முகப்பு
கருத்துக் களம்

ஆட்டோ வெயிட்டிங்

இரண்டு நாள் முன்பு தாம்பரத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். பல்லாவரம் நெருங்குகையில், "புதுக் கட்டணம் ஆட்டோவில் அமல்' என்ற ஓர் அறிவிப்பு, பளீரென்று தென்பட்டது.

Updated On : 23 செப்டம்பர், 2013 at 3:56 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:23 PM

இரண்டு நாள் முன்பு தாம்பரத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். பல்லாவரம் நெருங்குகையில், "புதுக் கட்டணம் ஆட்டோவில் அமல்' என்ற ஓர் அறிவிப்பு, பளீரென்று தென்பட்டது. அதற்குப் பதினைந்து நாள் முன்பாகத்தான், பத்திரிகைகளில் புதிய கட்டண விவரம் வெளியாயிற்று. தமிழக முதல்வர், அதிகாரிகளுடனும் ஆட்டோ சங்கத் தலைவர்களுடனும் சந்தித்த புகைப்படம் பல ஏடுகளில் வெளியானது.

எல்லாமே படிப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. நடைமுறையில் ஆட்டோ ஓட்டுநர்கள் எவ்விதம் நடந்து கொள்கிறார்கள்?

செய்தி வந்த ஓரிரு நாளிலேயே ஆட்டோவில் போக வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. ஓட்டுநரிடம் பேச்சுக் கொடுத்தேன். ""பேப்பர்லே போடுவாங்க! பார்க்கலாம்!'' என்றார் நமுட்டுச் சிரிப்புடன். சொற்பத் தூரத்துக்கு ரூ.30 வாங்கினார். கொஞ்சம் தொலைவான பயணத்துக்கு புதிய கட்டணம் வசூல் செய்வார்களோ என யோசித்தேன்.

Advertisement

அதற்கேற்றாற்போல, மந்தவெளியில் ஒரு முடநீக்கியியல் நிபுணரைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. ஆட்டோ டிரைவர் பழக்கமானவர்; பல சமாசாரங்களை அலசினார். பெங்களூர், ஹைதராபாத் போன்ற பிற மாநிலங்களில் பஸ் வசதி குறைவு என்பதால் சம்பாதிக்கலாம் என்றார். இங்கு சென்னையில் அது போல் இல்லையாம்.

""பம்பாயில் பஸ் வசதி, ரயில் வசதி இரண்டுமே இருக்கிறதே? அங்கு மீட்டர் போடுகிறார்களே?'' என்ற கேள்விக்கு மவுனம்தான் பதில்!

அந்த சவாரிக்கு அவர் வாங்கிய கட்டணம் ரூ.100, ஓரளவு பரவாயில்லை. ஏனெனில் நடுவில் காத்திருப்புக் கட்டணம் இருந்தது. இதேபோல் வேறு ஒரு தினத்தில் பக்கத்தில் உள்ள கோயிலுக்குச் சென்று வர, என் மனைவி கொடுத்த தொகை ரூ.70. மேற்குறிப்பிட்ட இரண்டு டிரைவர்களும், வாகன சொந்தக்காரர்களென்று தெரிய வந்தது. எனவே மற்றொருவருக்கு வாடகை தர வேண்டிய நிர்ப்பந்தம் ஏதுமில்லை, அவர்களுக்கு புதிய கட்டணம் நிச்சயமாகக் கட்டுபடியாகும். இதுதான் யதார்த்த நிலைமை.

தெரிந்த வேறொரு மாறுதலையும் குறிப்பிட வேண்டும். மே மாதம் முதல் ஒரு சில பகுதிகளில் செயல்பட்டு வந்த "நம்ம ஆட்டோ' நிறுவனத்தை பிற ஆட்டோ டிரைவர்கள் கிண்டல் செய்தனர். ஏன், சிற்சில இடங்களில் அவர்களை அச்சுறுத்தவும் செய்தார்கள், இன்று அந்தப் போக்கு ஓட்டுநர்களிடம் காணப்படவில்லை.

பயணிகளின் அனுபவம் மற்றும் கருத்துகளை சில வார ஏடுகள் வெளியிட்டன. சிலர் நம்பிக்கையுடன் இருந்தார்கள். ஓர் எழுத்தாளர் தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைக் கொட்டியிருந்தார்.

என்னதான் அரசு சட்டம் இயற்றினாலும், போலீசார் இரும்புக் கரம் கொண்டு நடைமுறைப்படுத்த முயன்றாலும் பெட்ரோல் விலை உயர்வு ஒரு பிரச்னையே. (அரசு தரப்பில், இந்த கட்டண விகிதம் ரூ.80 வரை கட்டுபடியாகுமென்று தெரிவிக்கிறார்கள்). ரூபாயின் வீழ்ச்சி இப்போதைக்குக் கட்டுக்குள் இருப்பதாகத் தெரிந்தாலும், பெட்ரோல் விலை இறங்குவதற்கான சாயலே தெரியவில்லை. மும்பையில் உள்ளது போல், பெட்ரோல் விலை ஏற்ற இறக்கத்துக்குப் பொருந்தி வருகிறாற்போல், மீட்டரை வடிவமைக்கலாமே?

ஒரு விஷயம் நிதர்சனமாகத் தெரிகிறது. புதிய அறிவிப்புக்குப் பிறகு, ஓட்டுநர்களிடம் ஒரு மாற்றம் புலப்படுகிறது. சச்சரவு செய்வதில்லை. ஏற்றிக் கொள்ள விருப்பமில்லாவிட்டால், "ஸ்கூல் சவாரி இருக்குங்க' என்ற பதிலைக் கூறி ஒதுங்குகிறார்கள். பணிவுடன் நடந்து கொள்கிறார்கள். இறங்கும்போது வாதம் புரிவதில்லை.

ஆனால், இது போதுமா? "உணவின் சுவை சாப்பிடுவதில் தெரியும்' என்றொரு சொற்றொடர் உண்டு. அதுபோல, ஓட்டுநர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூல் செய்தால்தான், பயணிகளுக்குத் திருப்தி ஏற்படும்.

மீட்டர் பொருத்தப்பட இம்மாத இறுதிவரை காலக் கெடு இருக்கிறது என்கிறார்கள், நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.