பகுதி 4 – போற்றித் திரு அகவல் 1
சிவபெருமானின் பெருமைகளைப் போற்றும் அகவல் பா இது. தில்லையில் அருளப்பட்டது.
சிவபெருமானின் பெருமைகளைப் போற்றும் அகவல் பா இது. தில்லையில் அருளப்பட்டது.
22
பாடலின்பம்
நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
இரு அடியாலே மூ உலகு அளந்து
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றி செய் கதிர் முடித் திரு நெடு மால் அன்று
அடி, முடி அறியும் ஆதரவு அதனில்
கடுமுரண் ஏனம் ஆகி முன் கலந்து
ஏழ் தலம் உருவ இடந்து பின் எய்த்து
‘ஊழி முதல்வ! சய சய!’ என்று
வழுத்தியும் காணா மலர் இணை அடிகள்
வழுத்துதற்கு எளிதாய் வார்கடல் உலகினில்...
பொருளின்பம்
பிரம்மன் முதலான வானவர்களெல்லாம் தொழும்படி, இரண்டு அடிகளாலே மூன்று உலகங்களையும் அளந்து, நான்கு திசைகளிலும் உள்ள முனிவர்கள் தங்களுடைய ஐந்து புலன்களும் மலரும்படி போற்றுகிற ஒளிவீசும் திருமுடி கொண்டவன் திருமால்,
அத்தகைய திருமால் அன்றைக்கு உன்னுடைய திருவடியையும் திருமுடியையும் அறிய வேண்டும் என்று விரும்பினான், வேகம், வலிமை கொண்ட பன்றி உருவம் எடுத்து, ஏழு உலகங்களையும் ஊடுருவிச் சென்றான்,
ஆனால், அப்போதும் அவனால் உன் மலர்போன்ற திருவடிகளைக் காண இயலவில்லை, இளைத்து வருந்தினான், ‘ஊழி முதல்வனே, உனக்கு வெற்றி, வெற்றி’ என்று வணங்கினான்,
அப்படிக் கிடைப்பதற்கு அரிய திருவடிகள், இன்று நாங்கள் வணங்குவதற்காகப் பெருங்கடல்களால் சூழப்பட்ட இந்த நிலவுலகில் (காணக் கிடைத்தன)
சொல்லின்பம்
முதலா: முதலாக/ தொடங்கி
ஆதரவு: விருப்பம்/ ஆசை
கடு: வேகம்
முரண்: வலிமை
ஏனம்: பன்றி
தலம்: நிலம்
இடந்து: தோண்டி
எய்த்து: இளைத்து
சய சய: ஜெய ஜெய/ வெற்றி, வெற்றி
வழுத்துதல்: வணங்குதல்
வார்: நீண்ட/ பெரிய/ பரந்து விரிந்த