முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 4 – போற்றித் திரு அகவல் 4

சிவபெருமானின் பெருமைகளைப் போற்றும் அகவல் பா இது. தில்லையில் அருளப்பட்டது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

சிவபெருமானின் பெருமைகளைப் போற்றும் அகவல் பா இது. தில்லையில் அருளப்பட்டது.

25

பாடலின்பம்

முனிவு இலாத ஓர் பொருள் அது கருதலும்

ஆறு கோடி மாயா சக்திகள்

வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின,

ஆத்தம் ஆனார், அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்,

சுற்றம் என்னும் தொல் பசுக் குழாங்கள்

பற்றி அழைத்துப் பதறினர், பெருகவும்

விரதமே பரமாக வேதியரும்

சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்,

சமயவாதிகள் தத்தம் மதங்களே

அமைவது ஆக அரற்றி மலைந்தனர்,

மிண்டிய மாயாவாதம் என்னும்

சண்டமாருதம் சுழித்து அடித்து ஆஅர்த்து

உலோகாயதம் எனும் ஒண் திறல் பாம்பின்

கலா பேதத்த கடுவிடம் எய்தி

அதில் பெருமாயை எனைப் பல சூழவும்

தப்பாமே தாம் பிடித்தது சலியாத்

தழல் அது கண்ட மெழுகு அது போலத்

தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்(து)

ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்

கொடிறும் பேதையும் கொண்டது விடாது எனும்

படியே ஆகி நல் இடை அறா அன்பில்

பசுமரத்து ஆணி அறைந்தாற்போலக்

கசிவது பெருகிக் கடலென மறுகி

அகம் குழைந்து அனுகுலமாய் மெய்விதிர்த்துச்

சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப

நாண் அது ஒழிந்து நாடு அவர் பழித்து உரை

பூணது ஆகக் கோணுதல் இன்றிச்

சதிர் இழந்து அறிமால் கொண்டு சாரும்

கதி அது பரம அதிசயம் ஆகக்

கற்று ஆ மனம் எனக் கதறியும் பதறியும்

மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது

அருபரத்து ஒருவன் அவனியில் வந்து

குருபரன் ஆகி அருளிய பெருமையைச்

சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்

பிறிவினை அறியா நிழலதுபோல

முன்பின் ஆகி முனியாது அத்திசை

என்பு நைந்து உருகி, நெக்கு நெக்கு ஏங்கி,

அன்பெனும் ஆறு கரை அது புரள,

நல் புலன் ஒன்று ‘நாத’ என்று அரற்றி

உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்பக்

கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்

கண் களிகூர நுண் துளி அரும்பச்

சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர்

தாயே ஆகி வளர்த்தனை போற்றி!

பொருளின்பம்

வெறுப்பில்லாத பொருளாகிய சிவபெருமானை நான் கருதியபோது, ஆறு கோடி மாயா சக்திகள் தங்களுடைய மாயைகளைத் தொடங்கின,

நட்பாக இருந்தவர்களும் மற்றவர்களும் ஒன்றாகச் சேர்ந்து ‘கடவுள் இல்லை’ என்கிற நாத்திகத்தைப் பேசினார்கள், அதனால் அவர்களுடைய நாக்குகளில் தழும்பே ஏற்பட்டுவிட்டது,

என்னுடைய உறவினர்கள் எனப்படுகின்ற பழைய பசுக்கள் என்னைப் பற்றி அழைத்துப் பதறினார்கள்,

வேதியர்கள் பலவகை நோன்புகள்தான் முக்கியம் என்று சொல்லிப் பல சாத்திரங்களை உண்டாக்கிவைத்தார்கள்,

சமயவாதிகள் அவரவர் சமயங்கள்தான் சிறந்த வாழ்வை அளிப்பவை என்று சொல்லிக்கொண்டு சண்டையிட்டனர்,

நெருங்கிய ‘மாயாவாதம்’ என்கிற பெரும் காற்று சுழன்று, வீசி, ஆரவாரம் செய்தது,

பொருள்கள் மீது பற்று என்கிற ஒளி நிறைந்த, வலிமையான பாம்பு இன்னொரு வழியைக் காட்டிக் கொடிய நஞ்சைத் தந்தது, அதனால் பெரிய மாயைகள் பலவும் என்னைச் சூழ்ந்துகொண்டன,

அதற்கெல்லாம் நான் மனம் தளரவில்லை, பற்றிக்கொண்ட கொள்கை மீது சலிப்படையவில்லை,

தீயைப் பற்றிய மெழுகைப்போல நான் தொழுதேன், உள்ளம் உருகினேன், அழுதேன், உடல் நடுங்கினேன், அலறினேன், பாடினேன், போற்றினேன்,

‘முதலையும் பைத்தியக்காரனும் பிடித்ததை விடமாட்டார்கள்’ என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல, நான் இடைவிடாத அன்பில் திளைத்தேன்,

பசுமையான மரத்தில் ஆணியை அடித்ததுபோல உள்ளத்தின் உருக்கம் பெருகியது, கடல்போலானது, மயக்கம் தந்தது, உள்ளம் குழைந்தது, அதற்கு ஏற்ப உடல் நடுங்கியது,

இதைப் பார்த்த உலக மக்கள் என்னைப் ‘பேய்’ என்று சிரித்தார்கள், அதைப்பார்த்து நான் வெட்கப்படவில்லை, நாட்டு மக்களின் இழிவான பேச்சுகளே எனக்கு அணிகலன் என்று அணிந்துகொண்டேன், உள்ளம் மாறவில்லை,

என் வலிமை குன்றியது, இறைவனை அறிய வேண்டும் என்கிற மயக்கம் சேர்ந்தது, வீடுபேறுதான் பெரிய வியப்பு என்று நினைத்துக்கொண்டு கன்றை உடைய பசுவின் மனம்போலக் கூவினேன், பதறினேன்,

மற்றோர் தெய்வத்தை நான் கனவிலும் நினைக்கவில்லை, அரும்பெரும் தெய்வமாகிய சிவபெருமான் இங்கே வந்து குருபரனாகி அருளிய பெருமையைக் குறைவாகப் பேசாமல், அவனுடைய திருவடிகளை எப்போதும் பிரியாத நிழல்போல நான் சேர்ந்தேன், அவன் சினமில்லாமல் எனக்கு அருள் வழங்கினான்,

அப்போது என் எலும்பு நைந்து உருகியது, உள்ளம் இளகி ஏங்கியது, அன்பு என்கின்ற ஆறு கரைபுரள ஓடியது, நன்மை செய்கிற ஐம்புலன்களும் ஒன்றாகி, ‘நாதா’ என்று அவனைப் பாடின, சொற்கள் தடுமாறின, ரோமம் சிலிர்த்தது, கைகள் என்னும் மலர்கள் மொட்டுபோல் குவிந்து வணங்கின, இருதயம் மலர்ந்தது, கண் மகிழ்ந்தது, அதில் நுண்ணிய துளிகளாக ஆனந்தக் கண்ணீர் வந்தது,

அப்படித் தளராத அன்பை நாள்தோறும் பெருகச்செய்கிற தாயாக வளர்த்தவனே, உன்னை வணங்குகிறேன்!

சொல்லின்பம்

முனிவு: கோபம்

ஆத்தம்: நட்பு

தொல்: பழைய

குழாம்: கூட்டம்

பரம்: மேலானது

சரதம்: உண்மை

சாத்திரம்: கலைகள்

அரற்றி: பலவிதமாகச் சொல்லி

மலைந்தனர்: மோதினார்கள்

மிண்டிய: நெருங்கிய

சண்டமாருதம்: பெரிய காற்று

ஆஅர்த்து: ஆர்த்து/ ஆரவாரம் செய்து

உலோகாயதம்: பொருள்சார்ந்த சிந்தனை

ஒள்: ஒளி நிறைந்த

கலாபேதம்: நூல் மாறுபாடு

கடு: தீவிரமான

தழல்: நெருப்பு

கம்பித்து: நடுங்கி

கொடிறு: முதலை

மறுகி: மயங்கி

அனுகுலமாய்: அதற்கு ஏற்றாற்போல்

விதிர்த்து: நடுங்கி

சகம்: ஜகம்/ உலகம்

நாண்: வெட்கம்

நாடவர்: நாட்டு மக்கள்

பூண்: ஆபரணம்

கோணுதல்: வளைதல்

சதிர்: வலிமை

மால்: மயக்கம்

கதி: வீடுபேறு

கற்று ஆ: கன்றைக் கொண்ட பசு

அருபரம்: அரிய, மேலான

அவனி: உலகம்

பிறிவு: பிரிவு

என்பு: எலும்பு

நெக்கு: நெகிழ்ந்து

மொட்டித்து: மொட்டுபோல் குவித்து

களி: மகிழ்ச்சி

சாயா: குறையாத

முழு கட்டுரையைப் படிக்க →