முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 3 – திருவண்டப் பகுதி 5

நாம் வசிக்கும் இந்த அண்டத்தைப் படைத்து, காத்து, அழிப்பவன் சிவபெருமான். இந்த அண்டத்தையே நாம் வியக்கும்போது, அதை ஆளும் இறைவன் எந்த அளவு உயர்வானவனாக இருக்க வேண்டும்! அந்த வியப்பைக் குறிப்பிடும் பாடல் இது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:


19

பாடலின்பம்

திசமுகன் சென்று தேடினவர்க்கு ஒளித்தும்

முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்

ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்(து)

உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும்

மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்

இத்தந்திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு

அத்தந்திரத்தின் அவ்வயின் ஒளித்தும்

முனிவு அற நோக்கி நனிவரக் கௌவி

ஆண் எனத் தோன்றி அலி எனப் பெயர்ந்து

வாள்நுதல் பெண் என ஒளித்துச் சேண்வயின்

ஐம்புலன் செல விடுத்து அருவரைதொறும் போய்த்

துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை

அரும்தவர் காட்சியுள் திருத்த ஒளித்தும்

ஒன்று உண்டு இல்லை என்று அறிவு ஒளித்தும்

’பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும்

ஒளிக்கும் சோரனைக் கண்டனம்,

ஆர்மின், ஆர்மின், நாள்மலர்ப் பிணையலில்

தாள் தளை இடுமின்,

சுற்றுமின், சூழ்மின், தொடர்மின், விடேன்மின்,

பற்றுமின்’ என்றவர் பற்று முற்று ஒளித்தும்

தன் நேர் இல்லோன் தானே ஆன தன்மை

என் நேர் அனையோர் கேட்க வந்து இயம்பி

அறைகூவி ஆட்கொண்டு அருளி

மறையோர் கோலம் காட்டி அருளலும்...

பொருளின்பம்

சிவனைக் காண்பது சுலபமில்லை,

சிலர் திசைகள் அனைத்திலும் சென்று சிவனைத் தேடினார்கள், அவன் அவர்களுக்கு அகப்படாமல் தன்னை ஒளித்துக்கொண்டான்.

சிலர் முறைப்படி வணங்கித் தேடினார்கள், அவர்களிடமும் அவன் தன்னை ஒளித்துக்கொண்டான்,

சிலர் மனத்தை ஒருமைப்படுத்தி அவனைக் காண முயன்றார்கள், அவர்களிடமும் அவன் தன்னை ஒளித்துக்கொண்டான்,

சிலர் இதனால் கோபப்பட்டுத் தன்னருகே இருந்தவர்களிடம் கோபமாகப் பேசினார்கள். அவர்களிடமும் அவன் தன்னை ஒளித்துக்கொண்டான்,

சிலர் வேதங்களின் நுட்பமான பொருளைக் கண்டு, ஆராய்ந்து, அப்போதும் அவனை உணர இயலவில்லையே என்று வருந்தினார்கள். அவர்களிடமும் அவன் தன்னை ஒளித்துக்கொண்டான்,

சிலர் ‘சிவனை இந்த முறையில் கண்டுவிடலாம்’ என்று எண்ணினார்கள். சிவன் அந்த முறையையே பயன்படுத்தி, அங்கே அவர்கள் கண்ணில் தோன்றாமல் தன்னை ஒளித்துக்கொண்டான்,

சிலர் கோபத்தைத் தவிர்த்து, அவனை வழிபாட்டின்மூலம் பெற முயன்றார்கள், அவர்கள்முன்னே அவன் சில சமயம் ஆண்போலவும், சில சமயம் ஒளி விளங்கும் நெற்றி கொண்ட பெண்போலவும், சில சமயம் இவை இரண்டும் அல்லாதவனாகவும் தோன்றித் தொலைதூரத்தில் தன்னை ஒளித்துக்கொண்டான்,

சிலர் ஐம்புலன்களையும் துறந்து, அரிய மலைகளுக்குச் சென்று, உணவு போன்றவற்றைத் துறந்து தவம் செய்கிறார்கள், வெறும் உயிர், வெறும் உடல் என்று நிற்கிறார்கள், அவர்கள் கண்ணிலும் சிவன் தோன்றாமல் தன்னை ஒளித்துக்கொண்டான்,

சிலர் அனைத்துக்கும் ஆதாரமாக ஒரு முழுமுதற்பொருள் உண்டு என்கிறார்கள், இல்லை என்கிறார்கள், அப்படி ஆராயும் அவர்களுடைய அறிவுக்கு எட்டாதபடி சிவன் தன்னை ஒளித்துக்கொண்டான்,

சிலர் ‘பல நாளாக நம்மோடு பழகிய, இப்போதும் பழகுகிற, ஆனால் தன்னை ஒளித்துக்கொள்கிற அந்தக் கள்வனைப் பார்த்துவிட்டோம்’ என்கிறார்கள், ‘மகிழ்ச்சியாகச் சத்தமிடுங்கள், இன்று பூத்த மலர்களைத் தூவி அவனுடைய திருப்பாதங்களைக் கட்டுங்கள், சுற்றுங்கள், சூழ்ந்துகொள்ளுங்கள், அவனைத் தொடர்ந்து செல்லுங்கள், விடாதீர்கள், பற்றிக்கொள்ளுங்கள்’ என்கிறார்கள், அவர்களிடமும் சிவன் தன்னை ஒளித்துக்கொண்டான்,

தனக்கு நிகர் யாரும் இல்லாத அந்தச் சிவபெருமான், இன்று என்போன்றவர்களுக்காகத் தானே தோன்றினான், ஒரு மறையோன் வடிவத்தில் காட்சி தந்தான், அவனே குரல் கொடுத்து எங்களை அழைத்து அடிமையாக்கிக்கொண்டான், நல்வழியைச் சொல்லி அருள் செய்தான்.

சொல்லின்பம்

திசைமுகம்: திசைகளில்

ஒற்றி: (பாதத்தைத்) தொட்டு வணங்கி

உற்றவர்: அடைந்தவர்

மறை: வேதம்

தந்திரம்: முறை/ வழி

காண்டும்: காணலாம்

அவ்வயின்: அங்கே/ அந்த இடத்தில்

முனிவு: கோபம்

நனி: மிகுதியாக

கௌவி: பற்றி

நுதல்: நெற்றி

சேண்வயின்: தொலைவில்

வரை: மலை

துற்றவை: உணவு போல நாம் நுகரும் பொருள்கள்

ஆக்கை: உடல்

பண்டு: முன்பு

பயில்தல்: பழகுதல்

சோரன்: கள்வன்

ஆர்மின்: சத்தமிடுங்கள்

நாள்மலர்: அன்று பூத்த மலர்

பிணையல்: கட்டு

தாள்: திருப்பாதம்

தளை: கட்டு

அனையார்: போன்றவர்

கோலம்: அழகு/ தோற்றம்

முழு கட்டுரையைப் படிக்க →