தத்துவ தரிசனம்

5. சிவஞான சித்தியாரில் உலகாயதன் மதம்

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சைவ சித்தாந்த நூல், சிவஞான சித்தியார்.

பத்மன்

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சைவ சித்தாந்த நூல், சிவஞான சித்தியார். தத்துவ வாதம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்நூல். பரபக்கம், சுபக்கம் என, இரு பகுதிகளைக் கொண்டது.

இதில் பரபக்கம் என்பது, அக்காலத்தில் முக்கிய மதங்களாக (தத்துவங்களாக) விளங்கிய லோகாயதம், பௌத்தத்தின் பெரும் பிரிவுகளாகிய சௌத்ராந்திகம், யோகாசாரம், மாத்யமிகம், வைபாஷிகம், நிகண்டவாதம் எனப்படும் சமணம், ஆசீவகம், வேள்வியை வலியுறுத்தி ஆண்டவனைப் புறக்கணிக்கும் பட்டாசாரியன் (ஜைமினி) மதம் எனப்படும் பூர்வ மீமாம்சை, பிரகிருதி – புருஷ தத்துவத்தை போதிக்கும் சாங்கியம், மாயாவாதம், சுத்தபிரம்மவாதம் ஆகிய பிரிவுகளைக் கொண்ட அத்வைதம், பாஞ்சராத்ரம் எனப்படும் வைணவம் ஆகிய சைவத்துக்கு மாறான பிற சமயங்களைப் பற்றி எடுத்துரைக்கும் பகுதி ஆகும். இதில் மற்ற மதங்களின் கருத்துகளைக் கூறி, அதற்கு மறுதலையும் (மறுப்பும்) கூறுகிறார் இந்நூலை இயற்றிய அருள்நந்தி சிவாசாரியார். பரபக்கத்தைத் தொடர்ந்து கூறப்பட்ட சுபக்கம் என்பது, சைவ சித்தாந்த தத்துவக் கருத்துகளை எடுத்துரைக்கும் பகுதி ஆகும். இதுபற்றி பின்பு விரிவாகக் காண்போம்.

தற்போது இந்நூலின் பரபக்கத்தைக் காண்போம். சிவஞான சித்தியாரின் பரபக்கத்தில் முதலில் வருவதே உலகாயதன்மதம் (லோகாயதம்)தான். அதன் முதல் பாடல், ‘இந்திரனின் புரோகிதனாகிய பிருகஸ்பதி, இந்திரனின் தவத்தைக் கலைத்து அவனை போகத்தில் செலுத்த வேண்டும் என்பதற்காக உரைத்த தத்துவத்தை (லோகாயதமாகிய நாத்திகத்தை), உண்மையை அறிவதற்கு அது இடையூறு, தடுப்பதற்கான ஒருவகை தந்திரம் என்ற அறிவும் அருளும் இல்லாமல் இக்காலத்தில் அதுவே உலகத்தின் மெய்யான நூல் என்று, போகங்களின் விருப்பத்தால் பிறவித் தளையில் இருந்து நீங்காத உலகாயதன் உரைக்கிறான்’ என்று கூறுகிறது. இதனைத் தொடர்ந்து லோகாயத தத்துவமாக சிவஞான சித்தியார் கூறுவதன் முக்கிய அம்சங்களை இனி காண்போம்...

ஈண்டுஅளவை காட்சிமனம் ஆதிஇரு மூன்றாய்
வேண்டும்அனு மானம்முத லானபல வேண்டா
பூண்டபொருள் பூதம்அவை புகழ்கடின சீதம்
தீண்டரிய வெம்மைசல னத்தினோடு சேர்வே. (2)

இதன் பொருள் - இங்கே அளவை, அதாவது ஒரு விஷயத்தை ஆராய்ந்து, தீர்மானிப்பதற்குரிய கருவியாகக் கருதப்படுவது காட்சி மாத்திரமே. (காட்சி என்பது வெறும் பார்வை மாத்திரம் அல்லாமல், கேட்பது, நுகர்வது, சுவைப்பது, தீண்டி உணர்வது ஆகியவற்றையும் உள்ளடக்கியது.) அக் காட்சியை மனத்தின் மூலம் அறியப்படும் ஐயக்காட்சி தொடங்கி, கண், காது உள்ளிட்ட இந்திரியங்களால் காணப்படும் வாயிற் காட்சி, ஒன்றின் பெயர், செயல், குணம், வகைப்பாடு உள்ளிட்டவற்றால் வெளிப்படையாக அறியப்படும் விகற்பக் காட்சி, புகை இருந்தால் அங்கே அனலிருக்கும் என்றறியும் அன்வயக் காட்சி, மணத்தின் மூலமாக பூ முதலியவற்றை அறியும் வெதிரேகக் காட்சி, பழுதைப் பாம்பென்று கருதும் திரிவுக் காட்சி வரையான ஆறு வகைக் காட்சிகளாகப் பிரிக்கலாம். இதில் ஊகத்தால் (அனுமானத்தால்) அறியப்படும் ஐயக் காட்சி, திரிவுக் காட்சி ஆகியவற்றை ஏற்காமல் இதர காட்சிகளை ஏற்கலாம். அவற்றின் மூலம் பெறப்படுவது என்னவென்றால், உலகில் தோன்றியுள்ள பொருள் அனைத்தும் பூதங்களால் ஆனவையே. அந்தப் பூதங்களானவை, கடினம் எனப்படும் மண், சீதம் எனப்படும் நீர், தீண்ட இயலாத வெப்பம் எனப்படும் தீ, சலனம் அதாவது ஓரிடத்தில் இருந்து வேறிடத்துக்கு அலைபாயும் காற்று என்ற நான்கே. இவற்றின் சேர்க்கையே இந்த உலகம்.

சாற்றுபெயர் ஆனவை தலம்புனல் கனல்பின்
காற்றும்என லாம்இவை கலந்தகுணம் ஓதின்
நாற்றம்இர தம்உருவ(ம்) நற்பரிசம் ஆகும்
போற்றும்இவை நித்தஇயல் பாம்இவை புணர்ப்பே. (3)

இந்தத் தலம் (மண்), புனல் (நீர்), கனல் (தீ), காற்று ஆகிய நான்கு பூதங்களால், முறையே நாற்றம் (மணம்), இரதம் (இரத்தம் முதலிய நீர்மங்கள்), உருவம் (வடிவம்), ஸ்பரிசம் (தொடு உணர்வு) ஆகியவை தோன்றுகின்றன. போற்றுதலுக்கு உரிய இவை அழியாத இயல்பை உடையவை (நிலையானவை). இவற்றின் புணர்ச்சியே (சேர்க்கையே) உலகம்.

ஒத்துஉறு புணர்ச்சியின் உருக்கள்பல ஆகும்
வைத்துஉறு கடஆதிபல மண்ணின்வரு மாபோல்
புத்திகுண(ம்) நற்பொறி புலன்கள்இவை எல்லாம்
இத்தில்வரு நீரினில் எழும்குமிழி ஒத்தே
. (4)

பூதங்கள் தம்மில் கூடுவதால் வடிவங்கள் பல உருவாகின்றன. குயவனின் திரிகை (பாத்திரம் செய்யும் கருவி) இயந்திரத்தில் மண்ணை வைத்து குடம் (கடம்) உள்ளிட்ட பல பாத்திரங்கள் படைக்கப்படுவதைப்போல, பூதங்களின் சேர்க்கையால் உடல் தாங்கிய பல உருவங்கள் தோன்றுகின்றன. இவற்றில் காணப்படும் புத்தி, குணம், பொறி, புலன்கள் என்று கூறப்படுபவை எல்லாம் நீரினில் தோன்றும் குமிழியைப்போல நிலையில்லாதவை என்கிறான் உலகாயதன்.

உலகாயதன்மதம் கூறுவதாக சிவஞான சித்தியார் மேலும் உரைப்பதை இனி சுருக்கமாகக் காண்போம் –

பூதங்களின் சேர்க்கையால் தோன்றும் உடலில் இருந்து பூதங்களில் ஒன்றாகிய வாயு பிரியும்போது, புலன்கள் இறக்கும். புலன்கள் இறந்தால் அவற்றின் மூலம் உருவான ஐம்பொறிகள், குணம், புத்தி ஆகியவையும் அழிந்துபோகும். ஆகவே, உயிரினங்களின் தோற்றத்துக்கும் அழிவுக்கும் பூதங்களே காரணமாகும். இதனை அறிவதே அறிவாகும்.

இதனை விடுத்து கர்மவினை, ஆன்மா, இறை உண்டென்று கூறுவது தவறாகும். அவ்வாறு கூறும் சமயவாதிகளுக்கு இந்த உலகத்தார் செய்த குற்றம் என்ன? அவர்கள் கூறுவது, ஒப்பில்லாத மலடி ஒருத்தி பெற்ற மகன், முயல் கொம்பில் ஏறி ஆகாயத்தில் உள்ள பூவைத் தவறின்றிப் பறிப்பதற்கு ஒப்பாகும். அதாவது, அவர்கள் கூறுவது அனைத்துமே சாத்தியமில்லாத பொய், ஏமாற்றுவேலை.

மனிதர் இறந்தவுடன் அவரது உடலோடு அவர் செய்த பாவ புண்ணியங்களும் அழிந்துவிடுவதால், மறுபிறவியில் கர்மவினைகள் எவ்வாறு தொற்றும்? அவை கண்ணுக்குத் தெரியாத சூக்குமமாய் இருக்கும் எனில், விளக்கு உடைந்தபின் அதில் உள்ள ஒளி மாத்திரம் எவ்வாறு தனியே ஒளிரும்? தீபம் அழியும்போதே தீயும் அழிந்துபோகாதா? வயலில் இடுகின்ற வைக்கோலும், தழையும் பயிர்களுக்கு உதவுவதைப்போல கர்மவினைகள் பலன் தரும் என்றால், வைக்கோலும், தளையும் மக்கினாலும் அதே வயலில்தானே பயிர்களுக்கு உதவுகின்றன, வேறு வயல்களில் சென்றா உதவுகின்றன?

கைவிரல்கள் ஒன்றுக்கொன்று ஏற்றக் குறைச்சலாய் இருப்பதைப்போல, பூதங்களின் சேர்க்கையில் ஏற்படும் மிகுதி, குறைவால் உடல்களும், உணர்வுகளும் வேறுபடுகின்றனவே அன்றி, கர்மவினைகளால் அல்ல. இன்ப, துன்பங்களை அடைவது நன்மை, தீமை ஆகிய வினைகளால் அல்ல; இன்ப, துன்ப உணர்ச்சிகள் பூதங்களின் இயல்பானவை. பூதங்களால் ஏற்படும் உணர்வு அன்றி, அனுபவிப்பதற்கு ஓர் ஆன்மா தனியாக உண்டென்றால் அதைக் காட்சி பிரமாணத்தின் மூலம் நிரூபி, அதுவன்றி அனுமானம், மூத்தோர் உரை என்று கூறி மழுப்பாதே என்று உலகாயதன் வினவுகிறான்.

அருவமே இறைவன் ஆகில் அறிவுஇன்றி ஆகாயம் ஆகும்
உருவமே என்னில் பூதக் கூட்டத்தில் ஒருவன் ஆகும்
மருவிய இரண்டும் கூடி நிற்பவன் என்னில் மண்மேல்
இருவிசும்பு ஒருகல் ஏந்தி நிற்குமோ இயம்பி டாயே (12)

இறைவன் உருவம் இல்லாத அருவம் என்றால், ஆகாயத்தைப்போல அறிவின்றி விளங்குபவன் ஆவான். அதற்காக உருவம்தான் என்று கூறினால், பூதக்கூட்டத்தில் ஒருவனாகத்தான் இருக்க முடியும். சரி, இரண்டும் கலந்தது என்று கூறினால், உருவம் இல்லாத ஆகாயத்தால் ஒரு கல்லைத் தாங்கி நிற்பது உலகில் நடக்கக்கூடியதா? என்றும் உலகாயதன் கேள்வி எழுப்புகிறான்.

போகத்தை இந்த உலகத்திலே அனுபவித்துவிட்டுப் போகாமல், விண்ணுலகம் சென்று அனுபவிக்கலாம் என்று நினைப்பது, தாகம் கண்ட இடத்திலே தண்ணீரைப் பருகி தாகத்தைத் தணித்துக்கொள்ளாமல், தொலைவிலே வேறு ஓரிடத்திலே தண்ணீர் கிடைக்கும் என்று ஒருவன் கூறியதை நம்பி வழியிலே துயருறுவது போலாகும் என்கிறான் உலகாயதன்.

பெண்களின் போகத்தை அனுபவிக்கும் மெய் சுகத்தை நாடாமல், பொய் வழியாகிய தவ வேடத்தில் ஏன் வாட வேண்டும்? போகத்தை அனுபவிப்பவர்களே உயர்ந்த சமயத்தவர்கள், அதனைக் கைவிடுபவர்கள் கீழான சமயத்தவர்கள். பெண்ணின் ஊடலைத் தணிப்பதற்காக (அல்லது விரும்பிய பெண்களை அனுபவிப்பதற்காக) வருந்திப் பல செயல்களைச் செய்வதே தவம், அந்தத் தவத்தின் பயனால், தான் என்ற உணர்வை விடுத்து பெண்களோடு புணர்ந்து, விருப்பத்தை நிறைவேற்றும் இன்பத்தில் நிலைத்திருப்பதே முக்தி என்கிறான் உலகாயதன்.

இவ்வாறு கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற வகையில், போகங்களை அனுபவிப்பதே வாழ்க்கையின் லட்சியம், வாழ்வின் பொருள் என்று கூறும் உலகாயதர்கள் மிச்சிர சார்வாகர், இரணியகர்ப்ப சார்வாகர் என்று இருவகைப்பட்டவர்கள் என்று சிவஞான சித்தியாரின் விளக்கவுரையில் காண முடிகிறது.

உண்மையை அறிவதற்குக் காட்சிப் பிரமாணம் மட்டுமே போதாது, அனுமானம், ஆப்த வசனம் (நம்புதற்குரியவர் சொல்) ஆகியவையும் அவசியம் என்பதை எடுத்துரைத்து, லோகாயதக் கருத்துகளை மறுத்து சிவஞான சித்தியார் புரியும் வாதங்களை அடுத்த வாரம் காண்போம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டப்பேரவையில் பி.எஸ். குமாரசாமி ராஜா படம் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பிளவக்கல் அணை பூங்கா சீரமைப்பு பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

பெண்ணிடம் தகராறு: நிதி நிறுவன மேலாளா் கைது

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 5 பேருக்கு 6 மாதம் சிறை

SCROLL FOR NEXT