இசை

ஜீவ தசாவஸ்தா

ஸ்ரீகிருஷ்ணகான சபாவில் ஒவ்வொரு வருடமும் நாட்டிய நுணுக்கங்களைப் பற்றியும் அதில் புதிதாக கருத்துக்களைப் புகுத்தும் சாத்தியக் கூறுகளைப்

தினமணி

ஸ்ரீகிருஷ்ணகான சபாவில் ஒவ்வொரு வருடமும் நாட்டிய நுணுக்கங்களைப் பற்றியும் அதில் புதிதாக கருத்துக்களைப் புகுத்தும் சாத்தியக் கூறுகளைப் பற்றியும் விவாதிக்கப்படும் கருத்தரங்கு நடைபெறுகிறது. கடந்த இரு வருடங்களாக நாட்டிய மேதை முனைவர் ஸ்வப்னசுந்தரி தலைமையில் பல புது விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. கருத்துருப் பெற்றன. இந்த வருடத் தலைப்பு "எண் - பத்து'. அதாவது, "தச மஹாவித்யா', "தச திசைகள்', என பத்து என்கிற எண்ணில் அடங்கக் கூடிய, பலரும் அறியாத நாட்டியம் குறித்த கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
 பரத நாட்டியம், கதக், சாவ், மோஹினி ஆட்டம், குச்சுப்புடி எனப் பல தரப்பட்ட கலை வடிவங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்கள் சிறந்த முறையில் விரிவுரையாற்றி ஆடவும் செய்தார்கள்.
 நாட்டியக் கருத்தரங்கின் நிறைவு நாளில் உலகப் புகழ் பெற்ற கலைஞர் ரமா வைத்தியநாதனுடைய "ஜீவ தசாவஸ்தா' - தமிழில் "வாழ்க்கையின் பத்து வேதனைகள்' என்ற தலைப்பில் விளக்கி ஆடினார். வாழ்க்கையைப் பற்றிய புதுமையான அணுகுமுறையால் ரமாவுக்கு நாட்டியமாடுவதோடு, நுணுக்கமாக ஆராய்ந்து, ஆராய்ச்சிபூர்வமாக ஆடுவதிலும் நிபுணர் என்பதை நிரூபித்தார்.
 கருவறையில் ஆரம்பிக்கும் மனிதனுடைய வாழ்க்கை, தாய்ப்பால் குடிப்பதில் தொடங்கி, தளர்நடையிட்டுப் பெற்றோர்களின் பராமரிப்பில் வளர்ந்து, தானே பொம்மை வைத்து விளையாடி, நண்பர்களுடன் களித்து, வேண்டிய மட்டும் உணவருந்தி, பால் உணர்வால் ஈர்க்கப்பட்டு, தனக்காக சொத்து சேர்த்து, பின் அதிலிருந்து விடுபடும் வழியைத் தேடி, அதற்குள் முதுமை கவ்வ, காலதேவனால் விருப்பின்றி உயிர் பறிக்கப்பட்டுச் சடலமாவது வரை மனிதகுலம் படும் வேதனைகள்தான் எத்தனை எத்தனை... வேண்டேன் நான் இப்பிறவிச் சுழற்சியை- சீக்கிய மதகுரு குருநானக்கின் கருத்துகளை தெள்ளத் தெளிவான அபிநயங்களுடன், ரமா ஆடியபொழுது அரங்கு நிறைந்த ஸ்ரீகிருஷ்ணகான சபா எழுந்து நின்று அவருக்கு கரவொலி எழுப்பி மரியாதை செய்தது.
 ஒரு நாட்டியக் கலைஞர் இன்றைய காலகட்டத்தில் நாட்டியத்தை மட்டுமே அறிந்திருந்தால், முழுமை பெற்ற கலைஞராக பரிமளிக்க முடியாது. நாட்டிய நுணுக்கங்கள், கோட்பாடுகள், ஒப்பனை, உடையலங்காரம், ஒளியமைப்பு, ஒலி நுணுக்கங்கள், சங்கீத ஞானம் இவற்றோடு, தத்துவங்கள், இலக்கியங்கள், சரித்திரம், மற்றும் அறிவியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் தன்னை ஓரளவேனும் வளர்த்துக் கொண்டால் மட்டுமே கற்றவர்கள் நிறைந்த சபையில் சுடர்விட்டுப் பிரகாசிக்க முடியும்.
 இதை ரமா நிரூபித்த விதத்திலிருந்து, அவர் தன்னை ஒவ்வொரு முறையும் புதுப்பித்துக் கொள்கிறார் என்பதைக் கண்கூடாகக் காண முடிந்தது.
 -ஜாகிர் உசேன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!

மதுரை அழகர் கோயில் தேரோட்டம்!

தில்லியை திணறடிக்கும் மழை; இன்றும் ரெட் அலர்ட்

டிரம்ப் - புதின் சந்திப்பு! உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

ஆபரேஷன் அகால் 9வது நாள்: குல்காம் தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம்

SCROLL FOR NEXT