்கலாம். ‘வசதிகள் குறைவான உன் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பைச் சுமக்கும் நீ என் மகளை எப்படிக் கண் கலங்காமல் வைத்திருப்பாய்?’ என்று சூ அம்மாவும், அப்பாவும் கேட்க முடியாது.

Advertisement

சீனர்களின் பாரம்பரியத்தின்படி, மாப்பிள்ளையின் அம்மாவும், அப்பாவும் பெண் வீட்டுக்குப் போகவேண்டும். மரியாதை செலுத்தவேண்டும். அவர்கள் பெண்ணைத் தங்கள் மகனுக்குத் திருமணம் செய்து தருகிறார்களா என்று  சம்மதம் கேட்கவேண்டும். லீ இந்தச் சம்பிரதாயங்களைப் பின்பற்றவில்லை. தான் மட்டும் சூ வீட்டுக்குப் போனான். அவள் அப்பா இருந்தார். சுற்றி வளைக்காமல் விஷயத்துக்கு வந்தான். நேரடியாகக் கேட்டான், ‘உங்கள் பெண் சூவை எனக்குத் திருமணம் செய்து தருகிறீர்களா?’

சூ அப்பா அதிர்ந்துபோனார். அவருக்குப் பேச்சே வரவில்லை. ஆனால், லீ கெட்டிக்காரன், ஒளிமயமான எதிர்காலம் அவனை எதிர்நோக்கியிருக்கிறது என்று அறிந்தவர். மகள் சூவிடம் கேட்டார். அவளுக்கும் இந்த இளைஞனிடம் ஈர்ப்பு இருப்பதை அறிந்தார். சம்மதித்தார். உடனே நிச்சயதார்த்தம். ஒரு மாதத்தில் கல்யாணம். லீ வீட்டில் அம்மாவுக்கு ஏற்கெனவே தெரியும். தெரியாததுபோல் பாவ்லா பண்ணினார். சம்மதித்தார்.

லீ, முதலாளி லேகாக் அவர்களைச் சந்தித்தான். சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டான். அவருக்கு அவன் என்னதான் சொக்குப் பொடி போட்டிருந்தானோ? அவர் சிரித்தார். இனிப்புத் தந்தார். அவன் எதிர்பார்த்தேயிராத இனிப்பு – ‘உன் மனைவி சூவும் நம் கம்பெனியிலேயே வேலைக்குச் சேரட்டும். அவளுக்கும் உன் சம்பளம்தான். 500 டாலர்கள்.’  

லேகாக் முதலாளியாக இருந்தாரோ, பிழைத்தாரோ? இல்லாவிட்டால், பொங்கிப் பீறிட்ட ஆனந்தத்தில் அவன் அவரைத் தூக்கித் தட்டாமாலை சுற்றியிருப்பான்.

செப்டம்பர் 30, 1950. பதிவாளர் அலுவலகத்தில் திருமணம். லீ, சூ இருவருக்குமே இரண்டாம் திருமணம். உலகத்தைப் பொறுத்தவரையில் முதல் திருமணம்! சூ கணவன் வீட்டுக்கு வந்தார். அங்கே ஒரு குடும்பமல்ல, லீயின் பாட்டி, அம்மா, அப்பா, மூன்று தம்பிகள், தங்கை, ஏகப்பட்ட சொந்தங்கள் என்று பெரிய படையே இருந்தது. இந்தக் கூட்டத்துக்கு நடுவே அவர்கள் காதல் டயலாக் பேசக்கூட முடியவில்லை. அதனால் என்ன, இருவரும் ஒரே அலுவலகத்தில்தானே வேலை பார்த்தார்கள்? ஆபீஸ் நேரத்தில் காதல் பார்வைகளைப் பரிமாறிக்கொண்டார்கள். இருவரும் வேலையில் அதி சாமர்த்தியசாலிகள். மற்றவர்கள் நாலு மணி நேரத்தில் செய்யும் வேலையை ஒரே மணி நேரத்தில் முடிப்பார்கள். ஆகவே, லேகாக் தன் ‘செல்லக் குழந்தைகள்’ சில்மிஷங்கள் செய்தால், சிரித்தபடி கண்களை மூடிக்கொண்டார்.    

நட்பான அலுவலகம், அதிகப் பளுவில்லாத ஆனால் திருப்தியான வேலை, தன் மேல் மதிப்பும், அன்பும் வைத்திருக்கும் முதலாளி, கை நிறையச் சம்பளம், அருகில் புது மனைவி – லீ தன் ஆபீசை, வேலையைக் காதலித்தான். அதே சமயம், அவனுக்குள் உறங்கிக்கொண்டிருந்த சிங்கப்பூர் அரசியலை ஒரு கலக்குக் கலக்கவேண்டும் என்னும் ஆசை மெள்ளக் கண் விழித்துக்கொண்டிருந்தது.  

ஆசைக்கு அலுவலகச் சூழ்நிலை தூபம் போட்டது. முதலாளி லேகாக் அரசியலில் ஈடுபட்டிருந்தார். ப்ரொக்ரெஸிவ் கட்சி (Progressive Party) யின் தலைவராக இன்னொருவர் இருந்தார். ஆனால், அவர் டம்மிதான். நிஜத் தலைவர் லேகாக். இந்த கட்சியின் பெரும்பாலான அங்கத்தினர்கள் இங்கிலாந்தில் சட்டமும், மருத்துவமும் படித்து முடித்து வந்திருந்த உயர்மட்டத்தவர்கள். ஆங்கிலேயர்கள் தங்களைவிட உயர்வானவர்கள் என்னும் தாழ்வு மனப்பான்மை இவர்கள் ஆழ்மனங்களில் ஓடியது. ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுபட்டுச் சிங்கப்பூரும், மலாயாவும் தனி நாடுகளானால், தங்களால் நிர்வகிக்கமுடியாது என்னும் எண்ணம் கொண்ட மிதவாதிகள்.

அரசியலில் இன்னொரு துருவமாக இருந்த கம்யூனிஸ்ட்கள் வன்முறை வழியாளர்கள். 

இங்கிலாந்தில் இருந்தபோதே, இந்த இரண்டு பாதைகளும் தனக்கும், நாட்டுக்கும் ஒத்துப்போகாதவை என்று லீ முடிவு கட்டிவிட்டான். அதனால்தான், மத்தியப் பாதையில் பயணித்த மலாயன் ஃபோரம் அங்கத்தினன் ஆனான். இப்போதும், அதுபோல் ஏதாவது செய்யவேண்டும். நாட்டு விடுதலைக்கு வேறு வழி இல்லை. மனம் துடித்தது. ஆனால், மூளை கடிவாளம் போட்டது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று காரியங்கள் செய்யும் ஆள் அவனில்லை. ஃபோரம் தோழர்கள் சிலர் இன்னும் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் வரட்டும், நாட்டின் அரசியல் நிலைமையை அவர்களோடு கலந்து ஆலோசிப்போம். அதற்குப் பிறகு

ஆக்‌ஷனில் இறங்குவோம்..    

காத்திருக்க அவன் தயாராக இருந்தான். அரசியல் தயாராக இல்லை. மலாயன் டெமாக்ரட்டிக் யூனியன் (Malayan Democratic Union) தலைவர் ஜான் ஏபெர் (John Eber), சிங்கப்பூர் டீச்சர்கள் யூனியன் (Singapore Teachers’ Union)  செயலாளர் தேவன் நாயர், உட்டுஸான் மெலாயு  (Utusan Melayu) என்னும் மலாய்ப் பத்திரிகை ஆசிரியர் அப்துல் சமாது ஆகிய மூவரையும், அவசர நிலையைக் காரணம் காட்டி, அவர்கள் நாட்டு அமைதியைக் கெடுப்பவர்கள் என்று அரசு குற்றம் சாட்டியது, கைது செய்து சிறையில் அடைத்தது. இவர்கள் மூவரும் ஆங்கிலப் படிப்பு முடித்தவர்கள். தொழிலாளி வர்க்கத்தினரையும் தாண்டி, ஆங்கிலப் படிப்பாளிகளிடமும் கம்யூனிஸம் பரவுவதை இந்தக் கைதுகள் அறிவித்தன.

மலாயாவிலும் பொதுவுடமைவாதிகள் கை ஓங்கிக்கொண்டிருந்தது. அரசுக்கு எதிராகக் கொரில்லாப் போர்கள் நடத்தினார்கள். ஜெயம் கண்டார்கள். வேகமாகச் செயல்படாவிட்டால், கம்யூனிஸம் வேருன்றிவிடும், அது நாட்டுக்கு நல்லதல்ல என்று லீ நம்பினான்.   

சிங்கப்பூரில் தேர்தல் வந்தது. லேகாக் ப்ரொக்ரெஸிவ் கட்சி சார்பில் போட்டியிட்டார். முழு நம்பிக்கை வைத்திருந்த லீயைத் தன் ஏஜெண்டாகப் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார். அந்தக் கட்சியின் கொள்கைகள் மீது அவனுக்கு உடன்பாடே கிடையாது. ஆனால், லீகாக் அவனுக்கு எத்தனையோ உதவிகள் செய்தவர். அவர் கேட்பதை மறுக்கமுடியுமா? ஏஜெண்டாகப் பணி புரிந்தான்.

லீ முழு மனதோடு தன்னை அர்ப்பணித்துக்கொண்டான். போஸ்டர்கள் தயாரிப்பது, மக்கள் பார்வையைக் கவரும் இடங்களில் ஒட்டுவது, பிரச்சாரக் கூட்டங்கள், இரவுப் பார்ட்டிகள், பார்ட்டிகளில் சாப்பாடு, பெண்களின் நடனங்கள் எனத் தேர்தலின் அணுகுமுறைகள், வியூகங்கள், நுணுக்கங்கள் எனப் பல நெளிவு சுளிவுகள் அத்துப்படியாயின. லீகாக் ஜெயித்தார்.     

தேர்தல்கள் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கவில்லை என்னும் உண்மையை லீ உணர்ந்தான். வோட்டுப்போடத் தகுதியான குடிமக்கள்   2,50,000. அவர்களுள் வாக்களித்தவர்கள் வெறும் 24,693 பேர். அதாவது, பத்து சதவிகிதத்துக்கும் கீழ்.

வோட்டு என்பது நம் உரிமை, நல்லவர்கள், வல்லவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துத் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்னும் அறிவும், புரிதலும் பெரும்பாலான மக்களுக்கு இருக்கவில்லை. தேர்தலில் ஜெயித்தவர்கள் வீடுகள் முன்னால் ஆட்டு மந்தைகளாகக் கூடினார்கள். தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழி காட்டுமாறு கெஞ்சினார்கள். லீக்கு ரத்தக் கண்ணீர் வந்தது - அப்பாவி மக்களே, என்று கண் விழிப்பீர்கள்? ஆட்சியில் அமர்த்தியவர்களை நம்பிப் பிழைப்பதை நிறுத்துவீர்கள்? நீங்கள் அடிமைகளல்ல, ஆட்சியாளர்களை அமர்த்தும், நீக்கும் அதிகாரம் கொண்ட எஜமானர்கள் என்று புரிந்துகொள்வீர்கள்? உங்கள் தலைவிதி உங்கள் கையில் இருக்கிறது என்று எப்போது உணர்வீர்கள்?  

ராமன் ஆண்டாலென்ன, ராவணன் ஆண்டாலென்ன, நம் வேலை கெஞ்சிப் பிழைப்பதே என்று தங்கள் உரிமைகளை உணராத, வாக்குச் சீட்டின் சக்தியை உணராத மெத்தனம், ஏனோ, பிற இனத்தவர்களைவிட, சீனர்களிடம் அதிகமாக இருந்தது. இத்தனைக்கும், பிற இனத்தவர்களைவிடக் கீழான நிலையில் இருந்தவர்கள் சீனர்கள்தாம். பெரும்பாலானவர்கள் மழைக்குக்கூடப் பள்ளிக்கூடங்களில் ஒதுங்காதவர்கள். ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது. ரோட்டோர வியாபாரிகள், ரிக் ஷா ஓட்டுநர்கள், லாட்டரிச் சீட்டு விற்பனையாளர்கள் எனப் பொருளாதார அடித்தட்டுக்களில் இருந்தார்கள். ஆங்கிலம் மட்டுமே அறிந்த பேசிய அரசு அதிகாரிகளிடம், மொழி பெயர்ப்பாளர்கள் மூலமாக மட்டுமே இவர்கள் பேச முடிந்தது. குறைகள் தீரவில்லை. விரக்தியால், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்கள் போராளிகளானார்கள்.

நாடு முன்னேறவேண்டுமானால், கம்யூனிஸ்ட்கள் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தவேண்டும். அந்த சக்தி அன்றைய எந்த இயக்கத்திலும் இல்லை. ஆகவே, புது கட்சி தொடங்கவேண்டும். கட்சி தொடங்குவதும், ஆதரவு தேடுவதும், வலிமை கொண்டதாக வளர்ப்பதும், ஆயிரம் யானைகளைக் கட்டி வளர்ப்பதுபோல. அதுவும், ஆளும் கட்சிக்கு எதிராக அணி திரட்டுவதற்குப்   

பணம், நேரம், வசதி, அதிகாரம், அந்தஸ்து கொண்டவர்களின் தொடர்பு ஆகியவை அவசியம். அவனோ, சட்டப் படிப்பு, பேச்சுத் திறமை, தாய்நாட்டின்மேல் கொண்ட அளவில்லாக் காதல் ஆகியவை மட்டுமே ஆயுதங்களாகக்கொண்ட சாமானியன். ராட்சச கோலியாத்தைப் பொடியன் லீ     

ஜெயிப்பானா?

ஜெயிப்பதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று அந்த அபார மூளை

கணக்குப் போட்டுக்கொண்டிருந்தது. அவன் ஓரளவு பிரபலமானவன். ஆனால், இந்தப் புகழ் வெளிச்சம், கேம்பிரிட்ஜில் முதல் வகுப்பு வாங்கிய ஒரே காரணத்தால். இந்தப் புகழ் தற்காலிகமானது. அடுத்த வருடம், இன்னொரு சிங்கப்பூரியன் அதிக மதிப்பெண்கள் வாங்கி வந்தால், காற்று அவன் பக்கம் திரும்பும், எல்லோரும் லீயை மறந்துவிடுவார்கள். இன்றைய புகழை நம்பி அரசியல் கட்சி தொடங்குவது அடி முட்டாள்தனம். வழக்கறிஞராக அவன் வெற்றிகளைக் குவிக்கவேண்டும், தனித்துவமான ஆளுமையை வளர்த்துக்கொள்ளவேண்டும். தலைவராக மக்கள் மனங்களில் இடம் பிடிக்க, தனித்துவ ஆளுமை தேவை. 

ஒரு வருடப் பயிற்சி முடிந்தது. ஆங்கிலேய மோகத்தால், அப்பாத் தாத்தா அவனுக்கு ‘ஹாரி’ என்று செல்லப் பெயர் வைத்திருந்தார். பள்ளியில் சேரும்போது கொடுத்த ஹாரி க்வான் யூ லீ என்னும் பெயர், ராஃபிள்ஸ் கல்லூரி, லண்டன் பொருளாதாரப் பள்ளி, கேம்பிரிட்ஜ், வழக்கறிஞர் பட்டயம் ஆகிய அனைத்திலும் தொடர்ந்தது. இப்போது ஆங்கிலப் பெயருக்கு விடைகொடுக்க லீ நிச்சயித்தான். ஆவணங்களில் பெயர் மாறியது. இப்போது பெயர் லீ குவான் யூ. 

(திருமணமானவர், வழக்கறிஞர். தலைவராகத் துடிப்பவர். இனிமேலும், ‘அவன்’ என்று சொல்வது மரியாதையில்லை. லீ குவான் யூ இனிமேல் அவர்.) 

லீ அன்ட் லீ (Lee & Lee) என்னும் பெயரில் தனியாகப் பிராக்டிஸ் தொடங்கினார்.  மூன்றாம் நாள். சிங்கப்பூர் சுப்ரீம் கோர்ட்டில் லீயின் நண்பர் டான் தூன் லிப் (Tan Thoon Lip) பதிவாளராக இருந்தார். வந்தது அவரிடமிருந்து போன் அழைப்பு. திறந்தது ஒரு வாய்ப்பு.  

மலாயாவில் ஒரு டச்சுப் பெண். அவளுக்கு ஒரு பெண் குழந்தை. ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது, பாதுகாப்புக்காக, அம்மா பெண்ணை மலாயா குடும்பத்திடம் ஒப்படைத்தார். வளர்ப்புக் குடும்பத்தார் முஸ்லிம்கள். குழந்தையை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றிவிட்டார்கள். யுத்தம் முடிந்தவுடன், பெற்ற அம்மா பெண்ணைத் திருப்பிக் கேட்டார். வளர்த்தவர்கள் தர மறுத்தார்கள்.

வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. நீதிபதி தற்காலிகமாகச் சிறுமியை ஒரு கத்தோலிக்கக் கான்வென்டில் ஒப்படைத்தார். நாளிதழ்கள் சிறுமி படத்தை வெளியிட்டன. அந்தப் போட்டோக்கள், சிறுமி கன்னி மேரி சிலை முன்னால் நிற்பதுபோல். ‘முஸ்லிம் பெண்ணைக் கன்னி மேரி முன்னால் எப்படி நிற்கவைக்கலாம்?’ என்று முஸ்லிம்கள் கொதித்தார்கள். கலவரங்கள் வெடித்தன. பல கிறிஸ்தவர்கள் (இவர்கள் அத்தனை பேரும் வெள்ளையர்கள்)

கொல்லப்பட்டார்கள். போலீஸ் 13 பேரைக் கைது செய்தது. இவர்களுள் நான்கு பேர் சார்பாக லீ வாதாடவேண்டும். இவர்கள் மீது இருந்த குற்றச்சாட்டு, சார்ல்ஸ் ஜோசப் ரயான் என்னும் விமானப்படை அதிகாரியைப் படுகொலை செய்திருக்கிறார்கள். மற்ற ஒன்பது பேருக்கு இன்னொரு வக்கீல்.

பாதுகாப்புக்காகத் தந்த குழந்தையைப் பெற்ற அம்மா வளர்த்தவர்களிடமிருந்து திருப்பிக் கேட்கும் வழக்கு என்பதைத் தாண்டி, முஸ்லீம் – கிறிஸ்தவர்கள் என்னும் மதச் சண்டையாகப் பூதாகாரப் பரிமாணம் எடுத்துவிட்டது. பரபரப்பு வழக்கு, நாட்டின் கண்களே பதிந்திருக்கும் வழக்கு. தன் முதல் வழக்கு, நாடு முழுக்கத் தன்னைக் கவனிக்கப்போகும் வழக்கு, வெறும் வழக்கு அல்ல, வருங்காலத்தைத் தீர்மானிக்கும் வாசல் என்பதை லீ உணர்ந்தார். உயிரைவிட்டு ஆவணங்களைப் படித்தார். நீதிபதி, ஏழு ஜூரிகள். வழக்கு ஜெயிக்க, அவர்களைத் திருப்திப்படுத்தவேண்டும். 

லீ குற்றப் பத்திரிகையைப் பலமுறை படித்தார். மாலை நேரம். ரயான், விமான நிலையத்திலிருந்து நகரத்துக்குப் பேருந்தில் வந்துகொண்டிருந்தார். நாற்பது பேர் கொண்ட ஒரு வெறி பிடித்த கும்பல் பேருந்தை நிறுத்தியது. அவர்கள் அத்தனைபேரும் மலாய், இந்திய முஸ்லிம்கள். கும்பல் ரயானை வெளியே இழுத்தது. வெறித்தனமாக அடித்து உதைத்தது. மயங்கிய அவரைச் சாக்கடைக்குள் தூக்கிப்போட்டது. போலீஸ் வந்தபோது, ரயான், பிணம். சம்பவத்தைப் பார்த்த சாட்சிகள் நான்கு ‘குற்றவாளி’களை அடையாளம் காட்டினார்கள். அவர்கள் இப்போது கூண்டில். தண்டனையும் விடுதலையும், லீ வாதத்தில்.    

சம்பவம் நடந்த இடத்துக்கு, சம்பவம் நடந்த அதே நேரத்துக்கு லீ போனார். முகத்தில் சிரிப்பு. அடுத்த நாள், மாலை அதே நேரம். நீதிபதி, ஜூரிகள், சாட்சிகள் ஆகியோரைச் சம்பவ இடத்துக்கு அழைத்துப் போனார். சாட்சிகளைக்  குறுக்குக் கேள்விகளால் துளைத்தார். வெளிச்சம் அதிகமில்லாத அந்த நேரத்தில், முன்பின் பார்த்திராத புதியவர்களை அடையாளம் காண்பது முடியாத காரியம் என்று நீதிபதிக்கும், ஜூரிகளுக்கும் புரியவைத்தார்  

இரண்டு வாரங்கள் வழக்கு நடந்தது. லீயின் வாதம் சாட்சியங்களைச் சின்னாபின்னமாக்கியது. சக வக்கீலின் ஒன்பது கட்சிக்காரர்களுக்குத் தண்டனை: லீயின் கட்சிக்காரர்களில் ஒருவருக்கு ஐந்து வருடச் சிறை. மற்ற நான்கு பேரும் குற்றமற்றவர்கள் என்று கோர்ட் முடிவு செய்தது. அவர்கள் விடுதலைப் பறவைகள். லீ இப்போது மலாயா, சிங்கப்பூர் முழுக்கத் தெரிந்த பெயர். கூர்மதி, துப்பறியும் திறமை, அற்புத வாதம், அத்தனைக்கும் மறுபெயர் லீ!

நாடே இந்த வழக்கைப் புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பதை லீ உணர்ந்தார். கொலை செய்யப்பட்டவர் ஆங்கிலேயர். வழக்குப் போட்டது பிரிட்டீஷ் அரசு. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மலாய்கள். வாதாடியவர் சிங்கப்பூர்க்காரர். ஆகவே, வழக்கின் வெற்றியை மலாய் – சிங்கப்பூர் மக்களுக்குப் பிரிட்டிஷ் ஆட்சிமீது கிடைத்த வெற்றியாக மக்கள் கருதினார்கள். லீ ஹீரோ. ஆங்கிலேய அரசுக்கு எதிராக அரசியல் கட்சி அமைக்க நினைத்துக்கொண்டிருந்த லீக்கு இதைவிட அட்டகாசமான ஆரம்பம் கிடைத்திருக்க முடியாது.

வெற்றி, வெற்றி, வெற்றி. கை குலுக்கல்கள், பாராட்டுக்கள், கை தட்டல்கள், மாபெரும் சபைகளில் விழும் மாலைகள். குடும்பம், நண்பர்கள் எல்லோருக்கும் மகா மகிழ்ச்சி. ஒரே ஒருவர் மட்டும் குற்ற உணர்வில். அவர் – லீ! தன் கட்சிக்காரர்கள் நால்வரும்தான் ரயானை அடித்துக் கொலை செய்தார்கள் என்று அவருக்குத் தெரியும். வழக்கறிஞரின் கடமை, குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக்கொடுப்பதும், நிரபராதிகளை அநியாயத் தண்டனை பெறாமல் பாதுகாப்பதும்தான். தன் திறமையை நிரூபிப்பதற்காக உண்மையைத் திரித்த குற்ற உணர்வு முள்ளாகக் குத்தியது. இந்தக் காயத்தை மயிலிறகாய் வருடுவதுபோல் வந்தன இரண்டு சந்தோஷச் சேதிகள். அவை.....          

(தொடரும்)            

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.