தத்துவ தரிசனம்

4. காப்பியங்களில் லோகாயதம்

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையிலும், சிறு காப்பிய வகையைச் சேர்ந்த நீலகேசியிலும், உலகாயதம் (லோகாயதம்) பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன.

பத்மன்

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையிலும், சிறு காப்பிய வகையைச் சேர்ந்த நீலகேசியிலும், உலகாயதம் (லோகாயதம்) பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. இதில் மணிமேகலை, பௌத்த மதக் காப்பியம்: நீலகேசி, சமண மதக் காப்பியம். மணிமேகலையில் பூதவாதியோடு உலகாயதர்களை சிறு வேறுபாட்டோடு இணைத்துப் பேசப்படுகிறது. ஆனால் நீலகேசியில், வேறுபாடு ஏதுமின்றி பூதவாதிகளே உலகாயதர்கள் என்பதைப்போல் சித்திரிக்கப்பட்டுள்ளது.

மணிமேகலையில் கதையின் நாயகியான மணிமேகலை, வஞ்சி மாநகரம் வந்தபோது அங்குள்ள சமயக் கணக்கர் அவையில், (பல்வேறு சமயவாதிகள் கூடியிருக்கும் அவையில்) அவரவர் கருத்துகளைப் பற்றிக் கேட்பதாக, சமயக் கணக்கர் திறம் கேட்ட காதை பகுதி அமைந்துள்ளது. அதிலே, பூதவாதியிடம் - அதாவது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையே உலகின் தோற்றம், நிகழ்வு என்று கருதும் மதத்தவரிடம் (கொள்கை உடையோரிடம்) மணிமேகலை அவர்களது கருத்துகளைக் கேட்கிறாள்.

அப்போது,

உயிரொடும் கூட்டிய உணர்வுடைப் பூதமும்
உயிரில் லாத உணர்வுஇல் பூதமும்
அவ்வப் பூத வழிஅவை பிறக்கும்
மெய்வகை இதுவே வேறுரை விகற்பமும்
உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே

என்று பூதவாதி கூறுகிறார்.

இதன் பொருள் – பூதங்கள் எனப்படும் இயற்கைக் கூறுகளில் உணர்வுடையவை, உணர்வில்லாதவை என இரு வகை உண்டு. அதிலே உணர்வுடைய பூதங்களின் கூட்டினால் உயிரும், உணர்வற்ற பூதங்களின் சேர்க்கையால் நாம் காணும் இதர பொருள்களும் தோன்றுகின்றன. உண்மையான நெறி இதுவேயாகும். இதற்கு (பூதக் கோட்பாட்டுக்கு) வேறு வகையான விளக்கமும் மெய்நெறிப் பொருளும் அதாவது தத்துவமும் கூறுவது உலகாயதனுடைய கருத்தாகும் என்கிறார் பூதவாதி.

அதாவது பூதவாதியைப்போல் லோகாயதர்கள், பூதங்களை உணர்வுப் பூதம், உணர்வில்லாத பூதம் என்று பிரிப்பதில்லை. அனைத்துப் பூதங்களுமே உணர்வில்லாதவையே. அவற்றின் சேர்க்கையினால் பொருள் உண்டாவதைப்போலவே, உயிர் என்ற உணர்வும் உண்டாகிறது என்பது உலகாயதர் கொள்கை. இரு பிரிவினருமே உயிரின் தனித்துவத்தை - ஆன்மாவை ஏற்றுக்கொள்ளவில்லை.

உயிர் என்ற உணர்வு எப்படித் தோன்றுகிறது என்பதற்கு பூதவாதி உள்ளிட்ட உலகாயதர்கள் கூற்றாக மணிமேகலை கூறுவதை இப்போது பார்ப்போம் -

தாதகிப் பூவும் கட்டியும் இட்டு
மற்றும் கூட்ட மதுக்களி பிறந்தாங்கு
உற்றிடு பூதத் து(உ)ணர்வு தோன்றிடும்
அவ்வுணர் வுஅவ்வப் பூதத்து அழிவுகளின்
வெவ்வேறு பிரியும் பறையோ சையிற்கெடும்

தாதகிப் பூ என்றால் அத்திப்பூ; கட்டி என்றால் கருப்பட்டி. இவை இரண்டுடன் வேறு சில பொருள்களையும் சேர்ப்பதால் மது (கள்) உருவாகி அதனைக் குடிப்பதால் களிப்பு பிறப்பதைப்போல, பூதங்களின் சேர்க்கையைால் உடலும் அதுசார்ந்த உயிர் என்ற உணர்வும் தோன்றுகின்றன. இந்த உயிர் என்ற உணர்வானது அது சார்ந்துள்ள பூதங்களின் (இது நிலம், நீர், தீ, வளி, விசும்பு ஆகிய ஐந்து என்று பூதவாதியும் விசும்பு எனப்படும் ஆகாயம் நீங்கிய நான்கு என்று லோகாயதர்களும் கூறுகின்றனர்) அழிவால், அதாவது அந்த உடலில் இந்த பூதங்களால் தோன்றிய சேர்க்கைப் பொருள்களின் அழிவால், அந்தந்த பூதங்கள் பிரிந்து அவை அவை அந்த இனத்தோடு சேரும். இதனால் உயிர் என்ற உணர்வும் பறையில் (மேளத்தில்) எழுந்த ஓர் ஓசையானது படிப்படியாக அடங்குவதைப்போல மறைந்துபோய்விடும் என்று கூறப்படுகிறது.

கண்கூடு அல்லது கருத்துஅளவு அழியும்
இம்மையும் இம்மைப் பயனும்இப் பிறப்பே
பொய்ம்மை மறுமைஉண் டாய்வினை துய்த்தல்

என்றும் பூதவாதி தொடர்ந்து கூறுகிறார். இது பூதவாதி உள்ளிட்ட லோகாயதர்களின் பொதுவான கருத்தாகும். கண்கூடாகப் பார்க்கப்படும் பிரத்யட்சம் மட்டுமே உண்மை. கருத்தால் அதாவது ஊகத்தால் அறிந்துகொள்வதாகக் கூறப்படும் அளவை (லாஜிக்) நிரூபிக்கமுடியாமல் அழிந்துவிடும். இம்மை எனப்படும் தற்போது எடுத்துள்ள பிறப்பு மாத்திரமே உண்மை. இம்மையில் செய்கின்ற செயல்களுக்கான பயனும் இந்தப் பிறவியிலேயே கிடைத்துவிடுகிறது. ஆகையால், இம்மையில் செய்த வினைப் பயன்களை (கர்ம பலன்களை) மறுமையில் (அடுத்த பிறவியில்) அனுபவிப்போம் என்பது பொய் என லோகாயதம் கூறுவதாக மணிமேகலை மூலம் அறிய முடிகிறது.

இனி நீலகேசியைக் காண்போம். நீலகேசிக்கு முன்பாக இயற்றப்பட்ட ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியில் அதன் நாயகி குண்டலகேசி, இதர சமயத்தவர்களை வாதில் வென்று தாம் சார்ந்திருக்கும் பௌத்த மதத்தை நிலைநாட்டுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், குண்டலகேசியின் ஓரிரு பாடல்களைத் தவிர அந்தக் காப்பியம் தற்போது முழுமையாக அழிந்துவிட்டது. இந்த குண்டலகேசிக்குப் பதில் அளித்தும், இதர சமயவாதிகளை வாதத்தில் தோற்கடித்தும் சமண சமயத்தின் மேன்மையை பெண் துறவியான நீலகேசி நிறுவுவதாக நீலகேசி என்னும் சிறு காப்பியம் படைக்கப்பட்டுள்ளது.

இந்த நீலகேசியின் பத்தாவதும் இறுதியானதுமான பூதவாதச் சருக்கத்தில், பிசாசகன் என்ற பூதவாதி (உலகாயதவாதப் பிரிவினர்) நீலகேசியிடம் தனது மதக் கோட்பாட்டை விளக்குகிறான். (இந்திய மெய் ஞானத்தில் மதம் என்பது கொள்கையைக் குறிக்கிறது, ஆனால் தற்போது மதம் என்பது வழிபாடு சார்ந்த விஷயமாக மாறிவிட்டது).

திண்ணென் தீநில நீர்வளி (ஆ)காயத்தாற்
கண்ணு மூக்கொடு நாமெய் செவிகளாய்
வண்ண நாற்றம் சுவையினொடு ஊறுஒலி
யெண்ணுங் காலை இயைந்துழி எய்துமே

என்கிறது நீலகேசி.

தீ, நிலம், நீர், வளி (காற்று), ஆகாயம் ஆகிய 5 பூதங்களும் திணிந்ததால் அதாவது இணைந்ததால் கண், மூக்கு, நா, உடல், செவி ஆகிய ஐம்புலன்களும், பார்வைத் திறன் (வண்ணம்), முகர்வுத் திறன் (நாற்றம்), ருசியறியும் திறன் (சுவை), தொடு உணர்வுத் திறன் (ஊறு), கேட்கும் திறன் (ஒலி) ஆகியவை உடையதாக இணைந்து உயிருள்ள உடலாகத் தோன்றுகின்றன என்பது இதன் பொருள்.

இதனை அடுத்த பாடல் மேலும் விளக்குகிறது -

ஐந்துங் கூடி அறிவுஇன்பம் ஆதியாய்
வந்து தோன்றி மதுமயக் குஆற்றலின்
அந்தி நாளுங் குடஞ்சுடர் நாட்டம்போற்
சிந்தி னால்அவை சென்றினஞ் சேருமே
.

இந்த ஐந்து பூதங்களின் சேர்க்கையே அறிவாகவும், இன்பம் முதலியனவாகவும் வந்து தோன்றி, மது எவ்வாறு அறிவை மயக்கும் ஆற்றலைப் பெறுகிறதோ அதுபோல ஆன்மா (உயிர்) என்ற மயக்கத்தை உருவாக்கி, இறுதி நாள் வரும்போது (அதாவது மரணத்தின்போது), ஐம்பூதங்களும் கெட்டு அழிகையில் அந்தந்த பூதங்கள் அவற்றின் இனத்தைப் போய் சென்று சேருகின்றன.

உலகெ லாம்அவை யேஉயி ருண்டுஎனச்
சொலவ லாரன சொல்தெளிந் தேநின்று
பலக லாங்களுஞ் செய்வ பயனிலார்

அண்டவெளியில் தோன்றுகின்ற எல்லா உலகங்களிலும் இந்த நடைமுறையே. இதுவன்றி உயிர் உண்டு என்று சொல்வது பயனில்லாதது என்று பூதவாதியான பிசாசகன், நீலகேசியிடம் கூறுகிறான். மேலும் கடந்த காலத்திலும், எதிர் காலத்திலும், நிகழ் காலத்திலும் இதுபோல்தான் உலகமும் இதில் உயிரினங்களும் தோன்றுகின்றன. உலகம் இந்தத் தன்மையை உடையதே. இது அல்ல என்று உரைப்பவர்கள் பொய்யானவர்களே என்றும் பிசாசகன் கூறுகிறான்.

இதனை மறுத்து நீலகேசி வாதம் புரிகிறாள். அதில் முதல் பாடல் –

பூத மல்லது பொய்பிற நூலென்று
வாதஞ் செய்து வருந்தி முடிப்பதுஎன்
நாத ன்நன்னெறி நல்வினை நற்பயன்
யாது மில்லை எனின்அஃது அவத்தமே.

பூதவாதத்தைத் தவிர இதர நூல்கள் பொய் என்று மிகுந்த பிரயாசையுடன் வாதத்தை முடிவு செய்திருக்கிறாயே? இதனால் பலன் என்ன? நாதன் (ஆன்மா), நன்னெறி, நல்வினை, நற்பயன் இவை அனைத்துமே இல்லை என்று கூறினால் அது அபத்தம் அல்லவா? என்று வினவி, சமண சமயத்தின் அடிப்படையிலான அறக் கோட்பாடுகளை வாதிடுகிறாள் நீலகேசி.

ஐம்பூதங்களின் சேர்க்கையால் களிப்பு (உலகில் வாழும் அனுபவம்) உண்டாகிறது என்றால் அதனைக் களிப்பது யார்? ஐம்பூதங்கள் அல்லாத மனம் என்று ஒன்று இருக்கிறதே அது எது? ஐம்பூதங்களும் பிரிந்து அவை அவை சென்று சேர்ந்துவிடுகின்றன எனில், அவற்றால் அனுபவித்த உணர்வாகிய புத்தி இருக்கிறதே? ஐம்பூதங்களின் சேர்க்கையால் ஐந்து புலன்களும் கொண்ட உயி்ர்கள் மட்டும் அல்லவா தோன்ற வேண்டும்; இரண்டு (அதாவது குறைவுபட்ட) புலனறிவு கொண்ட உயிரினங்களும் தோன்றுகின்றனவே அது எப்படி? என்றெல்லாம் வினாக்களை எழுப்பி, பூதவாதம் எனப்படும் லோகாயதக் கருத்து முழுமையுடையதாக இல்லை என்று கூறி நிராகரிக்கிறாள் நீலகேசி.

நீலகேசி காப்பியத்தைவிட விரிவாக உலகாயத மதக் கருத்துகளைக் கூறி, அதனை மறுப்பதற்கான காரணங்களையும் விரிவாக எடுத்துரைக்கிறது, பிற்காலத்தில் எழுந்த சைவ சிந்தாந்த நூலாகிய சிவஞான சித்தியார். அதுபற்றி அடுத்த வாரம் காண்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டப்பேரவையில் பி.எஸ். குமாரசாமி ராஜா படம் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பிளவக்கல் அணை பூங்கா சீரமைப்பு பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

பெண்ணிடம் தகராறு: நிதி நிறுவன மேலாளா் கைது

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 5 பேருக்கு 6 மாதம் சிறை

SCROLL FOR NEXT