இந்திய அரசின், அறிவியல் தொழில்நுட்பத் துறை புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரும் விதமாக 2011 முதல் 2020 வரையிலான பத்தாண்டு காலத்தை "கண்டுபிடிப்புகளின் ஆண்டு' - என அறிவித்துள்ளது. இதன்மூலம் புதிய கண்டுபிடிப்புகளையும் அறிவியல் அறிஞர்களையும் மட்டுமன்றி, இளம் அறிவியல் ஆர்வலர்களையும் ஊக்குவித்து வருகின்றது.
இத்திட்டத்தை செயல்படுத்த பல்வேறு வகைகளில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு என தனித்தனியாக "புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது'- அதாவது Innovation in Science Pursuit for Inspired Research (INSPIRE AWARD) என்று வழங்கி அறிவியலில் ஆய்வு மனப்பான்மையை வளர்த்து அதன்மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி செய்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான இந்தத் திட்டம் 2009-இல் தொடங்கப்பட்டு இந்தியா முழுவதும் 2014 வரை சுமார் 12 லட்சம் மாணவர்களுக்கு "ஆய்வு விருது' வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று கல்லூரி மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளித்து அவர்களையும் புதிய கண்டுபிடிப்பிற்கு பங்களிப்பு செய்யும் வகையில், அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இதன்மூலம் பல புதிய கண்டுபிடிப்புகளை வெளி கொணர்ந்துள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தும் சமுதாயத்திற்கு பெரிதும் பயன்படும் நோக்கில் அமைய வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். தேவைகள், மாறுபட்ட அறிவியல் சிந்தனைகள்தான் புதிய கண்டுபிடிப்பிற்கு அடிதளமாக அமைகின்றது.
தற்சமயம் நீர், நிலக்கரி, காற்று, சூரியசக்தி மற்றும் அணுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், வாகனப் புகையிலிருந்து மின்சாரம் தயாரிக்கின்ற புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது வியப்பான செய்திதான். அதாவது, வாகனப் புகையிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகின்ற பொழுது ஒருபுறம் நமக்கு தேவையான மின்சாரம் கிடைக்கின்றது. அதேநேரத்தில் சுற்றுச்சூழல் பாதிப்படைய செய்கின்ற புகையினையும் கட்டுப்படுத்துகின்ற இன்னொரு பயனும் கிடைக்கிறது.
நாம் பயன்படுத்தும் வாகனங்களிலிருந்து வெளிபடும் வெப்ப ஆற்றல்கள் மின்ஆற்றலாக மாற்றப்படுகின்றது. வாகனங்களிலிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றலை குறைப்பதற்கு வழிமுறைகளை உருவாக்கி வருகின்றனர். மேலும், வெப்பமின் இயற்றிகள் மூலமாக வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற முடியும் என கண்டுபிடித்துள்ளனர்.
வெப்பநிலை வேறுபாட்டினால் மின்னாற்றல் உருவாகும். எந்த அளவிற்கு வெப்பநிலை அதிகமாக இருக்குமோ அந்த அளவிற்கு வெப்பமின் இயற்றிகள் அதிக மின்னோட்டத்தை உருவாக்க முடியும்.
அதாவது, வாகனங்களிலிருந்து புகை வெளியேறும் குழாய்களில் வெப்பநிலை சுமார் 700 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும் என்று கண்டறிந்துள்ளனர். புகை வெளியேறும் குழாய்க்கும் எஞ்சினை குளிர்விக்க பயன்படும் குளிர் திரவம் செல்லும் குழாய்க்கும் இடையே உள்ள வெப்பநிலை சிலநூறு டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். இந்த வெப்பநிலை வேறுபாட்டினால் வெப்பமின் இயற்றிகள் மின்னோட்டத்தை உருவாக்குகின்றன.
மின்கலன்களில் (Battery) மின்னோட்டம் பாய்வது போன்று வெப்பமின் இயற்றிகள் (Heater Generator) செயல்படுகின்றன. இந்த வெப்பமின் இயற்றிகள் அந்தந்த வாகனங்களுக்கு தேவையான மின்சாரத்தை அளிக்கும்.
நான்கு சக்கர வாகனத்தை முதலில் இயக்க (Start) தேவையான மின்சாரம் ஒளி மற்றும் A.C. Unit-க்கு தேவையான மின்சாரம் கிடைக்கும்.
இதேபோல் அந்தந்த வாகனத்திலிருந்து வெளியேறும் புகையினால் வாகனத்திற்கு தேவையான மின்சாரம் கிடைப்பதுடன் அந்த வாகனத்திற்கான எரிபொருள் அளவும் 5 முதல் 10 சதவீதம் குறையுமாம். இது எரிபொருள் சிக்கனத்திற்கும் வழிவகுக்கும்.
இந்த வாகனப் புகைகளைக் கொண்டு இயங்கும் இருசக்கர மோட்டார் சைக்கிளை மாணவர்கள் வடிவமைத்து பயன்படுத்தியுள்ளனர்.
அனீமியா என்பது ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் ரத்த சோகை நோயாகும். இந்த நோய் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக அளவில் உள்ளது. உலக அளவில் 1.6 லட்சம் மக்கள் இந்நோயால் பாதிப்படைந்துள்ளனர்.
இந்த நோயை கண்டறிய புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு துளி ரத்தத்தை எடுத்து அதனை வேதியல் செயல்பாட்டிற்கு உள்படுத்தி அதன்மூலம் ஏற்படும் நிற மாற்றத்தை (Colour Changes) வைத்து ஹிமோகுளோபின் அளவினை 60 வினாடிகளிலேயே அதாவது ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம்.
இந்த ஆய்விற்கு மின்சாரம் தேவையில்லை எப்படி அமிலத்தின் காரத்தன்மையினை "ஒரு லிட்மஸ்' பேப்பரைக் கொண்டு கண்டுபிடிப்போமோ அதுபோல வண்ணம் மாறுவதைக் கொண்டு ஹிமோகுளோபின் அளவை உடனடியாக கண்டுபிடித்துவிடலாம்.
பச்சை-நீலம்-சிவப்பு (Green-Blue-Red) வண்ணத்தைக்கொண்டு ஹிமோகுளோபின் அளவு குறைவு-சாதாரணம்-சரியாக உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர் டாக்டர் வில்பர் இந்த முறையை கண்டறிந்து, இதற்காக 240 நோயாளிகளிடமிருந்து மாதிரி ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்து, உறுதி செய்துள்ளார். மேலும், வழக்கமான ஆய்வக முறையிலும் நான்கு முறை சரிபார்த்து தன் பரிசோதனை முடிவுடன் ஒப்பிட்டு உறுதி செய்துள்ளார்.
இத்தகைய ஊசியை நம் விரலில் குத்தி ரத்தத்தை எடுத்து மருத்துவரிடம் செல்லாமலேயே ஹிமோகுளோபின் அளவை நாம் அறிந்துகொள்ளலாம். அதற்கு ஏற்றாற் போல் உணவு மற்றும் பழவகைகளை நாமே மாற்றி எடுத்துக்கொண்டு இந்த நோயை குணப்படுத்தி "நமக்கு நாமே மருத்துவராக' செயல்பட முடியும்.
இந்த புதிய கண்டுபிடிப்பு அனைவருக்கும் பயன்படும் வகையில் இத்தகைய ஊசிகள் வியாபார நோக்கில் விரைவில் வெளிவர உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.