முகப்பு
பேலியோ டயட்

பகுதி 15: ஆட்டிசம்

ஆட்டிசம் (Autism) என்பது மூளையைப் பாதிக்கும் ஒருவித நரம்பியல் குறைபாடு (ஆட்டிசம் என்பதைத் தமிழில், மதியிறுக்கம் அல்லது தன்முனைப்பு குறைபாடு என்று கூறலாம்).

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:11 PM
பகிர்:

ட்டிசம் (Autism) என்பது மூளையைப் பாதிக்கும் ஒருவித நரம்பியல் குறைபாடு (ஆட்டிசம் என்பதைத் தமிழில், மதியிறுக்கம் அல்லது தன்முனைப்பு குறைபாடு என்று கூறலாம்). ஆட்டிசம் எதனால் ஏற்படுகிறது என்பதற்கு மருத்துவத் துறையில் தெளிவான பதில்கள் இல்லை. இந்தியாவில் 1 கோடி குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிப்படைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரியான மருத்துவ ஆய்வுகள் நிகழாத காரணத்தால் 1980 வரை ஆட்டிசம் என்பது மேலைநாடுகளில் மட்டுமே வரும் வியாதி என்கிற கருத்து இந்திய அரசிடம் இருந்தது. 2001-ம் ஆண்டில்தான் ஆட்டிசத்தின் தாக்கத்தை இந்திய அரசு புரிந்துகொண்டது. இந்தியாவில் இப்போது பிறக்கும் 250 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளதை எப்படிப் புரிந்துகொள்வது?

குழந்தைகள் பொதுவாக மிகுந்த விளையாட்டுத்திறனும், கற்பனைத்திறனும் கொண்டவர்கள். பிறந்த ஓரிரு மாதங்களில் புன்னகை செய்யத் தொடங்குவார்கள். பெயரைச் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்ப்பார்கள். விரலை நீட்டினால் தொடுவது, கொஞ்சினால் சிரிப்பது என மிகவும் சகஜமாக அனைவரிடமும் பாகுபாடு பார்க்காமல் பழகுவார்கள். ஆனால் ஆட்டிசம் உள்ள குழந்தைகள் வேறுமாதிரி நடந்துகொள்வார்கள்.

பிறந்த ஒரு வருடத்திலேயே அதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள். பெயர் சொல்லிக் கூப்பிட்டால் தன்னைத்தான் அழைக்கிறார்கள் என்று அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. பிற குழந்தைகளுடன் விளையாடாமல் தனிமையில் இருக்க விரும்புவார்கள். தாமதமாகப் பதில்கள் அளிப்பார்கள். பெற்றோர் கோபித்தாலோ, கொஞ்சினாலோ அதற்கேற்ற அழுகை, சந்தோஷ உணர்வுகளை வெளிப்படுத்தச் சிரமப்படுவார்கள். இந்தச் சிறிய பாதிப்புகள் பிறகு மிகவும் தீவிரமடையும். அப்போது கீழ்க்காணும் பிரச்னைகள் உண்டாகும்.

  • கற்பனைத்திறன் உடைய விளையாட்டுகளில் ஈடுபடாமல் இருப்பது

  • சக வயது குழந்தைகளுடன் நட்பு கொள்ளாமல் இருப்பது

  • தொடர்ந்து ஒரு உரையாடலை மேற்கொள்ள சிரமப்படுதல்

  • தொடர்ச்சியாக பேசியதையே திரும்பத் திரும்பப் பேசுதல். புதிதான வார்த்தைகளைக் கற்பதில் சிரமப்படுதல்

  • புதிதாக எதையும் கற்றுக்கொள்ள முடியாமல் போவது, பழக்கமான விஷயங்களையே தொடர்ந்து செய்வது. (தன்னையே காயப்படுத்திக்கொள்ளுதல், பிறரைத் தாக்குதல் போன்ற அறிகுறிகளும் காணப்படும்.)

ஆட்டிசத்தின் அறிகுறிகள் குழந்தைகளிடம் தென்பட்டால் உடனே குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும். ஆட்டிசத்தைப் பற்றி சரிவரத் தெரியாத மருத்துவர்கள் இந்த நோயைத் தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. மருத்துவமனைகளில் நரம்பியல் நிபுணர், மனநிலை மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை அமைத்து குழந்தைகளுக்கு ஆட்டிசம் உள்ளதா என்பதைக் கண்டறிய பரிந்துரை செய்யப்படுகிறது. ஒரே மருத்துவரால் ஆட்டிசத்தைக் கண்டறிவது கடினம்.

ஆட்டிசம் வருவதால் பல பிரச்னைகள் ஏற்பட்டாலும் ஆட்டிசம் வந்த குழந்தைகளுக்குச் சிலசமயம் வேறு பல திறமைகளும் அதிகரிக்கின்றன. உதாரணமாக ஆட்டிசம் உள்ளவர்கள் மிகப்பெரிய எண்களைக் கூட்டுவது, பெருக்குவது போன்ற கணிதத்திறனைப் பெற்றிருப்பார்கள். அழகாகப் படம் வரைவார்கள். நினைவுத்திறனை அதிகமாகப் பெற்றிருப்பார்கள். எல்லாருக்கும் இப்படிப்பட்ட திறன் இருக்கும் என்று கூற முடியாது. எனினும் சராசரி மக்களிடம் இத்தகைய திறன் படைத்தோர் உள்ள விகிதத்தை விட ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டோரிடையே இந்த விகிதம் அதிகமாக இருக்கும். 

ஆட்டிசம் உள்ளவர்களிடம் உள்ள இத்தகைய திறன் குறித்த காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. கண்பார்வை இல்லாதோருக்கு காது கேட்கும் திறன் அதிகமாக இருப்பது போன்றுதான் இந்தத் திறமையும் அமைந்திருக்கும் என்கிற கருத்து நிலவுகிறது.

ஆட்டிசம் வருவதற்கான காரணம் என்ன? வைரஸ் தாக்குதல், மரபணுரீதியான பாதிப்பு, சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு என்பன போன்ற காரணிகள் கூறப்படுகின்றன. ஆனால் பெற்றோரை இதற்காக குறைகூறுதல் சரியல்ல. முன்பு தடுப்பூசிகள் போடுவதால் ஆட்டிசம் உருவாகிறது என ஹாலிவுட் நடிகர்கள் சிலரும், பிரபலங்களும் கூறியதால் பரபரப்பு உண்டானது. ஆனால் தடுப்பூசிகளுக்கும், ஆட்டிசத்துக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது என விஞ்ஞானிகள் உறுதியாகக் கூறுகிறார்கள். இதை நம்பி தடுப்பூசிகளைத் தவிர்த்து குழந்தைகளைப் பலவிதமான நோய்தொற்றுகளுக்கு ஆளாக்க வேண்டாம். ஆட்டிசத்துக்கு மரபணுக்கள் காரணமாக இருக்கலாம் என்கிற கருத்து விஞ்ஞானிகளிடையே வலுவடைந்து வருகிறது.

இந்தத் தொடரில் பேலியோ டயட் பற்றித்தானே பேசுகிறோம், அந்த டயட்டால் ஆட்டிசத்துக்கு ஏதாவது பயன் உண்டா என்கிற கேள்வி உங்களுக்குத் தோன்றும். அதைப் பற்றியும் இனி காணலாம்.

ஆட்டிசமும் உணவும்

ஆட்டிசம் வருவதற்கு உணவும் ஒரு காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் சிலர் கூறுகிறார்கள். குறிப்பாக சில ஆய்வுகள் கோதுமை புரதமான க்ளூட்டனும், பால் புரதமான கேஸினும் ஆட்டிசத்தைத் தூண்டலாம் என்ற கருத்தை முன்வைக்கின்றன. கருவுற்ற முதலாம் மும்மாதத்தில் தாயின் உணவில் ஃபோலிக் அமிலம் குறைவாக இருந்தால் குழந்தைக்கு ஆட்டிசம் வரலாம் என்றும் கூறப்படுகிறது. உணவுதான் ஆட்டிசத்துக்குக் காரணம் என்பதில்லை. ஆனால், நம் உணவு ஆட்டிசத்துக்குக் காரணமான மரபணுக்களைத் தூண்டிவிட்டு ஆட்டிசத்தை வரவழைக்க வாய்ப்புண்டு என்கிற கருத்தாக்கம் முன்வைக்கப்படுகிறது

ஆட்டிசமும், கெடொஜெனிக் டயட்டும் (Ketogenic diet)

கெடொஜெனிக் டயட் என்பது பேலியோவின் மிகத் தீவிரமான டயட் முறையாகும். பேலியோவில் எடுக்கும் பால், காய்கறிகள் போன்றவற்றை கெடொஜெனிக் டயட்டில் குறைவாக எடுத்துக்கொள்ளவேண்டும். இறைச்சி, முட்டை, வெண்ணெய், சீஸ் போன்றவற்றை அதிக அளவில் உண்ணவேண்டும்.

கெடொஜெனிக் டயட் என்பது தினமும் 20 கிராமுக்குக் குறைவான அளவுடைய மாவுச்சத்து உட்கொள்வதைக் குறிக்கிறது. அரிசி, கோதுமை, பருப்பு போன்ற தானிய உணவுகளில் மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) உள்ளது. எனவே, நாம் சாப்பிடும் இட்லி, தோசை, சப்பாத்தி, பிஸ்கட் போன்றவற்றில் மாவுச்சத்து அதிகம். இந்த டயட்டில் மாவுச்சத்து 20 கிராமுக்குக் குறைவான அளவிலும், புரதம் மொத்த கலோரிகளில் 15% எனும் அளவுக்கு குறைவான விகிதத்திலும், கொழுப்புசத்து கலோரிகளில் 80%க்கும் அதிகமான அளவிலும் காணப்படும்.

இத்தகைய கடுமையான கெடொஜெனிக் டயட், காக்காய் வலிப்புக்கான ஒரு தீர்வாக குழந்தைகள் நல மருத்துவமனைகள் சிலவற்றில் பரிந்துரைக்கப்படுகிறது. உதாரணமாக உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் காக்காய் வலிப்பால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கெடொஜெனிக் டயட்டைக் கொடுக்கவே தனி வார்டு ஒன்று உள்ளது. காக்காய் வலிப்பும் மூளையில் உண்டாகும் நரம்பியல் சம்பந்தப்பட்ட குறைபாடுதான் என்பதால் அதே போன்ற ஆட்டிசத்துக்கும் கெடொஜெனிக் டயட் ஒரு தீர்வாக அமையும் என்ற அடிப்படையிலான கருத்தை மருத்துவப் பேராசிரியர் நபோலி தலைமையிலான ஆய்வுக் குழு கூறுகிறது.

Frontiers in Pediatrics என்கிற மருத்துவ ஆய்விதழில், இவர்கள் பின்வரும் வாதங்களை முன்வைக்கிறார்கள். (இணைப்பு: http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4074854/)

கெடொஜெனிக் டயட்டால் ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவுகள் குறைந்து ஹார்மோன்களில் மாற்றம் வரும். உடல் க்ளுகோஸுக்குப் பதிலாக கிடோன்களை (Ketones) எரிபொருளாகப் பயன்படுத்தத் தொடங்கும். இதனால் மூளையின் செயல்பாட்டில் மாற்றம் உருவாகிறது.

கெடொஜெனிக் டயட், 80 ஆண்டுகளுக்கும் மேலாக மூளை சம்பந்தப்பட்ட பல வியாதிகளுக்கு ஒரு தீர்வாகப் பயன்படுகிறது. காக்காய் வலிப்புக்கு கெடொஜெனிக் டயட் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. மூளை சம்பந்தப்பட்ட அல்சைமர் மற்றும் பார்கின்சன் வியாதிகளுக்கும் கெடொஜெனிக் டயட் பலனளிக்கும்.

காக்காய் வலிப்பு உள்ள பல குழந்தைகளுக்கும் ஆட்டிசத்தின் சில அறிகுறிகள் காணப்படுகின்றன. இதனால் ஆட்டிசத்துக்கு கெடொஜெனிக் டயட் பலனளிக்கும் என்ற நம்பிக்கையில் ஆட்டிசம் உள்ள 30 குழந்தைகளுக்கு கெடொஜெனிக் டயட்டைக் கொடுத்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இக்குழந்தைகளுக்கு கலோரிகளில் 30% அளவு தேங்காய் எண்ணெயும், 30% கலோரிகள் வெண்ணெய்யும், 11% அளவு கலோரிகள் நிறைவுற்ற கொழுப்பாகவும், 10% கலோரிகள் புரதமாகவும், மாவுச்சத்து அளவு கலோரிகளில் 19% என இந்த அளவுகளில் கலோரிகள் வழங்கப்பட்டன (இதில் மாவுச்சத்தின் சதவிகிதம் சற்று அதிகம். காரணம் குழந்தைகள் மாவுச்சத்து 20 கிராமுக்கும் குறைவாக உள்ள கெடொஜெனிக் டயட்டின் கடுமையைத் தாங்கமாட்டார்கள்.)

30 குழந்தைகளில் 12 குழந்தைகள் டயட்டின் கடுமையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பிடிவாதம் பிடித்து ஆய்விலிருந்து வெளியேறினார்கள். மீதமுள்ள 18 குழந்தைகளுக்கு 2 வாரங்களில் மாற்றம் உண்டானது. 2 குழந்தைகளுக்கு ஆட்டிசத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டது. மீதமுள்ள 16 குழந்தைகளுக்கும் கூட குறிப்பிடத்தக்க விகிதத்தில் மாற்றம் காணப்பட்டது.

இன்னொரு ஆய்வில் கோதுமை புரதமான க்ளூட்டனும், பால் புரதமான கேஸினும் இல்லாத டயட், 12 வயது பெண்ணுக்கு 14 மாத காலம் கொடுக்கப்பட்டது. அந்த 14 மாதங்களில் அப்பெண்ணுக்குக் கணிசமான அளவில் ஆட்டிசத்தில் முன்னேற்றம் காணப்பட்டது. இதனால் ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனையின் அடிப்படையில் கெடொஜெனிக் டயட்டை வழங்கி ஆய்வுகள் நடக்கவேண்டும் என பேராசிரியர் நபோலி தலைமையிலான ஆய்வுக்குழு தங்களது ஆய்வில் பரிந்துரை செய்துள்ளது.

ஆட்டிசமும் பேலியோ டயட்டும்

குழந்தைகளால் கெடொஜெனிக் டயட்டின் கடுமையைத் தாங்கமுடியாது. எனவே அவர்களுக்கு பேலியோ டயட் மூலம் ஆட்டிசத்தைக் குணப்படுத்த முயற்சி செய்யலாம். குறிப்பாக மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் இவ்வகையான பேலியோ உணவுகளை ஆட்டிசத்தால் பாதிப்படைந்துள்ள குழந்தைகளுக்கு வழங்கலாம்.

கால்சியமும், மக்னீசியமும் நரம்புகள் மற்றும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் சக்தி கொண்டவை. அதே சமயம் பாலில் உள்ள கேஸின் எனும் புரதம் ஆட்டிசத்துக்குக் காரணமாகலாம் எனக் கருதப்படுவதால் ஆட்டிசம் உள்ள குழந்தைகள் பாலைத் தவிர்ப்பது நல்லது. பாலுக்குப் பதில் கால்சியம் அதிகமுள்ள கோழியின் கால்கள், மீன் தலைக் குழம்பு, நெத்திலி மீன், பிராக்களி, மத்தி மீன், முட்டை போன்றவற்றை குழந்தைகளுக்கு வழங்கலாம். மக்னீசிய சத்து அதிகம் உள்ள பாதாமையும் குழந்தைகள் உணவில் சேர்க்கவேண்டும். கால்சியமும், மக்னீசியமும் நரம்பு மற்றும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் சக்தி கொண்டவை.

கோலின் (Choline) எனப்படும் மூலச்சத்து, மூளையில் உள்ள செல்களைக் கட்டமைப்பதில் மிக முக்கியப் பங்காற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. நரம்புகளில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர்களை (neurotransmitters) இயக்குவதிலும் கோலின் பெரும்பங்கு வகிக்கிறது. மூளை நம் உடல் உறுப்புகளுடன் தொடர்பு கொள்ள விரும்பினால் அச்செய்தியை நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் மூலம் நரம்புகளின் வழியாக உடலுறுப்புகளுக்கு அனுப்புகிறது. உதாரணமாக ‘பேசு, வாயை மூடு’ என்பது போன்ற கட்டளையை மூளை, நியூரோடிரான்ஸ்மிட்டர் வடிவில் நரம்புகள் மூலம் வாய்க்கு  அனுப்புகிறது. இந்த நியூரோடிரான்ஸ்மிட்டர்களைக் கட்டமைக்கும் செல்களை உருவாக்குவதில் கோலின் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

கோலின் அதிகமாக உள்ள உணவுகள் முட்டை, சிக்கன், எறால் மீன் (Shrimp), வான்கோழி (Turkey) போன்றவை. அதனால் ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்குத் தினமும் தவறாமல் சிக்கன் அல்லது முட்டை ஒருவேளை உணவாக வழங்கப்படவேண்டும்

பி வைட்டமின்களும் அதேபோல மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவும் தன்மை கொண்டவை. அதனால் பி வைட்டமின்கள் உள்ள கீரைகள், ஆட்டு ஈரல், அவகாடோ பழம், பாதாம், இறைச்சி, முட்டை போன்ற உணவுகளும் குழந்தைகளுக்கு உகந்தவை. குறிப்பாக பி3 (Niacin) எனும் வைட்டமின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் ஆற்றல் கொண்டது. சிக்கன், மீன், ஆடு போன்ற புலால் உணவுகளில் பி3, பி5 மற்றும் பி6 வைட்டமின்கள் உள்ளன. இதில் பி5 வைட்டமின் மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை உடையது. பி6 வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் அது ஆட்டிசத்துக்குக் காரணமாகலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் ஆட்டிசம் உள்ளவர்களுக்கு சிக்கன், முட்டை, ஆடு போன்ற புலால் உணவுகளைக் கொடுப்பது மிகுந்த பலனை அளிக்கும்.

இது தவிரவும் ஆட்டிசம் உள்ளவர்கள் சில வகை அமினோ அமிலங்களை எடுப்பது மிகுந்த நன்மை அளிக்கும். காரணம் அமினோ அமிலங்கள் மூளையின் இயல்பான செயல்பாட்டுக்கு வழிவகுக்கும் தன்மை கொண்டவை. குறிப்பாக Glutamine, Taurine, Tyrosine, Phenyalalanine போன்ற அமினோ அமிலங்கள் மூளையின் செயல்பாட்டுக்கு முக்கியமானவை. இறைச்சி, முட்டை போன்றவற்றில் இந்த முக்கிய அமினோ அமிலங்களும் குறைவின்றி காணப்படுவதால் ஆட்டிசம் வந்தவர்களுக்கு இவை மிகுந்த நன்மை அளிக்கும்.

மெலடோனின் (Melatonin) எனும் ஹார்மோன் மூளைக்கு ஓய்வளித்து நல்ல உறக்கத்துக்கு வழிவகுக்கும். அதனால் மெலடோனின் அதிகமுள்ள உணவுகளான தக்காளி, வாழை, அன்னாசிப்பழம் போன்றவற்றையும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாம். தக்காளியில் Methylsuffonylmethane எனும் மூலச்சத்து காணப்படுகிறது. இது மூளையின் கூர்ந்து நோக்கும் திறனை அதிகப்படுத்துவதால் ஆட்டிசத்துக்குத் தக்காளி நல்ல பலனை அளிக்கும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

கோதுமை புரதமான க்ளூட்டனும், பால் புரதமான கேஸினும் ஆட்டிசத்தைத் தூண்டும் தன்மை கொண்டவை என சில ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் க்ளூட்டன் உள்ள கோதுமை, பார்லி போன்ற தானியங்களையும், கேஸின் உள்ள பாலையும் தவிர்க்கவேண்டும்.

கஃபின் (caffeine) மூளையைக் கிளர்ச்சியூட்டும் தன்மை கொண்டது. கஃபின் - காபி, தேநீர், கோக்/பெப்ஸி, சிலவகை சாக்லெட் போன்றவற்றில் காணப்படும். அதனால் ஃகபின் உள்ள உணவுப்பொருள்களைத் தவிர்க்கவேண்டும். அரிசி, பருப்பு, தானியம், சாக்லெட், இனிப்புகள் போன்றவற்றில் உள்ள மாவுச்சத்து இன்சுலின் அளவை அதிகரித்து உடலின் ஹார்மோன்களைக் குலைக்கும் தன்மை கொண்டவை. அதனால் மாவுச்சத்து நிரம்பிய இத்தகைய உணவுகளையும் தவிர்க்கவேண்டும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி, மூளைக்கு அமைதியளிக்கும் தன்மை கொண்டது. உடற்பயிற்சியால் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது. உடற்பயிற்சி மூளையின் செல்களைப் புதுப்பிக்கிறது. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. அதனால் ஆட்டிசம் உள்ள குழந்தைகளை விளையாட விடுவது அவர்களுக்கு மிக நல்லது.

மூளையின் செல்களைப் புதுப்பிக்கும் திறன் உண்ணாநோன்புக்கும் உண்டு. இது நம் பரிணாம வளர்ச்சியுடன் தொடர்புடையது. உணவில்லாமல் தவித்தபோதுதான் மனிதன் வேட்டையைப் பற்றி அதிக ஆர்வம் கொண்டு ஆராய்ச்சி செய்தான். புதுப்புது உத்திகளைக் கண்டுபிடித்தான். உண்ணாவிரதம் இருந்த பலரையும் ஆராய்ச்சி செய்ததில் அவர்கள் மூளையில் புதிய செல்கள் தோன்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகள் உண்ணாநோன்பு இருப்பது சிரமம் என்றாலும் வேறொரு முறையைக் கடைப்பிடிக்கலாம். ஒரு நாளின் 24 மணிநேரத்தில் எட்டு மணிநேரத்துக்குள் உணவு சாப்பிட வைத்து, மீதமுள்ள 16 மணிநேரம் அவர்களை விரதம் இருக்க வைக்க முயற்சி செய்யலாம்.

சூரிய வெளிச்சமும் மனிதனின் மூளை வளர்ச்சிக்கு முக்கியமானது. உலகின் அனைத்து உயிர்களும் சூரிய ஒளியை நம்பியிருப்பவை. சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி மிக முக்கிய ஹார்மோனாகும். அதனால் வெயிலில் குழந்தைகளை விளையாட விடவேண்டும். அது, உடற்பயிற்சி என்ற வகையிலும், மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் என்ற இன்னொரு விதத்திலும் ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்குப் பலனளிக்கக் கூடியது.

ஆட்டிச டயட்

காலை உணவு: தக்காளி, வெங்காயம், நெய் சேர்த்து தக்காளி ஆம்லெட்.

மதிய உணவு: அவகாடோ பழம், காளிஃபிளவர் அரிசி, ஏராளமான காய்கறிகள் சேர்த்த குழம்பு. காளிஃபிளவர் அரிசி குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லை என்றால் சிறிதளவு அரிசி சேர்த்து குழம்புடன் கொடுக்கலாம்.

மாலை சிறுதீனி: நீரில் ஊறவைத்த பாதாம், விரும்பும் அளவு.

இரவு: சிக்கன் (தோலுடன்) அல்லது மத்தி மீன்.

வாரம் ஒரு நாள் ஆட்டு ஈரல் வழங்கலாம். அன்னாசிப் பழமும் வாரம் ஒருமுறை கொடுக்கலாம். தக்காளி, காளான் போன்றவற்றை தினமும் உணவில் சேர்க்கவேண்டும். குழந்தைகளை விளையாட விடுவது, நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வது போன்றவற்றையும் செய்யவேண்டும். குப்பை உணவுகளைத் தவிர்க்கவேண்டும். இதனால் ஆட்டிசத்தின் பாதிப்பு பெருமளவு குறையும். குழந்தைகளிடம் நல்ல மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

(தொடரும்)

***

வாசகர்களே, பேலியோ டயட் குறித்த உங்கள் சந்தேகங்களை askdinamani@dinamani.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். முக்கியமான கேள்விகளுக்கு இத்தொடரின் ஓர் அத்தியாயத்தில் நியாண்டர் செல்வன் பதிலளிப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.