முகப்பு
கருத்துக் களம்

நம்பிக்கையும் பாதுகாப்பும்

இன்றைய சூழலில், பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், கொஞ்சம் கூடவே வட்டி கிடைப்பதற்கும் வழிகள் பல உள்ளன.

Updated On : 22 டிசம்பர், 2014 at 2:47 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:31 AM

இன்றைய சூழலில், பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், கொஞ்சம் கூடவே வட்டி கிடைப்பதற்கும் வழிகள் பல உள்ளன. வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், உள்ளூர் நிதி நிறுவனங்கள், சீட்டு கம்பெனிகள், பங்குச் சந்தை, பரஸ்பர நிதிகள் என்று கூறிக்கொண்டே போகலாம். இத்தகைய நிறுவனங்களும், கால மாறுதலுக்கு ஏற்ப நவீன வசதிகளைத் தரத்தான் செய்கின்றன.

முன்பெல்லாம் அரசு வங்கிகளில் மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் மாதாமாதம் குறிப்பிட்ட தொகையைத்தான் செலுத்த இயலும். இப்போது சில வங்கிகள் "தளர்த்தப்பட்ட' டெபாசிட் என்ற பெயரில் சேமிப்புத் திட்டங்கள் வைத்துள்ளன.

உதாரணமாக, மாதம் ரூ.100 ஆர்.டி.யில் கட்டுகிறீர்கள். இடைப்பட்ட காலத்தில் கூடுதலாகத் தொகை செலுத்தலாம். அதாவது ரூ.1,500, ரூ.2,000 என்று. நிபந்தனை என்னவெனில், நடுவில் செலுத்துகிற தவணை, ஆரம்பத் தவணையை விடக் குறையக் கூடாது. குறைந்தபட்சக் கெடு இரண்டு வருடம் (சிலவற்றில் ஒரு வருடம்). முதிர்வடையும் போது, சேமிப்பில் இருக்கும் கால அளவுக்குத் தகுந்தபடி தொகையை வட்டியுடன் பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

கடன் வசதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், "கடன் தருகிறோம்' என்று அழைக்காத குறைதான். இதற்கெனவே விழாக்கள் நடத்தப்படுகின்றன. வேறொரு மாற்றமும் வங்கிகளில் சமீப காலமாக ஏற்பட்டிருக்கிறது. கிராமக் கிளைகளில் மட்டுமே கொடுத்து வந்த நகைக் கடன் இப்போது, நகரங்களிலும் வழங்கப்படுகிறது. ஆனால், சில நாள் முன்னதாகத் தெரிவித்தால்தான் நகை மதிப்பீட்டாளர் அந்த குறிப்பிட்ட தேதியன்று வருவார்.

வங்கிகளில் நிலவும் அதே மாதிரியான பாதுகாப்புத் தன்மை கூட்டுறவு வங்கிகளில் இருக்கின்றன. இங்கு வட்டி சற்று அதிகம். இவை தவிர, சென்னையில் சில குடியிருப்புப் பகுதிகளில் "சாஸ்வத நிதி' போன்ற நிறுவனங்கள் இயங்குகின்றன. இங்கெல்லாம் நகைக் கடன் அன்றாடம் வழங்குகிறார்கள். சேமிப்புக்கு வட்டியும் கூடுதலாகக் கிடைக்கும். மேலும், நகைக் கடன் பெறுவதற்கு சிரமமேயில்லை. இதுபோன்ற உள்ளூர் சாஸ்வத நிதி ஒன்று அண்மையில் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியதிலிருந்தே இவற்றின் ஸ்திரத் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.

அங்கீகரிக்கப்பட்ட சீட்டு நிறுவனங்களில், மாதாமாதம் ஈவுத் தொகை கிடைக்கும். இடையில், ஓர் அவசரச் செலவுக்கு ஏலத்தில் மொத்தமாக எடுக்க வசதியுண்டு. சில வர்த்தகர்களுக்கு, இரண்டாம் நிலை வாகனங்கள் வாங்க இத்தகைய நிறுவனங்கள் பயனுள்ளதாக இருக்கிறது.

கொஞ்சம் தைரியமாக, "ரிஸ்க் எடுக்க விழைபவர்கள், பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். பணவீக்கக் குறைவு, பெட்ரோல் விலை வீழ்ச்சி, ரிசர்வ் வங்கியின் அண்மைக் கால அறிக்கைகள் - இவை எல்லாம் சேர்ந்து பங்குச் சந்தைக்கு புத்துயிர் ஊட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, ஆறு மாதங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்கு விலை (வாகனத் துறை), இன்று இரட்டிப்பாகியிருக்கிறது. ஓரளவு முன்னடைவும், வணிக ஏடுகளைப் படித்துப் புரிந்து கொள்கிற திறன் இருந்தால், கணிசமாக லாபம் சம்பாதிக்கலாம்.

பங்குச் சந்தை என்றால் பயமா? இருக்கவே இருக்கிறது பரஸ்பர நிதி நிகுவனங்கள், புகழ்பெற்ற நிறுவனங்கள், அரசு, தனியார் வங்கிகள். எல்லாமே இத்தகைய நிதிகளை நடத்துகிறார்கள். இவற்றில் முதலீடு செய்தால், ஐந்தாண்டுகளில் உறுதியாக 15 சதவீதம் பெறலாம்.

மேலே குறிப்பிட்ட எல்லாவற்றிலும் சாதகமான ஒரு பொது அம்சம் நிலவுகிறது. அதாவது, தலைமைப் பதவியில் பெரிய மாறுதல் நிகழ்ந்தாலும் சரி, பெரிய அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டுச் சிக்கினாலும் சரி, வாடிக்கையாளர்களுக்கு நஷ்டம் இருக்காது. பங்குச் சந்தை மட்டும் சற்று உணர்வு சார்ந்திருப்பதால், சில நாள் வீழ்ச்சி பெற்றாலும் பின்னர் ஏறி இயல்புக்குத் திரும்பிவிடும்.

இவ்வளவு வசதிகளும், வாய்ப்புகளும் இருக்கையில் சிலர் ஏன் போலி நிறுவனங்களில் சிக்கி வீழ்கிறார்கள் என்பது புரியாத புதிர். உள்ளூர்ப் பெரிய மனிதரின் தொடர்பு, இல்லத்துக்கே வந்து பணம் வசூல் செய்யும் தன்மை, வங்கிக் கணக்கு, பிற முகவரிச் சான்றிதழ்கள் தேவையில்லாத முறை - எல்லாமே ஏழை, எளியவர்களுக்கு ஒரு சாதகமான அம்சம்தான். அதனால், அவர்கள் நம்பிவிடுகிறார்கள்.

ஆனால், நடுத்தர மக்களும், உயர் வகுப்பு பிரிவினரும் ஏமாறுகிறார்களே, அதை என்ன சொல்ல? மதுரையில் ஒரு நிறுவனம் திட்டமிட்டு பொதுமக்களை ஏமாற்றியிருக்கிறது. மேற்கு வங்கம், சாரதா சீட்டு நிறுவன விவகாரம், நாளுக்கு நாள் விசுவரூபமெடுக்கிறது. எப்படியாவது, ஓரிரு வருடத்தில் பணம் சேர்த்து செல்வந்தராகி விடலாம் என்ற பேராசையே இதற்கெல்லாம் காரணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.