நானும் பாரதிராஜாவும் 16 வருட நண்பர்கள்.அவர் இயக்குனராக ஆவதற்கு முன்பே இருவரும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகளை, கதைகளை அலசி ஆராய்ந்திருக்கிறோம். 'பதினாறு வயதினிலே' படம் அவர் இயக்க, முதல் நாள் பாட்டை நான் பாட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆரம்ப விழாவன்று பாடல் பதிவும் நடந்தது. அன்று காலைஒரு பாடல் பதிவுக்கு சென்ற பொழுது என்னால் சரியாகப் பாட முடியவில்லை. காரணம் இருமல் ஜலதோஷம். அதனால் ரிக்கார்டிங்கை கேன்சல் செய்துவிட்டு பாரதிராஜாவின் பூஜைக்கு சென்றேன்.
என்னைப் பார்த்தவுடனே அவனுக்கு ரொம்பவும் சந்தோசம். 'பரவாயில்லை பாலு, ரொம்ப சீக்கிரமா வந்திட்டே' என்று கூற , நான் விஷயத்தை கூற இருவருக்கும் ஏக கோபம். நான் சொலவ்து இளையராஜாவையும் சேர்த்து!அப்பொழுது எங்கள் குழுவில் பாடிக் கொண்டிருந்த மலேசியா வாசுதேவனை வைத்து டிராக் எடுப்பதாக கூறினார்கள். நன் சொன்னேன், 'மலேசியா வாசுதேவன் வளரும் இளம் பாடகர்; நன்றாக இருந்தால் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள், வேறொரு பாடலை நான் பாடுகிறேன்' என்று. ஆனால் 'பதினாறு வயதினிலே'வுக்குப் பிறகு எடுத்த நான்கு படங்களிலும் நான் பாட முடியவில்லை. ஏதாவது ஒரு காரணமாக தடைபட்டு போகும். கடைசியில் அவருக்காக பாடிய முதல் பாடல் 'நிறம் மாறாத பூக்கள்' படத்தில் 'முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே' !
பாரதிராஜா எப்போதுமே ஒரு புதிய யோசனை ஏதாவது ஏற்பட்டால் அடுத்த நாளே அதற்கான காட்சியின் பாடலை ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புவார். 'காதல் ஓவியம்' படத்தின் பாடல்கள் எல்லாவற்றையும் நான்தான் பாட வேண்டும் என்று விரும்பினார். நானும் ஒவ்வொன்றாக பாடி முடித்தேன். கிளைமாக்ஸ் காட்சிக்கான 'ராஜ தீபமே ' பாடல் ஒளிப்பதிவு முடிவு செய்து எல்லாவித ஏற்பாடுகளையும் செய்து விட்டார். என்னிடம் மட்டும் 'இரண்டு வரி பாட வேண்டும், அரைமணியில் அனுப்பி விடுகிறோம்' என்று கூற, நானும் சம்மதித்தேன்.
குறிப்பிட்ட நாளன்று காலை ஒரு பாடல் இருந்ததால், அரை மணிக்குள் இவருடைய பாடலைப் பாடி விட்டு அந்த பாடலைப் பாடச் செல்லலாம் என்றிருந்தேன். அங்கே சென்று பார்த்தால் இளையாராஜா கர்நாடக இசையில் ஒரு பெரிய பாடலுக்கான இசையமைப்பை செய்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று, 'என்ன ராஜா இரண்டு வரி பாடல் என்றார்கள், நீங்கள் என்னவோ முழுப்பாடலுக்கான இசை சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்க, 'எனக்கு ஒன்றும் தெரியாது, இது முழுப்பாடல்தான்' என்று கூறினார். பாரதிராஜாவிடம் சென்று கேட்ட பொழுது, 'கடைசி பாடல் பாலு, படத்தை வெளியிட வேண்டும்' என்றார்.
நான் 'வேறொவருக்கு பாடுவதாக சொல்லி விட்டு இங்கே பாடுவது முறையல்ல.நீங்களே அந்த இசை அமைப்பாளரிடம் சொல்லி அனுமதி பெற்றால் நான் இங்கே பாடுகிறேன்' என்றேன். அதற்குள் நீங்கள் எங்கும் சென்று விடக் கூடாது என்று கூறி, உண்மையாகவே என்னை அறையில் வைத்து பூட்டிவிட்டார்.
அந்த இசையமைப்பாளர் ஒப்புக்கொள்ள நான் பாரதிராஜாவுக்கு பாடி விட்டு அங்கு சென்றேன். என்று சிரித்துக் கொண்டே கூறினார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
பேட்டி : சலன்
(சினிமா எக்ஸ்பிரஸ் 01.04.1983 இதழ்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.