அதிவேகமாக முதல் வரிசையை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருக்கும் அற்புதக் கலைஞர் குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா. மிருதங்கத்திலும் நல்ல தேர்ச்சி இருப்பதால் இயல்பாகவே இவருக்கு இருக்கும் ஸ்ருதி சுத்தத்துடன் காலப்பிரமாணக் கச்சிதமும் இணையும்போது அற்புதமான இசையை அவரால் வழங்க முடிகிறது. இந்த சின்ன வயதிலேயே இத்தனை அபாரமான சங்கீத ஞானம் வாய்க்கப் பெற்றிருப்பவர்கள் வெகு சிலரே. அதில் குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா குறிப்பிடத்தக்கவர்.
கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் கடந்த சனிக்கிழமை பாரதிய வித்யா பவன் சிற்றரங்கத்தில் குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணாவின் கச்சேரி. ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் கூடுதலாக உள்ள இவரைப் போன்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகளை சிற்றரங்கங்களில் நிகழ்த்துவது தவறு. ரசிகர்கள் வெளியில் நின்று கேட்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் இதை தவிர்க்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.
திருவொற்றியூர் தியாகையா தர்பார் ராகத்தில் இயற்றிய சலமேல என்கிற வர்ணத்துடன் தொடங்கியது குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணாவின் அன்றைய கச்சேரி. வி. சஞ்சீவ் வயலின், தஞ்சாவூர் முருகபூபதி மிருதங்கம், அனிருத் ஆத்ரேயா கஞ்சிரா.
மயங்க வைக்கும் ஹமீர்கல்யாணி ராக ஆலாபனை. அதைத் தொடர்ந்து "தூமணி மாடத்து' என்கிற திருப்பாவை. ரசிகர்களை மெய்மறக்கச் செய்துவிட்டார். பரஸ் ராகத்தில் ஸ்வாதி திருநாள் இயற்றிய சாகித்தியம் பன்னக சயனா. பாடலைப் பாடிவிட்டு, பல்லவியிலேயே ஸ்வரம் இசைத்தார். ஸ்வரம் பாடுவதில் குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணாவுக்கு ஒரு தனித்துவம் காணப்படுகிறது. ஸ்வரப்ரஸ்தாரங்களில் விறுவிறுப்புக்கு இந்த இளம் கலைஞரின் மனோதர்மமும் ஒரு முக்கியக் காரணம்.
அன்றைய முக்கிய உருப்படி, ஹம்சாநந்தி ராகம், தானம், பல்லவி. "கரிமுரளித லேதா ஹரே கிருஷ்ணா' என்பதுதான் பல்லவி. நேரம் குறைவாக இருந்ததால் ராகமாலிகைக்கு தர்பாரி கானடா என்கிற ராகத்தை மட்டும்தான் கையாண்டார் அவர்.
அன்றைக்கு திருவாதிரை நாள். அதை மனதில் கொண்டு பாபநாசம் சிவன் இயற்றிய இடது பதம் தூக்கி ஆடும் என்கிற கமாஸ் ராகப் பாடலுடன் பாலமுரளிகிருஷ்ணாவின் கச்சேரி நிறைவுக்கு வந்தது.
அதிஅற்புதமான குரல் வளம். இப்படி அற்புதமான இசைக் கலைஞன் கிடைத்ததற்கு தமிழகம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். மூன்று காலங்களிலும் சர்வசாதாரணமாக அவரது சாரீரம் சஞ்சரிக்கிறது. ஸ்வரப்ரஸ்தாரங்களாகட்டும், இவருடைய அபாரமான மனோதர்மத்தைப் படம் பிடிக்கிறது.
அற்புதமான இந்தக் கச்சேரியில் எரிச்சலை வரவழைத்தது அவ்வப்போது மக்கர் செய்த ஒலி பெருக்கி. இசை நிகழ்ச்சியை அமைப்பவர்கள் ஒலிபெருக்கி ஒழுங்காக இருப்பதை உறுதிப்படுத்தாமல் இருப்பது நமக்கே எரிச்சலூட்டும், அந்தக் கலைஞனுக்கு எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. அதையும் மீறி ரசிகர்களை குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணாவால் கட்டிப்போட முடிந்திருக்கிறது. இது சாதாரண
வெற்றியல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.