முகப்பு
கருத்துக் களம்

டெங்கு மரணங்களை தடுக்கலாம்

மனிதகுலம் சந்தித்த இயற்கைச் சீற்றங்கள், நோய் தாக்குதல்கள் ஏராளம்

Updated On : 28 ஜூலை, 2025 at 4:26 AM
பகிர்:

மனிதகுலம் சந்தித்த இயற்கைச் சீற்றங்கள், நோய் தாக்குதல்கள் ஏராளம். அவற்றுள் ஒன்றுதான் டெங்கு ஜுரம்.

 பொதுவாகக் காய்ச்சலை, நோயாகக் கருத வேண்டியது இல்லை. உடலினுள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதற்காக நோயெதிர்ப்பு ஆற்றல் நடத்தும் போராட்டத்தின் வெளிப்பாடே உஷ்ண அதிகரிப்பு. காய்ச்சல் நமது நண்பனைப்போன்றது. சாதாரண ஜுர நிலைகளில் மருந்தில்லாமலேயே அல்லது நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு ஆதரவான எளிய இயற்கை மருந்துகள், ஹோமியோபதி சிகிச்சை மூலம் நலம் பெறலாம்.

டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா போன்ற தொற்று நோய் ஜுரங்களில் மருந்தின்றி நலம்பெற வாய்ப்பில்லை. இந்நோய்களில் அலட்சியம் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஏராளம்.

 உலகின் பல நாடுகளில் 200 ஆண்டுகளாக வலம்வந்து கொண்டிருக்கும் கொடிய தொற்றுநோயே டெங்கு. கடந்த 30 ஆண்டுகளில் இதன் தாக்குதல் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 2,500 மில்லியன் மக்கள் இந்த ஜுரத்தின் பாதிப்பு வளையத்துக்குள் வாழ்கின்றனர். ஆண்டுக்கு 50 மில்லியன் மக்களை டெங்கு தாக்குகிறது. டெங்கு, சிக்குன்குனியா, மஞ்சள்ஜுரம் போன்றவை பரவுவதற்கு முக்கிய கடத்திகளாக ஏடியஸ் எஜிப்டி, ஏடியஸ் ஆல்போபிக்டை என்ற இருவிதக் கொசுக்கள் பணியாற்றுகின்றன. டெங்கு ஜுரத்துக்கு 1, 2, 3, 4 என்ற 4 வகை வைரஸ்களை ஏடியஸ் எஜிப்டி கொசுக்கள் பரப்புகின்றன.

இவை பிற கொசுக்களைவிடச் சிறியவை. தேங்கியுள்ள மழை நீரிலும் நன்னீரிலும் இனப்பெருக்கம் செய்யும். இக்கொசுக்களின் உடலிலும், காலிலும் கருப்பு, வெள்ளை நிறப் புள்ளிகளும் வரிகளும் இருக்கின்றன. எனவே இதற்கு "புலிக்கொசு' என்ற பெயரும் உண்டு. பகல் நேரங்களில் குறிப்பாக - சூரிய உதயத்திலிருந்து 2 முதல் 3 மணி நேரமும், சூரியன் மறையும் அந்தி நேரத்திலும்தான் - பெண் கொசுக்கள் வேகமாகச் செயல்பட்டு ரத்த உலாவை நடத்துகின்றன.

1950-களில் நம் நாட்டில் மலேரியா ஜுரம் தீவிரமாகப் பரவி எண்ணற்றோர் பலியானபோது, கொசு ஒழிப்பு ஒன்றுதான் இறுதித் தீர்வாக அரசு கருதியது. தேசிய மலேரியா ஒழிப்பு திட்டம் (என்.எம்.இ.பி.) அறிவிக்கப்பட்டது. அது கொசுக்களுக்கு எதிரான யுத்தமாகவே பிரகடனப்படுத்தப்பட்டது. 1953-இல் இந்த யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட மருந்து "டி.டி.டி.' என்பதாகும். இம் மருந்து தொடர்ந்து 5 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பின்னரும் கொசு ஒழிப்பு திட்டம் வெற்றிபெறவில்லை.

கொசுக்களின் மரபணு மாற்றம் காரணமாக டி.டி.டி.க்கு எதிரான எதிர்ப்பாற்றல் பெருகி இம் மருந்து வீரியமற்றதாகிவிட்டது. பின்பு 1958, 1977 ஆண்டுகளில் தேசிய மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்தில் இருமுறை மாற்றங்கள் செய்யப்பட்டன. லிண்டேன், மாலத்தியான் ஆகிய இரு மருந்துகள் தெளிக்கப்பட்டன. அவையும் தோற்றன.

மேலும் 2 புதிய வழிகள் கண்டுபிடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தன. 1. பைரெத்தின் என்ற புகை மருந்து. 2. கொசு லார்வாக்களை அழிக்கும் அபேட் என்ற நுண்ணியிரி மருந்து பயன்படுத்தப்பட்டது. இத்திட்டங்களுக்குக் குறைவாக நிதி ஒதுக்கியதாலும் அந்த நிதியிலும் ஊராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் ஊழல் செய்ததாலும் இந்த மருந்துகளின் பலனற்ற தன்மையாலும் கொசு ஒழிப்பு திட்டம் மேலும் தோல்வியடைந்தது.

இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு சில ஆங்கில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொசுக்கடியிலிருந்து தப்பிக்க உடலில் பூசும் களிம்புகளை விளம்பரப்படுத்தி விற்கின்றன. இம் மருந்துகளால் ஒவ்வாமையும் குழந்தைகளுக்கு ஆஸ்துமாவும் ஏற்படுகின்றன. இவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று பல மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 கொசு ஒழிப்புக்கான முயற்சிகளும், கருவிகளும், மருந்துகளும் மாறிக்கொண்டே வந்தாலும் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை. அதே சமயம் கொசு மருந்துகள் அனைத்தும் நீர், நிலம், காற்று, சுற்றுச்சூழல் ஆகிய அனைத்தையும் நச்சுப்படுத்துகின்றன. இந்தியாவில் பரவிவரும் ஆஸ்துமாவுக்கு டி.டி.டி. போன்ற கொசு ஒழிப்பு மருந்தே காரணம் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஆங்கில மருத்துவத்தில் (அலோபதி) டெங்கு, சிக்குன்குனியா போன்றவற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தனிச் சிகிச்சை ஏதுமில்லை. ஜுரத்தின் குறிகளுக்கேற்ற சிகிச்சையும், ஓய்வும், திரவங்களும்தான் ஆங்கிலச் சிகிச்சையின் சிறப்பு அம்சங்கள். காய்ச்சலடக்கி மருந்துகளும் வலி நிவாரணிகளும்தான் பயன்படுத்தப்படுகின்றன. ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை. அவை பாக்டீரியாக்களுக்கு எதிரானவை. டெங்கு ஜுரம் வராமல் தடுக்கவும் வந்தபின் மரண விளிம்புவரைச் செல்லவிடாமல் தடுத்து நலமளிக்கவும் சித்தா, ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவ முறைகளிலும் ஹோமியோபதியிலும் அற்புதமான மருந்துச் செல்வங்கள் உள்ளன. ஆங்கில மருத்துவ மேலாதிக்கம் காரணமாக இவை மக்களைச் சென்றடைய முடியாமல் உள்ளன.

உலகப் புகழ்பெற்ற சுமார் 25 ஹோமியோபதி மருந்துகள் வரலாறு நெடுகிலும் டெங்கு, சிக்குன்குனியா, பன்றி ஜுரம், பறவை ஜுரம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாகப் பயன்பட்டுள்ளன.

1996-இல் தில்லியில் டெங்கு பேரளவில் தாக்கியபோது அரசின் உத்தரவுக்கிணங்க மாநில ஹோமியோபதி கவுன்சில் "எபடோரியம் பர்ஃபோலோயிடம்' என்ற ஹோமியோபதி மருந்தினை பல்லாயிரக்கணக்கான மக்களுக்குத் தடுப்பு மருந்தாக முழு வீச்சில் வழங்கி ஜுரத்தைக் கட்டுப்படுத்தியது. சாதாரண டெங்கு ஜுரம், ரத்தக் கசிவு டெங்கு ஜுரம் இரண்டையும் ஆற்றல்மிக்க 25 ஹோமியோபதி மருந்துகள் மூலம் குணப்படுத்திக் காட்டினர். எனவே ஹோமியோபதி மருந்துகளை முழு வீச்சில் பயன்படுத்தினால் டெங்குவை உறுதியாக முறியடிக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.