நட்சத்திரங்களிடம் 'உங்களுக்கு பிடித்தது என்ன?" என்று கேட்டால் பதில் பலவிதமாக இருக்கும்.
கமலஹாசனை சந்தித்து உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன என்று கேட்ட பொழுது, 'சாப்பாடு' என்று பதில்; வந்தது.
'சரி, சாப்பாட்டை பற்றிச் சொல்லுங்கள்' என்ற பொழுது, 'பொறுங்கள், சாப்பாட்டு இடைவேளை வரை' என்றார் கமல்.
எனது நாலாவது வயதிலிருந்தே அசைவ உணவு உட்கொள்வேன். அப்பொழுதெல்லாம் காலை ஐந்து மணிக்கு எழுந்து விடுவேன். தங்கப்பன் மாஸ்டரிடம் அசிஸ்டெண்டாக இருந்த பொழுது, அதன் பின்னர் சிறு சிறு வேடங்களில் நடித்த பொழுதும், காலையில் எழுந்த உடன், முதல் நாள் ஊற வைத்த கொண்டக்கடலை, வெந்தயம் இரண்டயும் உட்கொண்டு விட்டு , எல்டாம்ஸ் ரோட்டில் இருந்து 'சோழா' வழியாக போயஸ் கார்டனை இரண்டு முறை சுற்று சுற்றி விட்டு, மவுண்ட் ரோடு மார்க்கமாக வீட்டிற்கு வருவேன். இதற்கு பிறகு எக்ஸர்சைஸ். இவை எல்லாமே காலை ஏழு மணிக்குள் முடிந்து விடும். குளித்து விட்டு ஒரு கப் ஆரஞ் ஜுஸ் குடித்து விட்டு ஸ்டூடியோ சென்று விடுவேன். அங்கு சென்றவுடன் டிபன் கொடுப்பார்கள். நாலைந்து இட்லி.அதையும் சாப்பிட்டு விட்டு, வேலையிருந்தால் சரி.இல்லாவிட்டால் தூங்கி விடுவேன். பின் மதியம் சாப்பாடு. பிறகு டீ வழக்கம் போல.
இந்த சாப்பாடு கூட இல்லாத நாட்கள் எனக்கு இருந்திருக்கிறது. வளர்ந்து விட்ட இன்றைய நிலையில் நான் ஆரம்ப நாட்களில் வாடி வதங்கினேன் என்று கூற மாட்டேன். ஆனால் நான் சென்னையில் தங்குவதற்கு 150 ரூபாயை என் தாயார் அனுப்பிக் கொண்டிருந்தார். 10-ஆம் தேதி முதலே பற்றாக்குறை தொடங்கி விடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஹோட்டல் ஒன்றில் சாப்பாடு சீட்டுகளை மாதம் முழுவதற்கும் வாங்கி வைத்திருப்பேன். கையில் பணம் இல்லாவிட்டாலும் மனம் நிறைய வயிறு நிறைய சாப்பிட வேண்டுமே? மாதத்தில் ஐந்து நாட்கள் நண்பர்களையும் சாப்பாட்டிற்கு அழைத்து செல்வேன். இதனால் சமயத்தில் 25-ஆம் தேதியே சாப்பாட்டு டோக்கன் இருக்காது.அப்போது எங்கள் வீட்டு வாசலில் உள்ள கடைகளில் ஐந்து, பத்து என்று கடன் வாங்குவேன்.செலவான பிறகு மீண்டும் கடன் கேட்பது கஷ்டமாக இருக்கும்.
இந்த அனுபவமோ என்னவோ 'ராஜபார்வை' படம் துவங்கும் போதே, புரடக்க்ஷன் மேமேஜரை அழைத்து நான் சொன்னது, 'சாப்பாடு நன்றாக இருக்க வேண்டும். மட்டனோ சிக்கனோ ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். என்று சொன்னேன். என்னால் பசியைத் தாங்க முடியாது. அந்த நினைப்பிலேயே ' ராஜபார்வை 'ஷூட்டிங் மதிய உணவு இடைவேளை இல்லாமல் நடந்ததே கிடையாது.
பிடித்த விஷயமான 'சாப்பாடு' பற்றி கமல்ஹாசன் விளக்கமாகவே சொல்லி விட்டார்.
பேட்டி: சலன்
படம்: சங்கர்
(சினிமா எக்ஸ்பிரஸ் 15.10.82 இதழ்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.