பகுதி 4 – போற்றித் திரு அகவல் 5
சிவபெருமானின் பெருமைகளைப் போற்றும் அகவல் பா இது. தில்லையில் அருளப்பட்டது.
26
பாடலின்பம்
இடரைக் களையும் எந்தாய் போற்றி,
ஈச போற்றி, இறைவ போற்றி,
தேசப் பளிங்கின் திரளே போற்றி,
அரைசே போற்றி, அமுதே போற்றி,
விரைசேர் சரண விகிர்தா போற்றி,
வேதி போற்றி, விமலா போற்றி,
ஆதி போற்றி, அறிவே போற்றி,
கதியே போற்றி, கனியே போற்றி,
நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி,
உடையாய் போற்றி, உணர்வே போற்றி,
கடையேன் அடிமை கண்டாய் போற்றி,
ஐயா போற்றி, அணுவே போற்றி,
சைவா போற்றி, தலைவா போற்றி,
குறியே போற்றி, குணமே போற்றி,
நெறியே போற்றி, நினைவே போற்றி,
பொருளின்பம்
துன்பங்களை நீக்குகிற எங்கள் தந்தையே, உன்னை வணங்குகிறோம்,
ஈசனே, இறைவனே, ஒளியுடைய பளிங்குத் திரளே, அரசனே, அமுதமே, மணம் கமழும் திருவடிகளைக் கொண்ட இறைவனே, உன்னை வணங்குகிறோம்,
பண்டிதனே, தூயவனே, அனைத்துக்கும் முதலானவனே, அறிவின் வடிவமானவனே, எங்கள் கதியே, கனியே, கங்கை நதி சேர்ந்துள்ள செஞ்சடை கொண்ட எங்கள் சிவனே, எங்களை அடிமையாகக் கொண்டவனே, எங்கள் உணர்வே, உன்னை வணங்குகிறோம்,
உன்னுடைய அடியார்களில் மிகவும் கடைசியாக, இழிவானவனாக இருக்கும் என்னையும் அடிமையாக ஏற்றுக்கொண்டவனே, ஐயனே, நுட்பமான பொருளே, சிறந்த சைவனே, தலைவனே, எங்கள் இலக்கே, நற்குணத்தின் வடிவமே, நாங்கள் பின்பற்றும் வழியே, எங்கள் நெஞ்சில் என்றும் நிற்கும் நினைவே, உன்னை வணங்குகிறோம்.
சொல்லின்பம்
இடர்: துன்பம்
ஈசன்: இறைவன்/ முதன்மையானவன்
தேசு: ஒளி
திரள்: தொகுப்பு
அரைசு: அரசு/ அரசன்
விரை: நறுமணம்
சரணம்: பாதம்
விகிர்தன்: இறைவன்/ பல சிறப்புகளைக் கொண்டவன்
வேதி: பண்டிதன்
விமலன்: குறையில்லாதவன்
நம்பன்: நம்மவன்/ நம்முடையவன்
உடையாய்: உடைமையாகக் கொண்டவன்/ அடிமையாகக் கொண்டவன்
கடையேன்: கடைசியாக/ இழிவாக உள்ளவன்
நெறி: வழி