இன்றைய இளம் கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவராக வலம் வருபவர் பெங்களூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா வித்யா ரகுநாத். இந்த இளம் கலைஞரின் நிகழ்ச்சி நாத இன்பம் அமைப்பின் சார்பில் ராகசுதா அரங்கத்தில் கடந்த ஞாயிறு மாலை 4 மணிக்கு நடந்தது. ராகுல் வயலின். கல்லிடைக்குறிச்சி சிவகுமார் மிருதங்கம்.
இந்த சலமு என்கிற பேகடா ராக வர்ணத்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார் ஐஸ்வர்யா வித்யா ரகுநாத். தொடர்ந்தது தியாகராஜ ஸ்வாமிகள் பந்துவராளி ராகத்தில் இயற்றிய நாரதமுனி என்கிற சாகித்யம். அதில் "நாராயண நாம' என்ற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு ஸ்வரம் பாடினார் ஐஸ்வர்யா. விறுவிறுப்பாக இரண்டு உருப்படிகளைப் பாடிவிட்டு, தர்பார் ராக ஆலாபனையில் இறங்கினார். தர்பார் ராக ஆலாபனைக்குப் பிறகு அவர் கையாண்ட சாகித்யம் தியாகய்யர்வாளின் யோசனா கமல லோசனா.
விஸ்தாரமான நாட்டைக்குறிஞ்சி ராக ஆலாபனை தொடர்ந்தது. ராக ஆலாபனையில் ஐஸ்வர்யாவின் சங்கீத ஞானம் பளிச்சிட்டது. வெறும் சாதகத்தாலும் பயிற்சியாலும் வரக்கூடியதல்ல ராகங்களைப் பற்றிய புரிதல். ஆலாபனையில் எடுத்துக்கொண்ட ராகத்தின் பாவத்தை முழுமையாக வெளிப்படுத்துவதும், அதே நேரத்தில் தனது குரல் வளத்தையும் சங்கீத ஞானத்தையும் அதில் இணைத்துக் கொள்வதும் மிகவும் முக்கியம். அந்த விஷயத்தில் ஐஸ்வர்யா திறமைசாலி என்பதை நிரூபித்தார்.
நாட்டைக்குறிஞ்சி ஆலாபனைக்கு அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட சாகித்யம் கோபாலகிருஷ்ண பாரதியின் வழி மறைத்திருக்குதே. அதில், "உற்றுப் பார்க்க சற்றே ஆகிலும் விலகாதோ' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு கல்பனாஸ்வரமும் பாடினார். திருப்தியாக நாட்டைக்குறிஞ்சி கேட்ட சுகானுபவம்.
அடுத்ததாக, இசைத்தது தன்யாசி ராகத்தில் கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய கனகசபாபதி தரிசனம் என்கிற பாடல். ரிலீஃபுக்காக இந்தப் பாடலைப் பாடிவிட்டு, மீண்டும் இன்னொரு ராக ஆலாபனையில் இறங்கினார் அவர். இசைத்த ராகம் கரஹரப்ரியா. விஸ்தாரமாக கரஹரப்ரியா ஆலாபனை செய்தார் என்பதைவிட, மனம் ஒன்றிப் போய் கரஹரப்ரியாவில் ஐஸ்வர்யா கரைந்துவிட்டார் என்பதுதான் உண்மை. ராமா நீயெடா என்கிற தியாகய்யரின் சாகித்யம். அதில் "தனசெளக்கியமுதா நெருக கனுறுலகு' என்கிற இடத்தில் நிரவல் ஸ்வரம். "நாட்டைக்குறிஞ்சி', "கரஹரப்ரியா' இரண்டுமே ஐஸ்வரியாவின் அன்றைய கச்சேரியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன.
தொடர்ந்து சாவேரி ராகத்தில் தர்மபுரி சுப்பராயர் இயற்றிய முத்தகாதுரா என்கிற ஜாவளி. "திருவொற்றியூர் தியாகராஜன்' என்கிற கனம் கிருஷ்ணய்யரின் அடாணா ராகத்தில் அமைந்த பதம். இரண்டையும் பாடி தனது நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார் ஐஸ்வர்யா. ஆஹா ஓஹோ பிரமாதம் என்றெல்லாம் பாராட்ட முடியாவிட்டாலும், அவரது வயதுக்கு நிச்சயமாக ஐஸ்வர்யாவுடையது அற்புதமான சங்கீதம். அடுத்த இரண்டு மூன்று சீசன்களுக்குப் பிறகு பரவலாகப் பேசப்படும் கலைஞர்களில் ஒருவராக இவர் வலம் வருவார் என்பதற்கு அன்றைய ராகசுதா அரங்க நிகழ்ச்சி கட்டியம் கூறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.