முகப்பு
கருத்துக் களம்

ஆரம்பக் கல்வியில் அலட்சியம் ஏன்?

அனைவருக்கும் ஆரம்பக்கல்வி என்பதன் அவசியம் நூறாண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தப்பட்டாலும் அந்த நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறியபாடில்லை. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் முப்பது கோடிக்கும் மேற்பட்ட மாணவ

Updated On : 28 ஜூலை, 2025 at 4:25 AM
பகிர்:

அனைவருக்கும் ஆரம்பக்கல்வி என்பதன் அவசியம் நூறாண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தப்பட்டாலும் அந்த நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறியபாடில்லை.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் முப்பது கோடிக்கும் மேற்பட்ட மாணவ சமுதாயத்தைக் கொண்டுள்ளது நம் நாடு. கிராமங்கள் முதல் நகரங்கள் வரையில் பள்ளிகள் எப்படி இருந்தாலும், எங்கிருந்தாலும் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாகவே அதிகரித்துள்ளது.

இந்த மாற்றத்தின் காரணமாகவே எழுத்தறிவு பெற்ற மக்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைக் காட்டிலும் சற்று அதிகமாகவே அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் எழுத்தறிவு பெற்ற ஆண்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2015ம் ஆண்டில் தான் இந்தியா 72 சதவிகித எழுத்தறிவை எட்ட முடியும் என்று சர்வதேச அமைப்புகள் கூறின. ஆனால் 2011ம் ஆண்டிலேயே 74.4 சதவிகித எழுத்தறிவை எட்டியிருக்கிறோம்.

அதே நேரத்தில் ஆரம்பக்கல்வியே கிடைக்காத, அதாவது பள்ளிகளை எட்டிப்பிடிக்காத நிலையில் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நம் நாட்டில் உள்ளனர்.

இதற்குக் காரணம் தான் என்ன? மாநில அரசுகள் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக்கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் நம் நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லாத எண்ணற்ற கிராமங்கள் இருக்கின்றன. இத்தகைய கிராமங்களில் வாழ்பவர்களின் நிலை எப்படி இருக்கும்? அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளிப்பதில் இன்னும் அலட்சியப் போக்கே நிலவுகிறது.

சீனத்தில் கல்வியும், சுகாதாரமும் இந்தியாவை விட பலமடங்கு மேம்பட்டிருப்பதற்குக் காரணம் அரசு இவ்விரு துறைகளில் நேரடியாக அதிக நிதியை ஆண்டுதோறும் ஒதுக்கி திட்டங்களை அமல்செய்வது தான்.

ஆரம்பக் கல்வியைப் பொறுத்தமட்டில் மத்திய மாநில அரசுகளின் போக்கும் இருந்து வருகிறது. இந்தியாவில் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எதிர்பார்த்த அளவில் அந்த அதிகரிப்பு இருப்பதில்லை. அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளிப்பதில் தொடர்ந்து வரும் அலட்சியப் போக்கின் காரணமாகவே இன்னும் இலக்கை எட்ட முடியாத நிலை இருந்து வருகிறது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் கல்விக்காக ஒதுக்கீடு செய்யும் தொகை போதுமானதாக இருப்பதில்லை. 1964ல் ஏற்படுத்தப்பட்டு ஆய்வு செய்த கோத்தாரி குழு தனது அறிக்கையில் மிகப்பெரிய நாடான இந்தியாவுக்கு அதன் அரசால் மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை வைத்தது. ஆனால் 3.75 சதவீதம் வரை மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதன்பின்னர் இடையிடையே வந்த அரசுகளும் இதையே கடைப்பிடித்தன. அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

கல்விக்கான நிதி ஒதுக்கீடு என்பது ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடாக ஆகும்வரை அதன் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் போன்று இரு மடங்கு கல்விக்காக நிதி ஒதுக்க வேண்டும் என உலகப் பொருளாதார வல்லுநர்களால் வரையறுக்கப்பட்டு உள்ளது. அதன்படி பார்த்தோமானால் 1964ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3 சதவிகிதமாக இருந்தபோது 6 சதவிகிதம் கல்விக்காக நிதி ஒதுக்க வேண்டும் என கோத்தாரி குழு பரிந்துரைத்தது. இன்று நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக உள்ளது. அப்படியெனில் கல்விக்கு 16 சதவிகித நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இந்த நிலையில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு மாதிரி விதிகளும் வகுக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் சட்டமாக உருவாக்கப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு இந்தியா முழுமைக்கும் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் அனைவருக்கும் தொடக்கக் கல்வி இலவசமாகவும், கட்டாயமாகவும் வழங்கப்பட்டு வரும்போதும் மாணவ, மாணவியர் சேர்ப்பு விகிதம் 98.1 என்ற அளவில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. இது நம்மைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய சாதனையாகவோ, அளவீடாகவோ தெரியலாம். ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது மிகக்குறைந்த அளவே.

அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் கிராமப்புறங்களைச் சேர்ந்த குழந்தைகளே படிக்கின்றனர். ஆனால் அவற்றுக்கான நிதி ஒதுக்குவது, செயல்திட்டங்களை வகுப்பது, கொள்கை முடிவெடுப்பது போன்றவற்றை மாவட்ட தலைநகரங்களில் இருந்து கொண்டு மேற்கொள்கின்றனர். கிராமத்தின் தேவையை சரியாகப் புரிந்து கொள்ளாமல், ஏதோ கடமைக்காகவே பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்தகைய நடைமுறையாலேயே அதிகப்படியான குழந்தைகள் படிக்கும் பள்ளிகளின் கட்டமைப்புகள், மாணவ, மாணவியரின் தரம் உயர வாய்ப்பின்றி போய்விடுகிறது. அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளிக்கும் பொருட்டு மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது அனைத்து தரப்பினரையும் சென்றடைகிறதா என்பது தான் கேள்விக்குறியான ஒன்றாகும்.

இன்று அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்குவதில் மிகப்பெரும் சவாலாக விளங்குவது இடைநிற்றல் பிரச்னை தான். இடைநிற்றலைப் போக்கிடும் வகையில் அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் இடைநிற்றல் சிறார்கள் பற்றிய கணக்கெடுப்பும் முறையாக நடப்பதில்லை.

அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற இலக்கை எட்ட முடியாத நிலைக்கு ஒருசாராரை மட்டும் குறை கூறுவதற்கில்லை. அரசு மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்து கிராம சமூகத்திற்கும் குறிப்பாக பெற்றோர்களுக்கும் இதில் பெரும் பங்கு உண்டு. பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு பெற்றோர்-ஆசிரியர் கழகத்திற்கு உண்டு.

ஆனால் அதிகப்படியான பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் இல்லாத நிலையே உள்ளது. இருக்கின்ற பள்ளிகளிலும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் தலையீடு அதிகமாகவே உள்ளது.

தமிழக அரசின் 2011-12ம் ஆண்டுக்கான திருத்த நிதிநிலை அறிக்கையில் அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து தொடர்ந்து நூறு சதவீதம் தொடக்கக் கல்வி பெற வழிவகை செய்வதே இந்த அரசின் நோக்கம் எனவும், தமிழகத்தில் பள்ளிக்குச் செல்லாமல் 56 ஆயிரத்து 113 சிறார்கள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவர்கள் அனைவரையும் இந்த ஆண்டே பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்ய மிகப்பெரிய நிதி ஆதாரம் தேவை. நம் நாட்டைப் பொறுத்தமட்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவிகிதம் கல்விக்கான செலவாக இருக்க வேண்டும். இன்றைய பொருளாதாரச் சூழலில் அது கடினமில்லை. ஆனால் அதைச் செய்ய அரசுகளுக்கு தேவையானது சாதித்தே ஆக வேண்டும் என்ற லட்சியமும், தொலைநோக்கும் தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.