"லைவ்' இருந்ததால் "லைஃப்' இல்லை!
இந்த வருடம் பார்த்தசாரதி சுவாமி சபாவில் தொடக்க விழாவைத்
இந்த வருடம் பார்த்தசாரதி சுவாமி சபாவில் தொடக்க விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் நிகழ்ச்சி பந்துல ரமாவின் இசைக் கச்சேரி. கடந்த சில சீசன்களாகவே, தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும், பேசப்படும் கலைஞர்களில் ஒருவர். இந்த சீசனில் அவருக்கும் இதுதான் முதல் கச்சேரி.
÷வழக்கம்போல அவரது கணவர் எம்.எஸ்.என். மூர்த்தி வயலின். ஜெ.வைத்தியநாதன் மிருதங்கம். கே.வி.கோபாலகிருஷ்ணன் கடம். தொடக்க விழாவுக்குப் பிறகு நிகழ்ச்சி என்பதால் சனிக்கிழமை மாலை ஏழு மணிக்குத்தான் சற்று தாமதமாக நிகழ்ச்சி தொடங்கியது.
÷"வசந்தா' ராகத்தில் அமைந்த "நின்னுகோரி' வர்ணத்துடன் தனது நிகழ்ச்சியைத் தொடங்கினார் பந்துல ரமா. தொடர்ந்தது, "கணபதே, மகாமதே' என்கிற பாபநாசம் சிவனின் "கல்யாணி' ராக கீர்த்தனை. ரொம்பவும் ஆழமாகப் போகாமல், சிக்கனமாக "கல்யாணி' ராகத்தை ஆலாபனை செய்துவிட்டு சாகித்யத்தைப் பாடத் தொடங்கி விட்டார்.
Advertisement
÷கச்சேரி களை கட்டுவதற்கென்றே கலைஞர்கள் சில ராகங்களைக் கையாள்வதுண்டு. அந்த ராகங்கள் இசைக்கப்பட்டால், சபைக்கே ஒரு விறுவிறுப்பும் பக்கவாத்தியக்காரர்களுக்கு சுறுசுறுப்பும் தன்னைப் போலவே வந்துவிடும். அப்படிப்பட்ட ராகங்களில் ஒன்று "தேனுகா'. விஸ்தாரமான ஆலாபனை. தேர்ந்தெடுத்துக் கொண்ட சாகித்யம், தியாகய்யரின் "தெலியேலது ராம...' பல்லவியிலேயே கல்பனா ஸ்வரமும் பாடினார்.
÷அதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ராக ஆலாபனை. ராகம் "கருடத்வனி'. சாகித்யம், "தத்வமெருக தரமா'. நிரவல் எல்லாம் செய்து மெனக்கெடாமல், கல்பனா ஸ்வரம் மட்டும் பாடிவிட்டு, விஸ்தாரமாக "சஹானா' ராக ஆலாபனையில் இறங்கிவிட்டார்.
÷இனிமையான ராகங்களின் வரிசையில் சஹானாவுக்கு இடமுண்டு. அந்த நாள் "வீர அபின்யு' திரைப்படம் "பார்த்தேன், சிரித்தேன், பக்கம் வரத் துடித்தேன்' பாடலிலிருந்து, சமீபத்திய "அவ்வை சண்முகி' திரைப்படப் பாடலான "ருக்கு, ருக்கு, ருக்கு' வரை "சஹானா' ராகத்தில் அமைந்தவைதான்.
÷சஹானாவைக் கல்பனா ஸ்வரம் பாடி முடித்துவிட்டு, "காந்தாமணி' ராகத்தில் ராகம், தானம், பல்லவி பாடத் தொடங்கினார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டது "நீயே கதி ஸ்ரீகாந்தா மணிநிப தேகா அருள்வாய்' என்கிற ஆதி தாளத்தில் அமைந்த இரண்டு களை பல்லவி. ராகமாலிகைக்கு நளினகாந்தி, ரஸôளி ராகங்கûளைக் கையாண்டு பாடித் தனியாவர்த்தனத்திற்கு நேரம் ஒதுக்கினார்.
÷"தர்பாரி கானடா' ராகத்தில் "கோவர்த்தன கிரிதரா' பாடித் தனது நிகழ்ச்சியை பந்துல ரமா நிறைவு செய்தார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்தாரா என்று கேட்டால்... பதில் சொல்ல முடியவில்லை.
÷கச்சேரியில் பழுதொன்றும் காண முடியவில்லை. சாரீரமும் பிசிறு தட்டாமல் நன்றாகவே இருக்கிறது. ஆனாலும், ஏதோ திருப்தி இல்லாதது போல இருந்தது. முதல் கச்சேரி பொதுவே, அசாத்தியமாக அமைவதுதான் இயல்பு. போன சீசனில் வேளச்சேரியில் நாதசுதா சார்பில் நடந்த பந்துல ரமாவின் கடைசிக் கச்சேரியுடன் ஒப்பிட்டால், இது ரொம்பவே சுமார்.
÷அரங்கத்திலிருந்து வெளியே வந்தபோது இரண்டு ரசிகர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
÷""நன்னாத்தான் இருந்தது. ஆனாலும் ரொம்ப விசேஷம்னும் சொல்ல முடியலை...''
÷""ஆல் இந்தியா ரேடியோ லைவ் ரெக்கார்டிங் இருந்துதோன்னோ! எல்லா பாடகாளும் இப்படித்தான், "லைவ்' ரிலே இருக்குன்னு தெரிஞ்சா ரொம்பவே கவனமாயிடறா. கல்பனா சக்தி குறைஞ்சு போயிடறது. ஜெயா டிவில பாடறதுக்கும், வேறே சபாவில பாடறதுக்கும் வித்தியாசம் இருக்கு, கவனிச்சேளோ? "லைவ்' இருந்தாலே கச்சேரியில "லைஃப்' இருக்கிறதில்லை!''
÷அட ஆமாம், பந்துல ரமாவின் கச்சேரிக்கு அகில இந்திய வானொலியில் நேரடி ஒலிபரப்புக்கான ஒலிப்பதிவு நடந்தது!