முகப்பு
நலம் நலமறிய ஆவல்

20. அதிநவீன எலிப்பொறிகள் - 2

ஒரே ஒரு துளி ரத்தத்தை எடுத்து அதில் உள்ள கோடிக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான வெள்ளை அணுக்களை எண்ணி மிகச்சரியாகச் சொல்ல முடியுமா? ஏன் முடியாது? ஒரு கால்குலேட்டர் இருந்தால் சொல்லிவிடலாம்! என்ன, ஆச்சரியமா

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:14 PM
பகிர்:

விஞ்ஞானிகள் தங்கள் பரிசோதனைக்குப் பயன்படுத்தும் எலிகளிடம் உண்மையைச்

சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதானே?

- ஹீலர் உமர் ஃபாரூக்

கிடைக்கும் பணத்தில் முக்கால்வாசியை கமிஷனாக டாக்டர்களுக்கே கொடுத்துவிட்டால், விலையுயர்ந்த உபகரணங்களையெல்லாம் வாங்கிப்போட்டிருக்கும் மருத்துவ ஆய்வுக்கூடங்களுக்கு என்ன கிடைக்கும்? அங்கே வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் எப்படிக் கொடுக்கமுடியும்? மாநகரங்களில் அவை இருக்குமானால், மின்சாரத்திலிருந்து சம்சாரம் வரைக்குமான செலவுகளை எப்படி சமாளிப்பது? செலவுக்கு வழியில்லை என்றால், சம்சாரமே மின்சாரமாக மாறிவிடுமே! வெறும் சேவை மட்டும் செய்துகொண்டிருந்தால், சோறு யார் போடுவார்கள்? அப்படியானால், ஆய்வுக்கூடங்களில் உண்மையில் சோதனை செய்வார்களா, மாட்டார்களா?  இந்தhf கேள்வியோடு நிறுத்தியிருந்தோம். அதற்கான பதில்களை இனி பார்க்க இருக்கிறோம்.

பதில் 1

நிச்சயம் சோதனை செய்வார்கள். ஆனால் மூன்று செய்ய வேண்டுமானால், முப்பதாக அதை மாற்றிக்கொள்வார்கள். அப்போதுதானே அநியாயமான கமிஷன்களைத் தாண்டி செலவுகளை சமாளிக்க முடியும்?! 27.05.2012-ல் நடந்த ஆமிர் கானின் சத்யமேவ ஜயதே நிகழ்ச்சியில், டாக்டர் குலாட்டி என்பவர்கூட இதுபற்றிக் கூறுகிறார். யூட்யூபில் இருக்கிறது. குணமடைந்துவிடலாம் என்று நம்பி மருத்துவமனைகளுக்கும் ஆய்வுக்கூடங்களுக்கும் செல்பவர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. சுருக்கமாகச் சொல்வதானால், நாம் எல்லோருமே பார்க்க வேண்டிய நிகழ்ச்சி!

டாக்டர் குலாட்டி

மருத்துவ ஆய்வுக்கூடங்களில் பரிசோதனைகள் செய்யப்படும். ஆனால் சரியாகச் செய்வார்களா என்று உறுதியாகச் சொல்லமுடியாது. கட்டி என்று நினைத்துக் கருவை அறுத்து எறிந்துவிடலாம். உமர் தன் நூலில் குறிப்பிட்டுள்ள அதிர்ச்சியூட்டிய அனுபவம் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். எனவே, செய்யப்படும் சோதனைகள் மிகமிகத் தவறானவையாகப் போய்விடும் சாத்தியம் எப்போதுமே உள்ளது.

பதில் 2

எவ்வளவு சரியாகச் செய்தாலும் அது தவறான பரிசோதனைதான். இதுபற்றி ஏற்கெனவே பார்த்தோம். இங்கே இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். உதாரணமாக, ரத்தப் பரிசோதனையை எடுத்துக்கொள்ளலாம்.

விரல் நுனிகள், மணிக்கட்டு, முழங்கை போன்ற இடங்களிலிலிருந்து நமக்கு ரத்தம் எடுத்துப் பரிசோதிக்கப்படுகிறது. தசைகளில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது என்றும் இதைச் சொல்லலாம். ‘நரம்புல ஊசி போட்டார்’ என்று பேச்சுவழக்கில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். நம் உடலுக்குள் சிரைகள், தமனிகள் என்று இரண்டு சமாச்சாரங்கள் உள்ளன. ஆங்கிலத்தில் அவற்றை முறையே வெய்ன் (vein) என்றும் ஆர்ட்டரி (artery) என்றும் குறிப்பிடுவார்கள். சிரையைத்தான் நாம் ‘நரம்பு’ என்று குறிப்பிடுகிறோம். சரி, இதையெல்லாம் ஏன் சொன்னேன் என்கிறீர்களா? இதோ, சொல்லத்தானே போகிறேன்.

நாம் நம் வீட்டில் இருக்கும் தண்ணீர் சுத்தமானதா அசுத்தமானதா என்று பரிசோதிக்க வேண்டுமென்றால், எந்தத் தண்ணீரை எடுத்துக்கொள்வோம்? குடிப்பதற்கான தண்ணீரைத்தானே? நம் வீட்டு சாக்கடை நீரையோ, கழிவறை நீரையோ பரிசோதிப்போமா? இல்லைதானே? ஏன்? இது என்ன முட்டாள்தனமான கேள்வி, அவை குடிநீருமல்ல, சுத்தமான நீருமல்ல என்பதுதானே உங்கள் பதில்? சரிதான். ஆனால், ரத்தப் பரிசோதனைக்கு மட்டும் ஏன் எல்லோரும் அசுத்த ரத்தத்தையே பரிசோதனைக்குக் கொடுக்கிறீர்கள் என்று நான் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

என்னது, அசுத்த ரத்தமா? இல்லையே, என் உடம்பிலிருந்து, என் நரம்பிலிருந்து, என் தசையிலிருந்து எடுக்கப்பட்ட ரத்தம்தானே என்றுதானே சொல்வீர்கள். அங்கேதான் பிரச்னையே. என்ன பிரச்னை என்கிறீர்களா? சொல்கிறேன்.

நம் உடலில் எந்நேரமும் கழிவுகள் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. அவை அவ்வப்போது நீக்கப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. நம் உடலின் முக்கிய உள்ளுறுப்புகளான கல்லீரல், நுரையீரல், இதயம் போன்ற உறுப்புகளின் துணைகொண்டு இக்காரியங்கள் நடந்தேறுகின்றன. நீக்கப்பட்ட கழிவுகள் ரத்தத்தில் கலந்து ஓடிக்கொண்டே இருக்கின்றன. எனவே, சதாகாலமும் கழிவுகள் சேருவதும், அவை நீக்கப்படுவதுமான இரண்டு காரியங்களும் இரவு பகல் மாதிரி, மாறி மாறி நம் உடலுக்குள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. அதற்கேற்றவாறு கழிவுகளைச் சுமந்து செல்லும் ரத்தம் அசுத்த ரத்தமாகவும், கழிவுகள் நீக்கப்பட்ட ரத்தம் தூய்மையான ரத்தமாகவும் மாறி மாறி இருந்துகொண்டே இருக்கும்.

எனவே, நச்சுக்கள் நீக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட ரத்தம் சுத்த ரத்தம். கழிவுகளைச் சுமந்து செல்லும் ரத்தம் அசுத்த ரத்தம் என்று இப்போதைக்குப் புரிந்துகொள்ளலாம். தமனிகளில் சுத்த ரத்தம் இருக்குமென்றும், சிரைகளில் அசுத்த ரத்தம் இருக்குமென்றும் அலோபதி கூறுகிறது. அதோடு, ஆக்ஸிஜன் கலக்கப்பட்ட ரத்தமே சுத்த ரத்தம் என்றும் கூறுகிறது. அது உண்மைதான். ஆனாம் முழு உண்மையல்ல. எல்லா நச்சுகளும் நீக்கப்பட்ட ரத்தமே சுத்த ரத்தம். அதற்கு ஆக்ஸிஜனின் சேர்க்கை உதவலாம். அது வேறு விஷயம். சரி, இப்போது மிக முக்கியமான விஷயத்துக்கு வரலாம். அது என்ன?

நமக்கு எங்கிருந்து ரத்தம் எடுக்கிறார்கள் என்று பார்த்தோம்? விரல் நுனிகள், முழங்கைப் பகுதி, மணிக்கட்டு இப்படித்தானே? அவையாவும் சிரைகளில் இருக்கும் அசுத்த ரத்தம்தான்! நம் “தசையின் மேற்பகுதியில் இருந்து எங்கு எடுத்தாலும் அசுத்த ரத்தம்தான் கிடைக்கும்” என்கிறார் ஹீலர் உமர்.

தமனிகள் தசைக்குக் கீழே, ஆழத்தில் உள்ளன. அவற்றில் சுத்த ரத்தம் இருக்கும் (என்றே வைத்துக்கொள்வோம்). ஏனெனில், மிகச்சரியாக இங்கே, இதோ இந்தப் புள்ளியிலிருந்து சுத்த ரத்தம் ஆரம்பமாகிறது என்றோ, இங்குதான் அசுத்த ரத்தம் இருக்கிறது என்றோ யாரும் சொல்ல முடியாது. ஏனெனில், உடல் தனித்தனி பாகங்களாக இயங்குவதில்லை. அது ஒன்றுபட்டு, ஒருங்கிணைந்து செயல்படும் அற்புத அமைப்பு. அலோபதி சொல்வதுபோல, ஒரு பேச்சுக்காக தமனிகளில்தான் சுத்த ரத்தம் உள்ளதாக வைத்துக்கொண்டாலும், தமனிகளை நெருங்க தசையை ஆழமாகக் கிழிக்கவேண்டி இருக்கும்! அப்படிச் செய்தால், அதுவரை உள்ள சிரைகளும் சேர்ந்துதான் கிழியும். எனவே, ஒன்றிருந்து நூறுக்குச் செல்வதற்குள் தொன்னூற்று ஒன்பதும் வருவதுபோல, தமனிகளை நெருங்குவதற்குள் பல சிரைகளைக் கிழித்துத் தாண்டவேண்டி இருக்கும்.

அப்படியானால் என்ன அர்த்தம்? ஒரே அர்த்தம்தான். சுத்த ரத்தத்தை மட்டும் எடுத்தல் சாத்தியமே இல்லை! ஏனெனில், தமனியை நெருங்கி அதை எடுப்பதற்குள் கிழிபட்ட சிரைகள் வழியாக அசுத்த ரத்தமும் சுத்த ரத்தத்தோடு கலந்துவிடும்!

அப்படியானால்?  பரிசோதனைக்காக எடுத்து அனுப்பப்படும் எல்லா ரத்தமும், எல்லாருடைய ரத்தமும், அது கோட்சேயுடையதானாலும் சரி, காந்தியுடையதானாலும் சரி, அசுத்த ரத்தம்தான்!  கழிவுகள் அதில் இருக்கத்தான் செய்யும். எனவே, அதைப் பரிசோதித்து இன்னின்ன கழிவுகள் இருக்கின்றன என்று சொன்னால் அதில் அர்த்தமே இல்லை. ஏனெனில், அக்கழிவுகள் யாவும் சிறுநீர் வழியாக வெளியேற வேண்டியவை. நீங்கள் லேப் ரிபோர்ட்டை கையில் எடுத்துக்கொண்டு உங்கள் டாக்டரைப் பார்க்கப் போய்க்கொண்டிருக்கும்போதுகூட அவை சுத்தப்படுத்தப்பட்டுவிடலாம்!

எனவே, எல்லா மருத்துவ ஆய்வுக்கூட அறிக்கைகளும் பழைய செய்திகளாகும்! இன்றின் செய்தி, இப்பொழுதின் செய்தி அதில் இருக்க வாய்ப்பே இல்லை!

பதில் 3

இதுதான் மிக மோசமானது. கல்லூரிக்குப் போகாமலே சில மாணவர்கள், அப்படிப் போகாத பல நாட்களுக்கும் ‘அட்டெண்டன்ஸ்’ வாங்கிவிடுவார்கள்! ஆமாம், கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுக்கை வேண்டியதைக் கொடுத்து ‘வாங்கிவிடுவார்கள்’!. அதேமாதிரி, டெஸ்ட் எதுவும் எடுக்காமலே, எதையும் நுண்ணோக்கி வழியே பார்க்காமலே, எதையும் அலசி ஆராயாமலே, எல்லாமே நார்மலாக இருக்கிறது என்று ‘ரிசல்ட்’ கொடுத்துவிடுவதும் உண்டு! சில உதாரணங்கள் தருகிறேன்.

பேசின் டெஸ்ட் அல்லது சிங்க் டெஸ்ட்

இதுபற்றி ஆமிர் கானின் சத்யமேவ ஜயதேயிலும் சொல்லப்பட்டது. இதுபற்றியும் இன்னும் பல மருத்துவ நிறுவனங்களின் மோசடிகள் பற்றியும் மனசாட்சியுள்ள இரண்டு மருத்துவர்கள், டாக்டர் அருண் காத்ரே, டாக்டர் அபய் ஷுக்லா இருவரும் இணைந்து ஒரு புத்தகம் எழுதியுள்ளனர். “Dissenting Diagnosis”  என்பது அதன் தலைப்பு. அதில் மனசாட்சியுள்ள 78 டாக்டர்கள், மருத்துவ நிறுவனங்களைத் தோலுரித்துக் காட்டுவதை அவர்கள் இருவரும் பதிவு செய்துள்ளனர். அந்த நூல் பற்றி சற்று விரிவாகப் பார்க்க இருக்கிறோம். அதிலும் பேசின் டெஸ்ட் பற்றிப் பேசப்பட்டுள்ளது. அது என்ன பேசின் டெஸ்ட்?

ரொம்ப சிம்பிள். ‘டெஸ்ட்’ என்ற பெயர் இருந்தாலும் அது ஒரு ‘டெஸ்ட்’டே அல்ல. ஆமிர்கான் சொல்வதுபோல, உங்களது ரத்தம் அல்லது சிறுநீர் இவற்றைப் பரிசோதனைக்காக எடுத்து வாங்கி, அப்படியே எடுத்துக்கொண்டுபோய் கைகழுவும் வாஷ் பேசினில் கொட்டிவிடுவார்கள்! அல்லது ‘சிங்க்’கில் கொட்டிவிடுவார்கள்! ஆனால், எல்லாம் நார்மலாக இருப்பதாக அறிக்கை கொடுப்பார்கள்! ஏனெனில், அந்த நோயாளியை ஏற்கெனவே பரிசோதித்த மருத்துவர், அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திக்கொண்டுதான் அவரை ஏகப்பட்ட ‘டெஸ்ட்’டுகள் எடுத்துவரும்படி அனுப்புவார்!

இதுதான் ‘பேசின் டெஸ்ட்’ அல்லது ‘சிங்க் டெஸ்ட்’. இதில் நோயாளிகளுக்குதான் மனஉளைச்சல். என்னைப் போன்ற பயந்தாங்கொள்ளிகளுக்கு ‘டெஸ்ட்’டுக்கு ரத்தம் கொடுப்பதென்பதெல்லாம் பயங்கர பிரச்னை. ஊசியைக் கண்டாலே நான் ஊரைக் காலிசெய்துவிட்டுப் போய்விடுவேன். என்னைப் போன்ற ஒருவரைப் பிடித்து, கையை இறுக்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி, அதில் ஏதோ ஒன்றைச் சுற்றி, ஏதோ ஒரு திரவத்தைக் கொஞ்சம் என் நரம்பு மேலே தேய்த்து, ஊசியை எடுத்து என் நரம்புக்குள் செலுத்தும்போது… அப்பப்பா, அது நரகவேதனை!

என் நண்பர் ஒருவருக்கு சிறுநீருக்குப் பதிலாக ரத்தம் வந்தது. அவரை நானும் இன்னொரு நண்பரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ‘டெஸ்ட்’டெல்லாம் முடிந்து என் நண்பர் மெல்ல மெல்ல முனகிக்கொண்டே வந்தபோது, அந்த இன்னொரு நண்பர் சொன்னார்: ‘டேய் உனக்கு ப்ளட் டெஸ்ட் எடுக்குறது ரொம்ப ஈஸிடா. யூரின் டெஸ்ட் எடுக்குறதுதான் கஷ்டம்’ என்றார்!

ஒருமுறை, அப்போதைய பம்பாயில் நான் மெடிக்கல் செக்கப்புக்காக ரத்தம் கொடுத்தேன். (வெளிநாட்டு செல்ல முயற்சி). கொஞ்ச நேரத்தில் என் முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட்டது. ரத்தம் எடுத்த பெண் டாக்டர் அல்லது நர்ஸ் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே ஹிந்தியில், ‘க்யா தும்கொ ச்சக்கர் ஆகயா?’ என்றாள். எனக்கு ஒரு மண்ணும் புரியவில்லை. ரத்தம் எடுத்தபோது மயங்கி விழுந்திருக்கிறேன்! காலையில் சாப்பிடாதது மட்டும் அதற்குக் காரணமல்ல. ஊசியைப் பார்த்ததுதான் முக்கியமான காரணம். அது மாட்டு ஊசி மாதிரி ‘மொத்தமாக’ வேறு இருந்து தொலைத்தது!   

இப்படியெல்லாம் பயப்படுபவர்களை சித்திரவதை செய்து ரத்தம் எடுத்து, அதற்கான பணத்தையும் பெற்றுக்கொண்டு, அந்த ரத்தத்தை வாஷ்பேசினில் கொட்டிவிட்டு, நார்மல் என்று அறிக்கை கொடுக்கிறார்களே, இதில் என்ன தர்மம் இருக்கிறது? என் பாட்டி இப்போது உயிருடன் இருந்தால், ‘அவன்லாம் ரத்த வாந்தி எடுத்து சாகணும்’ என்று சாபம் கொடுத்திருப்பாள்!

நாம் சாபம் கொடுக்க வேண்டாம். ஆனால், அவர்கள் புண்ணியம் செய்யாவிட்டாலும் பாவம் செய்யாமலாவது இருக்கலாமல்லவா?

இன்னொரு முக்கியமான விஷயத்தை உமர் தன் நூலில் குறிப்பிடுகிறார். ரத்தப் பரிசோதனை செய்வதற்கு முன் “நோயாளிக்குப் பரிந்துரைக்கப்பட்ட எல்லா ரசாயன மருந்துகளும் நிறுத்தப்பட வேண்டும். ஏனென்றால், மருந்துகளின் விளைவாக ரத்தத்திலுள்ள பொருட்களின் அளவில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்” என்கிறார் (பக்கம் 41).  ஆனால், இப்போது அந்த நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. அதனால், மருத்துவ ஆய்வுக்கூட அறிக்கைகள் குழப்பங்கள் மிகுந்ததாக இருக்கின்றன என்றும் அவர் மிகச்சரியாகக் கணிக்கிறார்.

ரத்தப் பரிசோதனை ரகசியம் ஒன்று

ஒரே ஒரு துளி ரத்தத்தை எடுத்து அதில் உள்ள கோடிக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான வெள்ளை அணுக்களை எண்ணி மிகச்சரியாகச் சொல்ல முடியுமா? ஏன் முடியாது? ஒரு கால்குலேட்டர் இருந்தால் சொல்லிவிடலாம்! என்ன, ஆச்சரியமாக உள்ளதா? மருத்துத் துறையின் மோசடி ஆச்சரியங்கள் இன்னும் நிறைய உண்டு. பார்க்கலாம்.

நம்மிடமிருந்து ஆய்வுக்கூடத்தில் (குத்தி) எடுக்கப்பட்ட ஒரு துளி ரத்தத்தோடு சில வேதிப்பொருள்களைக் கலப்பார்கள். அதன் விளைவாக வெள்ளை அணுக்களைத் தவிர்த்த வேறு அணுக்களையெல்லாம் கொன்றுவிடுவார்கள். கொலைகாரர்கள்! கௌன்டிங் சேம்பர் (Counting Chamber) என்று ஒரு கண்ணாடிக் கருவி அல்லது தட்டு இருக்கும். அதன் மீது மற்ற அணுக்கள் கொல்லப்பட்ட, வெள்ளை அணுக்கள் மட்டும் உள்ள நம் ரத்தத்தின் துளியைச் செலுத்துவார்கள். அந்தக் கண்ணாடிக் கருவி, சதுரம் சதுரமான அமைப்பை கொண்டது. அந்தச் சதுரங்களில் போய் நம் வெள்ளை அணுக்கள் தங்கிவிடும். தனக்கான அறை என்று நினைத்துக்கொள்ளுமோ என்னவோ! இப்படி வெள்ளை அணுக்கள் போய் அதில் படிந்தபின் மைக்ராஸ்கோப் மூலம் பார்ப்பார்கள்.

வெள்ளை அணுக்களை மட்டும் பிரித்தெடுப்பது சாத்தியமா என்ற கேள்வி நியாயமானதே. ஆனால், இதற்குப் பதில் எனக்குத் தெரியாது. அப்படித்தான் சொல்லப்பட்டும், எழுதப்பட்டும் இருக்கிறது. இங்கே முக்கியம் நம்முடைய அறிவார்ந்த கேள்வி அல்லது சந்தேகம் அல்ல. WBC கௌன்ட் எப்படி நடக்கிறது என்று தெரிந்துகொள்வதுதான் இங்கே முக்கியம்.

கண்ணாடிக் கருவியின் நான்கு மூலைகளிலும் தங்கி இருக்கு வெள்ளை அணுக்களைக் கூட்டுவார்கள். உதாரணமாக 115 வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அதை 50-ஆல் பெருக்கிவிடுவார்கள். 5750 வரும். அதுதான் ஒரு சதுர மில்லி மீட்டர் ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் அளவு என்கிறார் உமர்! கூட்டல் ப்ளஸ் பெருக்கல்! தட்ஸ் ஆல்!

எல்லா சதுர மில்லி மீட்டர் ரத்தத்திலும் இதே அளவுதான் இருக்குமா? சொல்ல முடியாது. ஆம்பூர் பாஷையில் சொல்வதானால், கொஞ்சம் ‘கம்மி ஜாஸ்தி’ இருக்கலாம்! வெள்ளை அணுக்களுக்கு மட்டுமல்ல. சிவப்பு அணுக்கள், பச்சை அணுக்கள், கருப்பு அணுக்கள் என்று எத்தனை இருந்தாலும், எல்லாவற்றுக்கும் இதே கணக்குதான். இந்தக் கணக்கை மில்லியன் கணக்கிலும் போட்டுச் சொல்லலாம். எண்களை ஒழுங்காக அழுத்தினால், கால்குலேட்டர் என்ன தவறாகவா சொல்லப்போகிறது!

நம் ரத்தத்தில் ப்ளேட்லெட்டுகள் என்று சொல்லப்படும் ரத்தத்தட்டுகளும் உண்டு. அதை இதே பாணியில் லட்சக்கணக்கில் அளந்து சொன்னால், நமக்கு டெங்கு இருப்பதாக உறுதி செய்யலாம்!

ஹார்மோன் பொய்கள்

வெள்ளை அணுக்களை அளந்த மாதிரி நம் உடலில் உள்ள ஹார்மோன்களையும் எண்ணாமலே எண்ணிச் சொல்ல முடியும்! ஹார்மோன் பரிசோதனைகளின் மூலம்தான் ஒரு நோயாளிக்கு என்ன நோய் அல்லது என்னென்ன நோய்கள் வந்துள்ளன என்று சொல்ல முடியுமாம்!

ஹார்மோன் என்றதும் எனக்கு மீண்டும் ஆமிர் கானின் மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அதில் ஒரு அப்பாவையும் மகளையும் அவர் பேட்டி காண்பார். அன்பு மனைவியை  ஆபரேஷன் என்ற பெயரில் நடந்த கொலைக்குப் பலி கொடுத்த குடும்பம் அது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்று சொல்லி அவர் மனைவியை ‘அட்மிட்’ செய்து ஆபரேஷனுக்கு முதல் நாள், உங்கள் மனைவிக்கு பாங்க்ரியாஸைக்கூட (கணையம்) மாற்றிவிடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்! ஏனென்றால், அவர்களிடம் ஒரு எக்ஸ்ட்ரா கணையம் இருந்திருக்கிறது! கணையம்தான் இன்சுலின் என்ற மிகமுக்கியமான ஹார்மோனைச் சுரக்கும் உறுப்பாகும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளால் யாருடைய வாழ்க்கையையும் மாற்றிவிட முடியாது என்பதையும், அவ்வாறு மாற்று உறுப்பு பெற்றுக்கொண்டவர்கள் நீண்ட காலம் உயிர் வாழ முடிந்ததாக சரித்திரம் கிடையாது என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம். சரி, மீண்டும் ஹார்மோன் பரிசோதனைக்கு வருவோம். 

நம் உடலில் நாளமில்லாச் சுரப்பிகள் பல இடங்களில் அமைந்துள்ளன. அவைதான் ஹார்மோன்களைச் சுரக்கின்றன. பின் அவை ரத்தத்தில் கலக்கின்றன. ரத்தத்தில் கலந்த ஹார்மோனைத்தான் பரிசோதனை என்ற பெயரில் ஏதோ செய்து உங்களுக்கு இன்னின்ன நோய்கள் இருக்கின்றன அல்லது வரப்போகிறன என்கிறார்கள்! அது சரியா?

கேள்விக்கான பதில் இல்லை என்பதுதான். ஏன்? ஏனென்றால், ஹார்மோன்களின் தன்மைதான் காரணம். வெப்பமும் காற்றும் இருந்தால் ஹார்மோன்கள் குஷியாகிவிடும். அந்த ‘ரொமான்டிக்’கான சூழலில் அவற்றோடு வினைபுரிய ஆரம்பிக்கும். அப்போது மாறுதல்கள் ஏற்படும். ஆனால், பரிசோதனை செய்யப்படும் ஹார்மோன்களில் இப்படி நடக்காது. ஏன்?

ஹார்மோன் பரிசோதனைக்காக ரத்தத்தை எடுத்து, பத்திரமாக பாட்டில்களில் ‘பேக்’ செய்து கூரியரில் மும்பைக்கு அனுப்பிவிடுவார்கள். மூன்று நான்கு நாட்கள் கழித்து அது ஹார்மோன் பிணமாகப் போய்ச்சேரும். அப்படிப் பரிசோதிக்கப்படும் ரத்தத்தில் ஹார்மோனின் அளவு எப்படி சரியாக இருக்கும்?

அதுமட்டுமல்ல. ஹார்மோன்கள் தான்தோன்றித்தனமாக இயங்குபவை அல்ல. மற்ற ஹார்மோன்களோடு இணைந்து, விட்டுக்கொடுத்து செயல்படுபவை. அட்ரீனலின் சுரக்கும்போது இன்சுலின் சுரக்காது, இன்சுலின் வெளியே வந்தால், அட்ரீனலின் கல்லீரலுக்கு உள்ளே போய்விடும் என்பதையெல்லாம் ஏற்கெனவே பார்த்தோம்.

அதுமட்டுமல்ல. ஹார்மோன்கள் நம் உணர்ச்சிகளோடு தொடர்புகொண்டவை. உணர்ச்சி என்றாலே, உடலுக்குள் நிகழும் சில வேதியியல் மாற்றங்கள் என்றுதான் அர்த்தம். ரொம்ப குஷியாக உணர்கிறீர்களா?  உங்கள் ‘மூடு’ மாறிக்கொண்டே இருக்கிறதா? செரடோனின் என்ற ஹார்மோனின் வேலை அது.  செரடோனினுக்கு ‘சந்தோஷ ஹார்மோன்’ என்று இன்னொரு பெயர்கூட உண்டு. பசி அதிகமானால், அது ஆரக்ஸின் என்ற ஹார்மோனில் வேலை. அச்சம் வந்துவிட்டால், ஓடு என்று சொல்வது அட்ரீனலினின் வேலை. உடலுறவில் உச்சகட்டத்தை உணர வேண்டுமா? ஆக்ஸிடாக்ஸின் என்ற ஹார்மோன் வேலை செய்ய வேண்டும்! தாய்ப்பால் சுரக்கவும் அதுதான். பகலில் தூக்கம் தூக்கமாக வருகிறதா? மெலடோனின் ஹார்மோன் சரியாகச் சுரக்கவில்லை என்று அர்த்தம்.

நிலைமை இப்படி இருக்கும்போது, ஆறப்போட்ட ஹார்மோன்களை வைத்து சரியான முடிவுகளை எப்படிச் சொல்ல முடியும்?

மருத்துவ ஆய்வுக்கூடங்களில் பரிசோதனைகளைவிட கால்குலேட்டர்களே முக்கியமானவை. அவற்றின் கணக்கீடுகளின் அடிப்படையில்தான் நாம் நம் உடல் நலத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என்று ஹீலர் உமர் சொல்வது சரிதானே?

நன்றி: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன? அ. உமர் பாரூக். எதிர் வெளியீடு, பொள்ளாச்சி - மூன்றாம் பதிப்பு, டிசம்பர் 2014.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.