இயற்கையின் தண்டனை!
இவ்வுலகம் நீரால் இயங்குகிறது என்பது அறிவியல் கூறும் உண்மை. இதைத்தான் "நீரின்றி அமையாது உலகு' என்கிறது வள்ளுவம்.
இவ்வுலகம் நீரால் இயங்குகிறது என்பது அறிவியல் கூறும் உண்மை. இதைத்தான் "நீரின்றி அமையாது உலகு' என்கிறது வள்ளுவம். ஐம்பூதங்களில் இரண்டாமிடத்தைப் பெறுவது நீர். தாகம் தீர்க்கும் நீரே பசியைப் போக்கும் உணவாகவும் உதவுகிறது. உலக உயிர்களின் வாழ்வாதாரங்களில் நீர் அடிப்படையானது.
உணவின்றி ஒரு வாரம் வரைகூட உயிர் வாழ்ந்து விடலாம். ஆனால், நீரின்றி ஒரு நாள்கூட உயிர் வாழ்தல் இயலாது. நீர் நிலைகளை ஆதாரமாகக் கொண்டுதான் உலகில் நாகரிகங்கள் தோன்றியுள்ளன.
தமிழ் மொழியில் காணப்படும் நீர்நிலை குறித்த சொற்களும், பழமொழிகளும் மரபுத் தொடர்களும் நீரின் இன்றியமையாமையை நமக்கு உணர்த்துகின்றன.
இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்தது நீர்மூலக் கூறு என்பது அறிவியல். "தீ முரணிய நீர்' என்று தீயைக் கொண்டு நீரை விளக்குகிறது புறநானூறு.
அகழி, அணை, அருவி, ஆறு, ஊருணி, ஊற்று, ஏரி, ஓடை, கண்மாய், காட்டாறு, கால்வாய், வாய்க்கால், கிணறு, குளம், குட்டை, சமுத்திரம், சிற்றேறி, சிற்றாறு, சிற்றோடை, சுனை, நதி, மாக் கடல், மகா சமுத்திரம், முந்நீர் என நீரைப் பற்றியும் நீர் நிலைகள் பற்றியும் பல சொற்கள் தமிழில் வழங்கி வருகின்றன.
குளிக்கப் பயன்படுவது குளம் என்றும், ஏரித் தொழிலில் பயன்படுவது ஏரியென்றும், குடிக்கப் பயன்படுவது ஊருணி என்றும் மிக நுட்பமாகப் பொருள் உணர்த்தும் சொற்கள் தமிழில் மட்டுமே உண்டு.
இத்தகு சிறப்பு வாய்ந்த நீரை நிலத்திற்குத் தந்து வளம் கொழிக்கச் செய்வதில் பெரும் பங்கு மழைக்கு உண்டு. எனவேதான் "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்' என்று இளங்கோ அடிகள் தமது சிலம்பில் மழைக்கு வாழ்த்துப் பா பாடினார்.
இவ்வாறே நற்றமிழ் இலக்கியங்கள் பலவும் வான் மழைக்கு வரவேற்பு கூறியுள்ளதைக் காணலாம். மழையின்றேல் மனிதன் உயிர்வாழ முடியாது என்பதனை "வான் மழை சுரப்பின் பெரும்பேர் அச்சம்' என்றும் அவை மனித குலத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
நீரின் சிறப்பையுணர்ந்த வள்ளுவப் பெருந்தகையும் கடவுள் வாழ்த்திற்கு அடுத்து வான் சிறப்பைக் கூறித் தனது குறளைத் தொடங்குகிறார். வான் புகழ் வள்ளுவத்தை மட்டுமன்றி வளமார் தமிழ் இலக்கியங்கள் பலவற்றையும் புறக்கணித்தமையால்தான் தமிழகம் இன்று வறுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நீருக்கு அண்டை மாநிலங்களிடம் கையேந்திக் கொண்டிருக்கிறது.
மழையில் நனைந்து மழையில் மகிழ்ந்து மழையை அருந்திய மனிதன் இன்று பாட்டில் நீரில் பல் துலக்கி, பாட்டில் நீரில் குளித்து, பாட்டில் நீரைப் பருகும் அவலம் ஏன்?
மரங்களை வெட்டிக் கொண்டே மழைக்கு ஏங்கிக் கொண்டிருக்கிறோம். மழை பொய்த்த பின் மழை நீர் சேகரிப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். மழையின்மையால் வேளாண்மை இல்லை.
வேளாண்மையின்மையால் விளைநிலங்கள் இல்லை. ஆறு, குளம், ஏரி, கிணறு எல்லாம் நீரின்றி வறண்டு போயின. நீர் மின் உற்பத்தி நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறது. நிலத்தடி நீரும் அற்றுப் போனது. புவி வெப்பம் ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
கை வைத்தவுடன் நீர் சுரக்கும் வைகையும், வெண்ணெய் உருகுமுன் பெருகும் பெண்ணையும், வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியும், பல்வளம் பெருக்கிய பாலாறும் இன்று ஏடுகளிலும் இலக்கியங்களில் மட்டுமே காணப்படுகின்றன. நீர் வறண்டு போனதனால் நாவறண்டு போனது. சோறுடைத்த சோனாடு சோகமுற்றுப் போனது.
மணலைக் கொள்ளையடிக்கும் மனிதர்களால் ஆறுகள் பதித்த தடங்களும் அழிந்து கொண்டிருக்கின்றன.
இயற்கையைக் காப்பாற்றத் தெரியாத மனிதர்களுக்கு இயற்கை தந்த தண்டனைதான் இந்த வறட்சி. இன்று தமிழகம் முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம். நுகர்வோர் கலாசார பாதிப்பினால் எதை விற்பது எதை வாங்குவது என்று தினறிய மனிதன் இயற்கையை விற்றதன் விளைவுதான் இந்த வறட்சி.
வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் வள்ளுவன் வகுத்துரைத்த பத்துக் குறட்பாக்கள் கூறும் கருத்துகள் வெறும் வார்த்தைகள் அல்ல. அவைதான் வாழ்க்கை. அறம், ஒழுக்கம், ஆன்மிகம் அனைத்திற்குமே அடிப்படை வான்மழை என்ற வள்ளுவரின் கூற்று என்றுமே பொய்ப்பதில்லை.
காசைத் தண்ணீராய்ச் செலவழித்த காலம் போய்த் தண்ணீரைக் காசுபோல செலவழிக்கும் காலம் இன்று. இதே நிலை நீடிக்குமானால், பெட்ரோல் நிலையங்களைப் போன்று நீர் விற்கும் நிலையங்கள் திறக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
வற்றிப் போனது தண்ணீர் மட்டுமல்ல. வாழ்விழந்து போன தமிழர்களின் கண்ணீரும் தான்.
மாதம் மும்மாரி வேண்டாம். ஒருமாரியாவது பெய்யுமா, உலகம் உய்யுமா என ஏங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களின் நிலை கண்டு, "நீரின்றி அமையாது உலகு' என்று பாடிய வள்ளுவன் வானின்று வருந்திக் கொண்டிருக்கிறான்.
வெட்டிய மரங்களை நட்டு வளர்ப்போம். மழைவளம் பெறுவோம். மண்வளம் காப்போம். வறண்ட ஆறுகள் வளம் கொழித்து ஓடட்டும். வயல் வளம் செழிக்கட்டும். முயன்றால் முடியாதது இல்லை. வரும் தலைமுறைவாழ்வதற்காகவாவது வான் மழை பெய்ய வைப்போம்!