முதலீடும் உழைப்பும் இணைந்ததே விவசாயம்
காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் என். மார்க்கண்டன் காலத்தில் தொடங்கப்பட்ட வேளாண் விரிவாக்கப் பணிகள் இப்போது எப்படி நடைபெறுகின்றன என்று அறிய காந்தி கிராமத்துக்கு அருகில் உள்ள கிராமத்தில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் என். மார்க்கண்டன் காலத்தில் தொடங்கப்பட்ட வேளாண் விரிவாக்கப் பணிகள் இப்போது எப்படி நடைபெறுகின்றன என்று அறிய காந்தி கிராமத்துக்கு அருகில் உள்ள கிராமத்தில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இப்போது விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை, எல்லா வேலையையும் இயந்திரத்தால் செய்ய முடியாது என்பதால் விவசாயம் நலிவுற்று வருவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்.
கிராம மக்கள் அனைவரும் இப்போது நூறு நாள் வேலைக்குச் செல்லப் பழகிவிட்டதால் தங்களுடைய வயல்களுக்கு வேலைக்கு வருவதில்லை என்று நாடு முழுக்க கூறும் அதே புகாரைத்தான் தெரிவித்தார்கள். அந்த வேலையையும் ஒழுங்காகச் செய்யாமல் மரத்தடியில் அமர்ந்து கதை பேசிவிட்டு வீடு போய்ச் சேருவதாகக் குறிப்பிட்டனர். இன்னும் சில மாதங்கள் அவர்கள் அப்படிப் பழகிவிட்டால் அவர்கள் இனி எந்த வேலைக்கும் பயன்படமாட்டார்கள் என்ற வருத்தத்தையும் தெரிவித்தனர்.
ஆண்டுக்கு நாற்பதாயிரம் கோடி ரூபாய் மத்திய அரசால் இத்திட்டத்துக்கு ஒதுக்கப்படுகிறது. இது பிற வறுமை ஒழிப்பு திட்டங்கள் ஏற்படுத்திய பலன்களைக்கூட ஏற்படுத்துவதில்லை. நல்ல நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டிருந்தாலும் அதிகாரிகளின் லஞ்சலாவண்யம், பயனாளிகளின் சோம்பேறித்தனம், உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக மோசமாக நிறைவேற்றப்பட்டு வரிப் பணம் வீணடிக்கப்படுகிறது.
பயனாளிகளிடம் கேட்டபோது, சம்பளம் முழுதாகக் கொடுக்கப்படுவதில்லை என்றும் லஞ்சம் கொடுத்தால்தான் கூலி கிடைக்கிறது என்றும் தெரிவித்தார்கள். 120 ரூபாய் கூலி என்றால் 80 ரூபாய்தான் தரப்படுகிறதாம்.
உள்ளூர் அரசியல்வாதிகளால் கட்சி ரீதியாகப் பிரிக்கப்பட்டு வேலை தரப்படுவதாகவும் பொய்யான பெயர்களில் பணி அட்டைகள் வழங்கப்படுவதாகவும் ஓட்டு வங்கிகளாக மாற்ற முயற்சிகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் இது குறித்துக் கேட்டபோது, நல்ல திட்டம்தான், ஆனால் விவசாயம் சார்ந்த வேலைகளில் ஈடுபடுத்தாமல் வேறு வேலைகளில் பயன்படுத்துவதால் வீணாகிறது என்று வருத்தப்பட்டனர்.
கல்வியாளர்களிடம் கேட்டபோது, பயிற்சியாளர்கள் எவரும் இல்லாமல், வேலை செய்வதற்கான பயிற்சியே தராமல் வேலை வாங்குவதால் அவர்கள் செய்யும் தொழில் தொடர்பான திறன்கள் வளர்க்கப்படாமல் போகிறது என்றனர்.
வேலை செய்யும் நூறு நாள்களும் பயிற்சியாக அமைந்தால் அவர்களுடைய தொழில்திறன் வளர்ந்து அவர்களுக்கு எதிர்காலத்தில் நிரந்தர வருவாயைத் தரும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இத் திட்டத்தில் வேலை செய்கிறவர்கள் ஒவ்வொரு முறையும் புதிதாக நீர்ப்பாசனக் குழிகளைத் தோண்டுகிறார்கள். அவை அடுத்த மழையில் கரைந்து காணாமல் போய்விடுகின்றன. முழுமையடையும் பிற வேலைகளும் ஊரக வளர்ச்சிக்குத் தேவையான கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதில்லை என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வருத்தப்பட்டிருக்கிறார். இத்திட்டத்தின் மூலம் செய்து முடிக்கப்படும் வேலைகள் அனைத்துமே தரம் குறைந்தவையாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், ஒப்பந்தக்காரர்களுக்கு இடம் இல்லாதது, இயந்திரங்களை ஈடுபடுத்தாதது, பால் பாகுபாடின்றி கூலி கொடுப்பது, திறன் இல்லாத சாமான்ய மக்களுக்கும் வேலை கொடுப்பது ஆகியவை இத்திட்டத்தின் நல்ல அம்சங்களாகும்.
விவசாயம் தழைக்க 2 விஷயங்கள் முக்கியமானவை. முதலாவது முதலீடு, இரண்டாவது மனித உழைப்பு. விவசாயத்துக்குத் தேவைப்படும் பாசன வசதிகள் உள்ளிட்டவற்றுக்கு அரசுகள் போதுமான அளவு நிதி ஒதுக்குவதில்லை. அடுத்ததாக இப்போது விவசாயக் கூலிகளுக்கான பற்றாக்குறையும் அரசின் திட்டத்தாலேயே அதிகரித்துவிட்டது. ஒட்டுமொத்த விவசாயமும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்குப் போவதற்குத்தான் வாய்ப்பிருக்கிறது.
நூறு நாள் வேலை திட்டத்துக்கு ஆண்டுக்கு நாற்பதாயிரம் கோடி ரூபாய் செலவிடும் மத்திய அரசு, உணவுக்கு உத்தரவாதம் தரும் திட்டத்துக்கு எழுபத்தைந்தாயிரம் கோடி ரூபாயைச் செலவிட உத்தேசித்திருக்கிறது.
இந்த இரு தொகைகளையும் கோடானு கோடி மனித உழைப்பையும் விவசாயத்தையும் இணைக்கும் திட்டத்துக்கு அரசு செலவழித்தால் உணவு உத்தரவாதம் குறித்து கவலைப்படத் தேவை இல்லை. அரசு இப்போதாவது விழித்துக்கொள்ள வேண்டும்.