ராமாயணத்தில் ஒரே ஒரு ஜாம்பாவாந்தான் வருகிறார். ஆனால் ராணி சீதை ஹாலிலோ ஏழெட்டு ஜாம்பாவான்கள் வந்திருந்தார்கள். நாடகாசிரியர் கோமல் சுவாமிநாதனைப் பாராட்டத்தான்.
விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், கலை ரசனைமிக்க ‘கலாரசனா’ சபையினர். நாடக உலக ஜாம்பவான் எஸ்.வி.சகஸ்ரநாமம் தலைமையில், டைரக்டர் கே.பாலசந்தர், ‘கார்திக் ஃபைன் ஆர்ட்ஸ்’ ராஜகோபால், ஒய்.ஜி.பார்த்தசாரதி, கிரேஸி மோகன், டைரக்டர் எஸ்.பி,முத்துராமன், அகிலன், பூர்ணம் விசுவநாதன் ஆகிய ஜாம்பவான்கள் பாராட்டுரை வழங்கினர்.
எஸ்.வி.சகஸ்ரநாமத்த்ன் சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவின் குழதையான ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் ஐ கோமல் சுவாமிநாதன் துவக்கி, பத்தாண்டு காலம் நிறைவு பெற்றதையொட்டிதான் இத்தனை பாராட்டுக்களும்.
பாராட்டுகளில் பலமாக அடிபட்டது ‘தண்ணீர் தண்ணீர்’ என்பதைக் குறிப்பிடாவிட்டாலும் அனைவரும் அறிவர்.
அதை நாம் விரைவில் திரைப்படமாக்கப் போவதாகவும் அதன் மூலம் கோமல் திரையுலகம் பிரவேசம் செய்யப் போவதாகவும் குறிப்பிட்டார் கே.பாலசந்தர்.
மேடை நாடகங்களுக்கு அன்று முதல் இன்றுவரை நல்லாதரவு நல்கி வரும் ராஜகோபாலின் காலில் விழுந்து வணங்கினார் டைரக்டர் கே.பி. ‘ராஜகோபால் ஒரு ஏணி’ என்றார்.
‘இல்லை அவர் ஒரு லிஃப்ட்’ ஏணியானால்கூட ஏறுபவர் சிறிது கஷ்டப்பட வேண்டும். லிஃப்டில் அந்தச் சிரமும் கூட இல்லை’ என்ற மறுப்புடன் துவங்கி நன்றி கூறினார் கோமல் சுவாமிநாதன்.
நாடகத்தைப் பற்றி ஒரு வார்த்தை – ‘தாகம் தணிந்தது.’
-கேயெம்மெஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.