அகில இந்தியப் புகழ்பெற்ற படத் தயாரிப்பாளர் ஒருவருக்கு மூன்று புகைப்படங்கள் வந்து சேர்ந்தன. அவற்றில் மிகவும் கவரப்பட்ட அவர், தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் எல்லாம் காட்டினார். அதில காணப்பட்ட வசீகரமான இளைஞரைப் பற்றி அவர்களது கருத்துக்களை கேட்டார். அதோடு அன்று அவரைத் தேடி வந்தவர்களிடம் எல்லாம் அந்தப் படங்களைக் காட்டி, ‘இவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று எழுச்சியோடு கேட்டார்.
‘பரவாயில்லை. ஆனால் பெரிய வேடங்களுக்குப் பொருத்தமாக இருக்க மாட்டார்’.
‘ஒரு வித்தியாசமான தோற்றத்தை உடையவர்’
‘ஒரு கதாநாயகனுக்கு வேண்டியதை விட உயரமாக இருக்கிறார்.
இவரைப் பார்த்தால் ஒரு நடிகரைப் போல இல்லை. ஒரு கவிஞரைப் போலத்தான் இருக்கிறது.’
வந்தவர்கள் தெரிவித்த கருத்துக்கள் இவை.
ஆனால் அந்தத் தயாரிப்பாளரோ எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டுக் கொண்டாரே ஒழிய, தன் தீர்மானத்தில் உறுதியாக இருந்தார். அந்த இளைஞரின் புகைப்படங்களை ஒரு பத்திரிகையாளரிடம் கொடுத்து, ‘ஏதாவது செய்ய முடியுமா?’ என்று கேட்டார்.
சிபாரிசுக்கு முக்கிய காரணம். புகழ் பெற்ற நடிகையான அவரது மனைவியும் இளைஞரின் குடும்பத்தாரும் நெருங்கிய நட்புக் கொண்டிருந்ததுதான்.
அந்த இளைஞர் கல்கத்தாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டு இருந்தார். நடிப்பு ஆசை அவரையும் விடவில்லை. வசதியான அந்த வாழ்க்கையை விட்டுச் சினிமாத் துறைக்கு வர அவர் ஆசைப்பட்டது அதிசயம்தான்!
திடீரென்று ஒரு நாள் காலை அந்தப் பிரபல நடிகை அவரது புகைப்படங்களை மற்றொரு புகழ் பெற்ற டைரக்டருக்கு அனுப்பினார். டைரக்டருக்குப் பூரண திருப்தி இல்லை என்றாலும் அந்த இளைஞரை மேக்1அப் டெஸ்டுக்கு அழைக்கலாம் என்றூ யோசனை கூறினார்.
அந்த இளைஞர் கல்கத்தாவிலிருந்து நான்கு நாட்கள் விடுமுறையில் வந்து சேர்ந்தார்.
மேக்-அப் டெஸ்டுக்காக ஸ்டுடியோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அறிமுகப் படலம் முடிந்ததும் ஒரு முன்னணிக் கதாநாயகனின் அறையில் ஒப்பனையும் முடிந்தது. உட்கார்ந்திருந்தார். அழைக்கபடும்வரை.
மாலை நான்கு மணி. அந்தப் பிரபல ஹீரோ, கல்கத்தா இளைஞரை ஏற இறங்கப் பார்த்தார்.
ஆழமாக ஆராய்ந்தார். வருங்காலத்தை கணித்துவிட்டார்.
ஐந்து மணிக்கு அந்த இளைஞருக்காகச் சில வரிகள் வசனம் எழுதப்பட்டது. சிரத்தையாக அவற்றை மனப் பாடம் செய்தார் அவர்.
மூன்றாவது நாள் அந்த இளைஞருக்காக ஒரு பிரபல தயாரிப்பாளருடன் ஒரு இண்டர்வியூவை ஏற்பாடு செய்தார் அதே பிரபல நடிகை. தயாரிப்பாளிரின் அறையில் நுழையும் போதே, இவ்வளவு உயரமான உன்னோடு நடிப்பதற்கு எந்தக் கதாநாயகியும் விரும்ப மாட்டாள்’ என்று ஒரு தாக்குதல்.!
‘நீ ஏன் ஓர் எழுத்தாளராகக் கூடாது? உன்னைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. உன் அப்பாவோ ஒரு கவிஞர் ஆகவே உனக்கு அது கடினமாக இருக்காது’ என்று ஓர் ஆலோசனை.
அவ்வளவுதான்! அதோடு கல்கத்தாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.
இரண்டே வாரத்தில் திருப்பி அழைக்கப்பட்டார். ஒரு பெரிய தயாரிப்பாளரின் பிரம்மாண்டத் தயாரிப்பில் நடிப்பதற்காக உடனே கல்கத்தாவுக்கு டிரங்கால். அங்கிருந்து டில்லிக்கு. தன் பெற்றோரின் ஆலோசனையைப் பெற. அங்கிருந்து பம்பாய்க்கு. பிரபல நடிகையின் ஆலோசனைக்காக. ஆனால் கடைசியில் அவ்வளவும் வீணாயின. அலுவலகத்தில் லூவு கேட்கப் போதிய அவகாசம் இல்லை என்பதோடு ஒரு சிறிய வேடத்தில் நடிக்க அந்த இளைஞர் விரும்பாததும் காரணம்.
சோர்வுற்று இருந்த நேரத்தில் மீண்டும் அழைப்பு வந்தது. ஒரு பிரபலத் தயாரிப்பாளரிடமிருந்து. ‘தூண்கள்’ எல்லாம் ஆதரிக்க ஆரம்பித்தன. ‘அவனா?’ என்றவர் எல்லாம் ‘ஓ அவரா நல்ல நடிகராயிற்றே?’ என்றும் ‘அவர் என் பிள்ளை மாதிரி’ என்றும் பேச ஆரம்பித்தனர்.
அது வரையில் இல்லாதா அளவுக்கு மிகப் பெரிய சினிமா மார்க்கெட்டைப் பெற்றார். அந்த இளைஞர் வேறு யாருமல்ல. அமிதாப் பசச்சன்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.