பகுதி 3 – திருவண்டப் பகுதி 6
நாம் வசிக்கும் இந்த அண்டத்தைப் படைத்து, காத்து, அழிப்பவன் சிவபெருமான். இந்த அண்டத்தையே நாம் வியக்கும்போது, அதை ஆளும் இறைவன் எந்த அளவு உயர்வானவனாக இருக்க வேண்டும்! அந்த வியப்பைக் குறிப்பிடும் பாடல் இது.
20
பாடலின்பம்
அருளியது அறியேன், பருகியும் ஆரேன்,
விழுங்கியும் ஒல்லகில்லேன்,
செழும் தண் பாற்கடல் திரை புரைவித்து
உவாக் கடல் நள்ளு நீர் உள் அகம் ததும்ப
வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால்தோறும்
தேக்கிடச் செய்தனன்...
பொருளின்பம்
சிவபெருமான் எனக்கு அருள் செய்த தன்மை எனக்குத் தெரியவில்லை, அவன் தந்த அருளை உண்டபிறகும் எனக்கு நிறைவு ஏற்படவில்லை, அதனை விழுங்கியபிறகும் எனக்குத் திருப்தி ஏற்படவில்லை, இன்னும் வேண்டும் என்று தவிக்கிறேன், பொறுக்கமாட்டாமல் துடிக்கிறேன்,
செழுமையான, குளிர்ந்த பாற்கடலின் நீரலைகளைப்போல வெண்ணிலா தோன்றும் பௌர்ணமி நாளில், கடலில் பொங்குகிற நீரைப்போல என் உள்ளம் ததும்புகிறது, மயிர்க்கால்கள் ஒவ்வொன்றிலும் சொல்லால் விளக்க இயலாத அவனுடைய அருள் அமுதம் பொங்குகிறது, இவை அனைத்தையும் நிகழ்த்திய பெருமான் அவன்!
சொல்லின்பம்
ஒல்லகில்லேன்: தாங்க இயலவில்லை
தண்: குளிர்ச்சி
திரை: அலை
புரைவித்து: சமமாகச் செய்து
உவா: பௌர்ணமி
நள்ளு: நிறைந்த
வாக்கு இறந்த: சொல்லில் அடங்காத