கத்தரிக்காய் வேர்க்கடலை குழம்பு
தேவையான பொருள்கள்:
கத்தரிக்காய் - கால் கிலோ
வேர்க்கடலை - 100 கிராம்
புளி - 1 எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 1
சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 1/4 தேக்கரண்டி
வெங்காய வடகம் - 1 1/4 தேக்கரண்டி
வெல்லம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - கால் கிண்ணம்
செய்முறை:
புளியை அரை கிண்ணம் வெந்நீரில் ஊறவைத்து புளிச்சாறைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பின்னர், கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். நிறம் மாறாமல் இருக்க கத்தரிக்காயை தண்ணீரில் போட்டு வைக்கவும். வேர்க்கடலை பச்சையாக இருந்தால் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். காய்ந்த வேர்க்கடலையாக இருந்தால் குறைந்தது மூன்று மணி நேரமாவது ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் வெங்காய வடகம் சேர்த்து தாளிக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அடுத்து, தக்காளியைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.
கத்தரிக்காய் அரை வேக்காடு வெந்ததும், அத்துடன் வேக வைத்துள்ள வேர்க்கடலையைச் சேர்த்து வதக்கவும். பின்னர், மிளகாய்த் தூள், சாம்பார் தூள், மிளகுத் தூள் சேர்த்து வதக்கி புளி கரைசலை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், தேவையான தண்ணீர் மற்றும், உப்பு சேர்த்து கிளறி மூடிவிடவும்.
நன்கு கொதி வந்ததும், வெல்லத்தைச் சேர்த்து சிறுதீயில் நன்றாக கொதிக்க வைக்கவும். கத்தரிக்காய் வேர்க்கடலை குழம்பு தயார். நல்ல சுவையாகவும், மணமாகவும் இருக்கும். மிகுதியான ஊட்டச்சத்து நினறந்த குழம்பு இது.